இந்தியாவின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் மிக அவசியமானதும் அவசரமானதுமாகும். உட்கட்டுமான அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடு ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. இந்திய உட்கட்டுமானங்களில் முதலீடு செய்த பல உள்நாட்டுப் பெரு நிறுவனங்கள் கடன் பளுவில் அவலப்படுகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமை, சிவப்பு நாடா, ஊழல், நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள இழுபறி போன்றவை இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு மட்டுமல்ல மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கே தடையாக இருக்கின்றது.
மக்கள் தொகையில் அதிக அளவு இளையோரைக் கொண்ட இந்தியாவில் அடுத்தபத்து ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றிற்கு பத்து இலட்சம் இளையோர் வேலை வேண்டி வந்துகொண்டிருக்கப் போகின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்காவிடில் பெரும் சமூக அரசியல் பிரச்சனை இந்தியாவில் வெடிக்கும். அதைத் தடுக்கவும் இவர்களைப் பாவித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் பெருமளவு முதலீடும் உரிய தொழில்நுட்பமும் மிக அவசியமானதாக இருக்கின்றன. இவர்களைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்தியா 2030-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிவிடும்.
வெளிநாடு வாழ் இந்தியரான மோடி
நரேந்திர மோடி தலைமை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆகிய பின்னர் 30 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரையும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்னும்அளவிற்கு அவரது வெளிநாட்டுப் பயணங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்தியாவிற்கு எப்படியாவது வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வந்துவிட வேண்டும் என தான் ஆலாய்ப்பறப்பதாகச் சொல்கின்றார் மோடி. நவம்பர் 12-ம் திகதி பிரித்தானியாவில் வந்திறங்கிய மோடி மிக நெருக்கமான ஒரு அட்டவணையின் கீழ் செயற்பட்டார். அரசியுடன் விருந்து, இரு பிரப்புக்கள் சபையும் மக்களவையும் இணைந்த பாராளமன்றக் கூட்டத்தில் உரை என இந்திய ஏழை மக்களுக்கு `அவசியமானவற்றை’ மோடி செய்தார்.
மோடியின் பயணங்களும் வாக்கு வேட்டை அரசியலும்
`சீன்’ போடுவதிலும் `பில்ம்’ காட்டுவதிலும் வல்லவரான மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது உள்நாட்டில் தனது விம்பத்தை மேம்படுத்தத் தவறுவதில்லை. அமெரிக்கப் பயணத்தின் போது நியூயோர்க் நகரின்பிரபல மடிசன் சதுக்க அரங்கில் பெரும் கூட்டத்தை ஒழுங்கு செய்து அதில் மோடிக்கு அமோக வரவேற்ப்பு வழங்கப்பட்டது. அதே போல் வெம்பிளி அரங்கத்திலும் அமோக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு மக்களைப் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து இறக்குவது போல் நியூயோர்க்கிலும் இலண்டனிலும் செய்யப்பட்டது. வெம்பிளி அரங்கத்தைஇலவசமாகப் போய்ப் பார்ப்பதற்கு கிடைத்தவாய்ப்பைப் பலரும் தவற விடவில்லை. 17 இலட்சம் இந்தியர்கள் வாழும் பிரித்தானியாவில் அறுபதினாயிரம் இந்தியர்கள் வெம்பிளியில் கூடியது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. ஆனாலும்ஒரு வெளிநாட்டுத் தலைவரை வர வேற்க அதிகஅளவு மக்கள் திரண்டது மோடிக்குத்தான்.
லைக்கா போன்ற வர்த்தக நிறுவனங்கள்
லைக்கா என்னும் கைப்பேசி தொடர்பாடல் நிறுவனம் வெம்பிளி அரங்க நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர்களில் முதன்மையானதாகும்.தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ் மோடியின் உத்தியோக பூர்வ வரவேற்புக் குழுவில் ஒருவராகும். தொழிற்கட்சிக்கான தமிழர்கள் எனச்சொல்லிக் கொள்வோர் மூலமாக கீத் வாஸின்தொடர்பும் வாஸ் மூலம் மோடியின் தொடர்பும் கைப்பேசி வர்த்தகத்தை விரிவு படுத்த உதவுமா? தொழிற்கட்சிக்கான தமிழர்கள் இப்படியா? தமிழருக்கான தொழிற் கட்சி?
சீன அதிபருக்கு குறையாமல் மோடிக்கு வரவேற்பு
பிரித்தானிய அரசைப் பொறுத்த வரை மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கொடுத்த வரவேற்பிற்குக் குறையாமல் கொடுக்கப் பட்டது. ஜி ஜின்பிங் மாலை போட்டு மரியாதை செலுத்த பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தில் மாவோ சே துங்கின் சிலை இல்லை.ஆனால் மோடி மரியாதை செலுத்த மகாத்மா காந்தியின் சிலை இருந்தது. ஆனால் பாவம் மோடி. மோடியின் கட்சியினர் இந்தியாவில் காந்தியைக் கொலை செய்த கோட்சேயிற்கு சிலை அமைத்து மரியாதை செய்கின்றார்கள்.
இந்தியாவிற்கு இழப்பீடு
ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இந்திய அமைச்சர் சசி தரூர்பிரித்தானியா குடியேற்ற ஆட்சி செய்தமைக்காக மூன்று ரில்லியன் டொலர்கள் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் நரேந்திர மோடி அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் வைக்கும் நிலையில் இல்லை. மாறாக இரு நாடுகளுக்கும்இடையில் இனிய உறவு இருப்பதாகவும் அதைமேலும் விரிவு படுத்த வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார் மோடி. பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் கடந்தஐந்து ஆண்டுகளில் மூன்று தடவைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் வளரவில்லை மாறாகக் குறைந்து செல்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை முப்பது பில்லியன் ஆக உயர்த்த வேண்டும் என இரு நாடுகளும் 2010-ம் ஆண்டுதிட்டமிட்டன. ஆனால் அது 2014-ம் ஆண்டு 14 பில்லியன்களாகவே இருந்தது. சீக்கியர்கள், தமிழர்கள், கஷ்மீரியர்கள், நேப்பாளியர், இஸ்லாமியர்கள், மதவாதத்தை எதிர்க்கும் இந்தியர்கள் எனப் பல தரப்பினரும் மோடிக்கு எதிராக இலண்டனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முக்கிய உடன் படிக்கைகள்
சீனாவுடன் 30 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கைகளைச் செய்தடேவிட் கமரூன் இந்தியாவுடன் 9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை மட்டுமே செய்தார். இந்த 9பில்லியனில் வொடாஃபோன் என்னும் தொலைபேசி நிறுவனம் இந்தியரூபாவில் வாங்கும் ஆவணங்கள் மட்டும் 1.3 பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. வொடாஃபோன் இந்தியாவில் இரண்டாவது பெரிய கைப்பேசித் தொடர்பாடல் நிறுவனமாகும்.இந்திய ரூபாவில் உள்ள கடன் முறிகளை இலண்டனில் விற்பனை செய்தற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆஅஉ நட்சூஞ்க்ஙுசூ இந்தியாவிற்கு இருபது பயிற்ச்சிப் போர் விமானங்களை விற்பதற்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. நிறைவேற்றப்படாமல் இழு பட்டுக்கொண்டிருக்கும் 2010-ம் ஆண்டு இந்தியாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்ட அணுவலு உடன்படிக்கையின் நிறைவேற்றத்தைத் துரிதப் படுத்துவதாகவும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.
Madame Tussauds இன் முதலாவது ஆசியக் கிளை புது டில்லியில் 2017-ம் ஆண்டு திறக்கப்படவிருக்கின்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக 50மில்லியன் டொலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படவிருக்கின்றது. இந்திய சினிமா இரசிகர்களுக்கு அது நல்லவாய்ப்பாக அமையும். இந்தியர்களின் மனப்பாங்கை சரியாகத் தான் புரிந்து வைத்துள்ளார்கள். Holland & Barret என்னும் மருந்து மற்றும் ஆரோக்கிய உணவு விற்பனை செய்யும் நிறுவனம் அப்பலோ மருத்துவ மனையுடன் இணைந்து இந்தியாவில் பல முதலீடுகளைச் செய்யவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு இந்தியாவெங்கும் 115 விற்பனை நிலையங்கள் திறக்கப்படவிருக்கின்றன. TVS என்னும் இந்திய நிறுவனம் பிரித்தானியாவில் 100 பேருக்கு வேலைவாய்ப்பளிகக் கூடிய முதலீட்டைச் செய்யும். TVS நிறுவனம் பிரித்தானியாவின் ஏஏ எனச் சுருக்கமாக அழைக்கபப்டும் Automobile Association உடன் இணைந்து மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் தெருவோர வாகன மீட்பு பணி செய்யும்நிறுவனங்களை உருவாக்க ஒத்துக்கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனமான Housing Development Finance Corporation (HDFC) இலண்டனில் கடன் முறிகளை விற்பனை செய்வதன் முலம் 750மில்லியன் டொலர்களைத் திரட்டவிருக்கின்றது. இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான Bharti Airtel Ltd இலண்டனில் கடன் முறிகளை விற்பன செய்வதன் மூலம் 500 மில்லியன் பிரித்தானியப் பவுண்களைத் திரட்ட விருக்கின்றது. பிரித்தானிய காப்புறுதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும்.State Bank of India (SBI) உடன் London Stock Exchange Group இணைந்து பிரித்தானிய மற்றும் இந்தியாவிற்கான பங்குச் சுட்டெண்ணை உருவாக்க விருக்கின்றன. இந்த முதலீடுகள் எத்தனை இந்தியர்களை ஏழ்மையில் இருந்து மீட்கும்?
Photo Courtsey : AFF/AFP/Gettyimages