யாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்?

1257

பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந்திருந்தது. இத்தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனத் தெளிவாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அமைத்திருந்த போதிலும், அதற்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிக்க யாழ்;, கொழும்பு தமிழ் ஊடகங்கள மறுத்து விட்டன. அதனால் இவ்விரு கட்சிகளுக்கிடையிலும் கொள்கை வேறுபாடுகள் இல்லை, பதவி ஆசையினால் பிரிந்திருக்கிறார்கள் என்ற கருத்தே பரவலாக நிலவியது.

பதின்மூன்றாம் திருத்தம், மாகாணசபைகள் போன்ற விடயங்களிலும் கூட்டமைப்பு தெளிவான கொள்கையினை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பினர் மாகாணசபைகளை அரசியல் தீர்வின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது அதனை முற்றிலும் நிராகரிக்கிறார்களா என்பதிலும் போதிய விளக்கமிருக்கவில்லை. இந்நிலையில, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசியத் தரப்பினரால் வெளியிடப்பட்டது.

ஆனால் அவ்வாறானதொரு ஆவணம் வெளியிடப்பட மாட்டாது என்ற கருத்து மேலோங்கியிருந்த நிலையில், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் செப்ரெம்பர் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கத்திற்காக இல்லாவிட்டாலும், தமது கொள்கை நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கமான ஆவணங்களாக வெளியிடப்பட்டிருப்பதனையிட்டு கூட்டமைப்பின் தலைமையை பாராட்டலாம். கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் இவ் ஆவணத்தைத் தயாரித்தாகத் தெரியவருகிறது. தமிழரசுக் கட்சியின் அறுபத்தி நான்கு வருட அரசியல் வரலாற்றில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைவதில் இதுபோன்ற சிக்கலான நிலமை இருந்திருக்க நியாயமில்லை என்பதனைக் கவனத்தில் எடுத்தால், மிகவும் சிக்கலான இப்பணியை அவர் திறம்பட செய்து முடித்திருக்கிறார் எனக் குறிப்பிட முடியும்.

இக்கட்டுரையைப்  படிப்பவர்களுக்கு, ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்கட்சிகள் தமது கொள்கை விளக்கத்தை வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். வழமையாக தேர்தல் விஞ்ஞாபனங்கள் வாக்காளர்களைக் கவர்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டவை. ஆதலால் தேர்தல்காலத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் உண்டு. மேலை நாடுகளில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், வாக்காளரகளை மட்டுமல்லாது பெரும் பல்தேசிய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நிதித்துறை நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெறும்வகையில் நிர்ணயிக்கபடுகின்றன. முன்பு எப்போதும் இல்லாதபடி, இன்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பலதரப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. வடமாகாண வாக்களர்களை மட்டுமல்லாமல், இந்தியா, அமெரிக்கா, மேற்குலக சிந்தனை மையங்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழ் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என பலரையும் கவனத்தில் எடுத்தே தமது கொள்கைத்திட்ட வரைபினை வெளியிட வேண்டியுள்ளது. மேற்குறித்த தரப்புகள் சில விடயங்களில் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்தை கொண்டுள்ளன என்பது இச்சிக்கலை மேலும் அதிகரிக்கிறது.

“சர்வதேசம் எங்கள் பக்கமிருக்கிறது”இ “சர்வதேச ஆதரவுடன் எமது அரசியல் அபிலாசைகளை அடைந்தே தீருவோம்”இ  “இப்பிரச்சினையில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டியது சர்வதேசத்தின் கடமை. அதனை அவர்கள் சரிவர நிறைவேற்றிக் கொள்வார்கள்” இவை வடக்கு தேர்தல் மேடைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்தவை. இவற்றை வைத்துப் பார்க்கையில் “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்றளவிற்கு மதப்பிரசாரகர்கள்போல் கூட்டமைப்பின் தலைவர்கள் சர்வதேசத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்கள் போல் தெரிகிறது. (இங்கு சர்வதேசம் என்பதனை அமெரிக்கா, இந்தியா என்று எடுத்துக் கொள்க) இத்தகைய பின்புலத்தில் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் அதன் சர்வதேச எஜமானர்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும், அதே சமயத்தில் தமிழ் வாக்காளர்களாலும், அவர்களின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய தரப்பினராலும் நிராகரிக்க முடியாததாக அமையவேண்டும்.

ஒரு தரப்பு அதிருப்தி கொள்கிற விடயத்தில், அது மற்றைய தரப்பிற்காக சேர்க்கப்பட்டதாக காரணங்காட்டி தப்பித்துக் கொள்ளும் வசதியிருக்கிறது. ஆனால் மூன்றாவது தரப்பான கொழும்பை மையப்படுத்திய (சிங்கள) தாராண்மைவாதிகளையும் திருப்பதிப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளிலிருந்தும், தமிழீழக் கோரிக்கையிலிருந்தும் விலகி கூட்டமைப்பு வெகு தூரம் வந்து விட்டது என்பதனை இந்த மூன்றாவது தரப்பு உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவேண்டும் என்பது கூட்டமைப்புக்கு மேற்குலகம் வழங்கும் அழுத்தங்களில் முதன்மையானது. தமது கோரிக்கைகளின் நியாயத்தை சிங்கள மக்களும் ஏற்கவேண்டும் என்று இதற்கு கூட்டமைப்பின் தலைவர்கள் வியாக்;கியானம் கொடுக்கிறார்கள்.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

1948 ஆண்டிலிருந்து ஆரம்பித்து இன்றைய அரசியல் நிலவரம் வரை ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்ற முக்கியம்வாய்ந்த அரசியல் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்;, தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள் வேண்டுமென்றே தவிர்க்ப்பட்டுள்ளன. ஒன்று 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், மற்றயது இத்தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்ட 1977 பொதுத் தேர்தல். இதிலிருந்து இத் தேர்தல் விஞ்ஞாபனம் எதனைச் சொல்ல வருகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, உடன்பாடு காணப்பட்டது எனக்கூறப்படும் சர்ச்சைக்குரிய ‘ஒஸ்லோ தீர்மானம்’ பற்றி மிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ‘ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’. இவ்விடயத்தில் சில தமிழ்த் தேசியவாதிகளும் சற்று நிலை தடுமாறுவார்கள் என்பதனையும், மேற்குலக சக்திகளும் மறுப்பு கூற மாட்டா என்பதனை கூட்டமைப்பு நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

மேற்படி ஒற்றை வசனத்தில், கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு அடங்குகிறது.

•             ஓன்றுபட்ட இலங்கை, (இரண்டு தேசங்கள் அல்ல)

•             தமிழ் பேசும் மக்கள் (தமிழ்த் தேசிய இனம் அல்ல),

•             வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் (தாயகம் அல்ல),

•             உள்ளக சுயநிர்ணய உரிமை (பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை அல்ல)

இதனை சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் ஆராய்வதற்கு உடன்பட்டனர் என்பதனை கூட்டமைப்பு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இச்சொற்பிரயோகங்களே தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பிற்கு இவ்வாறானதொரு ஆலோசனையை மேற்குலக சிந்தனை மையங்கள் வழங்கியிருக்கக் கூடும். வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டமைக்கான காரணத்தை இதிலிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இவ் ஆவணத்தில் இன்னொரு இடத்தில், “ஒரு தேசிய மக்கள் குழாம் என்ற வகையில், எமது வரலாற்று ரீதியான வாழ் விடங்கள், ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் தன்னாட்சி அரசாங்கமொன்றை உறுதிசெய்வதற்கு நாங்கள் செய்யக்கூடியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கான எமது தெரிவைப் பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியனபற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனரினால் நிர்வகிக்கப்படும்  மாகாணசபைகளில் ஆட்சிபீடமேறுவதன் மூலம் தன்னாட்சி அரசாங்கத்தை எவ்வாறு அமைத்து கொள்வது என்பதுபற்றிய எந்தத் தகவலும் இவ்விஞ்ஞாபனத்தில் காணப்படவில்லை. ஆகமொத்தம் சர்வதேச எஜமானர்களை திருப்திப்படுத்தும் ஒரு ஆவணம் தமிழ் வாக்களார்களின் எதிர்ப்பை சந்திக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.