மீண்டும் ஒரு அஞ்சலிக்குறிப்பு; இராசநாயகம் என்ற முரளிக்கு

958

எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தேசியத்தின் மீது உணர்வு பூர்வமானஅக்கறை கொண்ட இராசநாயகம் அவர்களின் பணிகள் சில மகத்தானவை. 1981 மே 31 இல் ஒரு லட்சம் புத்தகங்களுடன் எரிக்கப்பட்ட யாழ்.பொதுசன நூலகத்திற்கு ஒரு இலட்சம் புத்தகங்கள் சேர்ப்பதை அக்கறையாகக் கொண்டு செயற்பட்ட ஒருவர், அப்போதைய மிதவாத தமிழர் கூட்டணியின் தலைமையை அம்பலப்படுத்தியதில் பெரும் பங்காற்றியவர். முக்கியமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் சமூகத்தை தமிழ் தேசியத்தின் பால் திசை திருப்பியவர்களில் முக்கியமான ஒருவர். அவருக்கான இறுதி வணக்கத்தை இவ்விடத்தில் ஒருபேப்பர் பதிவு செய்து கொள்கிறது.
– ஆசிரியர் குழு

எல்லா மரணச்செய்திகளும் அதிகாலையில் வருவதற்கு ஏதேனும் காரணமிருக்கிறதாதெரியவில்லை. இரவில் எழுப்பி எப்படி இதனைதெரிவிப்பது என்ற தயக்கத்தால்தானோ..போனவாரத்துக்கு முந்தியவாரம் முரளி என்ற இராசநாயத்தின் மறைவுச் செய்தி வந்தது.லண்டன் மருத்துவமனை ஒன்றில் சுகயீனம்காரணமாக இராசநாயகம் மரணித்துவிட்டார். இராசநாயகம், வெளியில் தெரியாமலே ஒரு வரலாற்றுடன் நெருக்கமானவராக இருந்தது இப்போதுதன்னும் எல்லோருக்கும் தெரிந்தாக வேண்டும்.

இந்த விடுதலை அமைப்பு விமானங்களுடனும், கடல்மீதான பெரும் ஆளுமையுடனும் வளரும் என்ற நம்பிக்கையோ, குறிப்புகளோ, அசரீரிகளோ எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் நின்றிருந்தவர் இராசநாயகம்.

எழுபதுகளின் முடிவுக் காலப்பகுதியும் எண்பதுகளின் ஆரம்பவருடங்களும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மிகுந்த சோதனைக்காலமாக தினம்தினம் கழிந்தது.
எழுபதுகளின் முடிவில் இயக்கத்துள் மிகப்பெரும் பிளவு ஒன்று உருவாக்கப்படுகிறது. எழுபத்தியெட்டில், அதுவரை நிகழ்த்தப்பட்ட செயற்பாடுகளுக்கு பகிரங்கமாகவே உரிமைகோரி வீரகேசரி பத்திரிகைக்கு அனுப்பிய கடிதத்துடன் ஆரம்பமான எழுச்சி அடுத்துவந்த வருடத்தின் பிளவுடன் சீர்குலைந்து போய் இருந்தது.

இயக்கம் பிளவுபடுவது என்பது வெறுமனே அதன் உறுப்பினர்கள் பிளவுபடுவது என்பதற்கும் அப்பால் அதன் இலட்சியவீரியம், போரிடும்ஓர்மம், ஆதரவுதருபவர்களின் சோர்வு என்பனவும் பிளவு என்பதற்குள் அடக்கம். எல்லோர் மத்தியிலும் ஒருவிதமான விட்டுவிலத்தும் மனப்பான்மையை அந்தப் பிளவை உருவாக்கியவர்கள் விதைத்திருந்தார்கள்.

அன்று மிகச் சொற்பமானவர்களே தேசியத் தலைவருடன் நின்றுபிடிக்க முடிந்தது. அவர்கள் முழுநேர உறுப்பினர்கள். ஆனால் இதில் மிகமுக்கியமானவர்கள் யார் என்றால் இயக்கத்தின் முதல்வட்டமான உறுப்பினர்கள் என்பதற்கு அடுத்த நிலையில் இருந்து மிகவும் நம்பிக்கையுடன் இதனை காப்பாற்றிய முக்கியமான ஆதரவாளர்களே. இவர்களுள் மிகமுக்கியமானவர் ராசநாயகம்.

இரண்டுவிதமாக அவர்கள் இதனை காப்பாற்றி வளர்க்க உதவினார்கள். முதலாவதுஇந்த பிளவின் பின்னால் ஏற்பட்ட தத்துவச் சண்டையில் எமது விடுதலைஅமைப்பான தமிழீழவிடுதலைப்புலிகளின் சார்பில் அதன்நிலைப்பாடு, எதிர்காலச் செயற்பாடு என்பனசம்பந்தமாக பகிரங்கமான ஒரு தளத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டபோது ராசநாயகம் அவர்களுள் ஒருவனாக இயக்கத்தின் முதலாவது பத்திரிகையான `உணர்வு’ல் பங்கேற்கிறார்.

இதன்மூலம் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கான புரட்சிகர தத்துவத்தை வெளிப்படுத்தும் ஊடக வேலையில் இருந்தவர்களுடன் ராசநாயமும் ஒருவராகிறார்
அடுத்ததாக பிளவின் பின் ஒதுங்கியும், சோர்ந்தும் போய்விட்ட ஆதரவாளர்களின் இடத்தை நிரப்புவதில் ராசநாயகம் கடுமையாக உழைத்தவர். இன்று நிலவதைப்போன்றதொருநிலைமையே அப்போதும் இருந்தது. அடுத்தகட்டநகர்வுக்கு மிகமிக கடினமாக செயற்படவேண்டியதாக இருந்தது.

என் நினைவு சரியாக இருக்குமென்றால் இராசநாயகத்துக்கு திண்ணைவேலி விவசாய பண்ணைக்கு அருகில் ஒரு வீடு இருந்தது.(ராசநாயகத்தின் சொந்த ஊர் நயினாதீவு)
இயக்க பிளவின்பின் எமக்கு தங்குவதற்கானவீடுகளும் இடங்களும் இல்லாமல் இருந்தபோதில் ராசநாயகத்தின் அந்த கொலனி வீடுஎம் எல்லோருக்குமான தங்குமிடமாக பிரசுரங்களை வைப்பதற்கும், சந்திப்புகளை நடாத்துவதற்குமான இடமாக இருந்திருக்கிறது.

இந்த நேரம் எமக்கான இடம் தருவதில் தருவபவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இயக்கத்தில் இருந்து பிளந்து சென்றவர்களாலும் சிங்களபடைகளாலும் இருந்தது. எம்மை யாழ்பகுதியில் வேட்டையாட இரண்டு தரப்பும் அலைந்து திரிந்த காலமது. “யாழ் குட்லக்” உணவு விடுதியில் இருந்து லெப்.சங்கரையும் எம்மையும் சுடுவதற்காகவே செம்மணிக்கு ஊடாக துரத்திய நிகழ்வும் இதில் அடக்கம். உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால். ஆதரவு சக்திகளுக்கு? அதிலும் இறைகுமாரன், உமைகுமாரன் இருவரும் கொல்லப்பட்டபின் இன்னும் சொல்ல வேண்டுமா ?

இந்த நிலையிலும் இராசநாயகத்தின் வீடும் அவரது முழுநேர ஆதரவும் எம்முடனேயே இருந்ததை இந்ந நேரத்தில் நன்றியுடன் நினைக்கிறேன். தமீழீழவிடுதலைக்கான உண்மையான தலைமை எதுவென்று இராசநாயகம் புரிந்து கொண்டதாலேயே எமது அமைப்புடன் ஒன்றிணைந்து நின்றார்.

பகலின் அலைச்சல்கள், இயக்கவேலைகள் என்பனவற்றுக்கு பின் இரவு எப்போதும் அச்சமூட்டுவதாக இருக்கும். இரவின் சுற்றிவளைப்புகள் பற்றிய அச்சம் எதுவுமில்லை. ஆயினும் மாலைநேரம் மெல்ல மெல்ல இரவாகி இருளும்போதே அன்றைய உறக்கத்துக்கான இடம் எதுவென்ற அச்சமும் எழும். அப்போதெல்லாம் பாதுகாப்பான ஒரு இடம் தேடுவது அவ்வளவு சிரமமாக இருந்தது.

“எனக்கு தங்குவதற்கு ஒரு மிக நம்பிக்கையான இடம் இருக்கு” என்று தலைவர் எமக்கு தெரியாமல்போய் தங்கும் இடமாகவும் இராசநாயகத்தின் வீடே இருந்தது.

அந்த நாட்களில் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இராசநாயகம் எம்மிடம் தென்படவே மாட்டார். பின்னர் வந்த நாட்களில் அந்த இடமேஎங்கள் எல்லோரினதும் தங்குமிடமாக மாறிவிட்டது.

மேலும் அந்த நாட்களில் ஒரு கற்பிதம் எம்மக்கள் மத்தியில் இருந்தது. தமிழீழம் சம்பந்தமான கருத்தியல் என்பது பல்கலைக்கழ சமூகத்திடம் இருந்து வரும்போதே அதனை எம் சாதாரணமக்களும் உள்வாங்கும் சாத்தியம் அதிகமாக தென்பட்டது. ஆக, எமது அமைப்பு யாழ்பல்கலைக்கழகத்துள் தனது வேரை விழுதை ஆழமாக உள்நுழைத்து அங்கிருந்து போராளிகளையும், ஆதரவுசக்தியையும் வளர்த் தெடுக்கும் பணியில் மிகமிக முன்னோடியாக நின்றுழைத்தவர் இராசநாயகம்.

உமைநேசன் என்ற சந்தோசம் மாஸ்ரரும், சிறீஸ்கந்தராசா என்ற காண்டீபனும் எமக்குள்வருவதற்கான பாதையை பல்கலைக்கழகத்துள் செப்பனிட்டு வைத்தவர் இராசநாயகமே என்று சொன்னால் அது மிகைஇல்லை.

வெறும் சோத்துக்கான கல்வியும், அதன் பட்டமும், அதனூடான வேலையும் என்றிருந்தஒரு சமூகத்தில் அநீதிகளுக்கும் அடக்கு முறைக்கும் எதிராக போராடுவதும் கல்விச்சமூகத்தின் முக்கியகடமை என்று எழுந்த முதன்மையாளர்களுள் இராசநாயகம் முன்னிலையில் நின்றார்.

சிங்களபேரினவாதத்துக்கு எதிரான ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான ஆரம்பகட்டங்களின் தயாரிப்புகளில், கட்டமைப்பை காப்பாற்றுவதில் வெளியில் தெரியாமல் முக்கிய பங்காற்றிய இராசநாயகம் பல்கலைக்கழக மாணவர் தலைவர் என்ற வெளித்தெரிந்த பொறுப்பில் இருந்தபடியே முன்னெடுத்த அந்த நேரத்தைய போராட்டங்கள் அவரை இன்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வரலாற்று தேவையை இந்த சமூகத்துக்கு கொடுத்திருக்கிறது.

முதலாவதாக விடுதலைப்புலிகளின் மாணவர்அமைப்பு உருவாக்கம்பெற்றபோது அதில் முரளி என்ற ராசநாயகத்தின் கனவுகளும்நிறைய சேர்ந்திருந்தது அதைப்போல அந்நேரத்தைய எமது துண்டுபிரசுரங்கள், அறிக்கைகளிலும் அவரின் ஆலோசனைகளும், குறிப்புகளும் நிறைய இருந்தன. ஒரு பொழுதில் அவர் முழுமையான ஒரு போராளியாகவே இருந்தார்.

லெப்.சீலன் மரணித்தபோது அவனின் வித்துடல் அரசபடைகளால் எடுத்து செல்லப்பட்டு எங்கோ வைக்கப்பட்டிருந்த போது அதனைமீட்கவும் அது எங்கே இருக்குது என்று அறியவும் எம் இயக்கதலைமையால் பணிக்கப்பட்டவர்களில் ராசநாயகமும் ஒருவர்.

இப்படியாக ஆயுதப்போராட்டம்,அதனை முன்னெடுக்கும் அரசியல் என இரண்டுதளத்திலும் இந்த இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர் ராசநாயகம்.

பல்கலைக்கழகதொடர்பும், அதில் ஆழமாக அரசியல் ரீதியாக வேலைசெய்த தெளிவும் இருந்ததாலேயே பின் ஒருநாளில் மலையகத்தில் எம் சொந்தங்களுக்குள் வேலை செய்ய முரளியாக ராசநாயகம் அனுப்பட்டார்.

1985ம் ஆண்டு இயக்கத்திற்கான நிதி சேகரிப்பிற்காக சென்னையில நடாத்தப்பட்ட விடுதலைக்கலைமாலை என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை அப்போதைய அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் ஆதரவுடன் நடாத்தி முடித்தவர் முரளி.

இப்படி இந்த விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக நின்றிருந்த இராசநாயகம் இதற்காக செயற்பட்ட காலம் மிகவும் பெறுமதியானது – முக்கியமானது.

புலம்பெயர்வாழ்வும், அதன் இயந்திரதனங்களும் அவரை எந்த அளவில் மாற்றியதோ தெரியவில்லை. ஒதுங்கியே இருந்தார் என்றே சொல்லவேண்டும்.

ஆனாலும் அவரை சந்தித்த ஒரிரண்டு பொழுதுகளில் கூட விடுதலையின் மீதான பெரிய ஒரு ஆவலுடனேயே கதைத்தார்.

இந்த இனத்துக்காக அவர் செய்ததது எதுவென்று யாரும் கேட்டால் ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம் ‘போராடுவதற்காகவே கற்றவர் அவர்’ அது போதும் அதிலேயே எல்லாம் அடங்கியிருக்கும்.

ச.ச.முத்து
ஒருபேப்பருக்காக