முப்பது வருடகால போராட்டத்தின் தியாகங்கள் வீண்போகக் கூடாது

1170

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போராளியும், திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளராக பணியாற்றியவருமான திரு. எழிலன் (சசிதரன்) போரின் முடிவில் சக போராளிகள் சிலருடன் சிறிலங்கா அரசபடைகளிடம் சரணடைந்தார். தனது கண்முன்னாகவே எழிலன் சரணடைந்ததாக அவரது மனைவி திருமதி. அனந்தி சசிதரன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் `நல்லிணக்க ஆணைக்குழு’ மேற்கொண்ட விசாரணையின்போது சாட்சியமளித்திருந்தார். சரணடைந்த திரு எழிலனுக்கு என்ன ஆனது என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளஅனந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றபோதிலும், அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில்,வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தலில், கூட்டமைப்பின் வேட்பாளராக அதன் யாழ் மாவட்ட பட்டியலில் சேர்க்கிப்பட்டிருக்கிறார். கிளிநொச்சி அரச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளரக கடமையாற்றும் அவர் தேர்தலில் குதிப்பதற்காக பணியிலிருந்து விடுதலை பெற்றுள்ளதாக தெரிவித்தார். பல சிரமங்களின் மத்தியில், மூன்று பெண்குழந்தைகளுடன், குடும்பப் பாரத்தைச் சுமந்துகொண்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல்கொடுத்துவரும் அனந்தியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டுஉரையாடினோம். எமது கேள்விகளுக்கு அவர்வழங்கிய பதில்களை இங்கு தருகிறோம்.

ஒருபேப்பர்: வணக்கம் அனந்தி. உங்களைதிருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. எழிலன் அவர்களது மனைவியாகவே அறிந்து வைத்திருக்கிறோம். உங்களது அண்மைக்கால செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள். கடந்த நான்காண்டு காலத்தில் ஏதாவது அரசியல் அல்லது மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவருகிறீர்களா?

அனந்தி: நான் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் சிறிலங்கா அரசபடைகளிடம் சரணடைந்து அதன்பின் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் உள்ளவர்கள், மற்றும் காணமல் போனவர்கள் ஆகியோரை தேடியறிவதற்காக பாதிக்கப்பட்ட பெண்களைத் திரட்டி ஒரு அமைப்பு ரீதியாகச் செயற்பட்டு வருகிறேன்.

ஒருபேப்பர்: அது எந்த அமைப்பு என்று சொல்ல முடியுமா?

அனந்தி: காணமற் போனோரின் உறவினர் சங்கம் என்ற அமைப்பு

ஒருபேப்பர்: அவ்வாறானால் ஏன் இப்போது பிரிக்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏன் முன்வந்தீர்கள்?

அனந்தி: போர் முடிந்த பின்னர், கடந்த நான்காண்டுகளாக எனது கணவர் சரணடைந்தது தொடர்பாக தனித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்களைச் சேரந்தவர்கள் என பலதரப்பட்டவர்களையும் தொடர்புகொண்டும் எதுவும் நடக்கவில்லை. பின்னர் பாதிக்கப்பட்ட மற்றைய பெண்களையும் இணைத்து அமைப்பு ரீதியாக,ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என நடாத்தியும் எங்களுக்கு எந்த விடிவும் கிட்டவில்லை. போரினால் பாதிக்கப்ட்ட பெண்களின் பிரச்சனையில் யாரும் கரிசனை செலுத்துவதாகவோ, அதனை ஒரு பெரிய விடயமாக பார்ப்பதாகவோ தெரியவில்லை. குடும்பத் தலைவரைஇழந்து நிற்கிற எங்களுக்கு நான்கு வருடம் என்பது நீண்ட நாட்கள். இந்நிலையில் தேர்தலில் நிற்குமாறு கேட்டார்கள். முதலில் மறுத்து விட்டேன். பின்னர் அதுபற்றி சிந்தித்து பார்த்த போது, எங்களுடைய பிரச்சனைகளுக்கு நாங்கள் தான் குரல்கொடுக்க வேண்டும், இன்னொருவர் எங்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது எனத் தோன்றியது. ஆகவே இதுபற்றி மற்றைய பெண்களுடன் கதைத்தபோது, அவர்கள் நீங்கள்தான் எங்களுக்காக குரல்கொடுக்க முடியும், தேர்தலில் இறங்குங்கள்,நாங்கள் ஆதரவளிப்போம் என உற்சாகப்படுத்தினார்கள். அவர்களது வாக்குறுதியை நம்பி நான் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஒருபேப்பர்: தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிக்கப்பட்ட வடமாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றினால்,எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவது என்று தீர்மானித்துள்ளீர்கள்?

அனந்தி: சரணடைந்த, மற்றும் காணமற்போனவர்களின் குடும்பங்களின் நலனைப் பேணுதல், பாதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு வலுவூட்டுவதற்கான நடவக்கைகளை மேற்கொள்ளுதல், அவர்களை ஒரு ஆரோக்கியமான சமூகத்தினைச் சேர்ந்தவர்களாகக் கட்டியெழுப்புதல் போன்ற மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவேன்.

ஒருபேப்பர்: நீங்கள் இவ்வறான எதிர்பார்ப்புடன் இருந்தாலும், 13ம் திருத்தச்சட்ட மூலத்தின்படி உருவாக்கப்ட்டுள்ள மாகாண சபைகளில் சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அரச அதிகாரியான ஆளுனரே நிறைவேற்றுஅதிகாரத்தினைக் கொண்டிருப்பார். இந்நிலையில் நீங்கள் எவ்வாறு இவற்றைச் சாதிக்க முயல்கிறீர்கள்?

அனந்தி: நீங்கள் குறிப்பிடுவதுபோல் மாகாண சபைகளில் சாதிப்பதற்கு பெரிதாக ஒன்று மில்லை என்றாலும், எங்களது (பாதிக்கப்பட்ட பெண்களின்) பிரச்சனைகளை மாகாணசபை மட்டத்தில் கொண்டு சென்று ஒரு முடிவினை எட்ட முயற்சிக்கலாம். அதுவும் சரிவராவிட்டால் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று முயற்சிப்பது, அதாவது அழுத்தங்களைக் கொடுத்து எங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நிலையில்தான் இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம்.

ஒருபேப்பர்: ஒரு முக்கியமான பிரச்சனையைமுன்வைத்து நீங்கள் தேர்தலில் பங்குபற்றுகிறீர்கள். இது விடயத்தில் மாற்றுக்கருத்துகள் இருக்கும் என நாம் நம்பவில்லை. ஆனால்நீங்கள பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வினை வலியுறுத்துகிறது, இதுதான் தமது அரசியல் கொள்கை என கூட்டமைபின் தலைவர்கள் வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள். இதுவே உங்களது தற்போதைய அரசியல் நிலைப்பாடு என எடுத்துக் கொள்ளலாமா?

அனந்தி: இதுதொடர்பாக நான் கருத்துக் கூறவிரும்பவில்லை. நாங்கள் எதிர்பார்த்த தீர்வுவேறு. ஆந்த எதிர்பார்ப்புகள் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு எல்லாமே ஒரு கேள்விக்குறியான நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். இதுவிடயத்தில் எம்மத்தியில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், அரசியல் அறிஞர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நாங்கள் நொந்து பொயிருக்கும் நிலையில், இது தொடர்பாக விரிவான கருத்துகளைக் கூற நான் விரும்பவில்லை.

ஒருபேப்பர்: கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில், கடந்த முப்பதுவருட கால விடுதலைப்போராட்டதை நிராகரிக்கும் விதமாககருத்து வெளியிட்டு வருகிறார். அவரைப்பொறுத்தவரை கடந்த முப்பது வருடகாலம் என்பது பிரச்சனைகள் நிறைந்த காலமாகத் தெரிகிறதே தவிர, போராட்ட காலத்தின் அரசியல்முக்கியத்துவம், அர்ப்பணிப்புகள் என்பனவற்றை அவர் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. விக்கினேஸ்வரனின் கருத்துகள் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

அனந்தி: இது பற்றியும் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். நான் முப்பதுவருடகால போராட்டகாலத்தில், மண்ணில் இருந்தவள், நான் போராளியாக இருக்காவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் என்னையும் இணைத்துக் கொண்டிருந்தேன். போராட்ட காலத்தின் துன்ப, துயரங்கள், உணர்வுகள் என்பவற்றை மண்ணில் இருந்தவர்களினால்தான் விளங்கிக்கொள்ள முடியும். அந்தத் தியாகங்கள் எதுவும் வீண்போகக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

ஒருபேப்பர்: இவ்விடயத்தில் உங்களது நிலைப்பாடு விக்னேஸ்வரின் நிலைப்பாட்டுடன முரண்படுகிறது அல்லவா?

அனந்தி: முரண்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் இப்போது எங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனை, குடும்பத்தலைவர்களை இழந்தவர்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது. அவர்களை ஒரு ஒழுக்கமான சமூகக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதும்தான் இப்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது.

ஒருபேப்பர்: இறுதியாக, புலம்பெயர் தமிழ்ச்சமூகத்திற்கு நீங்கள் ஏதாவது செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா?

அனந்தி: கொடிய போரினால் அதலபாதாளத்திற்குச் சென்ற எங்களுடைய வாழ்வாதாரக் கட்டமைப்பு இன்றைக்கு ஒரளவிற்கு, பசி பட்டினியில்லாத நிலைக்கு கொண்டு வந்ததற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புத்தான் காரணம்.

அதுபோல் ஆதரவற்று நிர்க்கதியாக இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து அவர்களது முன்னேற்றத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து உதவ வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.