மீண்டும் போர்

701

அலசுவாரம் – 90

முப்பது வருடங்களுக்கு மேலாகப் போர் முனைப்போடு வாழ்ந்து, நாளும் பொழுதும் நமக்குக் கிடைத்த களவெற்றிகளைப் பற்றியே சிந்தித்து, தாயக விடுதலைக்காகப் பிரமிக்கத்தக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தி இறுதியில் சறுக்கலடைந்து, பழையபடி ஆனாவிலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நாம் மீண்டும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கும் போரொன்றைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.  ஆனால் இம்முறை நாம் போதிய பலத்தோடும், எம்மை யாராலும் அசைக்க முடியாதென்னும் இறுமாப்போடும், பல வல்லரசுகளின் பக்கத் துணையேடும், வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து, எதிரியைத் துவம்சம் செய்து வல்லமை மிக்கவர்களாய்ப் போராடுகிறோம்.  இதிலே நாம் பெரும்பாலும் தோல்வியைத் தழுவக்கூடிய சாத்தியமேயில்லை.

என்ன புரியவில்லையா? ஏப்ரல் பூல் காலத்தில்  ஏதோ உடான்ஸ் விடுகிறான் போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?  இல்லை உண்மையைத்தான் சொல்கிறேன்.  மேற்கு நாடுகளில் சந்தோசமாக வாழத் தொடங்கிவிட்ட நமக்கு நாம் போர் செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்பதை உணரக்கூட முடியவில்லை.  அந்த அளவுக்கு நாம் நமக்குக் கிடைத்துள்ள பிரச்சினைகள் பெரிதுமில்லாத சந்தோசமான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டதால் மீண்டும் நாம் போர் செய்கிறோம் என்பதைப்பற்றி பற்றி எண்ணவே நேரமி;ல்லை.  ஆனால் அங்கு போரில் ஈடுபடும் போராளிகளும், அரசாங்கமும் இடையில் கிடந்து நெரிபடும் மக்களும் என்ன பாடுபடுகிறார்களோ தெரியவல்லை.  எமது சூட்டு வலுவுக்கும் கனரக ஆயுதங்களின் தாக்கும் ஆற்றலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் எமது எதிரிகள் சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இனியும் நான் புதிர் போட்டுக்கொண்டே போனால், ஏப்ரல் பூல் காலத்தில் இவனுக்கு மண்டையில் ஏதோ கோளாறு வந்துவிட்டது, கதையளக்கத் தொடங்கிவிட்டான என்று எண்ணத் தொடங்கி விடுவீர்கள். ஆனால் ஏப்ரல் பூல் காலம் என்பதற்காக உங்களையும் முட்டாள்களாக்கி என்னையும் முட்டாளாக்க நான் முயலவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன்.  யாரைம் ஏமாற்ற முயலவில்லை.  சில வேளைகளில் இத்தகைய உண்மைகளை நம்புவது கடினம், எற்றுக்கொள்வதும் சிரமம்.  

இவ்வளவு காலமும் நாம் நமது தாயகத்தின் விடுதலைக்காகச் செய்த போரைப்போல இல்லாது இந்தப் போர் நம்மால் உணரக்கூடிய அளவுக்கு நடக்கவில்லையேயொழிய  ஒரு பயங்கரமான போர் தொடங்கியிருக்கிறது.  தொலைதூரத்தில் நடப்பதாலும், அதனால் பெரிய பாதிப்புகளை நாம் அனுபவிக்காததாலும் நாம் செய்யும் போரைப்பற்றி நம்மாலேயே உணரமுடியவில்லை. எமது விமானந்தாங்கிகளும் எறிகணைகளும்தான் அங்கே போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.  எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்பார்கள்.  அது போலத்தான் இடைக்கிடை எமது ஆயுதபலத்தைப் பரீட்சித்துப் பார்க்க இத்தகைய போர்கள் நமக்குத் தேவையாயிருக்கின்றன.  

எங்காவது ஒரு நாட்டில் மக்களில் சிலரை நமது கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களின் துணையோடு ஓர் எதிர்ப்பரட்சியை உருவாக்கி, அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு உள் நுழைந்து,
அமைதியைக் குழப்பி நமது ஆயுதங்களை நாம் பரீட்சித்துப் பார்ப்பதைவிட வேறுவழியில்லை.  அல்லாவிடில் நமது ஆயதங்களெல்லாம் தூர்ந்து துருப்பிடித்துவிடும்.

ஆமாம், நாம் லிபியாவுடன் போர் செய்யத் தொடங்கியிருக்கிறோமல்லவா அதைத்தான் கூறுகிறேன். பிரிட்டிஷ் பிரஜைகளான நாம்தானே அந்த யுத்தத்தைச் செய்கிறோம்.  நம்மில் பலபேர் பிரித்தானியப் பிரஜைகளல்லவா? பலர் அந்தப் பிராஜாவுரிமையைப் பெற்றுத்தரக்கூடிய,  இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கான “இண்டெபினிற்றி லீவ் ரு றிமயின”; விசாவோடு வாழ்கிறவர்களல்லவா? பிரிட்டிஷ் பிரஜைகளாக மாற எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களல்வா? இன்னும் பலர் பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழும் விஸா இல்லாவிட்டாலும் தற்காலிகமாக வாழ அனுமதியோடு; பிரித்தானியப் பிரஜாவுரிமை நமக்கும் விரைவில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்கின்றவர்களல்லவா? நமக்கு இனி இந்த நாடுதானே சொந்த நாடு.  நமது தாயகத்தில் நம்மை இனியாரும் கணக்கிலெடுக்கப் போவதில்லையே.  நாம் எந்த நாட்டின் பிரஜைகளோ அல்லது எந்த நாட்டின் பிரஜைகளாக ஆக முயற்சிக்கிறோமோ அந்த நாடு நமது நாடல்லவா?  

இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமென்று போராடிய மகாத்மாகாந்திகூட இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போதும், தென்னாபிரிக்காவில் நடந்த ஜுலுக்கலவரம், போயர் யுத்தம் போன்ற வெள்ளையர்களுக் கெதிரான யுத்தங்களின்போதும்,  நாமெல்லோரும் பிரிட்டிஷ் பிரஜைகள், எமமை ஆளும் பிரித்தானியாவுக்கு நாமென்றும் விசுவாசமாக நடக்க வேண்டுமென்று கூறி, யுத்தங்களில் இந்தியர்களை பிரிட்டிசாருடன் ஒத்துழைக்குமாறுதானே வேண்டினார். பாதிக்கப்பட்ட அப்பாவிக் கருப்பர்களைப்பற்றி அவர் பெரிதாகக் கவலைப்படவில்லையே. நாமென்ன விதிவிலக்கா?  பிரிட்டிஷ் சிற்றிசன் சிப்பையும் பெற்றுக்கொண்டு இது நமது யுத்தமல்ல என்று கூறமுடியுமா? அதைத்தான் இங்கு கூறவந்தேன். வெள்ளையனே வெளியேறு என்று கோசமிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தித் தனது நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட  மகாத்மா காந்தியே, பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த போர்களைத் தனது போராகக் கருதி அக்காலத்தைய அரசாங்கத்துடன் ஒத்துழைத்திருக்கிறாரென்றால், இன்று நாடேயில்லாது, இனிமேல் நமதென்று சொல்லிக்கொள்ள ஒரு நாடு நமக்குக் கிடைக்குமா? என்ற நம்பிக்கையே இல்லாது வாழும் நம்மை அரவணைத்து பிரஜாவுரிமையும் தந்து வாழ வகைசெய்த நமது பிரித்தானியாவை, எமது நாடென்று சொல்லிப் பெருமைப்படுவதில் என்ன தவறிருக்கிறது?

இதை நான் ஒரு நண்பனிடம் கூறினேன்.  அவனோ,  “நீ சொல்வது முற்றிலும் சரிதான் ஆனால்…” என்று இழுத்தான்.  நானோ, ஏன் தயங்குகிறாய் மிகுதியையும் கூறிமுடி என்றேன். அவனோ, “ஆனால்…  நமது விமானங்கள், நமது விமானந்தாங்கிகள், நமது ஏவுகணைகள் என்றெல்லாம் பெரிதாய் அளக்கிறாய்…இது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா” என்றான்.  பாருங்கள் நமது அன்னிய புத்தி இன்னும் போகவில்லை.  நமது நாடு பிரிட்டன் என்றால் அதன் அத்தனை செல்வங்களுக்கும், பலங்களுக்கும், பலவீனங்களுக்கும் மொத்தச் சொந்தக்காரர்களும் நாம்தானே?  யோசித்துப்பார்த்தால் கொஞ்சம் ஜோக்காகத் தெரியும்,  ஆனால் நமது எதிர்கால சந்ததி அப்படித்தானே இனி எண்ணப்போகிறது?

கிரிக்கட் போட்டிகள் நடக்கின்றன.  சிறீலங்கா இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிவிட்டது.  ஏனோ தெரியவில்லை உள்ள+ர ஒருவகை மகிழ்ச்சி.  இங்கிலாந்து அணி  காலிறுதியோடு போட்டியிலிருந்து நீக்கப்பட்டதைப்பற்றிய கவலை பெரிதாக இல்லை.  பாகிஸ்தானும் இந்தியாவும் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கு யார் வந்தாலும், சிறீலங்காதான் வெல்லவேண்டும் என்று உள்ள+ர ஒரு விருப்பம்.  இந்த லட்சணத்தில் பிரித்தானியாவை நமது நாடு அதன் விமானந்தாங்கிகளும் குண்டு வீச்சு விமானங்களும் நம்முடையவை என்றெல்லாம் கனவு காணமுடியுமா?

“முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகாது என்பார்கள்.”  அது போலத்தான் நாம் எவ்வளவு தான் பிரிட்டிஷ் என்று நம்மைப் பெருமையயோடு நினைக்க வெளிக்கிட்டாலும், ஊர்ப்புத்தி விடாது, அல்லது நண்பன் விடமாட்டான். சரிதான் போடா பெரிய கதை கதைக்க வெளிக்கிடுகிறாயா? என்று கிண்டலடிப்பான்.  என்ன செய்வது நமது தலைவிதி அப்படியாகிவிட்டது.  அடுத்த பிறவியிலாவது நமக்கென்று ஒருநாட்டில் பிறந்து, இது எனது நாடு, இதோ பறக்கிற விமானம் எனது நாட்டினுடையது, அதோ நிற்கும் ஆமிக்காரன் எனது நாட்டைச் சேர்ந்த எனது சகோதரன்.  அவன் என் முன்னே நீட்டியபடி வைத்திருக்கும் நவீன துப்பாக்கி எனது நாட்டின் ஆயுதம். ஏன்றெல்லாம் பெருமையாக எண்ணிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

இப்போதெல்லாம் அந்தநிலை பலருக்கும் வந்துகொண்டிருக்கிறது போலத் தெரிகிறது.  சமீபத்தில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னார். ஆங்கே ஒரு பிரச்சனையுமில்லையாம்.  பின் எதற்காக ஆமிக்காரர்கள் அங்கே மூலைமுடுக்கெல்லாம நிற்கிறார்கள் என்று கேட்டேன்.  அவர் சொன்னார், “அவர்களால் ஒரு பிரச்சனையுமில்லை.  நாம் நமது பாடு என்று இருந்தால் ஒரு சோலியுமில்லை.” என்றார்.  ஆமிக்காரன் ஏன் நமக்கு முன்னே துப்பாக்கியோடு நிற்கிறான், நிற்கவேண்டும் என்பதற்கான பதிலாக இது தெரியவில்லை.  

இலங்கையின் தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கம் இருக்கிறது.  அதன்முன்னே இருக்கும் இரு நிறப்பட்டிகளும் சிறுபான்மையினரைக் குறிக்கவாம்.  அதன் கருத்து  அதிகம் பேசினால் ஒரே போடு கவனம் என்பதுதான்.  அந்தப் பட்டிகள் இரண்டையும் சிங்கத்தின் பின்னால் போட்டிருந்தாலாவது, நான் முன்னே உங்களுக்குப் பாதுகாவலாகச் செல்வேன் நீங்கள் கவலையில்லாமல் என்பின்னே அணிதிரண்டு வாருங்கள் என்னும் கருத்தாவது ஏற்பட்டிருக்கும்.  அந்தக் கொடி விடயத்தில் கூட சிங்களம் தனது சினேகவுணர்வைச் சிறுபான்மையினரிடம் காட்டவில்லை.  இந்த லட்சணத்தில் நாம் எமக்குப் புகலிடம் தந்த பிரிட்னை விசுவாசமில்லாமல் நோக்க முடியுமா.  அதுதான் சொன்னேன் நாம் மீண்டும் போர் செய்யத் தொடங்கிவிட்டோமென்று. ஏப்பிரல் பூல்; காலம் என்பதாலல்ல.  ஆனாலும், வரப்போகும் கிரிக்கிட்போட்டியில் சிறீலங்கா வெற்றிவாகை சூடவேண்டும! என்ன செய்வது எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது!

தொடருவம்…