மாவீரர் தினம் – என்ன செய்ய வேண்டும்

443

மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் 1989 இல் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டான இந்த வருடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 1989 ம் ஆண்டிற்கு முன்பு, போராளிகள் வீர மரணம் அடைந்தால், சந்தர்ப்பங்களை பொறுத்து இயலுமான வரை அவர்களின் குடும்பத்தினரிடம் போராளிகளின் உடல்களை ஒப்படைக்கப்பட்டு, குடும்பத்தினர் அவர்களின் குடும்ப வழமைக்கு உரிய வகையில் கிரியைகள் செய்வார்கள்.

1990 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதுபுலிகளின் கொடியில் இருந்து நீக்கப்பட்டு எமதுதேசியக்கொடி மக்கள் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களின் வித்துடல்கள் துயிலுமில்லங்களில் அடக்கம் செய்யப்பட்டன. அவ்வாண்டு கோப்பாயில், மாவீரர் துயிலுமில்ல பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டது. அன்று முதல் மாவீரர்களின் புதைகுழிகள் விதைகுழிகளாக மக்களால் பேணிப் பராமரிக்கப்பட்டது. எனது பிள்ளை இத்தனையாவது மாவீரர் என்று சொல்லும் அளவிற்கு தரவுகள் துல்லியமாக பேணிப்பாதுகாக்கப்பட்டன.

மாவீரர் துயிலும் இல்லம் மஞ்சள், சிவப்பு தோரணங்களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு துயிலும் இல்லத்திற்கும் அருகில் தீபங்கள் ஏற்றி, உறவினர், நண்பர்கள், ஊரார் கூடி, வணங்கும், நடுகல் வழிபாட்டு முறை பேணப்பட்டது. செ.சத்தியநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, சங்கர், தனது 22வதுவயதில், 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாலை 6.05ற்க்கு விழுப்புண் காரணமாக உயிரிழந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியான இவரின் வித்துடலாகிய நாள், மாவீரர் நாளாக 1989 ல் அறிவிக்கப்பட்டு, அன்று முதல், அத்தினத்தில், அனைந்து போராளிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1998 ம் ஆண்டு 14,000 மேற்பட்ட தொகையினராக இருந்த மாவீரர்கள், அதற்கு பின் 10 வருடங்களான 2008 இல் 24,000 மேற்பட்ட தொகையினராக அதிகரிக்கின்றனர். அது முள்ளிவாய்காலின் பின் உயர்ந்து இன்று 40,000க்கு மேலான போராளிகளை இழந்து நிற்கின்றோம்.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட இம்மாவீரர் தினத்திற்கு, கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், தொடர்ச்சியாக பல விதத்திலும், முட்டுக்கட்டைகள் போடப்பட்டுகின்றன.தாயகத்தில் கூப்பிடு துÖரத்திற்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் கண்காணிப்புக்களை போடுவதோடு, கோயிலில் மணி அடிக்கக் கூடாது, திவசம் திதி கொடுக்கக் கூடாது, கூட்டம்போடக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளோடு, யாழ் பல்கலைக்கழகத்தை வேறு கட்டாயவிடுமுறை கொடுத்து மூடி விடுகிறார்கள். தமிழர்களை நினைத்து, எவ்வளவு மன அழுத்தத்தோடு சிங்களவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கும், தமிழர்கள் எல்லோரையும் விடுதலைப்புலிகளாகவே பார்க்கிறார்கள் என்பதற்கும், இதை விட வேறு என்ன விளக்கம் வேண்டும். இந்த லட்சணத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் சிலரால் பேசப்படுகின்றது.

இது இப்படியிருக்க, இங்கு புலம்பெயர் தேசத்திலும் இம் மாவீரர் தினத்திற்கு வந்த சோதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. முதலில் மூன்றாக, இரண்டாக என்று பிரிவினை கோளாறுகள் இருந்தன, பிறகு கணக்கு எல்லோருக்கும்காட்டப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டுஎழுந்தது. அதன் பின்பு கணக்கு ஒழுங்காககாட்டப்படும் போது, அடடா கதிரைக்குஇவ்வளவு செலவு, சாப்பாட்டுக்கு இவ்வளவு செலவு என்று, வியாபாரிகள் மாவீரர் நாள் நடத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வேறு. இதிலபுலி எதிர்ப்பாளர்களும், மக்கள் என்ற போர்வையில், இந்த எதிர்ப்புக்கு முனைப்பாக உள்ளார்கள்.

இருபதாயிரம் தமிழர் ஓரிடத்தில், ஒன்று கூடி,ஒரு மகத்தான நிகழ்வை ஒருமித்து செய்கிறார்கள் என்பது, ஒரு செய்தி. அச்செய்தி அவர்களது அபிலாசைகளையும், விருப்பங்களையும், விடுதலைக்கான வேட்கையினையும் உலகிற்கு, இரத்தம் இன்றி, பேனா இன்றி, மேடைக் கூச்சலின்றி, பத்து பேர் கூடி ஐந்து மணித்தியாலம் புதிய போராட்ட வழிமுறைகளையும், தத்துவார்த்த அடித்தளத்தையும் கதைத்து கலைந்து போதலன்றி, அதை விடவும்,உறுதியாகவும், தெளிவாகவும், அச்செய்தியைச் சொல்லிச் செல்கின்றது.

இருபதாயிரம் தமிழர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றாக கூடுவதற்கு, தலைக்கு, ஒரு வருடத்திற்கு ஐந்து பவுண்செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றால், இதில் யாருக்கு நட்டம்? குளிர்காலத்தில் காலையில் எழுந்து வரும் எம்மவர்கள், பின்னேரம் தான் வீடு திருப்புகிறார்கள், பிள்ளைகளுக்கு, வயோதிபவர்கள் என்று எல்லோருமே பசியாறி போக வேண்டும், எமது மண்டபத்தில் கோப்பி ஒரு பவுண், அதை வாங்காமல் விட்டால், அங்கிருக்கும் வெள்ளைகளின் கொஸ்டா கோப்பி, இரண்டு பவுண்ஸ் எழுபத்தியந்து பென்ஸ். இங்கு இரண்டு பேர் சாப்பிடக் கூடிய புரியாணி ஐந்து பவுண்ஸ் என்றால் அங்கு ஒருவர் மட்டும் கொஞ்சம் வயிறு நிறையக் கூடிய பேஸ்ரி ஐந்து பவுண்ஸ். நல்ல வேளை, மாவீரர் நாளுக்கு இவ்வளவு மக்கள் புகையிரதத்தில் வருவதால், பிரித்தானியா போக்குவரத்துறைக்கு இவ்வளவுகாசு சேர்ந்து, இத்தனை லாபம் அடைகிறார்கள்,முதலாளிகளை பகிஷ்கரிக்க வேண்டும், என்றுயாரும் சொல்லவில்லை.

இந்த நாட்டில் என்ன மார்க்சிசம் கதைத்தாலும், தனக்கு தனக்கு என்று வரும் போது, “ஊருக்கடி உபதேசம், உனக்கல்லடி கண்ணே” என்பது போல 50 வது பிறந்தநாளுக்கும், சாமத்திய வீட்டுக்கும் பத்தில் இருந்து இருபதாயிரம் வரைச் செலவழிக்கிறார்கள். கடந்த வருடம் நடந்த மாவீரர் தின நிகழ்வுக்கு கணக்குச் சொல்லப்பட்டு, அதில் 8,000 பவுன்ஸ் மிஞ்சியதாகவும், அது தாயத்தில் உள்ள மக்களுக்கு உதவியதாகவும், உங்கள் பிரதேசப் பொறுப்பாளரிடம் கணக்கை கேட்டு பார்த்துக் கொள்ளலாம் என்றும் மேடையில் கூறப்பட்டது.

மாவீரர் நாள் நடத்த சிலர் இருந்தால், மக்கள் போராட்டத்தை வேறு சிலர் நடத்தக் கூடாது என்பதில்லை. தலைவன் தோன்றுவதில்லை, உருவாகின்றான், இவ்வளவு காலமும் புலி பாசிசம், புலி எம்மை விடுவதில்லை என்று வெளிநாட்டவர்களுக்கு பூச்சாண்டி காட்டியவர்கள், இப்போதும் அவர்களையே விமர்சித்து அரைத்த மாவையே அரைப்பதை விட்டு, இந்த அரசியல் வெளியை தமது உயரிய சிந்தனைகளை செயற்படுத்த சாதகமாக பாவித்து, எதிர்காலத்தை செழுமைப்படுத்தும் நோக்கில் உங்களிடம் உள்ள புதிய போராட்டத்திற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு போய், புதிய தலைமுறையைப் படைத்தால் என்ன?

செய்வது கடினம், அடுத்தவன் செய்ய அவனை விமர்சிப்பது சுலபம். ஒவ்வொருவரும் செய்வதற்கு நிறைய உள்ளன. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரித்தானது, எந்த மாபியாக்களும் (மார்க்சியம் கதைக்கிற மாபியாக்கள் உட்பட) அதை கையகப்படுத்திக் கொள்ள முடியாது. அது ஒவ்வொருவரினதும் வரலாற்று கடமையும் கூட.