மாவீரர்களைப் பிரிக்காதீர்!

646

மாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப் போவதாகச் சொல்லப்படுவதுதான் ஆச்சரியமாகவிருக்கிறது.

தமிழீழம் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முடிவுசெய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் இப்படிச் சில பிரச்சனைகள் உருவாகி மாவீரர் தினமும் இரு இடங்களில் நடக்க வேண்டியிருந்தால் அதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அத்தகைய கொள்கை முரண்பாடுகளை மக்கள் மத்தியில் வைத்து அவர்களின் ஆதரவைத் தேடியபடி செயற்பாடுகள் நடைபெறும் போதுதான் ஓஹோ! இதுதானா விசயம் என்று கொஞ்சம் ஆறுதலைடய முடியும். ஆனால் இங்கோ விசயம் வேறுபோல தெரிகின்றது. இத்தகைய கோஷ்டிப் பிளவுகளுக்கான அடிப்படைக்காரணம் தமிழ்த் தேசியத்திலிருந்து எங்கோ விலகிப்போய் வேறு அடிப்படைகளில், அதாவது வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைகளாக இருக்குமாயின் அதையெண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“ஏதோ ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் உள்ளனவாம், அவர்களுக்கிடையில் ஏதோ முரண்பாடுகளாம், அதனால் மாவீரர் தினத்தை இருசாரரும் பிரிந்து நின்று நடத்தப் போகிறார்களாம் இதுதான் அடிபடும் செய்தி.” இங்கே கவலை தரும் செய்தி என்னவென்றால் யார் எத்தகைய வேலைத்திட்டங்கள் அல்லது மாற்றுக் கொள்கையுடன் ஈழதேசியத்தை நோக்கி முன்னேற முயல்கிறார்கள்? அவர்களுடைய திட்டமென்ன என்பதெல்லாம் யாரும் அறியாததுதான். அதனால் வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைதான் இந்தப் பிளவின் காரணமாக இருக்குமோவென்று ஐயுறும் நிலைமைக்கு நம்மையெல்லாம் இந்தப் பிளவு இட்டுச் சென்றிருக்கிறது.

யார் குத்தியாயினும் அரிசானால்ச் சரி என்ற நிலைப்பாட்டில்தான் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு கூப்பிட்ட இடமெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குத்திக்கொண்டிருப்பது வேறு எதற்கோ என்று உணரப்படும்போது காலவோட்டத்தில் மக்களும் தமது தார்மீக ஆதரவை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அளிக்காமல் விட்டுவிடக்கூடும். ஆதலால் நாங்கள் ஏன் இரண்டாகப் பிளவுற்றிருக்கிறோம், எங்களிடையே ஏற்பட்டுள்ள கொள்கை, வேலைத்திட்ட முரண்பாடுகள் யாவை என்பவற்றைப் பகிரங்கப்படுத்தித் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதூன் சரியான வழிமுறைபோலத் தென்படுகிறது.

முன்பெல்லாம் தக்க தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்டதால் இத்தகைய பிளவுகள் தோன்றவில்லை. இப்போது பிளவுகள் தோன்றியிருப்பது தலைமையின் இருப்பை ஐயத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது தலைமை மறைந்திருந்தேனும் வழிநடத்திக் கொண்டிருந்தால் இத்தகைய பிளவுகள் தோன்றியிருக்காது, ஆகவே தலைமை இப்போது இல்லை என்னும் முடிவை மிகவும் தெளிவாக்கியபடியே காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இனியென்ன? படத்தை வைத்துக் கார்த்திகை மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலியை நடத்திவிடலாம்தானே! தமது தலைவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடியற்றிய பரம்பரையில் வந்த இனமல்லவா தமிழினம்! கொடுக்க வேண்டிய மரியாதையையும், மதிப்பையும் மாவீரர்களுக்குக் கொடுக்கும்போது மாவீரர் தலைவனுக்கும் கொடுத்து உரிய கௌரவத்தை அளிப்பதுதானே முறை என்றெல்லாம் கருத்துகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

உலகத்திலேயே மிக அதிகம்பேர் பங்குபற்றிய இறுதி ஊர்வலம் அறிஞர் அண்ணாவினுடையது தானாம் என்று கின்னஸ் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அந்த அளவுக்குத் தமிழரின் நன்றியுணர்வு இருந்திருக்கிறது.

பிரமணாதிக்கத்துக்கும் ஆரிய மேலாண்மைக்கும் எதிராக மக்களைத் திரட்டி, திராவிடநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி, இன்று வரை தமிழ்நாட்டை தமிழர் தேசியமல்லாது இந்திய தேசியம் ஆட்சிகொள்ள முடியாது செய்தவர் அறிஞர் அண்ணா. திராவிடநாட்டுக் கோரிக்கையை இடைநடுவில் கைவிட்டாலும், திராவிடக் கட்சிகளை மேலோங்க வைத்த சாதனையைச் செய்த அந்த மாமனிதனைத் தமிழ்நாட்டு மக்கள் கின்னஸ் சானையை நிகழ்த்துமளவுக்குத் திரண்டு வழியனுப்பி வைத்தார்கள்.

நாம் என்ன செய்தோம்? தமிழீழமென்னும் நாட்டை உலகறியச் செய்து அதனைக் கட்டமைத்து தரை, கடல், ஆகாயம் என்னும் மூன்றிலும் ஆதிக்கம் செலுத்தப் படை நடைத்திய மாவீரர் தலைவனுக்கு உரிய மரியாதையைச் செய்தோமா?

உண்டென்பார்க்கு உண்டு இல்லையென்பார்க்கு இல்லையென்கிற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டுக் காற்றில் கலந்து விட்டான் தேசியத் தலைவன். இப்போது உள்ளவர்கள் அந்த அருவுருவ நிலையை அசிங்கப்படுத்தி அடியோடு இல்லையென்று நிரூபிக்கப்பார்க்கிறார்கள். தங்களது ஒற்றுமையில்லாத செயற்பாடுகளால் தலைமை தற்போது இல்லை அப்படித் தற்செயலாக இருந்தாலும், அது முற்றாகச் செயலிழந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கப் பார்க்கிறார்கள்.

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக முற்பட்டதுபோல தேசியத் தலைமை சகல வலிமையோடும் இருந்த காலத்தில் ஒற்றுமையோடு செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத நாம் இனி எதனைத்தான் செய்து முடிக்கப் போகிறோமோ தெரியவில்லை.

சரி யார் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று விட்டுவிட்டு மறைந்த மாவீரர்களை நினைவு கூரவேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களாகிய எமக்கு உண்டு. இந்தப் பிளவுகளால் மக்கள் விரக்தியடைந்து தற்செயலாக மாவீர் தினத்துக்கு மக்கள் வருகை குறைந்து போனால் அதை விடக் கவலைக்குரிய விடயம் இருக்க முடியாது.

எமக்காக மரணித்தவர்கள் எம் மாவீரர்கள். தலைவர்களின் கட்டளையை ஏற்றுத் தம்முயிரைத் தியாகம் செய்தவர்கள். அவர்கள் செய்த ஆன்ம அர்ப்பணிப்பு விழலுக்கு இறைக்கப்பட்ட நீராகிவிடக்கூடாது. ஏற்றிவைத்த தியாகத் தீ அணைந்துவிடக்கூடாது. இன்று இடிக்கப்பட்டுள்ள அவர்களின் நினைவாலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டுத் தமிழீழ தேசத்தின் புனிதத் தலங்களாக மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைந்து சுடரேற்றிச் சுடரேற்றி அந்தத் தியாக தீபங்களை அணைந்து விடாது பாதுகாப்போம்.

இன்று இரண்டாகப் பிளவுபட்ட மாவீரர் நிகழ்வு நாளை இன்னும் பலதாகப் பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளாக அவை மாறி இறுதியில் “உலக்கை தேய்ந்து உளிப்பிடியான” நிலையை அடைந்து விடவும் கூடும். அதனால் சம்பந்தப்பட்ட அவைரும் ஒற்றுமையாக மாவீரர் தினத்தை ஒரே இடத்தில் நிகழ்த்தி அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும் பிரமாண்டத்தையும் குறைத்து விடாது பாதுகாக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

தற்போதைக்கு மாவீரர் தினம் ஈழதேசத்தின் தேசியதினம். விடுதலை பெறாத ஒரு தேசிய இனத்தின் தேசிய நினைவு நாள். அதனை யாரும் பிரிந்து நின்று நடத்த வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் காரணப்படுத்தி பிரிந்து நின்று செயலாற்றுவதற்கு மாவீரர் தினத்தைத்தான் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு வேறு நிகழ்வுகளைப் பாவித்துக் கொள்ளலாம். அவ்வகையில் மக்களைப் பிழையாக வழிநடத்தாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதே மாவீரர் களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

ஒரே குறிக்கோளுக்காக மரணித்த மாவீரர்களைப் பிரித்து விடாதீர்!

தொடருவம்…