மீண்டும் சொல்லப்படும் வெளவால் கதை

1366

கடந்த முறை ஒரு பேப்பரின் தயாரிப்பு வேலைகள் முடிந்து, பிரசுரத்திற்கு அனுப்பபட்ட நிலையில், எமது பணியக தொலைபேசியில் வாய்மொழி அஞ்சலாக கொடுக்கப்ட்டிருந்த கருத்து ஒன்றைக் கேட்க நேர்ந்தது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்யவிருப்பது தொடர்பாக ரூபன் என்ற எமது வாசகர் ஒருவர் தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். “தமிழீழ தனியரசினை தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக அமெரிக்கதரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டாலும், சம்பந்தன் குழுவினர் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வினையே ஏற்றுக் கொள்வோம் எனக் கூறிவிட்டு வந்து, ஊடகங்களில் விளாசு விளாசு என்று விளாசுவார்கள்” என்பதாக அவரது கருத்து அமைந்திருந்தது. கூட்டமைப்பினரின் அமெரிக்க் பயணம் முடிவுறும் தறுவாயில், முகமறியாத அந்த வாசகரின் கருத்தையொட்டிய எனது பார்வையாக இந்தக் கட்டுரை அமைகிறது.

இரா.சம்பந்தன், ம. சுமந்திரன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், அமெரிக்க இராசங்கத் திணைக்களத்தின்; அழைப்பை ஏற்று, அமெரிக்காவிற்கு சென்று அங்கு இராசாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், ஐ.நா. செயலாளர் பான் கி மூன் உட்பட பல முதன்மை அரசியல் பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. ஊடகங்களில் குறிப்பிட்டபடி அவர்களது பயணம் அமைந்திருந்தபோதிலும், அங்கு ஹிலரி கிளின்ரன், பான் கி மூன் போன்றோருடனான சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை. அதேசமயம் தாம் இக்குழுவினருக்கு உத்யோகபூர்வமான அழைப்பு எதனையும் வழங்கவில்லை என அமெரிக்க இராசங்க திணைக்களத் தரப்பினரும் மறுத்திருந்தனர். இதனை உறுதிசெய்யும் வகையில், இவர்களுக்கான பயணச்செலவு, தங்குமிட வசதிகளை வட அமெரிக்காவில் வசிக்கும் கூட்டமைப்பின் அபிமானிகளே ஏற்றுக் கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கூட்டமைப்பினரை அமெரிக்காவுக்கு வருமாறு, இராசாங்க அமைச்சின் ஆசியப் பிராந்தியத்திற்கான உதவிச் செயலர் ரொபர்ட் ஒ பிளேக் அழைத்ததாகவும் இவ்வாறானதொரு அழைப்பு கடந்த மார்ச் மாதத்தில் விடுக்கப்பட்டதாகவும் பிறிதொரு செய்தி தெரிவிக்கறது. ஆகவே இது ஒரு உத்தியோகபூர்வமான அழைப்பாக இல்லாவிட்டாலும், அவர்களது வருகை மற்றும் சந்திப்பு விடயங்களை முதன்மைப்படுத்தி காட்டுவதில்; அமெரிக்கத் தரப்பினர் அக்கறை காட்டியுள்ளமை தெரிகிறது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தமது வழமையான பரப்புரைகளை முழு வேகத்துடன் செய்து வருகின்றனர்.

அமெரிக்க இராசங்க திணைக்கள அதிகாரிகள், கொங்கிரஸ் உறுப்பினர்கள் போன்றவர்களைச் சந்தித்த கூட்டமைப்பினர் அங்கு என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதனையோ, தாம் குறைந்த பட்சம் எத்தகைய தீர்வுக்கு உடன்படுவதாக கூறியுள்ளார்கள் போன்ற விடயங்களையோ கூற மறுக்கிறார்கள். அத்தகவல்களை வெளியிட்டால், அவை சிறிலங்கா அரசாங்கத்தைச் சென்றடைந்து வி;டும் என சாக்குச் சொல்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசும் விடயங்களையும் மக்களுக்கு அவர்கள் கூறுவதில்லை என்பதனையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ரொறொன்ரோவில் தமிழ்மக்கள் ஏற்பாடு செய்த கூட்டமொன்றில், இச்சந்திப்புகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட சம்பந்தன், தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வினை பெற்றுத்தருவதில் சர்வதேசம் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அது எத்தகைய தீர்வாக அமையும் எனபதனை அவர் கூறவில்லை. சம்பந்தனது கூற்று எமக்கு 1977ம் ஆண்டுத் தேர்தல் காலத்தை நினைவுபடுவதாக அமைகிறது. அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் பரப்புரைக் கூட்டங்களில் இளைஞர்களைக் கவர்நத ஒரு பேச்சாளராக இருந்த வண்ணை ஆனந்தன் என்பவர், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மரம் பழுத்தால் என்ன வரும்? என்ற கேள்வியைக் கேட்பார், உடனே கூட்டத்தில் உள்ளவர்கள் வெளவால் என பதிலளிப்பார்கள். அவரும் தனது கேள்விக்கு விளக்கமாக, தமிழீழ தேசம் கனியவுள்ளதாகவும், அதனை நோக்கி சர்வதேச நாடுகள் வெளவால்கள போல் வர இருப்பதாகவும் கூறுவார். அப்போது சிறுவனாக இருந்த எனக்கு இது ஒரு அடித்தளமும் இல்லாத ஒரு மேலோட்டமான கருத்து என்பது புரிந்திருக்கவில்லை. மூன்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில், இன்றும் இத்தகைய கருத்துகளைக் கூறி சில நூறு தமிழர்களையாவது ஏமாற்ற முடியும் எனக கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. ஏமாறுவதற்கு தயாரானவர்கள் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள் என்பதனை கனடாவில் சிலர் நிருபித்திருக்கிறார்கள். இத்தகையவர்கள பிரித்தானியாவிலும் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

சிறிலங்கா அரசு மீதான போரக்குற்ற விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடாத்தப்பட்டு, அதன் தலைவர்கள் தண்டிக்கப்படுவதுடன், தமிழ் மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வு கிடைக்க சர்வதேச சமூகம் வழிவகை செய்யும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்; மக்களிடம் உள்ளது. அவ்வப்போது ஊடகங்களில் வெளிவரும் அறிக்கைகள், குறிப்பாக சனல்4, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் விவரணங்கள் என்பவை இவ்விதமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன ஆனால் நடைமுறையில், இதுதொடர்பான நேர்மறையான நகர்வுகளை அவதானிக்க முடியவில.லை. நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் சிறிலங்கா பிழைத்துக் கொண்டமை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றத்தையளிக்கிறது.

இதற்கிடையில் ரொயிட்டர்ஸ் நிறுவனத்தின் கொழும்புச் செய்திப்பீடம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில், சிறிலங்கா அரசாங்கத்தின் “நல்லிணக்க ஆணைக்குழு” வின் அறிக்கை காத்திரமானதாக அமைந்து, தமிழ்ச் சிறுபான்மையினருக்கு சில சலுகைகள் வழங்கப்படுமாயின், சர்வதேச விசாரணைகளுக்கு தமது நாடுகள் வற்புறுத்தப் போவதில்லை என ஏழு மேற்கு நாடுகளினதும் இந்தியா உட்பட வேறு சிலநாடுகளினதும் இராசதந்திரிகள் தெரவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாள இத்தகைய கொள்கையை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரச வட்டாரங்களில் ஒரு தொகுதியினர் கொண்டிருக்கின்றனர். ரொபர் ஒ பிளேக் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதனை அவரது கடந்த கால, நிகழ்கால செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வட்டாரங்களுடனேயே கூட்டமைப்பினரும், உலகத் தமிழர் பேரவையினரும் தொடர்புகளைப் பேணிவருவது அவதானத்துடன் நோக்கபட வேண்டியதாகவுள்ளது.

கடந்த செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி கொழும்பில் ரொபர்ட் ஒ பிளேக் நடாத்திய ஊடக மாநாட்டில், அரசியல் தீர்விற்கான அடிப்படையாக 13ம் திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் கருதுவதாகக் குறிப்பிட்டார். அப்பயணத்தின் போது பிளேக் இரண்டு தடவை கூட்டமைப்பினை சந்தித்தமையால் மேற்படி கருத்தினை அவர்களிடம் வலியுறுத்தியிருப்பார் என எதிர்பார்க்கலாம். இதனையே, விளக்கமாகக் கூறாமல், தாம் ஒரு இடைக்காலத்தீர்வுக்கு உடன்படவிருப்பதாக சுமந்திரன் கோடி காட்டி வருகிறார். கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வரும் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டமைப்பான இமானுவல் அடிகளார் தலைமையிலான உலகத்தமிழர் பேரவையினர் தாமும் இந்த விடயத்தில் உடன்படுகிறார்களா எனபதனை வெளிப்படையாக சொல்லத் தயாராக இல்லை. (கூட்டமைப்பினரின் லண்டன் சந்திப்புகளை உலகத்தமிழர் பேரவையில் பணிபுரியும் முன்னாள் தொழில்கட்சி பா.உ. ஜோன் ரயன் ஏற்பாடு செய்திருக்கிறார்)

அமெரிக்க, ஐரோப்பிய அரசமட்டங்களில் ஒரு தொகுதியினர் சிறிலங்கா அரசாங்கம் புரிந்த போரக்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள் என்பது சற்று ஆறுதலான விடயம். சர்வதேச மன்னிப்புச் சபை, மனிவுரிமைக் கண்காணிப்பகம் போன்ற மனிதவுரிமை அமைப்புகள் இத்தகைய சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. இவர்கள் அரசியல் நலன்களுக்காக மனிதவுரிமைகள் விடயத்தில் சமரசம் செய்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் சிறிலங்கா விவகாரம் உலகிற்கு தவறான உதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இங்கு போர்க்குற்ற விசாரணைகள் எனபது வெறுமனே குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இத்தகைய விசாரணைகள் மூலமே தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் இனவழிப்பு நடவடிக்கைகள் வெளியுலகத்துக்கு தெரிய வரும் என்பது, தீர்வு யோசனைகள் அதனடிப்படையிலேயே அமையும் என்பதனையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், கிடைக்கிற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைகிற நிலையில் தமிழர் தரப்பினர் இருப்பார்களாயின், மேற்குடன் சமரசம் செய்துகொள்வது சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாத்தியமானதாகிவிடும்.