மாற்றம் பெறாத சர்வதேச அணுகுமுறையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும்

1169

ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தந்தை செல்வநாயகம் கூறிய ஒரு வாக்கியம் அடிக்கடி தமிழ் அரசியல் தளத்திலும், வெகுமக்களாலும் நினைவு கூரப்பட்டு வருகிறது. “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்ற அந்த வாசகத்தை அரசியல் வங்குரோத்து நிலையில்,விரக்தியின் விளிம்பில் நின்று தந்தை செல்வா குறிப்பிடப்பட்டதாகவே பலரும் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். தந்தை செல்வா இவ்வாறு கருத்து வெளியிடும் போது, அவரும் அவரது கட்சியினரும் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு முடிவை எடுத்திருந்தனர். தமிழீழத் தனியரசு ஒன்றே ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தரும் என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தந்தை செல்வா முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட நிலையில் இவ்வாறான கருத்தை வெளியிட்டதனால், அவர் தோல்வி மனப்பாங்குடன் தனது இயலாத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதுவது தவறு. மாறாக அவர் வேறு எந்த சக்தியையும் நம்பால், தமிழ் மக்களின் ஆத்மபலத்தில் மாத்திரமே நம்பியிருந்தார். இக்கருத்தினை வெளியிட்ட சமகாலத்தில் அவர் இன்னொரு கருத்தையும் தெரிவித்திருந்தார். “தமிழ் மக்களுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று சிங்களத்திற்கு அடிபணிந்து போவது, மற்றயது அடிபணியாது சுதந்திரத்திற்கு போராடுவது. நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன், ஆனால் அது வில்லங்கமானது எனபது எனக்குத் தெரியும்”.

தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர்களின் ஆத்மபலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார். இதனை அவரது எல்லா மாவீரர்தின உரைகளிலும் வெளிப்படுத்தியிருந்தார். பிறசக்த்திகளையிட்டு அவர் மிகுந்த அவதானமாகவே இருந்து வந்துள்ளார். தமிழ்த் தேசியத்தின்பால் நின்ற இந்த இரு தலைவர்களின் நிலைப்பாடும் தமிழ் மக்களால் ஆழ்ந்து அவதானிக்கத் தக்கவை. இந்தியாவும் மற்றய சர்வதேச ஆதிக்கசக்திகளும் ஈழத்தமிழ் மக்களிற்கு நீதியான ஒரு அரசியல்தீர்வினை பெற்றுத்தரும் என்ற கனவிலிருப்பவர்களை துயில் எழுப்ப வேண்டியுள்ளது. அண்மையில் சர்வதேச முரண்பாடுகளுக்கான குழுவினர் (Internation Crisis Group) இலங்கைத் தீவு தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது சர்வதேச ஆதிக்கசக்திகள் பற்றிய வீணான கற்பனைகளை வளர்க்கவேண்டாம் என அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. சர்வதேச முரண்பாடுகளுக்கான குழு என்பது ஒரு அரசுசாரா சிந்தனை மையம் என்றாலும், மேற்கு நாட்டு ஆதிக்கச்சகத்திகளின் நிதியுதவியில் இயங்கும் இந்நிறுவனம் மேற்குநாட்டு கொள்கை வகுப்பாளர்களின் கருத்தினை பிரதிபலிப்பது ஆச்சரியம் தரும் விடயமல்ல.

மேற்படி அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம், தமிழ்த் தரப்பினரான தமிழ் அரசியல் கட்சிகள், அலைந்துழல்வு சமூகத்தில் உள்ள அரசியல் அமைப்புகள், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் செயற்பாட்டளார்கள் ஆகிய வெவ்வேறு தரப்புக்களின் நடவடிக்கைகள் பற்றிய அவதானங்களும், அறிவுறுத்தல்களும் அடங்கியுள்ளன. பொதுவில் மேற்கத்தைய ஆதிக்கசக்திகளின் நிலைப்பாட்டில 2009 க்கு முன்னும் பின்னும் பாரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் மீதான காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதானால், அவை தமிழ்மக்களின் நலன் சார்ந்து செயற்படுவது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்குல இராசதந்திரிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை போன்ற சில அமைப்புகளுக்குமிடையிலான தொடர்பாடல்கள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், இவ்வாறான நம்பிக்கை தமிழர் தரப்பினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சில தமிழ் ஊடகங்களும், திடிர் சிந்தனை மையங்களும் இவ்வாறான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த மேற்கதடைய உறவுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பலாபலன்கள் எதனையும் பெற்றுத்தரவில்லை. மாறாக இச்சக்திகள் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இனி மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பார்ப்போம்.

மாகாணசபையே தீர்வு
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபை (தனித்து வடமாகாணசபை) முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அமுலாக்கும்படி சிறிலங்கா அரசாங்கத்திற்க பரிந்துரை செய்ய்பட்டுள்ளது. மாகாணசபையின் அதிகாரங்களை மேலும் பலமிழக்கச் செய்யும் “தெவிநெகும” சட்டமூலத்தை கைவிடுமாறுமாறும் கோரப்பட்டுள்ளது. அதேசமயம் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை கைவிடுமாறு தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும்
அறிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதன் தலைவர் சம்பந்தனையும் ஒற்றையாட்சியினை ஏற்றுக்கொண்டமைக்காகவும், மிதவாதபோக்கினை கடைப்பிடிப்பதற்காகவும் பாராட்டப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்கு எவ்விதமான தலைமை இருக்கவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் தீர்க்கமான கருத்தினை கொண்டிருக்கின்றன என்பதனை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. விரிவான அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதர தலைவர்கள் பற்றியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களை கடுங்கோட்பாளர்களான தேசியவாதிகளாக இனங்காட்டப்பட்டுள்ளது.

எழுபத்தொன்பது வயதாகும் சம்பந்தனின் உறுதியான கட்டுப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளமைய நேர்மறையாக அணுகும் இவ்வறிக்கை, கூட்டமைப்பின் உட்கட்சி சனநாயகம் பற்றி எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை. இருப்பினும் சம்பந்தனுக்கு பின்னர் தமக்கு இசைவான ஒரு தலைவரை உருவாக்குவதில் அவர்கள் கவனம் செலுத்துவதும் இவ்வறிக்கையில் வெளிப்படுகிறது.

தமிழ் குடிசார் சமூகம் பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், கூட்டமைப்பு மீதான குடிசார்சமூகத்தின் விமர்சனங்களையிட்டு இவ்வறிக்கை கவலை கொண்டுள்ளதாகவே தெரிகிறது. குடிசார் சமூகத்தைக் காட்டிலும் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து நிற்பது,இச்சக்திகள் இன்னமும் காலனித்துவகால நடைமுறைகளை கைவிடவில்லை எனபதனை வெளிக்காட்டி நிற்கிறது குடிசார் சமூகம் தவிர்ந்த ஏனையவர்கள் பொதுவில் தேசியவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுளளதுடன், அவர்கள் (தமிழ் ஊடகங்கள் உட்பட) கூட்டமைப்பினை விமர்சிப்பதனையும் இவ்வாதிக்க சக்திகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கூட்டமைப்பின் மிதவாதப் போக்கும் எதனையும் பெற்றுக் கொள்ளமுடியாமல் போனால், அது தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்டுவிடும் எனவும் இவர்கள் அச்சப்படுவதாகத் தெரிகிறது.

இவ்வறிக்கையில், சிறிலங்கா அரசாங்கத்தின் சிங்களமயமாக்கல் மற்றும் சிங்களபௌத்த தேசியவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையை நேர்மறையான விடயங்களாக எடுத்துக் கொண்டாலும். சிங்கள தேசியவாதம் தமிழ் தேசிய இனத்தை இனப்படுகொலை செய்கிறது என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தவிரவும், தமிழ் மக்களை ஒரு தனித்துவமான ஒரு இனமாக ஏற்றுக்கொள்வதற்கு கூட இச்சக்திகள் இன்னமும் தயாரகவில்லை என்பது துலாம்பரமாக வெளிப்டுகிறது.

உலகத் தமிழர் பேரவை
இவ்வறிக்கையில் பாராட்டுப்பெறுகிற ஒரே ஒரு புலம்பெயர் தமிழர் அமைப்பு உலகத்தமிழர் பேரவையாக இருக்கிறது. உலகத் தமிழர் பேரவை ஒன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் புலம்பெயர் தமிழரமைப்பு என்பது ஒருபுறமிருக்க, மேற்குலகசக்திகளின் கருத்துகளை தமிழ் மக்கள் மத்தியில் காவித்திரிவதும் அது இச்சக்திகளின் நேசிப்புக்கு உரியதாக உள்ளமைக்கு காரணமாகிறது. உலகத் தமிழர் பேரவையின் நான்கு தூண்கள் அணுகுமுறை முழுக்க முழுக்க இந்த சக்திகளால் வழிநடத்தப்படுவதனையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதுபோன்று தமிழ்மக்கள் தமது ஆன்மபலத்துடன் போராடி உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமே தவிர வேறெந்த வெளிச்சக்திகளின் பின்னால் சென்றும் பெற்றுவிட முடியாது என்பது மீளவும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வறிக்கையை வெளியிட்டவர்களுக்கு நன்;றி செலுத்தலாம்.