மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்

3636

தமிழ் ஊடகங்களிலும் தமிழர்களுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் காணப்படும் ஒரு வர்த்தகப் பெயர் ‘லைக்காமொபைல்’. இது மலிவு விலையில் வெளிநாடுகளுக்கு பேசுவதற்கான தொலைபேசி அட்டைகளை விற்கும் ஒரு நிறுவனம். இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக தமிழர்களே இருப்பதனால் இது ஒரு தமிழர் நிறுவனமாகக் கருதப்படுகிறது.

லண்டனில் நடைபெறும் பல தமிழ் நிகழ்சிகளுக்கு இந்நிறுவனம் விளம்பர அனுசரணை வழங்கிவருகிறது. அதேசமயம் இவ்வருடம் “மானாடமயிலாட”, “ராஜா தி ராஜா” போன்ற சினிமா நிகழ்ச்சிகளை இந்நிறுவனமே லண்டனில் நடாத்தியது. சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கும் அது உதவி வருகிறது. இருப்பினும் பணத்தின் அளவு மட்டும் வேறுபடுவதாக இதுவிடயத்தில் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. தமிழர்களுக்கு வழங்கப்படும் விளம்பரத் தொகையுடன் ஒப்பிடுகையில் சிங்களத் தரப்பிற்கான வழங்கல் அதிக பூச்சியங்கள் காணப்படுவதாக மேற்படி வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னாள் சிறிலங்கா கிரிக்கட் வீரரும் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரைகளுக்கு பாவிக்கப்படுபவருமான முத்தையா முரளிதரனால் முன்னெடுக்கப்படும் திட்டம் ஒன்றிற்கு, இந்நிறுவனம் இரண்டரை லட்சம் பவுண்ஸ் வழங்கியிருந்த தகவல் படங்களுடன் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

Gold Sponsor

இந்நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன், குறிப்பாக இராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புகளைப் பேணிவருவதாக முன்னர் தகவல்கள் வெளிவந்திருந்த போதிலும் அவை பெரும்பாலும் ஆதாரப்படுத்த முடியாத ஊகங்களாகவே இருந்துவந்துள்ளன. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுடன் ஒட்டி நடாத்தப்பட்ட Commonwealth Business Forum என்ற வர்த்தக முதலீட்டாளர் கண்காட்சிக்குலைக்கா குழுமமே Gold Sponsor ஆக இருந்தமை பகிரங்கப் படுத்தப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மேலும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இராஜபக்சவின் மருமகன் ஹ்மால் லலிந்தஹெட்டியாராச்சிக்கு சொந்தமான போர்த்துகலின் மதீராவில் பதிவு செய்யப்பட்ட Hastings Trading eServiços Lda என்ற நிறுவனத்தை 2007 இல் லைக்காகுழுமம் வாங்கியதாகவும். திவாலாகியிருந்த இந்த நிறுவனத்தின் 95 விழுக்காடு உரிமம் ஹெட்டியாராச்சிக்கு சொந்தமாக இருந்தாகவும் Corporate watch என்ற தன்னார்வ நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா குழமத்தினால் வாங்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் சிறிலங்காவில் wireless broadband சேவையை வழங்கும் உரிமையை பெற்றதாகவும் Corporate watchஇன் செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான சிறிலங்கா ரெலிகொம் இன் பலத்த எதிர்ப்பின் மத்தியில் wireless broadband சேவையை வழங்கும் உரிமையை பெற்றுக்கொண்ட இந்நிறுவனம் பின்னர் சிறிலங்காரெலிகொம் உடன் வலிந்து இணைக்கப்பட்டாதாகவும் மேலும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நின்றுவிடாது, லைக்கா குழுமத்தின் பிரயாண முகவர் நிறுவனமான Lyca Fly தற்போது சிறிலங்கா ஏயர்லயன்சின் முதன்மை முகவராக செயற்படுவதாகவும் கூறுகிறது Corporate Watch.

புறக்கணிப்பு என்னவானது?

தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாது, பன்னாட்டு அரசியல் தலைவர்களும் மனிதவுரிமை அமைப்புகளும் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் நிறுவனம் ஒன்று அம்மாநாட்டுடன் ஒட்டிய ஒரு நிகழ்வுக்கு பாரிய நிதியுதவி வழங்கியமை தமிழ்மக்களில் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப்பினும் விளம்பரங்களில் தங்கியுள்ள தமிழ் ஊடகங்களும், இவற்றிடம் நிதியுதவி பெற்றுவரும் தமிழரமைப்புகளும் இவ்விடயத்தில் கள்ள மௌனம் சாதித்து வருகின்றன. ஒரு புறம் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டு, சிறிலங்கா அரசுக்கு உதவிவரும் நிறுவனங்களிடம் தங்கியிருக்கும் நிலையிலேயே சில தமிழரமைப்புகள் உள்ளமை வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.

கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு நிதியுதவி

ஆளும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு அதிகளவு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களில் லைக்கா குழுமமும் அடங்குவதாகவும், கடந்த வருடம் மாத்திரம் மூன்று இலட்சம் பவுண்ஸ்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் The Guardian பத்திரிகை (4 ஜுன் 2012) செய்தி வெளியிட்டிருந்தது. அதே சமயம் இந்நிறுவனம் வருமானவரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய corporation taxஐ செலுத்தவில்லை என்ற தகவலையும் இப்பத்திரிகை வெளியிட்டது. 2008ம்ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 260 மில்லியன் பவுண்ஸ்களை லைக்காரெல் நிறுவனம் மொத்த வருமானமாகப் பெற்றிருந்தபோதிலும், அதற்கான வரி செலுத்தப்படவில்லை என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த நிறுவனத்தின் “Call India, Pakistan and Bangladesh land lines for only 1p a minute.” என்ற சுலோகங்களைக் கொண்ட விளம்பரம் தவறான தகவல்களை வழஙகுவதாகக் குற்றம்சாட்டிThe Advertising Standards Authority அவ்விளம்பரத்தை தடைசெய்ததாக மேற்படி பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிமிடத்திற்கு ஒரு பென்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், பதினைந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பேசினால்கட்டணம் அதிகரிப்பதாகவும் அது பற்றி இவ்விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதனாலேயே இவ்விளம்பரம் தடைசெய்யப்பட்டது.

மனிதவுரிமைகளை மீறிவரும் சிறிலங்கா அதிகாரமையத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடம் கொன்சவேர்ட்டிவ் கட்சி நிதியுதவிபெறுவதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு Middlesbrough South and East Cleveland தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Tom Blenkinsop பிரதமர் டேவிட் கம்ரன் அவர்களுக்கு கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BZYKmIZCUAAEz5G.jpg large

குற்றசாட்டுகளுக்கு மறுப்பு

ஊடகங்களில் வெளிவரும் மேற்படி குற்றசாட்டுகளை இந்நிறுவனம் மறுத்து வருவதாகத் தெரியவருகிறது. இது விடயமாக தமிழ் இணையதளமொன்றிற்கு கருத்து வழங்கிய இந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரேம் சிவசாமி என்பவர் தமது நிறுவனத்திற்கும் இராஜபக்ச அரசாங்கத்திற்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லை எனமறுத்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களுக்கு தாம் உதவி வருவதாகத் தெரிவித்திருந்திருந்த அவர் பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு பெருந்தொகையான உதவியை தாம் ஏன் வழங்கினர் என்பதுபற்றி எதுவித விளக்கத்தினையும் வழங்கவில்லை.

தமிழ் ஊடகங்களின் நிலை

சில தமிழ் ஊடகங்கள், தமது விளம்பர வருமானத்தை கருத்திற்கொண்டு மேற்படி செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருவதுடன் லைக்கா நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு புது விளக்கத்தினையும் வழங்க முற்படுகின்றன. அதிலும் ஒரு இணைய ஊடகம் டேவிட் கம்ரனின் யாழ் பயணம் லைக்கா குழுமத்தின் அழுத்தத்தினால் ஏற்பட்டது என்று மக்களுக்கு காதில் பூச்சுற்றும் வேலையில் இறங்கியுள்ளது.
லைக்கா நிறுவனத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய செய்திகளை பிரசுரித்த மிகச்சில தமிழ் ஊடகங்களில் பதிவு, சங்கதி, இனியொரு ஆகிய தமிழ்இணையதளங்கள் முக்கியமானவை. இச்செய்திகள் வெளிவந்த சில நாட்களில் இவ்விணையத்தளங்கள் சைபர் தாக்குதல் மூலம் செயலழிக்கச் செய்யப்பட்டன.

வசதி படைத்தவர்கள் மலிவு விலை சிம் கார்ட்டுகளை பாவிப்பதில்லை, பெரும்பாலும் அடித்தட்டுமக்களை நம்பியே இந்த நிறுவனங்கள் இயங்குவதனால், இதில் மாற்றத்தை கொண்டுவரவேண்டியவர்களான திருவாளர் பொதுசனம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமா என்பதுதான் அனைவரின் முன்னாலுள்ள கேள்வியாக உள்ளது.

தே.இரவிசங்கர்