யார் பிழைப்புவாதிகள் ?

99

கடலுக்குள் இருக்கும் இறால் மற்ற உயிரினங்களைப் பார்த்து உனது உடல் ரொம்ப அழுக்காயிருக்கின்றது என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்குமாம். அதை மற்ற உயிரினங்கள் பொருட்படுத்துவதில்லை. காரணம் அப்படிச் சொல்லும் இறாலின் முகத்தில் எப்போது அழுக்கான சேறு இருக்குமாம். அது போலத்தான் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழ்த் தேசியத்திற்காக பாடுபடுவர்களை சில முற்போக்கு முகமூடி போட்ட அரை வேக்காடுகள் பிழைப்புவாதிகள் என்று சொல்லிப் பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐ-பாட்டையும் ஐ-போனையும் வைத்துக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு வாதம்பேசும் இவர்கள் மற்றவர்களைக் குறை சொல்லியே குண்டுச் சட்டிக்குள் குதிரைஓட்டிக் கொண்டிடுக்கின்றார்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்த வேண்டும் என பிதற்றும் இவர்கள் ஒழுங்கு செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு 12 பொதுமக்களும் 7 பறை அடிக்கும் இளைஞர்களும் திரண்டு வருவார்கள். இவர்களின்மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் அதுதான்.

யாழ் பெருமாள் கோவிலில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டுப் பின்னர் அதை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என இந்தியப் பார்ப்பன ஊடகத்தினூடாகக் கதை கட்டி விட்டவர்கள் பிழைப்புவாதிகளா இல்லையா? மக்கள் பணத்திலும் கொள்ளையடித்த பணத்திலும் படைக்கலன்களை வாங்கி பின்அதை இந்தியப் பேரினவாதிகளிடம் ஒப்படைத்து விட்டு இந்தியப் பேரினவாதிகளின் கால்களை நக்கிக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் பிழைப்புவாதிகள் இல்லையா? பேரினவாதிகளின் கைக்கூலிகளாக மாறி இந்தியாவின் கட்டளை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் குடும்பத்தவர்களையும் அவர்களுக்கு ஆதரவாய் இருந்த அப்பாவிகளையும் கொன்று குவித்தவர்கள் பிழைப்பு வாதிகள் இல்லையா?

பொதுவுடமைவாதம் பேசிக் கொண்டு பல்தேசியக் நிறுவனங்களைப் பற்றிப் பல்லுத் தெறிக்கக் குறை கூறிக்கொண்டு இலங்கையில் இருந்து தப்பி ஓடி வந்து ஒரு முதலாளித்துவ நாட்டில் அகதியாய் புகுந்து, அங்கு ஏழைகளைச் சுரண்டிய செல்வந்தர்கள் செலுத்திய வரிப்பணத்தில் ஓசியில் தின்று,உடுத்து, படுத்து, படித்தவர்கள் பிழைப்புவாதிகளா அல்லது எழுபதுகளில் இங்கு வந்து பல சிரமங்களுக்கு மத்தியில் படித்து வேலை எடுத்து சிரமங்கள் பல பட்டு உழைத்து தமிழர் விடுதலையைத் தலை மேல் கொண்டு அதற்காக நிதி உதவி செய்து வருபவர்கள் பிழைப்புவாதிகளா?

தமிழர் பிரச்சனை பற்றி அடிக்கடி எழுதி தமது கட்டுரைகளை (காட்டுரைகளை) தத்துவார்த்தக் கட்டுரைகள் எனத் தம்பட்டம் அடிப்ப வர்கள் பிழைப்புவாதிகள் இல்லையா?
மார்க்ஸிசம் பெண்ணியம் என்றெல்லாம் பிதற்றுபவர்கள் ஒரு பெண் ஊடகவியலாளரைப் பற்றி எழுதும் போது அப்பெண் ஊடகவியலாளர் தமிழ்த்தேசியத்தில் தீவிர பற்றுக் கொண்டவர் என்பதற்காக அவரிடம் இருந்து ஊடகவியலாளர் என்பதை எடுத்தால் ஒன்றுமே இல்லை என்றார்கள். அப்பெண்ணிடமாவது எடுப்பதற்கு ஊடகவியலாளர் என்ற தகமை இருக்கின்றது. இவர்களிடம் எடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.

தமிழர் பிரச்சனையைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள் எழுதுவார்கள் ஆனால்தமிழர்களின் முதலாம் எதிரியான இந்தியாவைத் தாக்கி எழுத மாட்டார்கள். அவர்களின் எசமானர்களைத் தாக்கினால் அவர்களின் பிழைப்பில் மண்விழுந்துவிடும். இந்தியா வீசும் எலும்புத்துண்டை நக்கிக் கொண்டு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படும் தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்தும் இவர்கள்தான் பிழைப்புவாதிகள்.

தமிழ்த்தேசியத்திற்காக கடுமையாக உழைப்பவர்களை எதிர்ப்பதுதான் இவர்களினுடைய தத்துவார்த்த ரீதியான முற்போக்குச் சிந்தை கொண்ட யதார்த்தம். நாய் வாலினை நிமிர்த்த முடியாது! அதற்கு என இனியொரு முயற்சி தேவையில்லை.