மாற்று அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

67

நடந்து முடிந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடைந்த தோல்வி, ஈழத்தமிழரின் அரசியலில் பண்புமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதப்படவேண்டும். மாறாக இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாக வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் இவ்விடயத்தில் தமது நலன்களைப் பேணும் தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வெளித்தரப்புகளைப் பொறுத்தவரை, ஒரு தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளும் நடுவ நிலையையே அவை கொண்டிருக்க வேண்டும். ஆனால் மேற்குலக அரசுகளோ இத்தேர்தலில் தமிழ்மக்கள் யாரைத் தெரிவுசெய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை வெளியிட்டதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியையிட்டான தமது மகிழ்வை வெளிப்படையாகவேதெரிவித்துள்ளன.

சர்வதேச முரண்பாடுகளுக்கான மையம் போன்ற சில மேற்குலகச் சிந்தனை மையங்களும், மேற்குலக அரசுகளைச் சார்ந்து நிற்கும் கொழும்பு தாராண்மைவாதிகளும், தமிழ் மக்கள் தம்மத்தியிலுள்ள கடுங்கோட்பாளர்களைத் தேர்தலில் புறக்கணித்து விட்டார்கள் எனக் கூறிவருகிறார்கள். இவர்களில் சிலர் இன்னுமொரு படி சென்று, இதுஇனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வி எனவும்கருத்து வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை, தமது முயற்சியின் பலனாக ஆட்சிக்குவந்திருக்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினை விமர்சிப்பவர்கள் அனைவருமே கடுங்கோட்பாளர்கள் அல்லது இனவாதிகள். ஆதலால் அரசாங்கத்தின் அபிமானிகளே எதிர்கட்சித்தலைவராக நியமிக்கப்படுவதும், முன்னைய ஆட்சியில் அதிகார மீறல்களைச் செய்தவர்களையும் இணைத்து`தேசிய நல்லிணக்க அரசாங்கம்’ என்றபெயரில் அரங்கேற்றிய விசித்திரமான ஜனநாயகத்தை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இருநூற்றி இருபத்தைந்துபேர் உள்ள நாடாளுமன்றத்தில் பதினாறு உறுப்பினர்கள் கொண்ட கூட்டணிக்கட்சிக்கு எதிர்கட்சித்தலைவர் பதவி கிடைத்தமை பேரினவாத அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்எனவும் பரப்புரை செய்யப்படுகிறது. நிழல் அரசாங்கத்தை அமைக்க முடியாத ஒரு கட்சி எதிர்க்கட்சியாக உள்ளமைபற்றி யாரும் கரிசனைகொள்வதாகத் தெரியவில்லை. தமது நலன்சார் கருத்தியலை முன்வைக்கும் இவர்களைத் தவிர்த்துவிட்டு,தமிழ்அரசியல் பரப்பில் மாற்று அரசியலை செயலுருப்பெற வைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறைகொண்டவர்கள் ஈடுபடவேண்டும் என்பதனையேஇக்கட்டுரை வலியுறுத்துகிறது. இச்செயற்பாட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு அவற்றைக் களைந்து முன்னோக்கி செல்வது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நம்பிக்கையற்ற அரசியல்

தமிழ்மக்கள் மத்தியில், மாற்று அரசியலை உருவாக்குவதற்கான, அரசியல்விருப்பு உள்ளதா என்ற வினாவிற்கு விடை தேடுவதிலிருந்தே இம்முயற்சியை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளபோதிலும், அதன் பரப்புரை கூட்டங்களில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்வில்லை. தேர்தல்பரப்புரை நடவடிக்கைகளில் கட்சியின் அங்கத்தவர்கள், தொண்டர்கள் ஈடுபாடு காட்டிய காலம்போய், கூலிக்கு ஆட்களை வைத்து பரப்புரை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையையும்அவதானிக்க முடிந்தது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரனின் பரப்புரை நடவடிக்கைகளுக்கென நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்கொடுத்து ஆட்களை அமர்த்தியதாக இதுபற்றியவிடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. வடக்கு கிழக்கில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்களும் இவ்வாறே நாள் வேதனத்தில் ஆட்களை அமர்த்தியதாக கூறப்படுகிறது.
தேர்தல் அரசியலை விடுத்து மற்றைய அரசியற்செயற்பாடுகளை அவதானித்தாலும் இவ்வாறான அக்கறையற்ற நிலையை அவதானிக்க முடியும். இவற்றை வைத்துப் பார்க்கையில், முன்னையகாலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ் மக்கள்அரசியலில் ஈடுபாடற்ற நிலையில் உள்ளமை புலனாகிறது. இந்நிலையில் மாற்று அரசியல் இயக்கத்தின் நடவடிக்கைகள் மக்களை அரசியலில் நம்பிக்கையுற வைப்பதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதவிடத்து பழைய முறையிலான கட்சிஅரசியலே தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இச்சூழல் தமிழரசுக்கட்சிக்கு தற்போதுள்ள வாய்பான நிலையினையைத் தக்கவைப்பதாகவே அமையும்.

இணக்க அரசியல்

தமிழ் வாக்குகள் பிரிந்துவிடக்கூடாது ஒற்றுமை பேணப்படவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்மக்கள் பெருமளவு அக்கறை காட்டியுள்ளனர் என்பதனை மறுப்பதற்கில்லை. அதே சமயத்தில், தமிழரசுக்கட்சி சிறிலங்காவின் ஆட்சிமையத்துடன் கொண்டிருக்கும் உறவினையிட்டு ஒரளவு சகிப்புத்தன்மையை இம்முறை தமிழ் வாக்காளர்கள்வெளிப்படுத்தியுள்ளனர். இதனை இன்னொருவிதத்தில் கூறுவதானால், சிங்கள (மைத்திரி -ரணில்) அரசுடன் தமிழரசுக்கட்சி கொண்டிருக்கும்நெருக்கமான உறவை விமர்சிப்பதன் மூலம்எதிரணியினரால் அவர்களது வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியவாத வாக்கு வங்கி ஒரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈபிடிபி போன்ற கடசிகளைச் சேர்ந்த தமிழ் வேட்பாளர்கள் அரசாங்கத்தில் பங்கேற்பதை அடிபணிவு அரசியலாகக் கருதி அதனைநிராகரிக்கும் தமிழ் வாக்காளர்கள், எதிர்த்தரப்பிலிருந்து அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் அரசியலை சகித்துக் கொள்கிறார்கள்.ஆதலால் அமைச்சுப் பதவிகளைத் தவிர்த்துவிட்டு,மற்றைய பதவிகளை ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையை தமிழரசுக் கட்சி கடைப்பிடிக்கிறது.

பதவிகளைப்பெறும் விடயத்தில் கூட்டமைப்பின் இதர கட்சிகள், குறிப்பாக ரெலோ, தமிழரசுக்கட்சியுடன் நெருக்கமாக இணைந்துள்ளமை அதன்அண்மைய நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது. அண்மைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுடன் ரெலோ உடன்படுவதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு கூட்டமைப்பின் தலைமை பெற்றுக்கொடுத்துள்ள பாராளுமன்ற அவைத் துணைத்தலைவர் பதவியேகாரணம் என ரெலோவின் உள்வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன்கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் ரெலோகட்சியினரிடம் கருத்து வேறுபாடு காணப்பட்டமையையும், செல்வம் அடைக்கலநாதன் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை வெளியிட்டு கொண்டிருந்தமையும் அவரால் சம்பந்தன், சுமந்திரனை பகைத்துக் கொள்ள முடியாத நிலமையின் வெளிப்பாடே பதவியை வைத்துப் பணமீட்டுவதுஎன்பது கட்சிகளின் அரசியற் கருத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு தமிழ் அரசியல் தேய்மானமடைந்திருக்கிறது.

வெளியார் பற்றிய எதிர்பார்ப்பு

தேர்தலில் கூட்டமைப்பு வலியுறுத்திய ஒரு விடயம். தம்மை பெரும் எண்ணிக்கையில் தெரிவு செய்து சர்வதேசத்திற்கு தெளிவானதொரு செய்தியைத் தெரிவிக்கவேண்டும் என்பது. அவ்வாறானதொரு செய்தியைத் தெரிவிக்க, தமது கட்சியிலிருந்து இருபது வேட்பாளர்களைத் தெரிவு செய்யவேண்டும் என எண்ணிக்கையைத் தெரிவித்த கூட்டமைப்பினர், அவ்விதமான தெரிவு என்ன செய்தியை சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் என்பதனை விபரிக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பெரும்பாலான தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதுதான் அச்செய்தியெனில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சர்வதேசவிசாரணையை சர்வதேச அரசுகள் புறந்தள்ளியிருக்க முடியாது. மாறாக கூட்டமைப்பினரது கருத்தே பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்மக்களின் கருத்தாக எடுத்துகொள்ள முடியும் என்ற நிலையினை ஏற்படுத்தவதற்கு வடக்கு – கிழக்கிலிருந்து கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெருமளவில் தெரிவுசெய்யப்பட்டமை உதவியிருக்கிறது. மறுபுறத்தில்,மேற்குலக அரசுகள் தொடர்பிலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பினை, அவர்களது விருப்புக்குரிய தரப்பாக இனங்காணப்பட்ட கூட்டமைப்பு தமக்கான ஆதரவாக மாற்றிக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளது.

கிழக்கு மாகாண மக்கள்

மாற்றத்தை ஏற்படுத்தவிழைந்த தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கிழக்கு மாகாணத்தில் படுதோல்வியடைந்தது. இதனைவைத்து தமிழரசுக்கட்சியின் கோட்டையாக கிழக்கு மாகாணம் மாறிவிட்டது என அர்த்தப்படுத்த முடியாது. கிழக்குமாகாண மக்களின் நிலைப்பாட்டை நன்கறிந்தவர்களின் கணிப்பில், அங்குள்ள தமிழ் வாக்காளர்கள் தமிழ் வாக்குகள் பிரிந்து செல்வதன் மூலம் பிற இனத்தவரின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதனை விரும்பவில்லை என அறியமுடிகிறது. இவ்விதம் வாக்குகள் பிரிந்து செல்லாமல் தடுப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதுமுண்டு. மாமனிதர் சிவராம்உட்பட கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சிலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்கு கொண்டதனை வைத்து இவ்வாறு கூறப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் வாக்குகள் பிரிந்து விடாமல் தடுப்பதற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தால் அது கிழக்குமாகாண வாக்களர்களுக்கு ஏற்புடையதாகவுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

தமிழ்த் தேசியத்தின் பிரிக்கமுடியாத அங்கமான கிழக்கு மாகாண மக்களைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. தனித்து வடக்கை மையப்படுத்தி ஏற்படுத்தப்படும் அரசியல் நகர்வுகள் தூர நோக்கில் எதிர்மறையான விழைவுகளையே ஏற்படுத்தும் பேரபாயம் உள்ளது.

இச்சூழலைக் கருத்திற்கொண்டு அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி ஏற்படுத்தப்படும் முயற்சிகளே நிலையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் கட்சிகளினதும்தலை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என எதிர் பார்க்கலாம்.

படஉதவி – tamilleader. com