அண்மைய புள்ளிவிபரப்படி மலேரியா காவிகளின் பெருக்கம், குறிப்பாக ஆபிரிக்காவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்கான காரணத்தைத்தான் ஆய்வாளர்களால் திடப்படுத்திக் கூற முடியாமல் உள்ளது.
முதலில் சுருக்கமாக மலேரியா பற்றிச் சிறிது பார்ப்போம். பிளாஸ்மோடியா என்னும் ஓரணு உயிரி (protozoa) ஒன்றுதான் இந்நோயை உண்டாக்குகின்றது. இரத்தத்தில் நுழையும் இவ் ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துள் ஈரலை அடையும். அங்கு ஒன்று ஒரு ஈரல் உயிரணுவுள் புகுந்தாலே போதும். அது பலவாக மாறி புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து குருதியுடன் கலந்து மலேரியாவை உண்டாக்கும் வலுக் கொண்டவையாக மாறுகின்றன. பிளாஸ்மோடியா என்னும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உருவாக்க வல்லவை. அந்த நான்கு வகைகளிலும் பிளாஸ்மோடியா பல்சிபறம் என்னும் வகையே மூளையைத் தாக்கும் (உநசநடிசயட) பெருமூளை மலேரியாவை ஏற்படுத்தும் வலுக் கொண்டவை. மலேரியா இறப்புக்களில் தொண்ணூறு வீதமான இறப்புக்கள் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துவைதான். எம் குருதியுடன் கலந்தாற்றான் ஓரணு உயிரிகளால் மலேரியாக் காய்ச்சலை உருவாக்க முடியும். ஆகையால் இந்நோய் நேரடியாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு தொற்றும் நோய் அன்று. ஆகையால் பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் எம் உடலுட் செலுத்தப்பட்டால் மட்டுமே நோய் ஏற்படும் சாத்தியம் உருவாகும்..
நுளம்பு என்றாலே எமக்கு ஒருவகைப் பயம். அவை குற்றியே எம்மை உறக்கத்தைக் கெடுப்பவை. எல்லா நுளம்பு இனங்களும் இதைச் செய்கின்றன. ஏன் இங்கு பிரித்தானியாவில்கூட நுளம்புத் தொல்லை சில இடங்களில் உண்டு. குலெக்ஸ் பிபியன்ஸ் என்பதே இங்கு சாதாரணமாகக் காணப்படும் நுளம்பு வகை. அனொபிலிஸ் என்னும் மரபுப் பெயர் கொண்ட 400 வகை நுளம்புகளில் 30 வகை மட்டும்தான் மலேரிய ஓரணு உயிரிகளின் காவிகளாக உலகை உலுப்புகின்றன. இக்காவிகளின் செயற்பாட்டால் ஆபிரிக்காவின் சில நாடுகளில் இந்நோய் முழு மூச்சுடன் செயற்பட்டு பல குழந்தைளை அவர்கள் ஐந்தாவது பிறந்த நாள் வரை கூட வாழ முடிவதில்லை. பெண் நுளம்புகளுக்கு அவற்றின் முட்டை வளர்ச்சிக்கு தேவையான சத்தை எம் குருதியிலிருந்து பெறவேண்டிய கட்டாயம். மோப்பம் பிடித்து ஒருவர் தோலைத் துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள இரத்தக் குழாயைத் துளைத்து இரத்தத்தை உறிஞ்சுகின்றன. தாம் உறிஞ்சும் இரத்தம் உறைவதைத் தடுப்பதற்காக ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்புகின்றன. அத் திரவத்தில் ஏற்கனவே வேறு யாரோ உடலில் இருந்து புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருக்குமாயின் புதியவர் குருதியுடன் அவை கலந்து புதிய நோயாளி ஒருவர் வந்தடைகிறார்.
தொடக்கத்தில் கூறியதுபோல் நுளம்புகள் குறைகின்றதற்கான புள்ளி விபரம் கிடைக்கின்றது. அதற்கான தாக்கத்தை புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள பூச்சிகொல்லி செலுத்தப்பட்ட படுக்கை வலைகள் வகித்தாலும், மலேரியச் சஞ்சிகையில் ஆய்வாவாளர்களின் அறிக்கை அப்படியான வலைகள் அறிமுகப் படுத்தப்படாத பகுதிகளிலும் குறைவதைக் காட்டுகிறது. தன்சானியா, எரிரியா, கெனியா, சம்பியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படும் தரவுகளின்படி மலேரியா குறைவது வெளியாகின்றது. இப்போது எழும் சந்தேகம் இக்காவி நுளம்புகள் உண்மையில் குறைகின்றனவா அல்லது அல்லது காலமாற்றம் போன்றவற்றின் பாதிப்பால் இப்போது குறைந்து மறுபடியும் புதிய உத்வேகத்துடன் வரப் போகின்றனவா என்ற சந்தேகமே.
நுளம்புகள் மத்தியில் நுண்ணுயிர் பூஞ்சணவன் போன்றவற்றின் தாக்கமும் அவை குறைவதற்கான காரணம் என்ற சந்தேகமும் ஏற்படத்தான் செய்கிறது. சில ஆய்வாளர்கள் தங்கள் மருந்துக்களை சோதித்துப் பார்க்க ஆட்கள் இல்லாத அளவுக்கு மலேரியாவால் பாதிக்கப் பட்ட பிள்ளைகள் கிடைக்கவில்லை என்பது மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால் இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், சிறிதளவுகூட நுளம்புக் குற்று வாங்கி எதுவித எதிர்புச் சக்தியும் இல்லாத குழந்தைகள் மத்தியல் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இறப்பு வீதத்தை அதிகரிக்கும் என்பதே.