ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் விதிக்க்பட்டுள்ள தண்டனையை குறைக்கக் கோரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவினை இந்திய சனாதிபதி பிரதீபா பட்டேல் நிராகரித்துள்ளார். பொதுவான ஆயுள் தண்டனைக் காலமான இருபது வருடங்கள் கடந்த நிலையில், தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது மரணதண்டனையை நிறைவேற்ற முயல்வது மனிதாபிமானமற்ற செயல் என்பதனை நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளும்.
பெரும்பாலான ஜனநாயக நாடுகள் தூக்கு தண்டனை விதிப்பதில்லை. அவை அதியுட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையை வழங்குகின்றன. ஏனையநாடுகளையும் இந்நடைமுறையை பின்பற்றுமாறு சர்வதேச மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இம்மூவரினதும் மரணதண்டனையை மனிதாபிமான அடிப்படையில் இரத்துச் செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இந்திய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி, நீதியரசர் வி. கிருஸ்ணய்யர் போன்ற புலமையாளர்களும் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொங்கிரஸ் கட்சி தவிர்ந்த மற்றய பிரதான கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தில் ஒத்திசைவான கருத்தினை வெளியிட்டு வருகின்றனர். தமிழின உணர்வாளர்கள், மே 17 இயக்கம், மக்கள் குடியுரிமைக் கழகம் உட்பட பல்வேறு மக்கள் அமைப்புகள், பரந்துபட்டளவில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இவ்விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயற்படக்கூடிய நிலையில் உள்ள தமிழ்நாடு முதல்வர் செல்வி. ஜெயலிதா இதுவரை தனது கருத்தினை வெளியிடவில்லை. அரசியல் காரணங்களுக்காக அவர் இவ்விதம் நடந்து கொள்ளக் கூடும். இருப்பினும் அவர் தமிழ்மக்களின் ஒருமித்த குரலுக்கு மதிப்பளிப்பவராக நடந்து கொள்ளுவார் என நம்பிக்கை கொள்ளலாம்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இவ்விடயத்தில் மெத்தனத்தை கடைப்பிடிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களும் குரலெழுப்ப வேண்டிய ஒரு தருணத்தில் புலம்பெயர் தமிழர்கள் அசட்டையாக இருப்பது, தமிழ்நாட்டு மக்களின் மனங்களை காயப்படுத்துவதுடன், அண்மைக் காலமாக உலகத்தமிழ் மக்களிடையே ஏற்பட்டுவரும் ஒருமைப்பாட்டை சிதைத்துவிடும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.
Issue-152