மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினால் மட்டும் போதுமா?

751

மாவீரர்களின் கனவாக்கும் நனவாக்கும் சர்வதேச நகர்வுகளைச் செய்யக் கூடிய செயலணி அதற்குரிய கட்டுமானங்களினோடு புலம் பெயர் தேச அமைப்புக்களிடம் உண்டா என்ற ஐயம் என்னிடமும் உள்ளது. அது பற்றி இந்த புனித காலத்தில் சிந்திக்கத் தூண்டுவதே இக் கட்டுரையின் நோக்கம் .

விடுதலைப் புலிகள் தமிழீழ நிர்வாக அலகொன்றை உருவாக்கி வந்தவர்கள். அவர்களின் இலட்சியத்தை அடைய புலம் பெயர் தேசத்தில் ,“சங்கங்கள்” அமைத்து அல்லது சங்க உறுப்பினர்கள் நடப்பது போல் நடந்து கொண்டு தமிழீழ இலட்சியத்தை அடைய முடியாது.சரியான திட்டமிடல், ஒத்திகை பார்த்தல், ஒரு நடவடிக்கையின் பின் அதில் பெற்ற அனுபவங்கள் தொடர்பாக மீளாய்வு செய்தல் . அதனூடாக கற்றுக் கொள்ளல் உட்பட பல எமது புலம் பெயர் போராட்ட நடவடிக்கைகளிலும் அவசியமாகவுள்ளது.ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் வன்னியில் வைத்திருந்த நிர்வாக பிரிவு , அதற்கான பயிற்சிவகுப்புக்கள் போன்றவை இதற்கு ஒரு உதாரணம்.

எமது ஊடக எழுத்தாளர்கள் ஆழமான அரசியல் நடவடிக்கையை தூண்டுபவர்களாக இல்லாமல்; வெறும் “மரண விசாரணை அதிகாரிகள்” போல நடந்து கொள்கின்றார்கள். எமது எழுத்தாளர்கள் என்ன செய்யப்படவேண்டும்? எவ்வாறு செய்யப்படவேண்டும் என சிந்தித்து எழுத ஆரம்பிக்க வேண்டும் . சமூகம் என்ற ரதத்தை முன்னோக்கி இழுக்கும் வெள்ளைக் குதிரைகளின் பணி எழுத்தாளர்கள் முன் இருக்கின்றது.

அண்மையில் , பிரித்தானிய தமிழர் பேரவை உலகத் தமிழர் மகாநாடு நடாத்தி இருந்தது . அது குறித்து மகா நாடு முடிந்த பின் “மரண விசாரணை அதிகாரியாக” தாமரை காருண்யன் என்ற சர்வேந்திரா தர்மலிங்கம் என்பவர் பிரித்தானிய தமிழர் பேரவை எடுத்த சில முடிவுகள் குறித்து சர்ச்சை கிளப்பி இருக்கின்றார் . இது தேவைதானா? மகாநாடு தடைகளை தாண்டி ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அதனை நடை முறைப்படுத்த வேண்டிய கருத்துக்களை முன் வைப்பதே “கருத்துருவாக்க ” சக்திகள் என தமக்கு தாமே பட்டம் சூட்டுவோரின் கடமை. அதை விடுத்தது சொற்களைக் கோர்த்து வீண்வார்த்தை பேசுவதில் என்ன பொருள் உண்டு?

ஒரு அரசியல் அமைப்பில் , அல்லது செயற்பாட்டில் உள்ளக விவாதங்களில் முன் வைக்கப்படும் முன் மொழிவுகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் பொழுது பல்வேறு கருத்துக்கள் வருவது இயல்பானதே. விவாதத்தின் இறுதியில் எடுக்கப்படும் தீர்மானம் தான் அங்கு முக்கியமானது .

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நடை பெற்ற விடயங்கள் ஐந்து விடயங்களைத் தொட்டு இந்த விடயத்தை பார்ப்போம் .

  1. 210 பிரேரணைகளில் 110 பிரேரணைகளை சிறீலங்கா நிராகரிப்பு என்பதே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பாக இருந்தது. இது என்ன கத்தரிக்காய் வியாபாரமா செய்கிறோம் . 210 பிரேரணைகளில் 209 பிரேரணைகளை சிறீலங்கா ஆதரித்திருந்தால் என சிந்தித்து பாருங்கள் எவ்வளவு முட்டாள் தனமாக இருந்திருக்கின்றோம் என்பது புரியும். ஆம் அந்த நிராகரித்த விடயங்கள், அது தொடர்பான நாடுகள், சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் . அதனை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பது பற்றி எமது எழுத்தாளர்களோ , ஊடகங்களோ , மக்களோ கவனம் செலுத்தவில்லை . மாறாக எந்த பலனும் அற்ற மாகாண சபை விடயத்தில் இந்தியா பல்டியா? இல்லையா ? என்பது பற்றி கருத்துருவாக்க சக்திகள் விவாதம் நடாத்துகின்றன.
  2.  தென் சூடான் அரசுடன் உறவுகளைப் பேணுவதாக நாடுகடந்த அரசார் அடிக்கடி கூறி வந்துள்ளனர் . தென் சூடானில் அலுவலகம் கட்டுவதாகவும் அவர்கள் கூறி இருக்கின்றனர் . ஐ.நா மனித உரிமை பேரவையில் தென் சூடான் எவ்வாறு நடந்து கொண்டது என்பது பற்றி எமது ஊடகங்களோ, எழுத்தாளர்களோ , மக்களோ கவனம் செலுத்தியதாக இல்லை . மக்களும் ஊடகங்களும் இது பற்றி கேள்வி கவனம் செலுத்தவேண்டும்.
  3. தென்னாபிரிக்கா தலைமையில் பேச்சு வார்த்தை எனப சிலர் பேசிக் கொளின்றார்கள் . ஐ.நா மனித உரிமைச் சபையில் தென்னாபிரிக்கா எப்படி நடந்து கொண்டது என்று எமது மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் பேசவில்லை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எமது மக்கள் எப்படி அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.
  4.  மரண தண்டனையை நீக்குமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா நிராகரித்திருக்கின்றது . அது பற்றி யாரும் பேசவில்லை. மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என உலகெங்கும் இருக்கும் அரசியல் தளம் பற்றிய தெளிவின்மையே இதற்கு காரணம் .
  5. அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான உயிர்வாழும் உரிமை (Right to life) ஐ இணைக்க சிறீலங்கா மறுத்திருக்கின்றது. என உலகெங்கும் இருக்கும் உயிர்வாழும் தொடர்பான அரசியல் தளம் பற்றிய தெளிவின்மையே இதற்கு காரணம் .

இன்னுமொரு முக்கிய விடயத்தை குறித்து கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கின்றேன் . சீனாவில் அடிப்படையான மாற்றம் ஒன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது . கம்யூனிஸட்கட்சியில் புதிய தலைவர் இம்மாத முற்பகுதியில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவர் புதிய தலைமுறையை சேர்ந்த , சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என அறிகின்றேன். இந்த மாற்றங்களை நாமறிந்து , சீனாவில் உள்ள விடயங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் செயல்பட எந்த முயற்சியும் தலைமைகள் எடுக்கவில்லை. ஒபாமாவிற்கு வாழத்து அனுப்பியவர்கள் சீனாவில் நடைபெறும் மாறத்தை எமக்கு சாதகமாக திருப்ப முடியுமா என முனைந்து கொள்ளவில்லை. எமது மக்களும் உலக அரசியலில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

அமெரிக்காவை அல்லது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள் , ஒவ்வொரு நாட்டுக்கும் என ஒரு பிரிவு இருக்கும் , அவர்கள் அந்தந்த நாடுகளிலும் நடைபெறும் விடயங்களை முழுமையாக அறிந்தவர்களாக இருப்பார்கள். விக்கி லீக்ஸ் ஆவணங்கள் இதனை தெளிவாக காட்டுகின்றன. டக்ளசின் முன்னாள் மனைவி, கருணாவின் காதலி என்பது கூட அவர்கள் பதிவு செய்து அமெரிக்க அரசுக்கு அறிவித்துள்ளார்கள் .

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் சுதந்திர போராட்டம் ஆகிவிடாது . மாவீரர் கனவுகளை சரியாக புரிந்து கொள்ளலும் , இலக்குகளை அடைய அவர்கள் கடைப்பிடித்த நெளிவு சுழிவுகளை சரியாக புரிந்து கற்றுக் கொள்ளலும் , அவர்கள் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய இலட்சியத்துக்காக , நாய் வேஷம் போட வேண்டிய இடத்தில நாய் வேஷம் போட்டும் , நெஞ்சை நிமிர்த்தி நிற்கவேண்டிய இடத்தில நெஞ்சை நிமிர்த்திம் நாம் நகர வேண்டும்.மாவீரர்களுக்கு உண்மையான அஞ்சலி என்பது , பலமான தமிழீழ அரசை அமைப்பதற்காக இது போன்ற சிறந்த கட்டமைப்புக்களை உருவாக்குவதும் அவசியம் .