குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா? கட்டுரைக்கான எதிர்வினை

1086

அருள்மிகு இலண்டன் முத்துமாரிஅம்மன் ஆலய நடப்புகள் தொடர்பாக ஸ்தாபகர் தரும் விளக்கம்.

சென்ற 23 செப்ரம்பர் 2011 அன்று வெளியான “குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா” எனும் தலைப்புடனான கட்டுரைக்குப் பதில் தருவதாகவும் ஆலயத்தின் தற்போதைய நிலையை அறியத்தருவதாகவும் கீழ்வரும் தரவுகள் அமைகின்றது.

நாட்டுநிலை காரணமாக கட்டாயத்தின் பேரில் புலம்பெயர்ந்து வேற்றுக் கலாசார மக்களுடன் வாழ வந்திருக்கும் நாம், கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்னும் சான்றோர் வாக்குக்கமைய, பல இன்னல்களுக்கு மத்தியில், இன்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய பல கோயில்கள் அமைத்துள்ளோம். அனேகமான இக்கோயில்கள் தனியாக பூசை மற்றும் வழிபாடுகளுடன் மட்டும் நின்றுவிடாது, தாயகத்தில் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் ஆதரவற்று இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ஒரு கேந்திர நிலையங்களாக அமைவது ஒரு பெருமைக்குரிய விடயம். மற்றும் இவ்வாலயங்கள் தமிழ் மக்களின் கலாசாரச் சின்னங்களாகவும் அமைகின்றன.

ஆலயங்களில் தனியார் கோயில்களோ பொதுக்கோயில்களோ முற்றுமுழுதாகப் பொதுமக்களின் நன்கொடைகளை வைத்தே பரிபாலனம் செய்கிறார்கள்.

அறக்கட்டளையாகப் பதியப்பட்ட அனைத்துக் கோயில்களும் பொதுக்கோயில்கள் ஆகும். அவ்வாறு பதியப்பட்ட கோயில்கள் தனியார் கோயில்களாக இயங்கவும் முடியாது. இவ்வாறு பதியப்பட்ட கோயில்களுக்கென ஒரு அறக்கட்டளைப் பதிவிலக்கமும் இருக்கும். இப்பொதுக் கோயில்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் இலவசமாக பிரித்தானிய அறக்கட்டளை ஆணைக்குழுவின் (Charity Commission) இணையத்தளத்தில் பார்வையிடமுடியும். இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிப்பது இவ்வாணைக்குழுவின் கடமை. குறிப்பாக பதியப்பட்ட நிறுவனங்களின் கணக்குகள், நிர்வாகம் செய்யும் விதம், மற்றும் அறக்கட்டளைச் சட்டங்களுக்கு அமைய இன்நிறுவனங்கள் இயங்குகின்றனவா? என்பவற்றைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். அறக்கட்டளையாகப் பதியப்பட்ட நிறுவனங்களில் ஏதேனும் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை சுட்டிக்காட்டவும் தொடர்ந்தும் தவறுகள் ஏற்படின் விசாரணைகள் நடத்தி நிரூபிக்கப்பட்டால் நிறுவனத்தை முடக்கவும் இவ்வாணைக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

“சிவயோகம்” எனும் பெயர்கொண்ட நிறுவனம் 08 நவம்பர் 1995 அன்று அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டது. அதன் பதிவிலக்கம் 1050398. இப்பதிவிலக்கத்தைக் கொண்டு ஆணைக் குழுவின் இணையத்தளத்தில் சிவயோகம் அறக்கட்டளை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளமுடியும். சிவயோகத்தின் அறிவித்தல் பலகையிலும் போதிய தகவல்களைப் பார்வையிடலாம். சிவயோகம் அறக் கட்டளையின்கீழ் 1996 ஏப்ரல் மாதத்தில் ரூட்டிங் பகுதியில் முத்துமாரி அம்மன் திருக்கோயில் ஆரம்பிக்கப்பட்டது. திருக்கோயில் ஆரம்பிகமுன்னரே சிவயோகம் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க வேண்டும். அவ்வாறு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு கோயில் எவ்வாறு தனியார் கோயிலாக அமையமுடியும்.
முத்துமாரி அம்மன் கோயிலின் குத்தகைக்காலம் 2011 மார்ச் நடுப்பகுதியுடன் முடிவடைந்துவிட்டது. இக்கட்டத்தின் குத்தகைக்காலத்தை நீடிக்க அல்லது கட்டிடத்தைக் கொள்வனவு செய்யக் கேட்டபோதும் கட்டிடச் சொந்தக்காரர் மறுத்துவிட்டார். குத்தகைக்காலம் முடிந்தும் வேறிடத்தில் கோயிலை வைத்து நடத்துவதற்கு வசதியாக எந்த இடமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஐந்து வருடங்களுக்குமுன் இக்கட்டிடத்தைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியங்கள் தென்பட்டன. இக்கட்டிடத்தில் இவ்வாலயம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். ஆதலால் இக்கட்டிடத்தைக் கொள்வனவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இக்கட்டிடத்தின் உத்தேசப் பெறுமதி 1.5 மில்லியன் (£1,500,000) ஆகும். மக்களிடம் நன்கொடைகளுக்கென விணணப்பங்கள் கோரப்பட்டது. அப்போது கட்டிட நிதிக்கு நன்கொடையாக £50,269மும், வட்டியில்லாக்கடனாக £210,000 மும் கிடைக்கப்பெற்றது. வட்டியில்லாக்கடனில் £110,000 அறங்காவலர் சபை உறுப்பினர்களும் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் கொடுத்துதவினார்கள். இவை அனைத்துமே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டன. போதிய பணம் கிடைக்காமையால் இக்கொள்வனவு கைவிடப்பட்டது. வட்டியில்லாக் கடனாக கொடுத்த சிலர் அப்பணத்தைக் கட்டிட நிதிக்கான நன்கொடையாகப் பயன்படுத்தக் கேட்டுக்கொண்டதில் அப்பணம் கட்டிடநிதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கட்டிடச்சொந்தக்காரர் இக்கட்டிடத்தை இடிப்பதற்கு றுயனௌறழசவா கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். இக்கட்டிடம் தனியாக கோயிற்கட்டிடம் மட்டுமல்லாது இப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு சில பழமையான கட்டிடங்களில் ஒன்றாக அமைகிறது. அதனால் இவ்விண்ணப்பம் பெருந்தொகையான இன்நாட்டுமக்களின் எதிர்ப்புகளுக்குள்ளானது. தம்நாட்டில் பற்றுள்ளவர்கள் இவ்வாறான ஒரு சரித்திர முக்கியத்துவம் பெற்ற இக்கட்டிடம் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்கள். ஆலய நன்மையை இலக்காகக் கொண்டு அம்மன் பக்தர்களும் இவ்வெதிர்ப்பில் கலந்துகொண்டது தவறாகுமா?

இந்து மக்கள் மட்டுமன்றி Wandsworth மாநகரசபை தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இப்பிரதேசவாழ் மக்கள் அனைவருடைய நன்மதிப்பைப் பெற்று இக்கட்டிடத்தில் தொடர்ந்து இத்திருக்கோயில் இருக்க வேண்டிக்கோரிக் கட்டிடச் சொந்தக்காரருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனுசரனையுடன் இக் கோயில் தொடர்ந்து இக்கட்டிடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் கட்டிடச் சொந்தக்காரர் குத்தகைக் காலம் முடிவடைந்தவுடன் நாம் இங்கிருந்து செல்லவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததில் நீதிமன்றம் உடனடியாகக் கோயில் இக் கட்டிடத்திலிருந்து செல்லவேண்டும் என்று 07.09.2011 அன்று தீர்ப்பு அளித்துள்ளது. எமது வழக்கறிஞர்கள் மற்றும் எங்களுடைய எதிர்பார்ப்பாக குறைந்தது நீதிமன்றம் இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகள் இக்கட்டிடத்தில் கோயிலைத் தொடர்ந்து நடத்த அனுமதி கொடுக்கும் என்பதாகும். ஆனால் நீதிபதியோ தனியாகச் சட்டத்தை மட்டும் வைத்து இத்தீர்ப்பைக் கொடுத்தார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்நிகழ்வுகளுக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிக்கும் எந்தத்தொடர்புகளும் இருப்பதாக நாம் அறியவில்லை. இதுபற்றிய பிரச்சாரங்களுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை.

மேற்படி தீர்ப்பு கிடைக்க முன்னதாகவே அம்மன் கோயிலுக்கென நிரந்தர ஆலயம் தேவை எனும் நோக்குடன் கொலியஸ்வூட் பகுதியில் ஆலயம் அமைக்க மிகவும் வசதிகூடிய காணி ஒன்று கொள்வனவு செயவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்தோம். இந்தக் காணியின் பெறுமதி 2.2 மில்லியன் பவுண்ஸ்கள்(£ 2,200,000) ஆகும். இக்காணிக் கொள்வனவுக்காகவே நிதி கோரி விண்ணப்பங்களும் துண்டுப்பிரசுரங்களும் மக்களிடம் கொடுக்கப்பட்டன.

07.09.2011 அன்று நீதிமன்றத்தின் தீர்ப்பு உடனடியாகக் கோயில் இக்கட்டிடத்தில் இருந்து செல்லவேண்டும் என்று இருந்தபோதும், அன்னையின் திருவருளால் தொடர்ந்தும் கோயிலில் நடைபெறவேண்டிய அனைத்துப் பூசைகளும் சிறப்பாக அதேகட்டிடத்தில் நடைபெற்றுவருகின்றது. மேலும் அம்பாளின் திருவருளால் அம்பாளுக்கென ஒரு நிரந்தர ஆலயம் அமையும் வரை இக்கட்டிடத்திலேயே இத்திருக்கோயில் இருக்கும் என்பது எமது எதிர்பார்ப்பு.

கோயிலுக்கு பக்தர்கள் வரலாம், கும்பிடலாம், தாராளமாக நிதி கொடுக்கலாம், சீட்டுப் பெற்று அருச்சனை அபிN~கம் செய்யலாம் அத்துடன் கேள்விகளும் தாராளமாக கேட்கலாம். யாரும் கேள்விகேட்கக்கூடாது என்று சொல்வதற்கு உரிமை இல்லை. கேள்வி கேட்டதால் கோயிலுக்குவர தடையுத்தரவும் எவருக்கும் பிறப்பிக்கப்படவுமில்லை. நாம் கேள்வி கேட்பதையே விரும்புகின்றோம். கோயில் பற்றி அறியவேண்டின் தாராளமாக எவரும் வந்து கேட்கலாம்.

“இக்கோயில் நிர்வாகம் ஐந்து பேர் கொண்ட அறக்கட்டளையாக உள்ளது.” சிவயோகத்திற்கென எழுதப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட யாப்பு ஒன்று உள்ளது. இவ்யாப்பின் படி யாரும் நிரந்தரத்தலைவராக இருக்கமுடியாது. அதன்படி கடந்த 15 ஆண்டு காலத்தில் நிரந்தரத் தலைவராக இருந்ததும் கிடையாது. ஒருவரின் சேவைக்காலம் மூன்று வருடங்களாக அமையும்.

ஐந்து பேர் கொண்ட அறக்கட்டளைக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் இன்னும் சிரமங்களை எதிர்நோக்கின்றோம். இப்போது கூட வெற்றிடமான அறங்காவலர்சபை உறுப்பினர் பதவிக்கு பொருத்தமானவர்களை விண்ணப்பிக்கும் படி ஆலய அறிவித்தல் பலகையில் கோரப்பட்டுள்ளது.
அறங்காவலர் சபை உறுப்பினர்கள் குறைந்தது மாதம் ஒருதடவையாவது கூட்டத்தினை நடத்துவதுண்டு. இவ்வாறான கூட்டங்களிலும் முரணான கருத்துக்களும் வரும். இருப்பினும், பெரும்பான்மையினரின் கருத்துக்கள் தீர்மானமாக எடுக்கப்படும். ஏந்த உறுப்பினரும் பொம்மைகளாகச் செயற்படுவதில்லை. நீதிமன்றமும் ஏற்கெனவே இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

சிவயோகம் அறக்கட்டளையை ஆணைக்குழு நீண்டநாட்களாக விசாரணை நடத்தியதை அதிகமானவர்கள் அறிந்திருப்பார்கள். 2005 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் தொடர்ச்சியான தூண்டடுதல்களாலும், ஒரு சிலரின் தவறான தகவல்களாலும் சிவயோகத்துடன் விசாரணை என்னும் பெயரில் தன்னைத் தானே பலிக்கடாவாக்கியது இவ்வாணைக்குழு.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தனியாக சிவயோகத்தின் கணக்குகளில் தவறு உள்ளதாக கூறி ஆரம்பிக்கப்பட்டது. ஆழமான விசாரணைகளை பல மாதங்களாக மேற்கொண்டும் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று இவ்விசாரணையை 2006 இல் முடிவுக்குக் கொண்டுவந்தது. இதைப் பொறுக்கமுடியாத இலங்கை தூதரகமும், தவறாகத் தகவல்கள் கொடுத்த ஒருசிலரும் பயங்கரவாதத்துடன் சிவயோகத்தைத் தொடர்பு படுத்தி, மற்றும் சில பூதாகரமான தகவல்களை ஆணைக்குழுவிற்கு தொடச்சியாகக் கொடுத்து வந்தார்கள். இவ்விசாரணையில் கீழ்கண்ட குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு நாகேந்திரம் சீவரத்தினம் மீது செலுத்தியது.

“Misconduct/Mismanagement (section 18(1) (a) of the Act):

  • (A) failure to discharge his duty of care as a trustee and duty to act in the best interests of the Charity, consequently hindering or preventing the other trustees from meeting their duties to the Charity;
  • (B) failure to discharge his duty of care as a trustee and duty to act in the best interests of the Charity by failing to dissociate the Charity from the LTTE and supporting its cause to the Charity’s beneficiaries;
  • (C) failure to take reasonable and adequate steps to ensure that the application of the Charity’s funds in Sri Lanka was proper and in accordance with charity law. Protection of Charity Property or its Application (section 18(1)(b) of the Act):
  • (D) Placing the proper use of Charity assets at risk through inadequate safeguards for funds transferred to Sri Lanka; the Charity’s participation in various litigation; inadequate internal financial controls, damage to reputation of the Charity”.

தொடர்ச்சியாக ஆணைக்குழு பெற்ற அழுத்தத்தினால், செய்வதறியாது சரியான விசாரணை ஏதுவும் செய்யாது என்னை (நாகேந்திரம் சீவரத்தினம்) 28.03.2007 இல் தற்காலிகமாகவும் 27.03.2008 நிரந்தரமாகவும் அறங்காவலர் சபையிலிருந்து விலக்கியது. இச்செயற்பாட்டிற்காக ஆணைக்குழுவிக்கெதிராகப் பிரித்தானியாவில் முதலாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏழு நாட்கள் விசாரணை தொடச்சியாக நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானவை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆணைக்குழுவினரால் சொல்லப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக ஆணைக்குழுவிடம் நட்டஈடும் கேட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் 50 பக்கங்கத் தீர்ப்பை http://www.charity.tribunals.gov.uk/documents/decisions/decision1310092.pdf என்னும் இணையத்தளத்தில் பெறமுடியும்.

இவைமட்டுமன்றி ஆணைக்குழு விசாரணை நடத்தும் போது சிவயோகத்தின் கணக்குகளைப் பரிசீலனை செய்வதற்காக விட கணக்காய்வாளர் (Forensic Accountant) ஒருவரை நியமனம் செய்து கடந்தகால ஆறு வருட கணக்குகள் பல காலமாக பரிசீலனையும் செய்யப்பட்டது. அவருடைய அறிக்கையில் சிவயோகத்தின் கணக்குகளில் குறைகள் இருப்பதாகத் தெரியப்படுத்தப்படவில்லை.

ஏறக்குறைய எட்டுவருடங்களாக ஆணைக்குழு, மற்றும் விட கணக்காய்வாளர்கள் சிவயோகத்தின் கணக்குவழக்குகளைப் பரிசீலனை செய்து எந்தக்குறையும் இல்லை என்று கூறியும், மீண்டும் மீண்டும் சிலர் இவ்வாறு கூறுவது வேதனைக்குரியது.

இவ்வாறான ஒரு வழக்கினை ஆணைக்குழுவுக்கெதிராக வைக்காவிட்டால், ஆணைக்குழுவினர் தொடர்ந்தும் மற்றய ஆலயங்கள் மீது வழக்குகள் தொடர முற்பட்டிருப்பார்கள் என்பதும், சிவயோகத்தின் வழக்கு ஆணைக்குழுவினருக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பது எமது வழக்கறிஞர்களின் கருத்து. தாயகத்தில் ஆதரவற்றவர்களுக்கு கொடுக்கப்படும் பணம் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்படுகிறது என்னும் குற்றச்சாட்டிற்கெதிராக வழக்குவைக்காமல் விட்டிருந்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வதாக அமையும் என்பதையும். எமது ஆலயம் போன்று தாயகத்திற்கு பணம் அனுப்பும் அனைத்து நிறுவனங்களுக்கும் பாதகமா அமைந்திருக்கும் என்பதும் கவனிப்பிக்குரியது.

கடந்த மூன்று சகாப்தங்களாக நடைபெற்ற ஈழ விடுதலைப் போரில் நம்மினம் வாழ தம்முயிர் நீத்த தியாக தீபங்களின் நினைவாகவும், யுத்தத்தினாலும் இயற்கை அனர்தத்தினாலும் உயிர்நீத்த நம் உறவுகளின் நினைவாகவும் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. புலம் பெயர்ந்த ஓவ்வொரு தமிழ் மகனுக்கும் ஈழ விடுதலைப்போரில் உயிர்நீத்தவர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கும். இவ்வாறான மக்கள் திருக்கோயிலுக்கு வரும் போது தம்மை விட்டுப்பிரிந்தவர்களின் நினைவாக ஒரு தீபமோ அல்லது மலரஞ்சலியோ செய்வதற்கு வசதியாகவும் இது அமைகின்றது. இதில் எந்த வியாபார நோக்கமுமில்லை. இது நிரந்தiமாக அமையும் ஆலயகட்டிடத்தில் பொருத்தமான இடத்தில் அமையும்.

இவற்றோடு கோவிலுக்கு நிலம் கொள்வனவு செய்வதற்கெதிராகவும் பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு யாழ்ப்பாணத்ததைச் சேர்ந்த தனம் என்று அழைக்கப்படும் சூசைப்பிள்ளையின் பின்னணி உள்ளதாகக் கருதுகிறேன். கடந்த வருடம் August மாத வங்கி வடுமுறையில் நடைபெற்ற தேர்த் திருவிழாவுக்கு போகவேண்டாம் என்ற இயக்கம் ஒன்றும் இருந்தது. இவையெல்லாவற்றிற்கும் காரணம் தனம் என்ற சூசைப்பிள்ளை இக்கோயிலை விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எழுதித்தரும்படி கேட்டபோது நான் மறுப்புத் தெரிவித்ததே ஆகும். இவர் இவ்வாறான எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுவேன் என்று எழுதிய மின்னஞ்சலில் அச்சுறுத்தினார்.

இக்கட்டுரையில் குறிப்பிட்ட அனைத்திற்கும் ஆதாரங்கள் ஆலயத்தில் உள்ளன. விரும்பியவர்கள் வந்து கேட்டால் பார்வையிட ஒழுங்குகள் செய்து தரப்படும்.

கருத்துகள் எவ்வாறு இருப்பினும் அம்பாளுக்கென ஒரு நிரந்தரமான திருக்கோயில் இதேபகுதியில் அமையவேண்டும் என்பதே அம்பாள் அடியார்களினதும், எமது விருப்பம். இப்பணியை நிறைவேறுவதற்கு அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு எமது அடுத்த சந்ததியிகருக்கு ஒரு ஆலயத்தை அமைத்துக் கொடுக்கவேண்டியது எமது கடமையாகும். அம்பாளுக்கு நிரந்தர ஆலயம் அமையும் வரை அம்பாள் இதேகட்டிடத்தில் இருந்து அருள்பாலிபார் எனும் நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிவு செய்கிறேன்.
அம்பாளுக்கு நிரந்தரமான கோயில் அமைக்கும் முயற்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருதலைபட்சமாக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குவது தெய்வ நிந்தனைக்குரியதே.

அன்னையின் சேவையில்
நாகேந்திரம் சீவரத்தினம்