மாவீரம் போகவில்லை

148

வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்குமிடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகி அதனைப் பத்திரிகைகள் வேறு ஊதிப் பெரிது படுத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மாவீரர் நினைவு வாரம்வந்திருக்கிறது. சிவ பூசைக்குள் கரடி நுழைந்தது போல என்பார்கள், அவ்வாறுதான் இந்த முரண்பாடுகளும் காணப்படுகின்றன.

தமிழினம் ஒற்றுமைப்பட்டு நின்று தனது உரிமையை வென்றெடுக்க வேண்டிய முதற்தேவையை மறந்துவிட்டு, சிறீலங்காப் பிரதமரின் வாலைப் பிடித்துக்கொண்டு, வடமாகாணசபை முதல்வரின் தலைமையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட, `சிறீலங்காசெய்த இனப்படுகொலை’ தொடர்பான தீர்மானத்தைத் தவறானதெனக் கூறுவதும், முதல்வரை மட்டந்தட்ட முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாகும்.

இன்றைய காலகட்டத்தில், எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்தாலும், இணக்க அரசியல் அணுகு முறையை முன்வைத்து ஆளும் அரசுடன் முரண்படாது அனுசரித்துப் போகவேண்டுமென்பது சரியேயாயினும், எமது உறவுகளுக்கு நடந்த அநியாயங்களை உலகின் முன் கொண்டுவராது மறைப்பது நாம் எம்மினத்திற்குச் செய்யும் துரோகமாகும். அது `முகத்துக்கஞ்சி வேசித்தனம் பண்ணுவதற்கு’ ஒப்பானது.

ஏதோ சிறீலங்காவில் அமைதி நிலையொன்றுஏற்பட்டு எம்மீதான இனவெறித்தாக்குதல்கள் குறைவடைந்துள்ளமை உண்மையேயாயினும் அதற்கான உண்மைக்காரணம், சர்வதேசத்தின் சிறீலங்காமீதான பார்வையேயன்றி வேறில்லை. `கேட்கப் பார்க்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்பது போல நமக்காக இந்த உலகம் பரிந்து பேச முற்பட்டிராவிட்டால் பெரும்பான்மை எங்களைமுடிவு கட்டித்தானிருக்கும். அவர்கள் எம்மைஅடிக்காமலிருப்பது பெரிய விடயம், அதுவே எமக்குப் போதும் வீணாக அவர்களைச் சர்வதேசத்தின் முன் நிறுத்த வேண்டியதில்லைஎன்ற நினைப்பில் அரசியல் நடத்த முற்படுவதுகடைந்தெடுத்த கோழைத்தனத்தையும், அடிமை வாழ்வுக்கு ஒருப்பட்டுப் போவதையுமேவெளிக்காட்டும்.

முழுத்தமிழினத்தினதும் ஆதரவோடு, அதி பெரும்பான்மை வாக்குகளால் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதல்வரைப் பொய்யனென்று இகழ்ந்த சிறீ லங்காவின் தற்போதைய பிரதமருக்கெதிராக பாராளுமன்றத்தில் கண்டனக் குரல்கொடுக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை. வடமாகாண சபையிலாவது அந்தக் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம், பெரும்பான்மை ஆதிக்கத்தின்கீழ் அடங்கியொடுங்கிப் போக எங்களுக்குச் சம்மதமே என்ற எமது பிரதிநிதிகளின் சுயமரியாதையற்ற இயல்பையே காட்டுகின்றன. இந்தப் போக்கு நிச்சயம்மாற வேண்டும். மண்ணுக்காய் மடிந்ததன்மானத் தமிழ் மாவீரர்களை நினைவு கூரும் இந்த வேளையில் நாமின்னும் சூடு சொரணையற்றுப் போகவில்லை என்பதை உலகுக்குக் காட்டுவோம்.

தமிழ் தாய் கோயிலில் தெய்வங்களாய் நிற்கும்மாவீரர்களுக்கு எமது அஞ்சலிகள்.

[padding right=”10%” left=”10%”]

மாவீரம் போகவில்லை

மாவீரம் போகவில்லை மண்ணீரம் காயவில்லை
சிந்திய குருதி இன்னும் சேறாய்க் கிடக்கிறது
அழுத கண்ணீர் அங்கே ஆறாய்க் கிடக்கிறது.
ஒன்றும் நடக்க வில்லை ஒரு பகுதி உறவுகளை
தின்ற போர் இன்னும் தீரவில்லை ஓயவில்லை
உரிமைகளுக்கு ஒரு உத்தரவா தமுமின்றி
சரிசமமாய் வாழத் தகுதியின்றி தாயகத்தில்
‘தாழ்வுற்றுத் வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு’ நிற்கின்றோம். பலனில்லை. ஆனதனால்

விழுந்த விதைகள் விருட்சமாய் தளைத்தோங்கி
எழுந்து நிற்பதற்கான ஈரமது காயவில்லை.
அடங்கிச் சிலகாலம் அமைதியென்ற போர்வையிலே
முடங்கிக் கிடந்தாலும் முயற்சியற்றுப் போனாலும்
விழுந்த விதைகள் மீண்டும் முளைத்து எழும்.
ஆழவேரூன்றி அகலக் கிளைபரப்பி
பூத்துக் குலுங்கி புதிய கனிதந்து
மீண்டும் வசந்தம் மெதுவாய்த் தலை காட்டும்.
சிந்தையிலே எங்கள் தேசத்தை மீட்பதென்ற
உந்தலே வந்து உறுத்த தம் இன்னுயிரை
ஈகம் செய்திட்ட எமது இளையோர்கள்
தாகம் தணியவில்லை தவிப்பின்னும் தீரவில்லை
அந்த வழிவந்த அன்னையர்கள் எங்களது
சொந்த மண்மீட்க துணிவோடு பொங்கியெழும்
வீர மறக் குலத்தை மீண்டும் புதுப்பிப்பார்.
ஈரமண் காயாத எங்களது மண்ணில்
தீரர் பலரைத் திரும்பப் பிறப்பிப்பார்

அகத்திலே அன்பின் ஐந்திணையால் காதல் செய்து
அறத்தைக் கரத்தெடுத்து ஆணினமும் பெண்ணினமும்
பறத்திலே வீரப் புதுவாழ்வையுருவாக்கும்
நாநூற்று வாழ்க்கை நமை விட்டுப் போகவில்லை.
மறத்தையும் மக்கள் மறந்து விடவில்லை.

நெஞ்சிலெரியும் நெருப்பாம் விடுதலையை
அஞ்சி அட இனிமேல் அது வேண்டாம் நமக்கென்று
புறமொதுக்கி தூரப் போகாதீர் அன்பர்களே!
அறவழியில் எங்கள் ஆற்றல் மிளிரட்டும்.

எங்களது தாயகத்தை எப்படியும் மீட்போம் நாம்
என்ற உறுதி இல்லாதொழிந்து விட்டால்
சிங்களத்தின் கீழோர் சிற்றினமாயத் தீவினிலே
சிறுமைப் படுவதற்கு தீர்மானம் செய்து விட்டால்
பாடுபட்டு நாங்கள் பலநாளாய் சேர்த்துவைத்த
ஈழத்தமிழ் மக்கள் என்னும் அடையாளம்
கேடுகெட்டுப் போகும் கெட்டழிந்து வீணாகும்
நாடுவிட்டு வந்த நம்மாற்றல் பொய்த்துவிடும்.

இன்று உலகில் எமக்கென்றோர் இருப்புண்டு
ஏன்றும் அது அழியா திருக்க வகை செய்வோம்
ஐநா இனி எம்மை அலட்சியம் செய்யாது
பொய்நாவினரின் புழுகு பலிக்காது
எம்மினிய தேசம் எமதே அதில் வாழும்
நம்மவர்க்கே அந்த நாட்டின் உரிமையென்ற
உண்மையை இந்த உலகம் புரிந்திடற்காய்
ஈரம் காயாது இருக்க வழிகாண்போம்.

அறத்தின் வழிநின்று அனைவருமே பாடுபட்டு
பட்ட துயருக்குப் பலன்காணும் நாள் வரைக்கும்
தொடரட்டும் எங்கள் துயரழியப் போராட்டம்.
விட மாட்டோம் ஈழ விடுதலையே எம் குறிக்கோள்
என்று மிடுக்கோடிணைவோம் திரண்டெழுவோம்.
வென்று விடுதலையை, மீண்டெழுவோம் இனி என்றும்
நன்றே நடக்கும் நமக்கென்று நம்பிடுவோம்.

ஆதிசிவன் பெற்றிட்ட அன்னை தமிழமுதை!
நாதவடிவானவளை நாம் வணங்கக் கோயில் கட்டி,

`உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்
உலகெங்கும் இன் தமிழ் நீ பரவவேண்டும்
வென்றுலக மொழியெதையும் மேவி நீயே
வீறுநடை போட்டிடுதல் வேண்டும் எங்கள்
தொன்று புகழ் இலக்கியங்கள் மக்கள் நெஞ்சம்
தொட்டுலகு தமிழின்பம் துய்க்க வேண்டும்
இன்றெமக்கு தேவை இது.’ என்று வேண்டி
எமது மாவீரர்களை அஞ்சலிப்போம்.

[/padding]