முள்ளிவாய்க்கால் முடிவில்லா துன்பம்

254

Kumaran Karan

அன்று 08.04.2009
எனக்கு நல்ல ஞாபகம்…அன்று எனக்கு தெரிந்தவகையில்
10 தடவைகள் என நினைக்கிறேன்..காலை வேளை பச்சப்புல்மோட்டையில் தொடங்கி…ஆனந்தபுரம்
பகுதிகளில் நடாத்தப்பட்ட கிபிர் தாக்குதல்….

நானும் ..மாங்குயில் அண்ணையும் மாட்டியது..
அது தனி…அன்று மாலை வரை தப்பிய நான் மாலை வேளை தான் சிறு காயம்…நாங்கள் இருந்த பங்கருக்கு பக்கத்தில் கிபிர் அடித்து ..அதன் சிதறல் தென்னங் குற்றியை சிதைக்க அதன் சிதறல்கள் என் பின் பக்கமெங்கும் குத்திநின்றது….சேட் கழற்ற முடியாது…
பின் பக்கம் விறைத்தது போலிருந்தது…

மெடிக்சுக்கு போச்சொல்லி பிரதீப் அண்ணை கூறினார்
அங்கு போனால் சிரிப்பாங்கள். கால்..கை வெட்டுப்பட்டு
தசை பிஞ்சு இருக்கிறவங்கள் இடத்துக்கு நான் இத காட்டினால்…..நான் வீட்ட போறன் …நாளைக்கு வாறன் என்றேன். பிரதீப் அண்ணையும் சரி என்றார்.

நான் வீட்டுக்கு நடந்து போக இருட்டி விட்டது..
யசோவுக்கு நிலமையை சொல்லவும் ..அவள் அழத்தொடங்கிவிட்டாள்…பின் கோகுலன் ரோச் அடிக்க
யசோ ஊசியாலும்…கைநகத்தினாலும்
ஒவ்வொரு சிராம்பாய் எடுத்துக்கொண்டிருந்தாள்…நீண்டநாட்களின் பின் அன்று நல்ல நித்திரை…

நாங்கள் இருந்த கிளி அண்ணையின் வளவின் நடுவில் ஒரு இத்திமரம் அதில் ஒரு கோயில்…
அந்த அம்மன் சக்கிவாய்ந்ததாக அவர்கள் கூறுவார்கள்.
இஞ்ச இதுக்குள்ள ஒன்டும் நடக்காது என்று சொல்லுவார்
கிளி அண்ணை…எல்லாம் அவரவர் நம்பிக்கை..யசோவுக்கும் அதில் நல்ல நம்பிக்கை.
நான் இல்லாத போது யசோ அங்கு போய் தான் அழுகிறதாம்… இதில் ஒரு விடயம் சொல்லவேண்டும்
நாம் அந்தக் காணியில் இருந்து வரும் வரை …அந்தக்காணியில் ஒரு உயிரிழப்புகள் நடைபெறவில்லை….ஒருமுறை ஆர்பீஜீ ஷெல் வந்து
ஜெயராச் அண்ணை இருந்த ‘டெண்ட்’ அருகில் வீழ்ந்தது..ஆனால் வெடிக்கவில்லை…
வெடித்திருந்தால் பல உயிர்கள் போயிருக்கும்….( முள்ளிவாய்க்கால் அவலம் என்பது கடவுளும் கல்லாகி விட்டாரே என்ற ஆதங்கம் என்னுள் உண்டு.என் மனைவியின் நம்பிக்கையை இதில் குறிப்பிடுகிறேன்.)

இப்படி இருக்கத்தான்…
பாரிய ஷெல் சத்தம்…ரூபன் தர்ப்பால் கொட்டில் இருந்தபக்கம்…சத்தம் ஓய்ந்த போது அங்கு சென்று பார்த்தால்…ரூபனின் கொட்டிலுக்கு பக்கத்து காணியில்
கடற்புலி அக்கா ஒருவர் இருந்தவர் …ஒரு கொட்டிலில் இரண்டு..மூன்று குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்..

சீறி வந்த ஷெல் ஒன்று நேரே பங்கருக்கு் உள்ளேயே வீழ்ந்து வெடித்திருந்தது. இதில் பங்கருக்குள் இருந்த…பங்கருக்கு மேல் இருந்தவர்களுமாக 16 பேர்
கொல்லப்பட்டனர்.. காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுபோக..அங்கு நின்ற ஆண்கள் தசைப்பிண்டங்களையும்..உடல்களையும் இழுத்து அந்த பங்கருக்கு போட்டடு மூடினார்கள்..
சிறிது நேரத்தில் அதில் இரண்டு சந்ததிகள் இருந்தது என்கின்ற அடையாளம் இல்லாமல் போயிற்று..

எங்கள் இயலாமை…
என் மனதினை வலித்தது.
மீண்டும் கொட்டில்களுக்கு இடையால் நடந்து
வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்…
அங்கு என் எதிரே என் நண்பனி மணைவி
கடற்கரை நோக்கி குடையுடன் வந்துகொண்டிருந்தாள்…
என்னைப்பார்த்து தலையை மட்டும் அசைத்துச் சென்றாள்.

எனக்கு புரிந்தது..
நேரம் தப்பி வந்த அவசரம்.முள்ளிவாய்க்காலில் ஒரே ஒரு வசதி
காலைக்கடன் கழிப்பது…
அதாவது அங்கு நிரம்பியிருந்த மக்களுக்கு
கட்டட கழிப்பிடங்கள் இல்லை அல்லது
அரிதாகவிருந்தது… அதிகாலையில்
அந்த பெருங்கடல் தான்
அனைவருக்கும் கழிப்பிடம்

அதில் பெருந் துயர் என்னவென்றால்
காலம் தப்பி வரும் அவசரம்….
அல்லது
உணவிண்றி…பசியை போக்க
சாப்பிடும் சரியில்லாத பொருள்களால் வரும்
வயிற்றுப்போக்கு….
(இதனால் பலர் இறந்திருக்கின்றனர்)

என்ன செய்வது காணியில் இடமில்லை
அத்தனையும் சனம் இருக்கும்
இரவுவரை அடக்கமுடியாது…
வேறுவழியில்லை
முகத்தினை மறைக்க ஒரு துணி…
அல்லது குடை.

பின்னால் சனம் இருக்கும்
குடையால் முகத்தினை மறைத்தபடி இருப்பார்கள்
பெண்களின் நிலையும் இப்படித்தான்..ஆரம்பத்தில்
அழுது…அழுது இருந்து
பின்னாளில் அது பழகிவிட்டிருந்தது.
அப்போது நாங்கலெல்லாம்
கல்தான்
ஏனெனில் எம்மிடம் உயிர்கள் மட்டுமே தான்
எஞ்சியிருந்தது….
கவலைப்பட எமக்கு நேரமில்லை..