மேற்கின் ஒழுங்கிற்குள் சிறிலங்கா : பத்து வருட வேலைத்திட்டம் நிறைவுக்கு வருகிறது

98

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று இன்று இரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சர் பதவியை ஏற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி இராஜபக்சவினால் ஆட்சியமைக்க முடியாமற் போனமை விருப்பு வாக்களிப்பில் முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தோல்வி எனத் தேர்தல்முடிவுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக அலசப்படுகின்றன. 2005ம் ஆண்டு நொவெம்பர் பதினேழாம் திகதி நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த இரணில் விக்கிரமசிங்க பத்து வருடம் கழித்து மீண்டும் முன்னரைவிடப் பலம்பொருந்திய பிரதமர் பதவியை கைப்பற்றியிருக்கிறார். கழிந்துபோன பத்து வருடங்களில் சிறிலங்காவை ஆட்சிசெய்த மகிந்தஇராஜபக்சவின் அரசாங்கம் இரணிலுக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் மட்டுமல்லாது மேற்குலகத்திற்கும் உவப்பானதாக இருக்கவில்லை. ஆதலால்இரணிலின் வெற்றியில் மகிழ்ச்சியடையும் தரப்புகளில் ஒன்றாக மேற்குலகம் குறிப்பாக ஜக்கிய அமெரிக்கா உள்ளது. இத்தேர்தலில் அதிகூடியவிருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமராகியிருக்கிற இரணிலின் வெற்றியென்பது தனித்து அவரினதோ அல்லது ஜக்கிய தேசியக் கட்சியின் முயற்சியினாலே ஏற்பட்டதொன்றல்ல என்பதனையும்இதன் பின்னணியில் உலக வல்லரசு ஒன்றுக்கும்வல்லரசாக உருவெடுத்துவரும் அப்பிராந்தியநாடொன்றுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியிருந்தது என்பதனையும் பலரும் கவனத்தில் எடுக்கத் தவறிவிடுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியதற்கு மறுதினமான ஒகஸ்ட் 19ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்திக் கட்டுரையொன்றில்: புஜனாதிபதியாக இராஜபக்ச சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். இராஜபக்ச அரசாங்கம் பொருளாதாரம் மற்றும்இராணுவ விடயங்களில் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கம் இந்தியாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவும் எச்சரிக்கைவிடுப்பதாக அமைந்திருந்தது. இவ்விருநாடுகளும் வங்காள விரிகுடாவிற்கும் அரபிக்கடலுக்கும் இடையிலான கடற்பாதையில் மூலோபாய முக்கியத்துவான இடத்தில் அமைந்திருக்கும் நாடான சிறிலங்கா சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதை விரும்பவில்லை. சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் தற்காலிக ஓய்வை ஏற்படுத்தி சீனாவுடனான உறவுகளை மீளாய்வு செய்யவுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்த்து. ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவுகள் மேம்பட்டுவருவதனை அவதானிக்கையில் இப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளவை சரியான அனுமானம் என்ற முடிவுக்கு வரமுடியும்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட இரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவதை விரும்பிய மேற்குலகம் அத்தேர்தலில் தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகள் இரணிலுக்குச் செல்லும் என எதிர்பார்த்தது. கடந்த தேர்தலில் எவ்வாறு சிறிசேன தமிழ் முஸ்லீம் வாக்குகளால்வெற்றிபெற்றாரோ அது போன்ற வெற்றியைரணிலுக்கு இவ்வாக்குள் பெற்றுக் கொடுக்கும்என்ற நம்பிக்கை பலருக்குமிருந்தது. ஆனால்இவ்விடயத்தில் இரணிலுக்கு உதவுவதற்கு விடுதலைப்புலிகள் மறுத்தனர். 2001 இல் இரணில் பிரதமராவதற்கு மறைமுகமாக உதவிய விடுதலைப்புலிகள் 2005இல் தேர்தலைப் புறக்கணிக்குமாறுதமிழ் மக்களைக் கோரினர். மேற்குலகத்துடன்இணைந்து ஒரு சர்வதேச வலைப்பின்னலுக்குள்விடுதலைப்புலிகளை விழுத்த இரணில் எடுத்தமுயற்சிகளாலேயே அவரை ஆதரிப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருக்கவில்லை. மாறாகமேற்குலகத்தின் ஒழுங்கிற்குள் நிற்காது புதிதாகஉருவெடுத்துவரும் பிராந்திய சக்திகளின் ஒழுங்கிற்குள் செல்ல முனைந்த மகிந்த இராஜபக்சவெற்றி பெற்றால் மேற்குலகத்துடன் அவர் முரண்பட்டுக்கொள்வார் அதன்மூலம் சர்வதேச வலைப்பின்னல் நெருக்கடியிலிருந்து வெளிவரக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் நம்பியிருக்கக் கூடும். விடுதலைப்புலிகளின் செயற்பாடு மேற்கின் நிகழ்ச்சித்திட்டத்தைக் குழப்பியது. இவ்விடயத்தில் மேற்குலகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக ஏற்கனவே அச்சுறுத்தியபடி உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இறுதியுத்தத்திற்கு மறைமுகமான உதவிகளை வழங்கி விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மேற்குலக நாடுகள் மகிந்தஅரசாங்கத்திற்கு உதவின. இனவழிப்பு யுத்தத்தில் விடுதலைப்புலிகளும் பொதுமக்களும் அழிக்கப்பட்டபோது சர்வதேச நாடுகள் அவற்றைகாணாதிருந்தமைக்கும் இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. தமிழினப்படுகொலையில் மேற்குலகின் பங்கு பற்றிய மேலதிக விபரங்களை ஜெர்மனி பிறீமனில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கையில் காணலாம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்தேறி தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்த மன்னராக பெரும்பான்மை சிங்கள மக்களினால் பார்க்கப்பட்ட மகிந்த இராஜபக்ச 2010ம் ஆண்டில் நடந்தஜனாதிபதித் தேர்தலில் வெற்றியிட்டினார். அவரதுஇரண்டாவது ஆட்சிக்காலத்தில் தோற்கடிக்கப்படமுடியாத ஒரு அரசதலைவராக அவர் உருவெடுத்திருந்தார். இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வரை எந்தத் தேர்தலிலும் மகிந்த இராஜபக்சவின் பொதுஜன சுதந்திர முன்னணி தோல்வியடையவில்லை. மறுபுறத்தில் ஜக்கியதேசியக்கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து சென்றது. அற்றகுளத்து அன்றில் பறவைகளைப்போல் அக்கட்சியிலிருந்த முக்கியஸ்தர்கள் எதிரணிக்கு தாவிச் செல்லும் நிலையே காணப்பட்டது. கட்சிக்குள்ளேயே எதிர்ப்பினை எதிர்நோக்கி வந்த இரணிலினால் ஜக்கிய தேசியக்கட்சியை பின்னர் நடந்த எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற வைக்க முடியவில்லை. ஜந்து வருடம் கழித்துஇரணில் விக்கிரமசிங்க பிரதமராவார் என ஜக்கியதேசியக்கட்சியின் தீவிர விசுவாசிகள் கூட கற்பனைசெய்திருக்காத நிலையிலேயே இரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை அமைந்திருக்கிறது.

கடந்துபோன பத்துவருடங்கள் இலங்கைத்தீவில் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களையே எழுதி வைத்திருக்கிறது. தமிழ் மக்களின்விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டு நூற்றிநாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.சிறிலங்காவின் அரச தலைவர்களும் இராணுவத்தினரும் போர்க்குற்ற விசாரணையிட்டு அச்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீனாவின் உதவியுடனானஉட்கட்டுமான மேம்பாட்டு நடவடிக்கைகள் தவிர இலங்கைத் தீவின் மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விடயங்கள் என எதுவும் நடந்தேறவில்லை.ஆனால் மேற்குலகமோ தனது நிகழ்ச்சித் திட்டத்தை மெதுவாக நகர்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.

தமிழ்த் தரப்பின் பங்கு

சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தில் தமிழ்த்தரப்பின் வகிபாகம் குறைத்து மதிப்பிடக் கூடியதொன்றல்ல. இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட தமிழ்மக்களுக்கு அவ்வாட்சியுடன் முரண்பட்ட மேற்குலகம்ஆபத்பாந்தவனாகத் தோன்றியதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை. அதனால் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டதை அழிப்பதற்கு உதவிய மேற்குலகத்தை நம்பி தமது அரசியற் செயற்திட்டங்களை தமிழ் அமைப்புகள் வகுத்தன. ஏறக்குறைய எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஜ.நா. மனிதவுரிமைச் சபையூடாகவே தமிழ் மக்களுக்கு நீடித்து நிற்க்க் கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிச் செயற்பட்டுவந்தன. அண்மைக்காலத்தில் ஜ.நா. மனிதவுரிமைச்சபை கூட்டத்தொடர்கள் நடைபெறும் காலத்தில் ஜெனிவாவில் நிற்பதே ஒரு அரசியற் செயற்பாடு என்றளவில் நிலமையிருந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளின்போது ஜநா மனிதவுரமைச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தமது முயற்சியினாலேயே நடைபெற்றதாக சுமந்திரன் கூறிவந்தமை தமிழ் வாக்காளர்களை கவர்ந்திருக்கக்கூடும்.

தமது நிகழ்ச்சித்திட்டதினை ஏற்றுச் செயற்படக்கூடிய தமிழ்த் தலைமை ஒன்றை தமிழ்மக்களின் அங்கீகாரத்துடன் உருவாக்குவதில் மேற்குலகமும் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன என்பதனையே கூட்டமைப்பின் வெற்றி கட்டியம் கூறிநிற்கிறது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்தகாலத்திலேயே அதற்கான சமிக்ஞைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடமிருந்து குறிப்பாக சம்பந்தனிடமிருந்து சென்றனஎன்பதும் விடுதலைப்புலிகளை அழிக்கும் முயற்சிக்கு மேற்குலகம் உதவியதற்கு இதுவும் ஒருகாரணமாக இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

ஆட்சிமாற்றம் முற்றுப்பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் மேற்குலகத்தின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்ற கேள்வி அரசியலில் ஈடுபாடுடைய தமிழ்மக்களிடம் எழுவது தவிர்க்க முடியாதது. இவ்விடத்தில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கொழும்பில் வசிக்கும் சட்டத்தரணி சி.வி. விவேகானந்தன் அவர்கள் தனது கிஹஷக்ஸச்ச்ஙி இல் இட்ட நிலைத்தகவல் ஒன்றில் குறிப்பிட்டவை எதிர்கால அரசியல்நிலவரத்தைப் பற்றிய எதிர்வுகூறலாக அமைந்துள்ளது.

புசமஷ்டியோ உள்ளக சுயநிர்ணய உரிமையோ வட கிழக்கு இணைப்போ எதுவும் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் நூறு ரூபா கேட்டால் நல்ல குணம் படைத்த ஜனாதிபதி 25 தொடக்கம் 40 ரூபா வரைக்கும் கொடுக்க முன் வருவார். மற்றவர்கள் எதிர்ப்பார்கள். முன்னாள் ஜனாதிபதி எதிர்ப்பதில் முன் நிற்பார். எதிர்ப்பலை கண்டு கை விட்டு விடுவார் ஜனாதிபதி.

சர்வதேசம் (இந்தியாவும் கூட) கூறும் `இப்போதைக்கு ஏற்றுகொள்ளுங்கள் பின்பு பார்ப்போம்’ என்று. கூட்டமைப்பு தலை ஆட்டலாம். சர்வதேச நாடுகள் கேட்பதை இலங்கை அரசுகொடுக்க முன் வந்தால் சர்வதேசம் தமிழருக்கு`பின்பு பார்ப்போம்’ என ஏமாற்ற தொடங்கும்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகையதொரு சூழலில் தமிழ் அரசியற் செயற்பாடுகள் ஒரு முட்டுச்சந்தியை வந்தடைந்திருக்கிறது என்பதை கூட்டமைப்பிற்கு வாக்களித்து வெற்றியடையச் செய்த மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை.