மிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்

85

மிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய இன்னொரு சொல் பயங்கரவாதிகள். யாரைப் பயங்கரவாதிகள் என்ற வகைக்குள் அடக்குவது என்பதற்கு தெளிவான வரவிலக்கணம் எதுவும் இல்லாவிடினும் பயங்கரவாதச் செயலகள் எனச் சில வன்முறை நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். அதே பயங்கரவாதச் செயல்களைப்புரியும் அரசாங்கங்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது அதன்வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தது. பெரும்பாலும் வன்முறை தழுவிய அரசற்ற தரப்புகளைமட்டுமே பங்கரவாதிகளாக அடையாளப்படுத்துப்படுகிறது. அதுவும் ஒரு சாரரால் விடுதலைப்போராளிகள் என அழைக்கப்படுபவர்கள், இன்னொரு சாரரால் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகிறார்கள். இச்சொற்கள் பற்றிய மொழியாராட்சியை ஒருபுறம் வைத்துவிட்டு, விடயத்திற்கு வருவோம். மேற்படி சொற்கள் பற்றிய பாவனை முழுவதும் அரசியல் மயப்பட்டு இருக்கிறது.

கடந்த புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சிரியா மீது விமானத்தாக்குதல் நடாத்துவது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் டேவிட கம்ரன், மேற்படி பிரேரணைக்கு ஆதரவு வழங்காதவர்கள் பயங்கரவாதிகளிற்கு ஆதரவானவர்கள் (terrorist sympathisers) எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது கூற்றினை மீளப்பெறுமாறு எதிர்க்கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் ஸ்கொற்லாந்து தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிய போதிலும் கம்ரன் தனது கருத்தினை மீளப்பெற மறுத்துவிட்டார்.  நடைபெற்ற விவாதத்தில், தரைப்படையின் உதவியின்றி எவ்வாறு `இஸ்லாமிய தேசம்'(Islamic State) அமைப்பை வெற்றி கொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, “சிரியஅதிபர் அல்-அசாத் இற்கு எதிரான எழுபதாயிரம்மிதவாதிகளைக் கொண்ட படைகளை தமது நேசசக்திகளாக ஏற்று அவர்கள் மூலம் தரையிலும் தாக்குதல் நடாத்தப்படும்” எனக் கம்ரன் பதிலளித்திருந்தார். அதாவது இறைமையுள்ள ஒரு நாட்டின் அராசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் (moderates) எனக்கம்ரன் அடையாளப்படுத்தியிருக்கிறார். கம்ரன் குறிப்பிடும் நேசப்படைகளில் குர்திஸ் போராளிக்குழுவும் அடக்கம் என்பதும், துருக்கியை மையப்படுத்திய குர்திஸ் போராளிகளின் அமைப்பான PKK  பிரித்தானியாவின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் இங்கு முரண் நகையாக உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை எனக் கூறுவது போன்று இந்த அடையாளங்களும் நிரந்தரமானவையல்ல என்பதும் தெளிவாகிறது.

மேற்குலக அரசுகளால் மட்டுமல்ல, இலங்கைத்தீவின் அரசியலிலும் இந்த நிலைப்பாடே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக மகிந்த அரசாங்கத்தில் பாதுகாப்புச்செயலாளரகாவிருந்த கோத்தாபாய வினால் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளினதும். தனிநபர்களினதும் பட்டியல் இவ்வாறானதே. அப்பட்டியலில் 424 தனிநபர்களும், 14 அமைப்புகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றுள் விடுதலைப்புலிகள், தமிழர்புனர்வாழ்வுக்கழகம் தவிர்ந்த ஏனைய பன்னிரண்டு அமைப்புகளும் தனித்து புலம்பெயர்நாடுகளில் இயங்குபவை அதிலும் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட அமைப்புகள் மேற்கத்தைய அரசுகளுடன் தொடர்பினைக் கொண்டுள்ளவை. அல்லது மேற்கத்தைய அரசுகளின் ஆலோசனையை ஏற்றுச்செயற்படுபவை என்றும் கொள்ளலாம். 1968ம் ஆண்டு ஐ.நா. சபையால் கொண்டுவரப்பட்ட இல 45 (No 45 of 1968) என்ற சட்டவிதியின்பிரகாரம் இத்தடைப்பட்டியல் கொண்டுவரப்பட்டமையால் அதனை அனுசரித்து நடக்கவேண்டிய கடமை சர்வதேச நாடுகளுக்கு இருந்தது. ஆனால்சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதனை இலக்காகக் கொணடு செயற்பட்ட ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும்ஜரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பாடலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இத் தடைப்பட்டியலை இந்நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. மறுபுறத்தில் இத்தடைப்பட்டியலை வெளியிட்ட மகிந்த அராசாங்கமும் இத்தடைப்பட்டியிலை வைத்து நடவடிக்கைகளை எடுப்பதில் அதிகம் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் இத்தடைஅமுலில் இருந்த போதிலும் மங்கள சமரவீர,ஜயம்பதி விக்ரமரத்தின, நிமல்கா பெர்னான்டோபோன்றவர்கள் தடைசெய்யப்பட்ருந்த உலகத்தமிழர் பேரவை, கனேடிய தமிழ் கொங்கிரஸ்,அவுஸ்திரேலிய தமிழ்கொங்கிரஸ், அமெரிக்கதமிழர் செயற்பாட்டவை போன்றவற்றுடன் வெளிப்படையாகவே நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தனர். இவர்களுக்கிடையிலான சந்திப்புகள்வெளிநாடுகளில் நடைபெற்றன. அதுபோலவேதமிழரசுகட்சியின் தலைவர்களும் இவ்வமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததுடன்,கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.

லண்டனிலிருந்து ஒரு ஆங்கில மொழி இணையதளத்தை இயக்கிவரும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், மேற்படி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மங்கள சமரவீரவினால் புனர்வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என எள்ளலுடன் கூறுவார்.அந்தளவிற்கு இவர்களுக்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருந்து வருகிறது. அதுபோன்று, இவ்வருடம் மார்ச் மாதம் சிறிலங்கா ஜனாதிபதி சிறிசேனவிற்கும், தடைப்பட்டியலில் இருந்த பாதர் எஸ். ஜே. இமானுவலுக்கும் இடையிலான சந்திப்பு லண்டனில் நடைபெறுவதற்கு இத்தடைப்பட்டியல் இடையூறாகஇருக்கவில்லை. தடைப்பட்டியலில் இருந்த சிறிசேனவிற்கும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கும் சிறிசேனவிற்கும் இடையிலும் இவ்வாறான சந்திப்பினை ஏற்படுத்தவதற்கு முயற்சிகள் நடைபெற்றதாகவும் அறியமுடிகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்தமிழரசுக்கட்சியினர் பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துமளவிற்கு நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தனர். இவற்றுக்கும் இத்தடைப்பட்டியல் தடையாக இருக்கவில்லை.

கோத்தாபாயவவின் தடைப்பட்டியல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கிடையில் பேதம்பார்க்கவில்லை. பெரும்பாலும் செயற்பாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், செயற்பாட்டாளர்களில் கணிசமானவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் நொவெம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட சிறிசேனவின் பட்டியல் வேறு அணுகுமுறையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னைய பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த உலகத்தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழ்க் கொங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க்கொங்கிரஸ், கனேடிய தமிழர் தேசியப் பேரவை, தமிழ்த் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் நான்கு அமைப்புகளும் தாயகம்,தேசியம், தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்துபவை அல்ல என்பதும் ஆட்சி மாற்ற முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் வாழும் நாடுகளில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் ஆலோசனைப்படி செயற்பட்டுவந்த தமிழ் அமைப்புகளுக்கு நேரடியாகவே சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணுமாறு ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.ஆனால் அதற்கு இத்தடைப்பட்டியல் தடையாகஇருக்கும் எனக் கருதப்பட்டதால் இப்பட்டியிலிருந்து இவ்வமைப்புகளை நீக்குமாறு சிறிலங்காஅரசாங்கத்திற்கு அழுத்தம் வெளித்தரப்புகளால்கொடுக்கப்பட்டது. தாம் இவ்வாறு சிறிலங்காஅரசாங்கத்திடம் கோரியுள்ளதாக பிரித்தானியவெளியுறவுத்துறைச் செயலக அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர். அத்துடன் பட்டியலிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டமையிட்டு குறித்த தரப்புகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளன.

விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம்,உலகத்தமிழர் நிவாரண நிதியம் ஆகியவை கடுங்கோட்பாளரகளாகக் கருதப்பட்டு அவற்றின் மீதான தடை நீக்கப்பட்டவில்லை. அதுபோன்று புதிய பட்டியலில் தடைசெய்யப்பட்டுள்ளவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள 155 பேரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக அடையாளப்படுத்துப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான மேற்குநாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்கிற நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சிறிலங்காவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மீதான தடையினை அகற்றுமாறு அவை கோரப் போவதில்லை.

தற்பொது வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களின் நெறிப்படுத்தலுக்கு உட்படாத அமைப்புகளை, குறிப்பாக ஆட்சிமாற்ற முயற்சிக்கு ஆதரவு வழங்காதவர்கள், சிறிலங்காவின் உடன்பாட்டுடன் கொண்டுவரப்பட்ட அமெரிக்கத்தீர்மானத்தை விமர்சிப்பவர்கள், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துபவர்கள், தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக இருப்பவர்கள் ஆகியோரையே `கடுங்கோட்பாளர்கள்’ என அடையாளப்படுத்தப்படுத்தி புறமொதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே வடமாகாண முதலமைச்சரும் முன்னாளர் உயர்நீதிமன்ற நீதியரசரும் ஆன்மீகவாதியுமான விக்னேஸ்வரன் இப்போது கடுங்கோட்பாளராக அடையாளப்படுத்தப்படுகிறார். மறுபுறத்தில், மகிந்த அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவாளர்களானா பாதர் சீலம்பிள்ளை ஜோசப் இமானுவல், சுரேன் சுரேந்திரன், விசாகப்பெருமாள் இரவீந்திரன், டேவிட் பூபாலபிள்ளை, எலாயஸ் ஜோசப் ஜெயராஜா போன்றவர்கள் மிதவாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்.

ஆக இது ஜோர்ஜ் டப்ள்யூ புஷ் கூறியதுபோன்று, “ஒன்றில் எங்களோடு இருக்கிறீர்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் இருக்கிறீர்கள்” எனக் கறுப்பு வெள்ளையாகவே பார்க்கப்படுகிறது. எங்களுடைய ஆலோசனைப்படி நடப்பின் நீங்கள் `மிதவாதிகள்’அல்லது உங்களை நாம் `கடுங்கோட்பாளர்கள்’ என்றுதான் அழைப்போம் என்பதுதான் மேற்குலகத் தரப்புகளால் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறையாக உள்ளது.