முன்பே திட்டமிடப்பட்ட ஜுலை 83 – பாகம் 02

1664

முன்பே திட்டமிடப்பட்ட ஜுலை 83
மனம் திறக்கிறார் தேவநேசன் நேசையா

கறுப்பு ஜுலை தமிழினப்படுகொலை நடைபெற்று முப்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,அக்காலத்தில் யாழ் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி தேவநேசன நேசையா தனது அனுபவங்களை On the 30th Anniversary of the Pogrom of July 1983 என்ற தலைப்பில் கட்டுரையாகஎழுதியுள்ளார். .Groundsview இணையதளத்தில் பிரசுரமான இக்கட்டுரையின் தமிழாக்கத்தின் இரண்டாவது பகுதியை இங்கு பிரசுரிக்கிறோம். இதுவரை வெளிவராத பல தகவல்களைக் கொண்ட இக்கட்டுரையினை ஒரு பேப்பருக்காக தமிழாக்கம் செய்தவர் சி. சந்திரமௌலீசன் (மௌலி).

பாகம் 2 : மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தல் – யாழ்ப்பாணம்

1981 இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் அப்பட்டமான மோசடியாக நடைபெற்றது. நன்கு பயிற்றப்பட்ட தேர்தல் உத்தியோகத்தர்கள் வாக்குச் சீட்டுக்களையும், வாக்குப் பெட்டிகளையும் சேகரிக்க வரும் பொழுது இடை நிறுத்தம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு பதிலாக காமினி திசநாயக்கா, சிறில் மத்யூ ஆகிய அமைச்சர்களால் வெளிமாவட்டங்களில் இருந்துகொண்டுவரப்பட்ட பயிற்றப்படாத கட்டுப்பாடற்வர்கள் நியமிக்கப்பட்டார்கள். அன்று யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் மேற்படி மந்திரிகளின் கட்டளைகளுக்கு அமைய பயிற்றப்பட்டதேர்தல் உத்தியோகத்தர்களை வேலை நீக்கம்செய்யும் கடிதங்களையும் பயிற்றப்படாதவர்களுக்கு நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.

அமைச்சர்களின் கட்டளைக்கு அமையச் செயற்பட்ட அரச அதிபரின் இந்நடவடிக்கை அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலாகும். தேர்தல் விதிகளின்படி அரச அதிபர்தான் தலைமை தேர்தல்அதிகாரியாகும் அவர் அமைச்சர்களை விட அதிகஅதிகாரம் உடையவராகும். அவர் அமைச்சர்களின் கட்டளையை அமுல்படுத்தியது அப்பட்டமான சட்டமீறலாகும். ஜெயரட்ணம் என்ற தேர்தல் அதிகாரி மட்டும் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு, இத்தகைய கட்டளைகளை ஏற்க மறுத்தார். அவர் பாராட்டுக்குரியவராகும்.

அந்த ஆண்டுவரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 1931 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த டொனமூர் சட்டத்தின்படிவாக்குரிமை வழங்கப்பட்ட 50 ஆவது ஆண்டான 1981இல் அவை முதற்தடவையாக முற்றாக மீறப்பட்டன. இத்தேர்தல் மோசடியில் மாவட்ட அமைச்சர் ஈடுபடவில்லை.

தேர்தல் மோசடிகள் நடைபெற்ற விதம் மிக குழப்பகரமாக நடை பெற்றபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றிக் கொண்டது. முன்னாள் மேலவை உறுப்பினர் (செனட்டர்) நடராஜா மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவரானார். அவர் பதவியேற்ற சில நாட்களில், நான் யாழ் அரச அதிபராகவும் மாவட்டச் செயலாளராகவும் நியமனம் பெற்றேன். அப்போதுதான் தேர்தல் முறை கேடுகள் பற்றிய இவ்வளவு விடயங்களையும் நான் அறிந்து கொண்டேன். எனது பதவிக்காலத்தில் நூற்றுக் கணக்கான அரச உத்தியோகத்தர்களையும், சமூகதலைவர்களையும் சந்தித்து பேசிய பொழுது அவர்கள் மேற்சொன்ன விடயங்கள் உண்மையானவை என்பதனை உறுதிப்படுத்தினர்.

அடுத்த சில வாரங்களில், அரசபடையினருக்கும், தீவிரவாதிகள் மற்றும் பொது மக்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இவ்வன்முறைகளுக்கு மத்தியில், அரசாங்க அலுவலக உத்தியோகத்தர்களை அறிமுகம் செய்வதிலும், மாவட்ட செயலக அதிகாரிகள், உறுப்பினர்களுடன் அறிமுகமாவதிலும் , மாவட்ட செயலக நிர்வாக நாளாந்த செயற்பாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டேன். குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் நிகழும் எல்லா இடங்களுக்கும் நேரடியாக சென்று பார்வையிடும் பழக்கத்தை நான்கொண்டிருந்தேன். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை சம்பவ இடத்தில் அல்லது வைத்திய சாலையில் மாவட்ட அமைச்சருடனும், மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவருடனும் அந்த இடங்களுக்கு சென்றுவந்தேன். வன்முறையைக் கட்டுப்படுத்த உதவினேன். பல நூற்றுக் கணக்கான அரசியல்வன்முறைகள் இடம் பெற்றன அந்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தேன் .

இந்த நடவடிக்கைகளால் தொண்டர் அடிப்படையிலும் வேறு வழிகளும் உதவிய எல்லா தரப்பினருடனும் பழகும் வாய்ப்பையும் அவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று நல்லெண்ண உறவை என்னால் ஏற்படுத்த முடிந்தது. இந்த அறிமுகம் யாழ்பாணத்தில் நான் பதவி வகித்த காலத்தில் பெரும் உதவியாக இருந்தது. அத்துடன் குறிப்பாக 1983 இனக்கலவரத்தின் பொழுது அகதிகளாக வந்த 60 ஆயிரம் மக்களைப் பராமரிப்பதில் இந்த அறிமுகம் பெரிதும் உதவியாக இருந்தது .

இராணுவ அதிகாரிகளுடன் உறவை ஏற்படுத்துவதிலும் அதனை நெருக்கமாக பேணுவதிலும் நான் குறிப்பாக அக்கறை காட்டினேன். யாழ்பாணத்தில் உள்ள பொதுச் சேவை அதிகாரிகளுடனும், மாவட்ட அமைசசர் யு.பி .விஜயக்கோனுடனும், மாவட்ட அபிவிருத்தி சபை தலைவர் நடராஜாவுடனும் எனக்கு குறைவற்ற வகையில் தொடர்பாடல் இருந்து வந்தது. அதே நேரம் எந்த அதிகார பரவலாக்கமும் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டம் தொடர்பாக யாழ் மாவட்ட சபைத் தலைவர் நடராசாவும், மாவட்ட சபை உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தனர். மந்திரிசபை உறுப்பினர் காமினி திசாநாயக்கா இதனை அறிந்து விமானமூலம் வந்து தலைவர் நடராஜாவின் இராஜினாமா முயற்சியை கைவிட வைக்க முயன்றார்.

அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தையும் அது தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா, பிரதமர் பிரேமதாசா, மந்திரி லலித் அத்துலத் முதலி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்த கொழும்பு வருமாறும் திரு. நடராஜாவை அமைச்சர் திசநாயக்கா அழைத்தார். திட்டமிடல்ஆணையாளரையும் என்னையும் தன்னுடன் வருமாறு திரு. நடராஜா வலியுறுத்தியதைத் தொடர்ந்து அதற்கு உடன்பாடு காணப்பட்டது.

நாம் மூவரும் கொழும்புக்குப் பல பயணங்களை மேற்கொண்டோம். அதிகளவு பணம் யாழ்மாவட்ட சபைக்கு ஒதுக்கப்படும் என மீண்டும்மீண்டும் தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில்பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும், யாழ் வைத்தியசாலை மிகப் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், முழுமையான வசதிகள் கொண்ட விளையாட்டு மண்டபம் யாழ் மாவட்டத்துக்கு வழங்கப்படும் எனவும் மீண்டும் மீண்டும் எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய அபிவிருத்தி விடயங்களை விட அதிகளவு அதிகார பரவலாக்கம் அவசியம் என திரு. நடராஜா மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். தோல்வி கண்ட பல சந்திப்புக்களுக்கு பின், அதிகளவு பணம் மட்டுமே வழங்கப்படும் எனவும் , ஆனால் அதிகார பரவலாக்கம் எதுவும் வழங்கப்படாது எனவும் திரு. நடராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது .

தனது இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக ஜெயவர்த்தனாவை இன்னுமொருமுறை சந்திக்க வாய்ப்புக் கோரினார் திரு. நடராஜா. கொழும்புக் கோட்டையில் உள்ள தனதுவாசஸ்தலத்தில் சந்திப்பதற்கான திகதியையும் ,நேரத்தையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தீர்மானித்தார். அந்த நேரம் அந்த சந்திப்பு திகதி, நேரம்,இடம் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்து நாம் புரிந்து கொள்ளவில்லை .

ஜெயவர்த்தனாவுடன் சந்திப்பு நடந்து கொண்டிருந்த பொழுது , `வேல் திருவிழா தேர்’ ஜனாதிபதியின் ஆசீர்வாததிற்காக ஜனாதிபதி மாளிகை வாசலில் வந்திருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர்ஓடிவந்து சொன்ன பொழுதுதான் அந்த திகதியும் நேரமும் ஏன் குறிக்கப்பட்டது என்பதை நாம் உணர்ந்தோம்.

வேல் திருவிழா தேரைத் தரிசிக்க தன்னுடன் வருமாறு திரு. நடராஜாவிடம் கோரினார் ஜனாதிபதி ஜெயவர்த்தனா. அது பிரச்சாரத்துக்கு பயன்படும் சிறந்த புகைப்பட வாய்ப்பாகவும், திரு.நடராஜாவை மனம் மாற வைக்கும் கடைசி நேரமுயற்சியாகவும் இருந்தது . ஆனால் ஜெயவர்த்தனாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஜனாதிபதி ஜெயர்வர்த்தனாவிடம் சேர்மன் நடராஜாவினால் இராஜினாமாக் கடிதம் கையளிக்கப்பட்டது. அடுத்த நாள் நாம் யாழ்ப்பாணத்துக்குக் காரில் புறப்பட்டோம்.

முன்பே திட்டமிடப்பட்ட ஜுலை 83 – பாகம் ஒன்று