அலசுவாரம் வாசகர்களுக்கு புனித நத்தார் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இன்னும் இரு வாரங்களுள் நிறைவெய்த விருக்கும் 2015 குறிப்பிடத்தக்க நன்மைகளெதையும் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லாவிடினும் ஓர் அமைதியான சூழலை எமது தாயகத்தில் உருவாக்கிவிட்டே செல்கிறது என்பதை மறுக்க முடியாது.
பழைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போதிருந்த கட்டற்ற வன்முறைகளுக்கு முடிவுகட்டப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு ஓர் அரசியல் கௌரவம், அதாவது எதிர்க்கட்சி ஆசனங்களும் தலைமையும் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் 1977பிற்பகுதியிலிருந்து தமிழர்கள் இன அழிப்புக்குள்ளான 1983 இன் கடைசிப்பகுதிவரை மறைந்ததலைவர் திரு அமிர்தலிங்கத்தின் தலைமையில் எதிர்க்கட்சி வரிசையைத் நம்மவர்கள் நிரப்பியிருந்தாலும், அப்போதைய சிங்களத் தலைவர்களான ஜேஆர் ஜயவர்த்தனா, காமினிதிசநாயக்கா, சிறில் மத்தியு, நெவில் பெர்ணாண்டோ போன்ற இனவாதிகளால் அந்தத் தலைமைக்கான மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படவில்லை. போதாததற்கு எதிர்க்கட்சித்தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சியிலிருந்த தமிழர் தலைமை பிரிவினை வாதத்Ûதைத் தூண்டுகின்றது என்பதே அந்தநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கான காரணமாக இருந்தாலும், முழுக்க முழுக்க இனவெறிப் பார்வையே அப்போது காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளால் தமிழர் தலைமைக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்த பாணந்துறை எம்பி அவரிருந்த ஐக்கியதேசியக் கட்சியிலிருந்தே தூக்கியெறியப்பட்டார். அக்காலத்தில் உலகில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவராக திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களே விளங்கினார் என்றும் அப்பிரேரணையைக் கொண்டுவந்த ஓரே பாராளுமன்றம் சிறீலங்காப் பாராளுமன்றமே என்றும் கூறப்பட்டது.
இன்றைய நிலையில் ஆளும் தேசிய அரசாங்கத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக ஐயா சம்பந்தர் அவர்கள் காணப்படுகிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தமிழர்களுக்குக் கிடைத்த அரசியல் தகுதிகளில் இந்த எதிர்க் கட்சி ஆசனங்களைத் தவிரப் பெரிதாக எதையும் குறிப்பிட முடியவில்லை. இந்தத் தகுதியும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.
சிங்களப் பெரும்பான்மையால் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைமையையும் அதேவேளை, தமிழர் மீது சிறீலங்கா நடத்திய இனக்கொலையை உலகின் முன்கொண்டு வந்து சாதனை புரிந்ததோடு சிங்கள ஆளும் தரப்பினரின் முகச்சுழிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கும் வடமாகாண அரசின் தலைமையையும் ஒருசேரக் கொண்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனமாக தற்போது தமிழினம் காணப்படுகின்றது.
இந்த இரண்டு வகையான அரசியல் போக்குகளிலும் எந்த அணுகுமுறை எதிர்வரும் வருடத்தில் தமிழர்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது எனத் தெரியவில்லை. தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கொழும்பில் ஓர் சிறிய எதிர்க்கட்சியாய் இருந்துகொண்டு, இவ்வளவு காலமும் எதிரும் புதிருமாயிருந்த சிங்கள் ஆளும் தரப்புகள் ஒன்றுசேர்ந்து அமைத்திருக்கும் பலம் மிக்க தேசியஅரசாங்கத்தை ஒன்றும் ஆட்டிப் படைக்க முடியாது. அதே வேளை எந்தவொரு அதிகாரமுமின்றி, நிதிவலுவுமின்றி எல்லாவற்றிற்கும் மத்திய அரசையே நம்பியிருக்கும் தமிழர்களின் வட மாகாணசபையும், மத்திய அரசின் வெறுப்புக்கும் முகச்சுழிப்புக்குமிடையே பெரிதாக எதனையும் சாதித்து விடவும் முடியாது. இதற்குவழிதானென்ன. இனிவரவிருக்கும் புதிய ஆண்டில் எவ்வாறான அரசியல் தந்திரோபாயங்களையும் அணுகுமுறைகளையும் முன்னெடுத்துத் தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும் என்பதே இன்றுள்ள பெருங் கேள்வியாகும்.
உண்மையில் வடமாகாண சபைக்கும், தமிழர் எதிர்க்கட்சியாகவிருக்கும் பாராளுமன்ற அணிக்குமிடையே ஓர் நெருக்கமான ஒத்துழைப்பும், கொள்கைத் திட்டமுமில்லாமல் கண்டபடி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோ, மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோ தவிர்க்கப்பட்டேயாக வேண்டும். அப்படியில்லாமல் மாகாணசபை தமிழரின் பாராளுமன்ற அணியுடன் ஒத்துழைக்காது, மத்திய அரசுடன் முரண்படக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடும்போது, கொழும்பிலுள்ள அரசதரப்பினருக்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி அணியினரின் குறிப்பாக தலைவரின் தலையிலேயே விழும். இது ஆரோக்கியமானதல்ல. நாளடைவில் இரு தரப்பாருக்குமிடையில் அதாவது மாகாண சபையினருக்கும், மத்தியிலுள்ள தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையில் விரிசல்களேற்பட்டு ஈழத் தமிழினமே பிளவு பட்டு நிற்க வேண்டிய ஆபத்தான சூழல் உருவாகலாம்.
மறுதலையாக நோக்கும்போது, எவ்வித அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் அனுமதிக்காமல், காணி, பொலீஸ், நிதிக் கையாளுகை போன்ற விடயங்களில் எவ்வித அதிகாரங்களையும் வழங்காமல், தமிழர் மாகாண அரசை வெறுமனே உலகத்துக்குக் காண்பிக்கவோர் பொம்மையாக வைத்துக்கொண்டு தொடர்ந்தும் அச்சுறுத்தல், மிரட்டல், இராணுவ நெருக்குவாரம் என்று சகலவிதமான மனிதவுரிமை மீறல்களிலும் ஈடுபட எத்தனிக்கும் ஓர் சிங்களப் பெரும்பானமையரசைத் தட்டிக் கேடகாது, வெறுமனே எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டு நல்ல பிள்ளைகளாக நடிக்க நமது எதிர்க்கட்சியினரை அனுமதித்தலும் சரியான அணுகு முறையாகாது.
மொத்தத்தில் மாகாண அரசின் மீதான கொள்கை ரீதியான ஆதிக்கம் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், அதே வேளை தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தம் சுயமிழந்து பணிந்து கிடப்பதை அனுமதிக்காது அவர்களை வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமான தேவையாகவுள்ளது.
தமிழருக்கு இன்று தேவை அதிகார பலங்கொண்ட மாகாண சபையே. அதற்கு எதிர்க்கட்சித் தகுதி உதவுமானால் மட்டுமே அதனாற் பலனுண்டு. மாறாக, பலம் மிக்க தேசிய அரசொன்றின் அடிவருடிகளாகச் செயற்பட முற்படுவது எவ்வித பலனையும் ஏற்படுத்தாது.
தற்போதுள்ள அரசியற் சூழ்நிலையில் பலகட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வடமாகாணத்திலும், அதே கூட்டமைமப்பின் எதிர்க்கட்சிப் பொறுப்பு மத்திய பாராளுமன்றத்திலும் இருப்பதால், இந்தக் கூட்டை உடைத்து விடாமல், ஒன்றிணைந்த செயற்படு கொள்கைத்திட்டமொன்றை மாகாண மட்டத்திலும், மத்திய மட்டத்திலும் உருவாக்கி அதன் அடிப்படையில் இயங்குவதே மிகவும் சிறப்பான செயற்பாடாக இருக்க முடியும்.
திராவிட நாட்டுக் கொள்கையை முன்வைத்துப் போராடி மக்களின் பேராதரவைப் பெற்றஅறிஞர் அண்ணா தனது கையில் தமிழகத்தின் ஆட்சியதிகாரம் கிடைத்தபோது, தான் இறுக்கமாகப் பிடித்திருந்த திராவிட தேசக்கோட்பாட்டை மெதுவாகத் தளர்த்தினார். அவரிடம் இது குறித்துக் கேட்டபோது “நாங்கள் இவ்வளவு காலமும் அரசியல் பேசினோம் தற்போதுதான் அரசாள வந்திருக்கிறோம், அதற்கேற்பதான் இனி எங்கள் நகர்வுகள் அமையும் என்ற தொனிப்படப் பதிலிறுத்தார். அவர் அப்போது அப்படிக் கூறியபோது மாநில எல்லைகள் ஓரளவு வரையறுக்கப்பட்ட ஆட்சியதிகாரம் தமிழகத் தமிழர்களுக்கு இந்திய அரசமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. மாநிலங்கள் தங்களது சுயாதிபத்திய உரிமையுடன் இயங்குவதற்குப் போதியவசதிகள் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருந்தன.
இந்தியாவிலுள்ள அந்தச் சமஷ்டி முறைமைநமக்கில்லை. இங்கு சமஷ்டியென்றாலே அந்த விடயம் பூதாகாரப்படுத்தப்பட்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு சிங்களப் பேரின வாதிகளால் சிங்கள மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடையை உடைத்தெறிந்து அதிகாரப்பரவலாக்கலை அர்த்த பூர்வமானதோர் சமஷ்டி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்க் கட்சியிலுள்ள தமிழர் தரப்பு இடையறாது குரல்கொடுத்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.
தற்போது நமது தாயகத்துக்கு இருக்க வேண்டிய சமஷ்டி என்னும் அந்த ஜீவாதார உரிமைக்கு மேலாக, யுத்தக்குற்றம், செய்யப்பட்ட இனக்கொலை, எமது மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான சர்வதேச விசாரணை, அரசியற் கைதிகள் விடுதலை, காணாமற் போனோர் பற்றிய விசாரணையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண வழிகளும், யுத்தப் பாதிப்புக்கு உட்பட்வர்களுக்கான நிவாரண உதவிகள், இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும், சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட நிலங்களையும் மீட்டெடுத்தல், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையும் முகாம்களையகற்றலும் என்று இன்னோரன்ன விடயங்கள் முன் நிற்கின்றன.
மேற்குறித்த பொறுப்புகளில் எவற்றை மாகாணசபை கையாளவேண்டும், எந்த விடயங்களை மத்தியில் எமது பிரதிநிதிகளாயிருக்கும் எதிர்க்கட்சியும் அதன் தலைமையும் கையாளவேண்டும் என்பதில் போதிய தெளிவில்லாததால் ஓர் வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டத்தின் கீழ் இரு தரப்பாரும் செயற்படாமல், தத்தம் போக்கில் செயற்படும் நிலையே காணப்படுகின்றது.
போதிய அரசியல் ஆளுமையும், அனுபவமும், அறிவுமுள்ள புத்தி ஜீவிகளான எமது தற்போதைய தலைவர்கள் தமக்கிடையேயுள்ள கட்சி ரீதியான பேதங்களை மறந்து, தமிழரின் ஒரே அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பென்னும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து போராட ஏதுவான அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவார்களாயின் வரப்போகும் புத்தாண்டில் மேலும் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியுமென்று நம்பலாம்.
`அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற பழையோர் மொழிக்கேற்ப, எமது எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஒன்றிணைந்து செயற்பட எமது தலைவர்கள் எல்லோரும் திடசங்கற்பம் பூணுவார்களாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்