அண்மையில் உற்ற நண்பரது வீட்டில் பூப்புனித நீராட்டுவிழா நடந்தது. வழக்கம் போல 11 மணிக்கு வரும்படியாக அழைப்பிதழில் குறிப்பு இருந்தது. வந்தவர்கள் தங்கள்தங்கள் மேசையை சுற்றி இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று முன்னதாக 12 மணியளவில் தான் பூப்புப் பெண் வீடியோகாரரின் படப்பிடிப்புக்கமைய மண்டபத்திற்கு வருகை தந்தார். குத்துவிளக்கு ஏற்ற நின்றபெற்றோருக்கும் வீடியோ காரன் தான் சைகை காட்டி கட்டளைகளை இட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் வெவ்வேறு உடை அணிகளோடு முன்பு 7,8 நாட்களாக வெளிப்புறப் படப்பிடிப்பை மிக அழகாக திரையில் ஓட விட்டுக் கொண்டிருந்தார்கள். வீடியோக் காரன் தனது உச்ச திறமையை அதில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளையில் 32 ஆண்டுகளுக்கு முன்னர், இதே வீடியோக்காரனின் தந்தையார் கோண்டாவிலில் நடந்த எங்கள் திருமணத்தின் போது எடுத்த வீடியோ நினைவுக்குவந்தது. அது ஒரு கோவிலில் நடந்த திருமணச் சடங்கு தான். ஆனால் அந்த நடைபெற்ற திருமணச் சடங்கைத் தான் அந்த நாளில் அவர் தன்னுடைய படப்பிடிப்புக்கு உட்படுத்தினார். இன்று இங்கே படப்பிடிப்பாளரின் சொற்படி தான் பூப்புனித நீராட்டு விழா அல்லது திருமணம் நடைபெறுகிறது. சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் சுபநேரங்கள் உட்பட படப்பிடிப்பு ஆசைக்குள் புதையுண்டு போகின்றது. வீடியோக் காரர் தன் திறமையை காட்ட நினைப்பதும், படங்கள் அழகாக வரவேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதும் தவறில்லை. ஆனால், படப்பிடிப்பு சமய சம்பிரதாய நம்பிக்கையாளர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலே வெறும் படப்பிடிப்பாக சினிமாவைப் போல நடைபெறுவது ஒரு விரும்பத்தகாத நினைவு தான். இத்தனைக்கும் வீடியோக் காரர்கள் படுபிசி. சென்ற மார்ச் மாதம் நடந்த தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவில் வீடியோ புகைப்படங்களைத் தர இன்னும் இரு வாரங்கள் வேண்டும் என்கின்றார் அந்தப் படப்பிடிப்பாளர்.
கார் ஓடும் வீதிகளில் தேர் ஓடும் காட்சிகளை ஞாயிறு தோறும் லண்டனிலும் நாங்கள் பார்க்கின்றோம். புலம்பெயர் சைவர்கள், குறிப்பாக தமிழர்கள் வாழும் நாடுகளில் இது அண்மைய காலங்களின் வாராந்த நிகழ்வு. ஊரில் திதியோடு ஒட்டியதாக அமையும் திருவிழாக்கள் இங்கு வசதிக்கேற்ப சனி, ஞாயிறு நாட்களுக்கு மாற்றம்கண்டுள்ளது. இரு ஆலயங்களைத் தவிர பிரித்தானியாவில் எல்லா ஆலயங்களின் கதைகளும் இவை தான். தேர்த்திருவிழாக்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து விதி விலக்கு அளிக்கப்படும் பஞ்சாங்கம், நவராத்திரி, சிவராத்திரி, வருடப்பிறப்பு என்று வரும்போது வாக்கியம், திருக்கணிதம் என்று வேறுபட்டு தனக்குப் பிடித்தது தான்சரியென்ற வியாக்கியானங்களை கோவில் தர்மகர்த்தாக்கள் மத்தியில் விதைத்து விடுகின்றது. வல்லாளர் கருத்துக்களை ஆண்டவனும் ஏற்றுக் கொண்டு அமைதியாகிவிடுகின்றார். முன்பெல்லாம் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம், நல்லுÖர் கந்தசுவாமி என்று ஊர்க் கோவில்களில் தேர்,தீர்த்தம் கிழமை நாட்களில் வரும். இப்பொழுதும் தான். பள்ளிகள் அந்த நாட்களில் விடுமுறைவழங்கும்.
வேறொரு சனிக்கிழமை பாடசாலையை நடாத்தி அந்த நாளை ஈடு செய்யும். ஊர் புனிதம் காக்கின்ற காலமாக உச்சவ காலம் கருதப்படுவதால் இன்றும் ஊரில் அந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது. மீன், இறைச்சி விற்பனை கூட உற்சவ காலங்களில் மட்டுப்படுத்தப்பட்டு விடும். 25 நாள் உற்சவ காலத்தில் முகச்சவரம் செய்யாது, வேட்டி, சால்வையோடு பெண்களானால் சேலையோடு, நீளப்பாவடையோடு கோவில் நோக்கிச் செல்பவர்களை இன்றும் அதிகம் காண முடியும். புலம்பெயர் நாட்டில் வேலையே வாழ்வு என்ற நிலையிலும், இங்குள்ள காலசூழ்நிலைக்கமையவும் இது ஒத்துவராத ஒன்று என்றாலும் முடிந்தவரை சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கலாம். கோவில்களில் பெண்களுக்கு மட்டும் சம்பிரதாய கலாசார உடை என்றில்லாமல் ஆண்களும் கூட அதை கடைப்பிடிக்கின்ற நிலை மாற வேண்டும்.
முன்பெல்லாம் பெண்களுக்கு மாதவிலக்கு வந்தால் மூன்று நாட்களுக்கு ஒதுக்குப் புறத்தில் தனியிடத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். உணவுக் கோப்பை, தண்ணீர் குவளை என்று தனியாக்கப்படும். படுத்திருந்த பாய் உட்பட, கையாண்ட பாத்திரங்கள் வரைஎல்லாம் மூன்றாம் நாள் அவர் முழுகும் போது அவற்றோடு மினுக்கிக் கழுவி சாதாரண பாவனைக்கு எடுக்கப்படும். அது அந்தக் கால வழக்கம். ஆனால் காலத்திற்கேற்ப ஊரிலும் கூட இந்த முறை மாற்றம் கண்டுவிட்டது. இப்பொழுது மாதவிலக்கு ஒரு துÖற்றுக்கான ஒரு சங்கதியே இல்லை என்ற நிலைக்கு கால ஓட்டம் சம்பிரதாயத்தை மாற்றி விட்டது.
பிள்ளைப்பேறு கிடைத்தால் 31 நாட்களுக்கு துடக்குக் காண்பது வழக்கம். வயதுக்கு வந்தால் கோவில், குளங்களை தவிர்ப்பது. மரணச் சடங்கு என்று வந்தால் 31 நாட்கள் வரை, கொள்ளி வைப்பவர் ஒரு வருடத்திற்கு கோவிலுக்கு போகக் கூடாது என்ற சம்பிரதாயங்கள் இந்த நாட்கள் மறக்கப்பட்ட நாட்களாகி விட்டது. கால ஓட்டம்இவற்றை சீர் செய்து விட்டது. இவற்றில் பல சரியானதாகவும் தெரிகிறது. திருமணத்தின்போதோ அல்லது பெற்றோருக்கு கொள்ளி வைக்கும் மரணக் கிரியைகளிலும் ஏன் எங்கள் அபிடேகம் என்று ஆலயத்தில் தர்ப்பையோடு ஐயருக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அர்த்தம் தெரியாது. ஆனாலும் சடங்குகளை இன்றும் செய்து வருகின்றோம்.
மந்திரம் சொல்லியபடியே எங்களை அப்படிச் செய்,இப்படிச் செய் என்று கூறும் ஐயர்மார்களுக்கு எத்தனைபேருக்கு இதற்கான அர்த்தம் தெரியும் என்பது கேள்விக்குறிதான். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் முன்பெல்லாம் வேள்வி என்ற கிடாய் வெட்டு ஒரு சம்பிரதாயம். இப்பொழுதும் ஊரில் ஒரு சில கோவில்களில் இதை கடைப்பிடிக்கத் தான் செய்கிறது. சட்டங்களால் கூட இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.
சடங்குப் பிரியர்கள், சம்பிரதாயப் பிரியர் இன்றும் இவற்றை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். சடங்குகள், சம்பிரதாயங்கள் விதிமுறை சூழ்நிலைகளுக்கேற்ப வசதிக்கேற்ப மாற்றம் காண்கின்றது. வல்லாளன் பம்பரம் வரம்பிலும் ஆடுகின்றது.
ஆசோசம், தீட்டு, தெய்வ நிந்தனை என்ற பதங்கள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் சிலை தான் என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. சடங்குகளும், சம்பிரதாயங்களும் கால ஓட்டத்தில் மாறுவதில் தவறில்லை. ஆனால் அர்த்தத்தோடு அவை மாறுமேயானால் உரிய முறைப்படி என்ன காரணங்களுக்காக அவை தோற்றுவிக்கப்பட்டதோ அந்தக் காரணத்திற்காக அது மாறுமேயானால் அது வரவேற்கத்தக்கது.