மெசப்பொட்டோமியா, சிந்துவெளி நாகரிகங்கள்

271

நாகரிகம் என்னும் சொல்லை உச்சரிக்கும்போது இதில் வரும் ரி என்னும் எழுத்து பலருக்கு ரீ யாகப் படுவதால் அவர்கள் எழுதும்போதும் தவறுதலாக நாகரீகம் என்றே எழுதுகிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நாகரிகம் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுப்பதானால் பல கோணங்களிலிருந்து கொடுக்கலாம். வேட்டையாடி நாடோடிகளாக அலைந்த மனித இனம் உணவுக்காக பயிர் செய்யத் தொடங்கி ஒரே இடத்தில் தங்கி குடியிருப்புக்கள் உருவாக்கி வாழத் தொடங்கிய நிலையையே இங்கு குறிக்கின்றோம். இது ஒரு எளிய விளக்கம். ஆனாலும் இக்கட்டுரையைப் பொறுத்தமட்டில் அதற்குமேல் நாம் போகத் தேவையில்லை.

மனிதர், தாம் தோன்றிய ஆபிரிக்காவிலிருந்து 150 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயரத் தொடங்கி, எத்தனையோ பனி ஊழிகளைக் சந்தித்தனர். இதில் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தென் ஆசியாவின் பல பகுதிகளை அடிக்கணக்கில் மூடிய எரிமலைக் குழம்பும் அதனைத் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகள்வரை நீடித்த பனி ஊழியும், அரபிக் குடாவில்தொடங்கி இந்தியா உட்பட மலேசியாவின் தென்முனைவரை, உள்ள பாரிய நிலப்பரப்பில் ஆக 10000 வரையான ஆட்களையே உயிருடன் விட்டு வைத்தது. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த கடைசிப் பனி ஊழியிலிருந்து விடுபட்ட பின்புதான் மனித இனம்தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்யும் ஒரு நிலைக்கு வந்தது. இந்தக் கால கட்டத்தில் மனித இனம் அன்ராற்றிகா போன்ற சில பகுதிகளைத் தவிர உலகம் முழுவதும் பரவி விட்டது.

மெசப்பெட்டேமிய, எகிப்திய, சீன(சாங் அரச பரம்பரை) நாகரிகங்களே உலகின் பழமை மிக்க நாகரிகங்களாக கணிக்கப்பட்டு வந்தன. இற்றைக்கு 6500 (கி மு 4500) ஆண்டுகளுக்கு முன்பு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தி தென் மெசப்பொடேமியாவில் உணவு உற்பத்தி தொடங்கியதால் அங்கு குடியிருப்புக்கள் உருவாகின. ஆதலினால் இப்பகுதியே ஆதி நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.அதற்கு அடுத்த சில நூற்றாட்டு காலத்திலேயே சிந்துவெளி நாகரிகமும் (கி மு 4000)தொடங்கிவிட்டது. இங்கு பல மாற்றங்களின்விளைவாக நகரங்கள் மட்டும் உருவாகவில்லை மொஹென்சதாரோவில் சம்பிரதாய பூர்வமாக குளிக்கும் இடங்களும் அமைக்கப் பட்டது. சிந்துவெளி நாகரிகம் தொடங்கிய காலப்பகுதியை அண்மித்து எகிப்திய நாகரிகமும் அதனைத் தொடர்ந்து சீனாவில் சாங் நாகரிகமும் தொடங்கியது. இவற்றைவிட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் இன்கா, மாயா போன்ற நாகரிகங்களும் தொடங்கி விட்டன.
மேசப்பொட்டேமிய, எகிப்திய, சாங் (சீன) நாகரிகங்கள் பற்றிய பதிவு நீண்ட காலமாக உள்ளது. சிந்துவெளி பற்றிய பதிவுகள் அண்மைய காலத்தவை. 1856ல் கராச்சி லாகூர் புகையிரதப் பாதை அமைக்கப் பட்டது. அந்தப் பாதையின் அடித் தளத்திற்கு போடத் தேவையான செங்கற்கள் அப்பாதையில், இந்து நதியின் கிளைகளில் ஒன்றான ரவியின் கரைகளில் கரப்பான் என்னும் இடத்தில் தாராளமாகக் கிடைத்தன. பழமை மிக்க கற்களாக அவற்றை அப்போது வியந்தார்களே அன்றி அப்பணியின் நிறைவேற்றாளர்களாகப் பணி புரிந்த எந்த ஆங்கிலேயரினது மூளையிலும் தாங்கள் பழமை மிக்க ஒரு நாகரிகத்தின் தடயங்களை அழிக்கின்றோம் என்ற ஐயம் உடனடியாக எழவில்லை. அதன்பின் 1921ல் இந்து நதியின் பள்ளத்தாக்கில் உள்ள மொகின்சதாரோ என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளும் அதைத் தொடர்ந்து கரப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பல அரிய தடயங்களை அளித்தன. அவற்றின் பெறுபேறுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்புடன் திகழ்ந்து அழிந்த நாகரிகம் ஒன்று அங்கு இருந்ததற்கு தேவையான தடயங்களை கொடுத்துள்ளது.

1921 க்கு பின்புதான் உலகுக்கு அறிமுகமான திராவிட நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் ஏன் அழிந்தது ? அந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? அவர்கள் எந்த எழுத்து வடிவங்களை உபயோகித்தார்கள். தொடர்எழுத்துக்களாக அவை இல்லாவிட்டாலும் ஆயிரக் கணக்கான முத்திரை வடிவங்களாக உள்ளன. அந்த சீல்களில் காணப்படும் உருவங்களுக்கு அர்த்தம் கண்டு பிடிக்கப் படாததால் எந்தக் கேள்விக்குமே சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. சில ஊகங்களை மட்டும் வெளியிடுகிறார்கள். எடுத்துக்காட்டிற்கு தமிழில் நட்சத்திரங்களை விண்மீன்கள் என்றுதானே அழைக்கின்றோம். இந்த முத்திரைகளில் 6 மீன் குறிகள் காணப்படுவதை ஆறாம் மீன் என்று அழைக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கும் அடையாளம் என்று ஊகத்தின் அடிப்படையில் கூறுகிறார்கள். ஆனால் அங்கு பேசப் பட்ட மொழிஒரு திராவிட மொழி என்று துணிவுடன் அனைவரும் கூறுகிறார்கள். அதற்கு இன்னுமொரு உறுதியான ஆதாரமும் உண்டு. ஆரியரால் வேதங்களில் பெரிதாகக் கூறப்படும் குதிரைகள்பற்றிய தடயம் எதுவுமே அங்கு காணப்படவில்லை. பிற்காலத்தில் அவர்களால் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு மிருகம்தான் இந்தக் குதிரை.

நன்கு திட்மிட்டு அமைக்கப்பட்ட வீதி ஒழுங்குகளும் அதற்கேற்ப அமைக்கப்பட்ட நீர் வடிகால் அமைப்புக்களும், அங்கு வாழ்ந்த மக்கள் நகர நிர்மாண ஆற்றல் கொண்டவர்கள் என்பதற்கு சான்று பகிர்கின்றது. ஆனாலும் அங்கு அரண்மனைகளோ கோயில்களோ நினைவுசின்னங்களோ அரசர் ஆட்சி நடந்ததற்கு ஆதாரமாக இல்லையாம். சுத்தம் ஒழுங்கு பேணப்பட்டதற்கான தடயம் உண்டு. கட்டுப்பாட்டுடன் வாத்தகம் நடந்ததற்கு அதாரமாக படிக்கல் சீல் ஆகியவை காணப்படுகின்றன. அங்கு செல்வம்கொளித்ததற்கு சான்றாக தந்தம், பவுண், செங்கல் கட்டிட அமைப்புக்கள் காணப்படுகின்றன. பெரியதோர் தானியக் களஞ்சியக் கட்டிடம் கூட அடையாளம் காணப்பட்டுள்ளது.

படத்தில் காணப்படும் பொதுக் குளியல் இடம்மட்டுமல்ல நகரில் பரவலாக கிணறுகளும் வீடுகளில் குளியல் இடமும் தகுந்த கழிவு நீர்அமைப்புடன் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆய்வாளர்களை கவருவது அங்குகிடைத்த கல்லில் செதுக்கப்பட்ட வடிவங்கள்.நடனம் ஆடும் ஒரு பெண்ணின் வெண்கலச்சிலை முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதை மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இந்த நகரம் யுனெஸ்கோவால் அரும்பெரும்செல்வங்கள் பட்டியலுள் அடக்கப் பட்டுள்ளதுடன் அதன் பாதுகாப்பிற்கு கணிசமான நிதியையும் அது அளிக்கிறது. 2014 ல் இங்கு விழா ஒன்றுநடாத்த எண்ணினார்கள். புராதன சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அங்கு நீங்கள் ஒரு ஆணிகூட அடிக்க முடியாது என தொல் பொருள்திணைக்களத்தினர் எச்சரித்து அந்த ஒழுங்கை இரத்துச் செய்ய வைத்தார்கள்.

ஆதி நாகரிகங்கள் பற்றிய தகவல் இதனுடன் நிற்கவில்லை. தரையில் இருந்து தடயம் எதுவும்புதிதாகக் கிடைக்காவிடினும் கடலில் இருந்துகிடைக்கின்றது. கடலில் இருந்து முதலில் கிடைத்த தடயம் கடலுள் மூழ்கிய கண்ணனின் துவாரகா நகரம். இது தற்போதைய குஜராத்தின் துவராகா நகரின் கடற்கரைக்கு அண்மையில் நீருள் காணப்படுகிறது. ஆய்வுகள் நீருக்கடியில் நிகழ்த்தப் படுவதால் முழுமையான தகவல்கிடைக்க கூடுதல் காலம் தேவைப்படும். ஐயாயிரம் அண்டுகளுக்கு முன்பு, மகாபாரதக் கதையின் இன்னொரு கதா பாத்திரமான அர்ச்சுனன்அங்கு நிற்கும்போது இந்த நகரம் மூழ்கியதாகக் கதை கூறுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கதையில் கூறப்பட்ட நிகழ்வுக்குஆதாரமாகக் கடலுக்கடியில் இருக்கும் இந்த நகரம் கண்டுபிடிக்கப் பட்டது வியப்பைத் தரும் செய்திதான். சிலவேளை நடந்த சம்பவத்தை வைத்து மகாபாரதம் எழுதப்பட்டிருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை. எது எப்படியோ முழுமையான தகவல் வந்த பின் இதையே நாகரிகத்தின் தொட்டில் என்று அறிவிக்கும் நிலைகூட ஏற்படலாம்.

அடுத்த தடயம் பற்றிப் பேசுமுன் லெமோரியாக் கண்டம் பற்றிய ஒரு கோட்பாடு உண்டு. அதுபற்றி சிறிது பார்ப்போம். 1864 ல் ஒரு ஆய்வாளர் மடகஸ்கார் தீவில் கிடைத்த ஒரு ஒரு பாலூட்டியின் உயிர்ச்சுவடு ஆசியாவில் கிடைத்துஆபிரிக்காவில் கிடைக்காது போனதும் அதைஅடிப்படையாக வைத்து லெமோரியாக் கண்டம்என்று ஒன்று இருந்து அழிந்திருக்கலாம் என்றஒரு கோட்பாட்டை முன் வைத்தார். புவியோட்டுத் தட்டுக்களின் அசைவு பற்றி போதிய தகவல்குன்றிய அந்நாளில் அவர் கோட்பாட்டை எதிர்க்க வழி இல்லாமல் போய் விட்டது. இன்று புவியோட்டுத் தட்டுக்களின் அசைவு பற்றிய மேலதிகத் தகவல் கைவசம் உள்ளதால் லெமோரியாக் கண்டக் கோட்பாட்டை அறிவுலகம் தூக்கி எறிந்து விட்டது. தூக்கி எறியப்பட்ட கோட்பாட்டை கவ்விப் பிடித்துக்கொண்டு எம்மில் பலர் அப்படி ஒரு கண்டம் இருந்ததாக நம்புவதுடன் அது தமிழ் கண்டம் என்றும்கூறுகிறார்கள். முதலில் நாம் தூக்கி எறிய வேண்டியது லெமோரியாக் கண்டம் பற்றிய பேச்சை.காரணம் கிடைத்த தடயம் தமிழ்நாட்டில் என்பதால் லெமோரியாக் கண்டக் கோட்பாட்டாளர்கள் மேலும் குழப்பப் பார்ப்பார்கள்.

இப்போ கிடைத்த புதிய தடயம், 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நாகபட்டினத்தின் பூம்புகார் கரையை அண்டி 20 அடிக்கு கீழேநீரில் மூழ்கிய நிÛலில் காணப்பட்ட ஒரு நகரம்பற்றியது. இந்திய கடல் நீரியல் திணைக்களமுமம், தொல்பொருள் ஆய்வு மையமும் சேர்ந்து நடாத்திய ஆய்வுப் பயணத்தில் இதைக்கண்டார்கள். இது கண்டு பிடிக்கப் பட்டதும் இந்த நகரம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய நகரமாக இருக்கவேண்டுமென்று அறிவித்தார்கள். அதிலிருந்த நாகரிகமே நாகரிகத்தின் தொட்டிலாக இருக்க முடியும் என்றும்அறிக்கை விட்டார்கள்.
ஆனால் 12 ஆண்டுகள் கழிந்தும் இது தொடர்பான அறிக்கை எதையுமே காணோம். அவர்கள் நம்பிக்கையுடன் அறிக்கை விட்டார்களே இதுதான் நாகரிகத்தின் தொட்டில் என்று. இப்போ மௌனமாக இருப்பது தான் மர்மமாக உள்ளது.