முன்பே திட்டமிடப்பட்ட ஜுலை 83
மனம் திறக்கிறார் தேவநேசன் நேசையா
கறுப்பு ஜுலை தமிழினப்படுகொலை நடைபெற்று முப்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,அக்காலத்தில் யாழ் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா தனது அனுபவங்களை On the 30th Anniversary of the Pogrom of July 1983 என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதியுள்ளார். தனித்து மேற்படி வன்முறைகள் பற்றியதாக இல்லாமல் அதனுடன் தொடர்புபட்ட அரசியல் நிலவரத்தையும் இந்த நீண்ட கட்டுரையில் அவர் பதிவு செய்திருக்கிறார்.Groundsview இணையத் தளத்தில் பிரசுரமான இக்கட்டுரையினை ஒரு பேப்பருக்காக தமிழாக்கம் செய்தவர் சி. சந்திரமௌலீசன் (மௌலி).
நான் அப்பொழுது யாழ் அரச அதிபராக இருந்தேன். இனக்கலவரத்தால் நான் பாதிக்கப்படவில்லை, ஆனால் இனக்கலவரத்தை தொடர்ந்து யாழ் வந்த பாதிக்கப்பட்ட அறுபதாயிரத்துக்கும் அதிகமானோரை பராமரிக்கும் விடயங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தேன்.
எனது கதை இனக்கலவரத்துக்கு முந்திய 1980 ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கின்றது. அப்பொழுது நான் சிறீலங்கா அரசின் மேம்பாட்டுநிர்வாக அமைப்பில் பணியாற்றினேன். ஒரு நாள்எதிர்பாராத விதமாக பேராசிரியர் ஏ.ஜே. வில்சன்மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோர் என்னைச்சந்திக்க வந்திருந்தார்கள். 1983 இனவழிப்புநடவடிக்கைகான திட்டங்கள் கருக்கொண்டு விட்டதனை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை.
தீவடங்கிலும் மாவட்ட அபிருத்திச்சபைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாகவும், விரைவில்என்னை யாழ் மாவட்ட அரச அதிபராக நியமித்துதேர்தல் முடிந்தவுடன், மாவட்டச் செயலாளராகவும் நியமிக்க ஜே.ஆர் ஜயவர்தன திட்டமிட்டிருக்கின்றார் என்பதை அறிவிக்கவே அவர்கள் இருவரும் என்னைச் சந்திக்க வந்திருந்தனர்.அந்த நியமனத்தை நான் எற்க வேண்டும் என்ற அக்கறையுடன் இருந்த அவர்கள் யாழ் மாவட்டஅபிவிருத்தி சபையை மற்றைய பிரதேசங்களுக்கு ஒரு முன் மாதிரியாக்கிக் காட்ட வேண்டும் என்றும் விரும்பினார்கள்.
மாவட்ட அபிவிருத்திச் சபையில் எந்த அதிகார பரவலாக்கமும் இல்லை என்பதையும், அங்கு ஏதாவது அதிகார பரவலாக்கம் இருக்கும் என்றால் அது யாழ்மாவட்ட அமைச்சராகவிருந்த யு.பி. விஜயக்கோனுக்கே உண்டு எனவும்,அவர் கூட ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராகவும் , ஜனாதிபதிக்கு பதில் அளிக்க வேண்டியவராகவும் இருக்கின்றாரே அன்றி மாவட்ட சபைக்கு அல்ல என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன்.
அவர்கள் எனது மேற்படி கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மாகாணசபைத் திட்டம்நடை முறைப் படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தால்,மேலும் அதிகாரங்களை வழங்க முடியும் எனஜனாதிபதி ஜெயவர்த்தனா தமக்கு உறுதி அளித்துள்ளதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் தான் தமிழ்த் தலைவர்கள் என்னை யாழ்அரச அதிபராகவும் யாழ் மாவட்ட அமைச்சராகவும் பதவி எற்க வேண்டும் என விரும்பினார்கள்எனவும் கூறினார்கள். நான் அவர்களிடம் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அந்த உறுதி மொழியை நீங்கள் நம்புகின்றீர்களா எனக் கேட்டேன்.
எனது சந்தேகம் நியாயமானது என்பதனை ஏற்றுக் கொண்ட அவர்கள், எதிர்காலத்தில் கிடைக்கும் என சொல்லப்படும் அந்த அதிகார பகிர்வு என்ற நன்மையான விடயத்தை விட, மேலும் ஒரு மிக முக்கியமான நிர்ப்பந்திக்கும் அச்சுறுத்தல் ஒன்றையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தமக்கு தெரிவித்ததாகக் கூறினார்கள். இனம்தெரியாத நபர்கள் இனக்கலவரம் ஒன்றுக்கு திட்டமிடுகின்றார்கள் என்பதுதான் அந்த அழுத்தம் தரும் தகவல். (குறிப்பு :-இது சொல்லப்பட்டது 1980இல் கலவரம் நடந்தது 1983 இல்)
தமிழ் தலைவர்களும், சிங்களத் தலைவர்களும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பாடு இருந்தால் மட்டுமேஇனக்கலவரத்தைத் தடுக்க முடியும் என ஜெயவர்த்தனா தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டார்கள். அவ்வாறான சூழ்நிலை இருக்குமானால்நியமனக் கடிதம் வரும் பொழுது நியமனத்தை ஏற்க நான் தயாராகவுள்ளதாக அவர்களிடம் தெரிவித்தேன். சில மாதங்களின் பின் மாகாணசபைத் தேர்தல் நடை பெறுவதற்கு முதல்நாள் ஒரு துக்ககரமான சம்பவம் நடைபெற்றது.
காமினி திசநாயக்கா, சிறில் மத்யூ ஆகிய இரண்டு மந்திரிகள் யாழ் வந்திருந்தார்கள். `எந்தவகையிலாவது’ அரச சார்பு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவே அவர்கள் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. அப்போது ஒன்றாகஇணைந்து செயற்பட்ட தீவிரவாத இளைஞர் குழுக்கள் அரசு சார்பான இரண்டு அரசியல்வாதிகளையும் இரண்டு பொலிசாரையும் சுட்டுக் கொன்றார்கள்.
மிக மதிப்பு மிக்க உதவிப் பொலிஸ் மாஅதிபர் மகேந்திரன் தலைமையில் கடமையில் இருந்த சாதாரண பொலிசார் இருந்தனர். ஆனால்கொலைச் சம்பவம் நடை பெற்றபின் பெருமளவிலான ரிசேர்வ் பொலிசார் இன்னொரு உதவிப் பொலிஸ் மாஅதிபர் தலைமையில் கொண்டு வரப்பட்டனர். தீவிரவாதிகளைக் கையாள என கொண்டுவரப்பட்ட அப்பொலிசார் அட்டகாசம் புரிய ஆரம்பித்தனர். மிக மதிப்பு பெற்ற யாழ் நூல்நிலையத்தை எரித்தனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
மேற்படி ரிசர்வ் பொலிசார் பல கட்டடங்களை எரித்து நாசமாக்கினார்கள், பலரைக் கொலை செய்தார்கள், பலரைக் கொலை செய்ய முயன்றார்கள், அன்று பிரபலமாக இருந்து யாழ் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனையும் அவரது மனைவியையும் கொலை செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பினார்கள் , பின்னர் மாறுபட்டஅரசியலில், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.
நடைபெற்ற சம்பவங்களுக்கு அமைச்சர்களான காமினி திசநாயக்கா, சிறில் மத்யூஆகியோர் காரணமாக இருந்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லாத பொழுதும் கடற்படைப் பொறுப்பதிகாரியான சந்திரகிரி எரியும் நூல் நிலைய தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க முற்பட்டபொழுது பொலிசாருடன் மோதல் எற்படும் என எச்சரித்த மேற்படி அமைச்சர்கள், தீயணைத்தலில் இருந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டனர்என நம்பப்படுகின்றது.