ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத் தொடரில் அமெரிக்கா, பிரித்தானியாஆகிய இருநாடுகளும் கூட்டாகக் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் வரைபு ஒன்றின் நகல் இவ்வாரம் கசியவிடப்பட்டது. இத்தீர்மான வரைபின் பங்காளிகளாக மொன்ரனீக்ரோ, மசடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகளும் உள்ளதாக இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது பெரும்பாலும் முன்னைய இருநாடுகளின் கூட்டுத் தீர்மானமாக அமைந்திருக்கிறது என உறுதியாகக் கூறமுடியும். கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் இத்தீர்மானம் கொண்டுவரப்படும்போது இவ்வரைபில் காணப்படும் வார்த்தைப் பிரயோகங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டலாம். ஆனால் அதன் அடிப்படை சாராம்சம் பெரும்பாலும் இவ்வரைபை ஒட்டியதாகவே அமையும் எனஎதிர்பார்க்க முடியும்.
`ஜெனிவா ஒரு போர்க்களம்’ எனவும் இம்முறை அங்கு `சர்வதேச சுயாதீன விசாரணை’ யைக் கோரும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பாரப்பிலிருந்தவர்களுக்கு மேற்படி வரைபு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை. பிரதமர் டேவிட் கம்ரன் கொடுத்த மார்ச் மாதக் காலக்கெடு தமிழ் மக்களுக்கு இவ்வாறன நம்பிக்கையை வழங்கியிருந்தது. இவ்வரைபு வெளியானதன் பின்னர், கனேடிய தமிழ் கொங்கிரஸ், பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழ்அமைப்புகள் இத்தீர்மானம் பற்றிய தமது அதிருப்தியை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் இவ்வரைபினை வரவேற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா இத்தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என அங்கு Lobby செய்து வருகிறார். இது தமிழத்தேசியக் கூட்மைப்பின் தலைமையானது அதிகாரமையங்களின் எடுபிடியாகச் செயற்பட்டுவருவதனை மறுபடி ஒருமுறை நிருபிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கைத் தீவு விடயத்தில் மேற்குநாடுகள் காட்டும் அதி மெத்தனம், தமிழ் மக்களை மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத் தரப்பினரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் மனிதவுரிமைச் சபையின்கூட்டத்தொடர் காலத்தில் வெளித்தரப்புகளிலிருந்து வரும் எதிர்ப்பினை மூலதனமாக வைத்து தனது வாக்கு வங்கியினை நிரப்ப மகிந்த அரசுதிட்டமிட்டிருந்தது. இக்கூட்டத்தொடரை வாய்ப்பாகக் கருதியே மேற்கு மற்றும் தெற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை மார்ச் 29ம்திகதி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரவிக்கின்றன. மேற்குலகம் மகிந்த இராஜபக்சவை மின்சாரக்கதிரையில் வைத்து தண்டிக்க முயல்கிறது என்ற எதுவித உண்மையுமற்ற பரப்புரை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறப் போதுமானது என சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது.
சிங்கள வாக்காளர்களும் இந்த எதிர்பார்ப்பினை பொய்பிக்கப் போவதில்லை என்பதனை கடந்தகால வரலாறு வெளிப்படுத்தி நிற்கிறது. ஆட்சிமாற்றத்தினை விரும்பும் இவ்விடயத்தைக் கவனத்திற் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தினை அரவணைக்கும் வகையில் இத் தீர்மானத்தை வரைந்துள்ளது மேற்குலகம். மேற்படி தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினைவிழுத்தும் பொறியாக அமைந்துவிடுமோ என சிங்களத் தேசியவாதிகளே ஐயப்படுமளவிற்கு தீர்மானம் சிறிலங்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இனி, மேற்படி தீர்மான வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விடயங்களைப் பார்ப்போம்.இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனிதவுரிமைகள் போன்ற விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது குறிக்கோள் என வரைபில் கூறப்பட்டுள்து. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.ஏனெனில் போருக்குப் பின்னரான காலத்தில் மேற்குலகின் எதிர்பார்ப்பு இவ்வாறு அமைந்துள்ளதனை, மேற்குலக இராஜதந்திரிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். சர்வதேசமுரண்பாடுகளுக்கான குழு (International Crisis Group) போன்ற சர்வதேச சிந்தனை மையங்களும் இக்குறிக்கோளை ஒட்டியே கருத்துருவாக்கத்தை உருவாக்கி வருவதனை அவை வெளியிட்டுவரும் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.
“நாடுகள் பயங்கரவாதத்தினை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் அந்நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள், சர்வதேச மனிதவுரிமைகள் சட்டம், அகதிகள் தொடர்பிலான சர்வதேசச் சட்டம்,குடிமக்களின் அடிப்படை மனிதவுரிமைகள் ஆகியவற்றை பின்பற்றியதாக அமையவேண்டும் என்பதனை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது” எனத் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராகச் சித்தரிப்பதுடன், அங்கு போர்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதனைக் குறிப்பதாக அமைந்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.
தமிழ் இனம் பற்றிய எந்தவொரு குறிப்பும் இத்தீர்மானத்தில் காணப்படவில்லை என்பது தற்செயலானது என ஒதுக்கிவிடமுடியாது. வடமாகாண சபைக்கும், அதன் முதலமைச்சருக்கும் பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் ஆட்சி செய்வதற்கான வசதியை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுப்பததாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. வடக்கில் வாழும்மக்களுக்கு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதனையே மேற்குலகம் அரசியல் தீர்வாக முன்வைத்துள்ளமை தெரிகிறது. கிழக்கு மாகாணசபை பற்றி எதுவும் பேசப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.
சுருக்கமாகக் கூறுவதானால் போருக்கு பிந்தியகாலத்தில் முரண்பாடுகளைக் களைந்து, மீண்டும்வன்முறை தோன்றா வண்ணம் முரண்பட்டவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிலைமாற்றுகால நீதியின் (Transitional Justice) அடிப்படையிலேயே மேற்படி தீர்மானம் அமைந்திருக்கிறது. இவ்விடயத்தில் தம்முடன் ஒத்துழைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் ஒருவருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தங்களுடன் ஒத்துழைக்க சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிறிதொரு விதமாகக் கூறுவதானால்,மேற்கின் பொருளாதார கேந்திர நலன்களையொட்டிய மூலோபாயத்துடன் ஒத்துழைத்து தமதுஒழுங்குக்குள் சிறிலங்கா வரவேண்டும் என்பதனையே மேற்குலகம் எதிர்பார்ப்பது தெரிகிறது.
அமெரிக்க – பிரித்தானிய தீர்மான வரைபினைபடித்துவிட்டு, ஒப்பாரி வைக்கிற தமிழ் அமைப்புகளும் மற்றவர்களும், கடந்த சில வருடங்களாகவே, மேற்கின் மேற்படி மூலோபாயத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் புலம்பெயர் தோழமை அமைப்புகளும் முழுவதுமாக ஒத்துழைத்து வருவதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிடுகின்றனர். அண்மைக்காலமாக கூட்டமைப்பும்அதன் புலம்பெயர் எச்சங்களும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், உண்மையும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, நிலைமாற்றுகாலநீதி போன்ற விடயங்களை உச்சரிக்க ஆரம்பித்துள்ளமை தன்னிச்சையான முடிவு இல்லை என்பதனை நாம் உறுதியாகக் கூறமுடியும்.
மேற்குலகம் எதிர்பார்ப்பது போன்ற நிகழ்வுகள் இலங்கைத் தீவில் நடைபெற ஆரம்பித்துள்ளதான தோற்றப்பாட்டடை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுவருவதனையிட்டும், இம்முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தன்னாலான உதவியினை நல்கி வருவதனையிட்டும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் பாராமுகமாக இருந்துவிட முடியாது. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
அறுபதுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில், அதன் விடுதியில் தங்கியிருந்து படித்த திரு. ஐயன் சிறிகரன் என்பவர் இப்போது ஜேர்மனி ஹம்பேர்க் நகரத்தின் செனட்டர்களில் ஒருவராக உள்ளார். திரு. சிறிகரன் தனது செலவில் புதிய விடுதிக்கான கட்டடத்தைக் கட்டியிருந்தார். கடந்த சனியன்று (மார்ச் முதலாம் திகதி) நடைபெற்ற இக்கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, வடமாகாணசபையின் ஆளுனர் சந்திரசிறி, முதல்வர் விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தாஆகியோர் கலந்து கொண்டு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர். ஹாட்லிக்கல்லூரி ஒரு தேசியப்பாடசாலை என்பதனால் அது மாகாண கல்வி அமைச்சின் அதிகாரத்தில் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது என்பதனைகவனத்தில எடுத்தால் மேற்படி நிகழ்ச்சி வெறுமனேபரப்புரைக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றுஎன்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

கல்வி மேம்பாட்டுக்காக புலம்பெயர் தமிழரின் நிதியுதவியில் உருவான ஒரு செயற்திட்டத்திற்கு, சிறிலங்கா அரசாங்கமும், வடமாகாணசபையும் ஆதரவு வழங்குகிறது என்ற தகவல் எத்தகைய செய்தியை வெளிப்படுத்தி நிற்கிறது? தமிழ் மக்கள்இனவழிப்பு உள்ளாகிறார்கள் என்பதனை வெளிப்படுத்துகிறதா? அல்லது இன நல்லிணக்கத்திற்குவாய்ப்புகள் இருக்கின்றன என்பதனை வெளிப்படுத்துகிறதா? இக்கேள்விக்கான விடைகளை இக்கட்டுரையை படிப்பவர்களிடமே விட்டுவிடுகிறேன்.
நடைமுறையில் மாகாணசபைக்குரிய குறைந்தபட்ச அதிகாரங்களையே பகிர மறுக்கும் அரசாங்கத்துடன் அடிபணிவு அரசியல் நடாத்திக் கொண்டு, வாக்கு வேட்டைக்காக இனவழிப்பு சர்வதேச விசாரணை எனக்கூறிவரும் சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்களை தமிழ் மக்கள் தூக்கியெறியும் காலம் வரும் வரை சிறிலங்காவிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு வழங்கப்படும் காலநீட்சியில் தமிழினம் காணாமல் போய்விடும் மிகப்பெரிய அபாயம் உள்ளதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.