முடியாத பயணங்களும் படிய மறுக்கும் ஈரானும்

68

மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்பட்டுள்ள பெரும் குழப்ப நிலையை மாற்ற ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கிஆகிய நாடுகளின் பங்களிப்பு மட்டும்போதாது. ஈரானின் ஒத்துழைப்பும் அவசியம். ஈரான் ஒருநாள் தன் நிலைப்பாட்டை மாற்றும் உலக அரங்கில் தன்னுடன் இணைந்து செயற் படும் எனஅமெரிக்கா நம்பிக்கொண்டிருக்கின்றது.

ஈரானின் வழி தனி வழி!

இஸ்லாமிய அரசுக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் எதிராகப் போராடும் ஈராக்கிற்கு ஜோன்கெரியின் முதற்பயணம் அமைந்தது. அப்போதுஅமெரிக்க விமானப்படையினதும் படைத்துறை நிபுணர்களினதும் உதவியுடன் ஈராக்கியப் படையினர் அன்பர் மாகாணத்தின் ஹ்ட்நகரத்தை மீளக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். அதேவேளை ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி, எரிபொருள் விலை வீழ்ச்சியால் பொருளாதார நெருக்கடியையும் அவருக்கு ஆதரவானவர்கள் சிலர் அவருடன் முரண்படுவதால் அரசியல் நெருக்கடியையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார். ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் அவருடன் முரண்படுவதற்கு ஈரானே காரணம். சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கை தன் வசப் படுத்தவும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சிரியா தன் கையில் இருந்து நழுவிப் போவதைத் தடுக்கவும் ஈரான் முயன்று கொண்டிருக்கின்றது. இந்த முயற்ச்சி மேற்காசியாவின் குழப்ப நிலையை தணிக்க மற்ற நாடுகள் எடுக்கும் முயற்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.

சவுதியின் வழி சதி வழி

பராக் ஒபாமா சவுதி அரேபியா போய் இறங்கியதை அமெரிக்க ஊடகங்கள் ஜோர்ஜ் புஷ் சவுதிஅரேபியா போனதுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. புஷ் போனபோது விமான நிலையத்தில் அவரைவரவேற்ற அப்போதைய சவுதி மன்னர் தமது முறைப்படி புஷ்சுடன் முத்தம் பரிமாறிக் கொண்டார் ஆனால் ஒபாமாவை வரவேற்க தற்போதைய மன்னர் விமான நிலையம் கூடச் செல்லவில்லை. அமெரிக்கா ஈரானுடன் செய்துகொண்ட யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாடும் சிரிய அதிபர் அல் அசாத்தைப் பதவியில்இருந்து விரட்ட அமெரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காததும் சவுதியின் அதிருப்திக்குக் காரணமாகும்.

என் வீடு வந்தா என்ன கொண்டு வருவாய்?

ஜோன் கெரி ஈராக்கியத் தலைமை அமைச்சரைச் சந்திக்க 155மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியுடன் சென்றார். அவர் அப்படிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதியுடன் ஈரானும் இரசியவும் நட்புப் பாராட்ட முயல்கின்றன. இந்த நட்புப் போட்டிகளைச் சமாளிக்கவேண்டிய இக்கட்டான சூழலில் அமெரிக்கா இருக்கின்றது. ஜோன் கெரியின் பயணத்தின் முக்கிய நோக்கம் பாஹ்ரேனில் நடக்கும் வளைகுடா கூட்டுறவுக் கழகக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகும். ஈராக்கை மட்டுமல்ல மற்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நட்பு நாடுகளையும் மீள் நம்பிக்கை ஊட்டுவது ஜோன்கெரியின் பயணத்தின் தலையாய பணியாகும்.2016 மார்ச் 9-ம் திகதி ஈரான் இரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்தது வளைகுடா நாடுகளைக் கரிசனை கொள்ள வைத்திருந்தது. இந்தப் பரிசோதனைகள் அமெரிக்கா உட்பட ஐந்து வல்லரசு நாடுகளுடனும் ஜேர்மனியுடனும் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு முரணானதுஅல்ல என்றும் ஆனால் ஈரான் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறுவதாக அமைந்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை கருத்து வெளியிட்டிருந்தது.

ஈரான் பூச்சாண்டி

ஈரானின் அணுக்குண்டு அச்சம் குறைந்துள்ள வேளையில் ஈரானின் சிறப்புப் படையணியான இஸ்லாமியப் புரட்சிப் படையினரால் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் சிரியாவிலும் யேமனிலும் அவற்றின் நடவடிக்கைகக்ள் அதிகரித்து வருகின்றன என்றும் மற்ற வளைகுடா நாடுகள் கருதுகின்றன. ஜோன் கெரியுடன் பாஹ்ரேனின் வெளியுறவுத் துறை அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஈரானின் தலையீடு பல நாடுகளிற்கும் பரவியுள்ளதாகாத் தெரிவித்தார். பாஹ்ரேனிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி ஈரான் பிராந்திய உறுதிப்பாட்டைக் குலைக்கும் வேலைகளைச் செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். ஈரான் யேமனிலும் சிரியாவிலும் அமைதி ஏற்படுத்துவதற்கு அப்பிராந்தியத்தில் உள்ள மற்றநாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கெரி வேண்டுகோள் விடுத்தார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் யேமனை நோக்கிச் சென்ற சிறு கப்பலில் நூற்றுக் கணக்கான ஏகே-47 துப்பாக்கிகளும், ஏவுகணைச் செலுத்திகளும், எந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன.அக்கப்பலை இடைமறித்த அமெரிக்கக் கடற்படையினர் அதிலுள்ள படைக்கலன்களைப் பறிமுதல் செய்தனர். இது போன்ற நான்கு இடைமறிப்புக்கள் கடந்த சில மாதங்களில் நடந்தன.யேமனில் உள்ள ஹுதிக் கிளர்ச்சிக்காரர்களுக்குப் படைக்கலன்கள் அனுப்புவதிலும் பார்க்க அவர்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாணஈரான் ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஜோன் கெரி.

சவுதி மன்னரின் பயணங்கள் – உன்வீடு வந்தால் என்ன தருவாய்?

சவுதி அரேபிய மன்னரின் துருக்கிக்கான பயணம் உச்சக் கடும் பாதுகாப்புடன் நடந்தது.மன்னர் தங்கியிருந்த உல்லாசப் பயணவிடுதியின் சாளரங்கள் யாவும் துப்பாக்கி துளைக்காத கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தன. சுவர்கள் குண்டுகளால் பாதிக்கப் படாத சிமெந்தால் பூசப்பட்டன. இவற்றுக்கான செலவு மட்டும் பத்து மில்லியன் டொலர்களாகும். துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காகவே சவுதி மன்னர் துருக்கி சென்றிருந்தார்.சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் தாக்குதலில் இணைவதற்காக சவுதியின் போர் விமானங்கள் துருக்கியில் நிலை கொண்டுள்ளன. துருக்கி அண்மைக்காலங்களாக தன்னை ஒரு மத சார்பற்ற நாடாகக் காட்டிக் கொண்டது. இதை தற்போதைய துருக்கிய அதிபர் எர்டோகன் ஒரு தீவிர சுனி இஸ்லாமிய விசுவாசியாவார். துருக்கிக்குச் செல்ல முன்னர் சவுதி மன்னர் எகிப்த்திற்குப் பயணம் செய்தார். எகிப்திய அதிபர் அல் சிசி சவுதி அரேபியாவிற்கு இரண்டு தீவுகளைத்தாரை வார்த்தார். அல் சிசி ஆட்சிக்கு வந்ததில்இருந்து மன்னர்களின் ஆட்சியில் உள்ள வளை குடா நாடுகள் எகிப்த்திற்குப் பெருந்தொகை நிதி உதவி செய்து வருகின்றன.

ஈரானும் அமெரிக்காவும் ஈராக்கில் நீயா நானா போட்டி.

அமெரிக்காவின் உதவியுடனேயே சுனி இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான ஐ எஸ்ஸிற்கு எதிராக சியா இஸ்லாமிய ஈராக்கியப் படையினர் அண்மைக் காலங்களாக வெற்றி ஈட்டி வருகின்றனர். இது ஈராக்கில் உள்ள சியா மதத் தலைவர்களிடையே ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களில் சிலர் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறி அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். ஈரானில் உள்ள சியா முஸ்லிம்களும் ஈராக்கில் உள்ள சியா முஸ்லிம்களும் இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டவர்கள். ஈராக்கில் அமெரிக்கத் துணையுடன் சில ஈராக்கியப் படையினரும் ஈரானின் உதவியுடன் சில ஈராக்கியப் படையினரும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். 2015-ம் ஆண்டுமே மாதம் ஈரானியப் படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போராட ஈராக் சென்றனர். அமெரிக்கப் படையினரும் ஈரானியப் படையினரும் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது அமெரிக்காவின் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து எதிர்ப்பையும் உருவாக்கியது.

அமெரிக்கப் படைகள் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் சதாம் ஹுசேயினிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சென்ற போது ஈரானின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல்கள் செய்து கொன்றனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களே ஈரானும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதை எதிர்க்கின்றனர். அதேவேளை மொக்தாடா அல் சதார் தலைமையில் ஈராக்கில் செயற்படும் ஈரான் அசியேப் அல்ஹக் அமைப்பு தீவிர அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளது. சதாருக்கு ஆதரவான போராளிகளுக்கும் ஈராக்கிய அரச படையினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் அபாயமுள்ளது.

ஈரானின் வல்லரசுக் கனவு

அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கையின் முதன்மை நோக்கம் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதாகும்.ஐ எஸ் அமைப்பைத் தோற்கடிக்க ஐம்பதினாயிரம் படையினர் தேவைப்படும் என முன்னாள் அமெரிக்கப் படைத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக ஈரான் ஈராக்கில் மட்டும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படலாம் ஆனால் மேற்கு ஆசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானுக்கு என்றுஒரு வல்லரசுக் கனவு உண்டு. அல்ஜீரியா, எகிப்து, லிபியா, பாஹ்ரேய்ன், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரு வல்லரசாக ஈரான் மாற வேண்டும் என்ற கனவு ஈரானிய ஆட்சியாளர்களிடமும் கொள்கை வக்குப்பாளர்களிடமும் உள்ளது.

ஈரானுடன் செய்த யுரேனியம் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையின் பின்னர் ஈரானை தனது பங்காளியாக்கலாம் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஈரானீய மக்கள் அமெரிக்க தமதுநாட்டைச் சுரண்ட செய்த திருகு தாளங்களை மறக்க வில்லை. ஈரானை அமெரிக்காவின் பங்காளியாக்குவது இலகுவான காரியமல்ல.