மாவீரர் நினைவெழுச்சிநாளும், தமிழ்மக்களும்

92

மாவீரர் நாள் பற்றியும், அதை நடாத்துவது பற்றியும் சில சர்ச்சைகள் உள்ளன. அதுபற்றிபார்க்க முன்பு, வழமைபோல இந்த முறையும்,வேலை, மற்றும் பாடசாலை நாள் என்றும் பாராமல், புலம் பெயர் தேசம் எங்கும் மாவீரர் நினைவு எழுச்சியாக நினைவு கூரப்பட்டது. அதுமட்டும்மன்றி இம்முறை தாயகத்திலும் பல பிரதேசங்களில் பலத்த கட்டுப்பாடுகள் மத்தியிலும் மக்களால் திறந்த வெளியிலும், அவர் தம் இல்லங்களிலும் நினைவு கூரப்பட்டது. அவர்தம் கல்லறைகளை இராணுவம் இடித்து, அழித்து தரைமட்டம் ஆக்கினாலும், அவை வெறும் கல்லறைகள் அல்ல, உயிர்உள்ளவர் பாசறை என்று, மக்கள் தாம் வாழும் இடம் எங்கும், மண்ணிலும், புல்லிலும், காட்டிலும், மேட்டிலும் எனமனதில் வைத்து பூசித்தார்கள். இங்கு பிரித்தானியாவில் கூட பெருமளவு மக்கள் மண்டபத்திற்கு வெளியே அலைமோதி ஆர்பரித்துக் கொண்டிருந்த போதிலும், நிலமையை உத்தேசித்து மண்டபத்திற்கு வெளியேயும், வணக்க நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்து, மாவீரர் கீதம் இசைந்தபோது, வெளியே, மக்கள் நின்ற இடத்திலேயே, ஆடாது அசையாது மௌனஅஞ்சலி செலுத்தியதைக் கண்டு, அந்த பெரிய மண்டபத்தின் வேற்றுஇனத்தைத் சேர்ந்த பாது காவலர்கள் வியந்து நின்றார்கள். அதுதான் எமது ஆன்மாவை கட்டிப்போடும் மந்திரம், எம் மனதில் கனலை மூட்டி, விடுதலை நெருப்பையும், அடக்குமுறைக்கான எதிர்பை தக்கவைக்கும் உன்னதம்.

இந்த அடக்குமுறைக்கான எதிர்போடு போராடுவது, ஒருபக்கம் இருக்க மாவீரர் நிகழ்ச்சிக்கு கணக்குக் காட்டவில்லை என்றும், அந்த காசை எடுத்து, அது செய்கின்றார்கள், இது வேண்டினார்கள் என்று எழுதி போர்கொடி தூக்கிய புலிஎதிர்ப்பாளர்கள். இப்போ கணக்கு விபரத்தை பகிரங்கமாக அறிவித்ததும், இவ்வளவு காசா? என்று வெளிநாட்டு வரவு செலவு தெரியாதவர்கள் போல, புலம்புகிறார்கள். சும்மா 100 இல்இருந்து 150 பேர் வரை அழைக்கப்படும் சாதாரண குடும்ப பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கே பல ஆயிரக்கணக்கில் செலவு வரும் இந்தக்காலத்தில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் வரும் மாவீரர் நாளுக்கு எவ்வளவு முடிந்திருக்கும் என்ற சாதாரண கணக்குக்கூட இவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அதற்கும் ஒருபடி மேல் போய், இவ்வளவு காசுசெலவு செய்யாமல் அதை சேர்த்து, அங்குள்ள போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் மக்கள் மத்தியில் இறக்கி ஒரு நாலணா சேர்த்தவர்களா என்றால், அதுதான் இல்லை. இவர்களுக்கு, இவ்வளவு ஆயிரணக்கணக்கில் மக்கள், மாவீரர் பெயரைச்சொல்லி அவர்களின் பின்னால் நிற்பதுவும், அனைத்து உலகங்களுக்கும் அவர்களின் நினைவும், அவர்கள் விட்டு சென்ற பணியும் ஒயவில்லை என்பது நினைவு கூரப்படுவது. எரிச்சலை உண்டு பண்ணுகிறது. இந்த இணைப்பையும், பிணைப்பையும் அறுத்து விட்டால். தமிழ் சமூகத்தை வேறு ஒன்றாலும் ஒன்று சேர்க்க முடியாது என்பதை உணர்ந்து, இப்பிடி என்றால், அப்பிடி என்றும், அப்பிடி வந்தால் இப்படி என்றும், எதை செய்தாலும் குற்றம் என்று, புலி எதிர்பை `மக்கள் நேயம்’ என்ற முலாம் பூசி எழுதுகிறார்கள். முழுசாக முப்பது மக்களைக்கூட, ஒரு புரட்சி என்று, கூட்ட வக்கிலாதவர்கள் பேனா புரட்சியும், புலன் ஆய்வும் செய்கிறார்கள். பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி, தலைக்கு 5 பவுண், மாவீரர் நாளுக்கென செலவழித்தால், என்ன நட்டம். அதே மக்களிடம் வீடு வீடாக போய் இவர்கள், இவர்களின்நல்ல நோக்கத்தை சொல்லி காசு சேர்ப்பதற்கு,யாரும் வேண்டாம் என்று சொன்னார்களா? புலம்பெயர் மக்கள், பேராளிகள் குடும்பத்திற்கு உதவுவதற்கு, மாவீரர் நாளை நிறுத்தி, அந்த 5 பவுணை எடுத்துத்தான் உதவவேண்டும் என்ற நிலைமையில் இல்லை.  மக்கள் போராளி குடும்பங்களுக்கு என்று கேட்டால், மறுக்கபோவதும் இல்லை. அதையே செயல்பாட்டாளர்கள் வெளிப்படையாகச் சேர்தால், இப்படி கேட்பவர்கள் பின்பு, ஆயுதம் வேண்டச்சேர்கிறார்கள்,புலி திரும்பவும் வருகிறது என்று பேனாவினால் சன்னதம் ஆடுவார்கள்.

இதை விட இன்னொரு விடையம் என்ன வென்றால், இந்த மக்கள் இல்லாப்புரட்சிக்காரர்கள், தமக்கு விளங்கிய, அரசியல் அதி உயர்தத்துவத்தை மக்களுக்கு தெரிந்த மொழியில்விளங்கப்படுத்தி, அவர்களை புரட்சியாளர்களாக எழுச்சி கொள்ளத் தெரியாத, பரமார்த்த குருக்கள், தங்கள் இணையத்தளங்களில், இலங்கை அரசு பலரைத் தடை நீக்கம் செய்ததும் விழுத்தடித்து கொண்டு வந்து, ஏன்? ஏதற்கு ? தடை நீக்கம் செய்தார்கள் என்று, ஒரு சிலரை மட்டும் தேர்தெடுத்து சிறீலங்கா அரசிற்கு இணைந்து போகிறவர்கள் எனத் தாக்குகிறார்கள். இப்படி உசுப்பேற்றுபவர்கள், முதலில் தடை போட்டபோது, ஆகா!என்ன ஆழமான நாட்டுப்பற்றார்கள், என்று அவர்களைப் போற்றவும் இல்லை. சிறீலங்கா தடை போட்டதற்கும், நீங்குவற்கும் அரசியல் காரணகாரியங்கள் இருந்தாலும் இவர்களின் புலிஎதிர்ப்பு கண்ணாடி இவர்களின் கண்களை மறைக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில், பிரித்தானியாவால் நாம் ஆளப்பட்டோம் என்ற ரீதியில், பிரித்தானியா தனியிடம் வகிக்கிறது. அதிலும் அவர்களின் புலனாய்வு துறையின் வீரியம் மிகவும்ஆழமும், அகலமும் ஆனது. பிரித்தானியாவில் நடைபெறும் நிகழ்வுகளில், அவர்களின் தலையீடு வெளிப்படையாகவும், மறைமுகமாவும் தவிர்க்கமுடியாததொன்று. போனவருடம்இங்குள்ள பிரதான பத்திரிகையில் அடிபட்ட செய்தியான கெலன் ஸ்ரீல் என்ற சமூகப் பெண்செயற்பாட்டாளரின் கதையில், அவர் பிரித்தானிய புலன் ஆய்வு துறைக்கெதிராக வழக்குப்போட்டிருந்தார். அதாவது தன்னிடம் இருந்துதகவல்களை அறிவதற்காக வேறு பெயரில்பிரித்தானியாவினால் வேலைக்கு அமர்ந்தப்பட்ட பொலீஸ் தன்னை மணமுடித்து 10 வருடங்கள் தன்னோடு வாழ்ந்து தன்னிடம் இருந்துஎல்லாச் செய்திகளையும் உளவு அறிந்துகொண்டதாக ஆதாரத்தோடு வழக்குச் தொடுத்திருந்தார். அவர் 10 வருடங்களாக தன்னைஏமாற்றி மணமுடித்திருந்தது, ஒரு வன்புணர்வுக்கு ஈடானது என்று எழுதியிருந்தார். http://www.theguardian.com/uk-news/2014/aug/29/helen-steel-relationship-undercover-police-feel-violated

இது ஒன்று மட்டும் அல்ல இது போல10க்கும் அதிகமான வழக்குகள் இருக்கின்றன.இங்குள்ள புலன் ஆய்வுத்துறை எந்த வழியையும் பாவித்து, பொய்யாக குடித்தனம் கூடநடத்தி, குழந்தையும் பெற்று, தம்காரியத்தில்கருத்தாக புலன் ஆய்வும், உளவும் செய்யக்கூடியவர்கள். பின்பு அதற்குரிய தண்டணையும், குற்றப்பணமும் கூடத் கட்டத்தயங்காதவர்கள். http://www.bbc.co.uk/news/uk-28798836

இப்படியாக சுழித்தோடக்கூடியது பிரித்தானிய இணையத்தளம் ஒன்று 22-07-2014 கிளாஸ்கோவில் நடைபெற்ற, முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஒரு ஆவண வெளியீட்டு நிகழ்விற்கு (அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன்), தமிழர்ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் கமல், வெளியில் சிவில் உடுப்பில் நின்ற இரண்டு புலன்ஆய்வு பிரிவினரை அழைத்து வந்து, அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை, இவ்விணைத்தள ஆசிரியர் உட்பட, அனைவரையும்அடையாளப்படுத்தி விட்டதாக, தனது இணைத்தளத்தில் படத்துடன் விளக்கமாக துப்புதுலக்கி!பெரிய ஒரு இரகசியத்தை அம்பலப்படுத்துவதுபோல பில்ட்அப் கொடுத்திருந்தது. பாவம் அவர்களுக்கு தெரிந்த அறிவுக்கு பிரித்தானிய உளவுதுறை கைகுலுக்கிக் கொண்டுதான் துப்புதுலக்கவரும்! `தவறுகளை விமர்சிப்பதும், புதியபோராட்ட வழிமுறைகள் தொடர்பாகச் சிந்திப்பதும் துரோகத்தனம் என்ற கருந்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஒரு துரோகத்தனமும் இல்லை, முழு முட்டாள்தனம் தான் இருக்கிறது!இதை எழுதினால் `ஊதுகுழல்’ என்று பட்டம் கொடுப்பதால், எமக்கேன் வம்பு என்று ஒருவரும் எழுவதற்கும் முன்வருவதில்லை!