யாழ் உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பு

699

சிறந்த மேட்டுப் பயிர் செய்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது யாழ் குடாநாடு.வளமான நிலங்களும் பயிர் செய்கையாளர்களின் கடும் உழைப்புமே இதற்கான காரணிகள். யாழ்ப்பாணப் பயிர்செய்கையை பார்த்து வியந்த சிலர் அதை தோட்ட வளர்ப்பியல் கலை என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கின்றேன்.

ஆண்டில் சுமார் 50 அங்குல மழை வீழச்சி இங்குண்டு. அதில் 87 சதவீத மழை ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில்தான் பெய்யும். இந்த நீரே ஆண்டு முழவதற்குமான குடிநீர் தேவைக்கும் பயிற் செய்கைக்கும் பயன் படுகிறது. பெய்யும் மழையின் பெரும் பகுதி இங்குள்ள நூற்றுக்கணக்கான குளங்களில் தேங்குவதாலும், விழும் நீரை கீழே இழுக்கும் மண்ணின் தன்மையாலும், கீழே செல்லும் நீரை அப்படியே சேமிக்கும் நிலத்தின் அடியிலுள்ள நிலக்கீழ்நீரமைப்பு அல்லது நிலத்தடி நீர்த தேக்கங்களாலுமே ஆண்டு முழவதும் நீரைப் பயன்படுத்துதல் சாத்தியப் படுகிறது.

சுமார் 400 சதுரமைல் கொண்ட இச் சமதரையான பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி உயரம் கொண்ட தெல்லிப்பளைப் பகுதியே அதி உயர்ந்த பகுதி. இதனால் இங்குஆறுகளும் இல்லை. அருவிகளும் இல்லை.நிலத்தடி நீர்த் தேக்கங்களில் தேங்கி கிணறுகளில் ஊற்றாக வரும் நீரை துலாவினதும் பட்டையினதும் உதவியுடன் குடிநீருக்கும் பயிர்ச் செய்கைக்கும் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்தார்கள். கீழே செல்லும் மழைநீரை விஞ்சும் அளவிற்கு நீர் மேலே இழுபடாத ஒரு சமநிலை கடந்த நூற்றாண்டுவரை நிலவியது.

கடந்த நூற்றாண்டு, நீர் இறைக்கும் பம்பிகள்பயன்பாட்டுக்கு வந்தன. கூடுதல் நீர் மேலே இழுபடத் தொடங்கியது. நீரியல் நிபுணர்கள் நிலத்தடி நீர்த்தேக்கங்களுடன் உவர்நீர் கலக்கும் அபாயம் உண்டென்பதை அறிக்கைகள் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்கள். இருந்த குளங்களை ஆழமாக்கியும் தூர்ந்தவற்றை புதுப்பித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இடம்பெயர்வு போன்றவற்றால் நீர்ப் பம்பிகளின் பயன்பாடும் குன்றி இருந்தது. அப்படி இருந்தும் அண்மைய புள்ளி விபரம் ஒன்று குடாநாட்டின் 30 சதவீதமான கிணறுகள் அதாவது 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாறிவிட்டதை வெளிக்கொணர்கிறது. இந்நிலையை நீடிக்கவிட்டால் விளைவு பாரதூரமானதாக மாறும். இதைத் தவிர்க்க உடன் நடவடிக்கை தேவை. இது யாழ்க் குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்நிலையை தவிர்க்க எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்பதற்கு முன் நாம்குடாநாட்டிற்கு தேவையான நீரை அளிக்கக்கூடிய வளங்களின் சாத்தியம் பற்றி அறிய வேண்டும்.

குடாநாட்டினுள் இரு ஏரிகள் உள்ளன. ஒன்றுவடமராட்சி ஏரி 30 சதுரமைல் பரப்புடையது. மற்றையது உப்பாற்று ஏரி 10 சதுரமைல் கொண்டது. இவை இரண்டும் கடலுடன் இணைகின்றன. வடமராட்சி ஏரி தொண்டமனாற்றிலும், உப்பாற்று ஏரி அரியாலையிலும் இணைகின்றன. கடலுடன் இணைவதால் இவை உவர் நீர் ஏரிகள் என்பது தெளிவு. கவனத்திற்கு எடுக்க வேண்டிய இன்னொருஏரியும் உள்ளது. அது குடாநாட்டை தெற்கிலுள்ள பெரு நிலப் பரப்பிலிருந்து பிரிக்கும் ஆனையிறவு ஏரி. இது 30 சதுரமைல் பரப்பளவு கொண்டது. கிழக்கில் சுண்டிக்குளம் என்னும் இடத்தில் கடலுடன் கலக்கிறது. மேற்கில் யாழ்பாணம் கடல் ஏரியுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது.

யாழ் கண்டி வீதியையே அணைபோல் பாவித்து ஆனையிறவு ஏரியை முற்றாக யாழ்ப்பாணம் ஏரியிலிருந்து பிரித்துவிட்டார்கள். கிழக்கில் அதன் கடலுடனான தொடர்பை நீக்க அதாவது சுண்டிக்குளத்தில், 7,000 அடி நீளமான அணை தேவை. இதில் ஏரியில் உள்ள மேலதிக நீர் கடலுட் பாய ஏதுவாக 4,700 அடி வடிகால் அணையாகவும் படுகைப் பாலமாகவும் (spillway cum causeway) அமைய வேண்டும்.

சுண்டிக்குளம் அணையும் பூர்த்தி அடைந்தால் ஆனையிறவு ஏரிக்குள் கடல் நீர் உட்புகுதல் நிறுத்தப்படும். கிளிநொச்சிப் பெரு நிலப்பரப்பான 360 சதுரமைல்களிலிருந்து, கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமேந்தி ஆறு, தேராவில் ஆறு ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் சென்றடையும் 90 ஆயிரம்ஏக்கர் அடி நன்நீர் (ஒரு ஏக்கர் அடி என்பது 1 ஏக்கர் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிற்கும் நீர்) ஆனையிறவு ஏரிக்குள்ளேயே தேங்கும். மேலதிக நீர் வடிகால் அணையால் வெளியேறும். முன்கூறப்பட்ட வடமராட்சி ஏரி உப்பாற்று ஏரி ஆகிய இரண்டுக்கும் முறையே தொண்டமனாற்றிலும் அரியாலையிலும் அணையிட்டால் அவையும் கடல் நீரை உள்விடாது தடுத்து மேலதிக நீர்தான் வெளியே அனுப்பப்படும்.

அடுத்து ஆனையிவு ஏரியையும் வடமராச்சி ஏரியையும் இணைக்க வேண்டும். இதற்கு இரண்டரை மைல் நீளத்தில் 40 அடி அகலத்தில் முள்ளியான் கால்வாய் என்ற பெயரில்கால்வாய் வெட்டும் பணி தொடங்கி பல காலம்ஆகியும் பூர்தியாகவில்லை. அது பூர்த்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் உப்பாற்று ஏரியின் அரியாலை அணையும் பூர்த்தியாகி அதுவும்வடமராச்சி ஏரியுடன் இணைக்கப் பட்டால் கடலுடன் தொடுபடாத மொத்தம் 70 சதுரமைல் ஏரி எம் கைக்கு வந்துவிடும். இந்த 70 சதுரமைல் ஏரிகளுள் ஆண்டுக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து உட்செல்லும் 90 ஆயிரம் ஏக்கர்அடி நன்நீர் பாய்வதன் விளைவாக மூன்று ஏரிகளுமே காலப்போக்கில் நன்நீர் ஏரிகளாகி விடும். அது எவ்வளவு காலத்தில் சாத்தியப்படும் என்பது சரியாகத் தெரியவில்லை.

பணிகள் முடிந்ததும் உவர்நீரை பாரிய நீர்ப்பம்பிகள் மூலம் வெளியேற்றி வெற்றிடமாகக் கிடக்கும் ஏரிகளின் தரையை உழுது வைத்தால் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வரும் அதிக நீர் வடிகால் அணைகளுக்கு மேலாகப் பாய்ந்து, படிந்திருக்கும் உப்பைக் கரைத்து வெளியே அனுப்பி நன்நீராக மாற்றும் பணியைத் துரிதப் படுத்தும். இதனுடன் ஏரிகள்வற்றிய நிலையில் இருக்கும்போது கடல் நீர் உட்புகும் இடங்களை அடையாளம் கண்டு தடுக்கக் கூடியவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். சில இடங்களை ஆழமாக்கி ஏரிகளின் கொள்திறனையும் கூட்டலாம். இது முறையான ஆய்வு மேற்கொண்டு பாதகமான விளைவுகள் ஏற்படாத இடங்களில் மட்டும்தான் சாத்தியப்படும். யாழ் குடாநாட்டுக்கு 70 சதுரமைல் பரப்பளவு கொண்ட நன்நீர் ஏரிகளா? அப்படி ஒரு இனிய செய்தி வரத்தான் போகிறது. எப்போ என்பதுதான் இன்றய அவா.

இது இன்றைய நேற்றைய அவா அல்ல. 350 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பித்தான் Hendrik van Rheede முன்மொழிந்திருந்தார். ஒல்லாந்தர் சென்ற பின் 1879 ல் வடமகாண அரசாங்க அதிபராக இருந்த Twyneham அதற்கு உயிர்கொடுத்து ஒரு நடைமுறைத் திட்டம் வகுத்தார். 1920 ல் வடமராச்சி ஏரியின் ஓருபகுதியை நன்நிராக்கும் முயற்சியில் வெற்றி கண்டு நான்கு ஆண்டுகள் அதன் பயனையும் அனுபவித்தார்கள். 1954 ல் நீர்பாசனப் பொறியிலாளர் ஒருவர் அவர் பெயரில் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆறுமுகம் திட்டம் என்று ஒன்றை வகுத்தார். அச்சீரிய திட்டம் முற்றாகபூர்த்தி செய்யப்படா விட்டாலும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுவதும் பின் கை விடுவதுமாக 60 ஆண்டுகள் கழிந்து விட்டன. முக்கால் பங்குக்கு மேலாக வெட்டப் பட்டதும், ஆனையிறவு வடமராச்சி ஆகிய ஏரிகளை இணைக்கப் போவதுமான முள்ளியான் கால்வாய் இன்னும் முற்றுப்பெறாத காரணத்தால் பெரு நிலப்பரப்பிலிருந்து பாயும் பல ஆயிரம் ஏக்கரடி நீரில் ஒரு துளி என்றாலும் வடமராச்சி உப்பாறு ஆகிய ஏரிகளைச் சென்றடையவில்லை.

இந்தத் திட்டம் பூரண வெற்றி அடையும்போது பக்க விளைவுகள் சில ஏற்படத்தான் செய்யும். முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது மீனவர் பாதிப்பு, உவர் நீரிலிருந்து நன்நீராக மாற்றமடையும் காலகட்டத்தில் சூழல் மாற்றம் காரணமாக சில மீனினங்கள் நண்டு, இறால் ஆகியவை அழியும். தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு அங்கு மீன்பிடித் கொழிலில் ஈடுபடும் 2000 வரையான தொழிலாளர் பாதிக்கப்படுவர்.

சுண்டிக்குளத்தில் பறவைகளுக்கான சரணாலயம் ஒன்றுள்ளது. அங்கு வெளிநாடுகளிலிருந்து இடம்பெயரும் பறவைகள் வந்து செல்வதுண்டு. சூழல் மாற்றம் நிச்சயம் அவற்றின் வதிவிடங்களைப் பாதிக்கும்.

இதைக் காரணமாக வைத்து வெளிநாடுகள்இந்த நன்நீர் ஏரிகள் திட்டத்திற்கு நிதி தர மறுக்கின்றன. இம் மறுப்பிற்கு, குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையான உவர்நீர்ப் பிரச்சனையைபின் தள்ளிவிட்டு பவைகளுக்காக அக்கறை காட்டுவதுபோல் நம்மவர் சிலர் வெளியிடும் அறிக்கைகள் தான் காரணம்.

இத்திட்டம் முற்றுப் பெற்று நன்நீர் ஏரிகள் வந்தால்நாம் மேலே இழுக்கும் நீரை திருப்பி ஊட்டத் தேவையான நீர் சுண்ணாகம் (வலிகாமம்) வடமராச்சி, தென்மராச்சி, ஊர்காவற்துறை ஆகியகுடாநாட்டின் நான்கு பிரதான நிலக்கீழ்நீரமைப்புகளுக்கும் கிடைக்கும். வாழ்வாதாரத்தையே பாதிக்கக் கூடிய உவர்நீர் உட்புகதல் நின்றுவிடும். இதுதானே நம் கவலையாக இருநத்து. குடாநாடு பாதுகாக்கப் படுகிறது. வேறு பயன்களும்உள்ளன. கிணறுகளின் ஊற்று அதிகரிக்கும். மழையை நம்பி மானாவாரியாக இன்றுவரை செய்யப்படும் 20,000 ஏக்கர் நெல்வயல்களை கிணற்று நீரைப் பயன்படுத்தி நீர்பாசன வயல்களாக மாற்றி விளைச்சலை மும்மடங்காக்கலாம். ஏரிகளை அண்டிய பகுதிகளில் உவர் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள 10,000 ஏக்கர் வரையான நிலங்களை நெற் சாகுபடிக்குக் கீழ் கொண்டு வரலாம்.

இன்னொரு விடயம் நன்நீர் இறால் வளர்ப்புமிகவும் வருவாய் கூடிய துறை. இந்த நன்நீர்ஏரிகளில் முறையாகத் திட்டமிட்டு இடமொதிக்கி இத்திட்டத்தால் பாதிக்கப் பட்ட மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து கடன் வசதியும் ஏற்படுத்தினால் அவர்கள் வருவாய் ஏரிகள் உவர்நீராக இருந்த போது கிடைத்ததை விட சில மடங்குகளால் அதிகரிக்கும். நாட்டுக்கு அந்நியச் செலவாணியும் வந்தடையும்.

இத்திட்டத்தை பூர்த்தி செய்யத் தேவையான தொண்டமனாற்று அணை 10 கோடி ரூபா செலவில்கட்டப் பட்டு விட்டது. அரியாலை அணையும் முடியும் நிலையில் உள்ளது. வீதியும் அணையுமான கண்டி வீதி. அதுவும் முடிந்து விட்டது. முக்கால் பங்குக்கு மேல் முடிந்து தூர்ந்த நிலையில் உள்ள முள்ளியான் கால்வாயும் சுண்டிக்குளம் நீர்வடிகால் படுகைப் பாலப் அணையும்தான் தாமதப்படுகின்றன.

100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக் கூடிய இத்திட்டத்தை துரிதப்படுத்தாது பின் தள்ளி விட்டுயாழ்ப்பாணக் குடிநீருக்காக ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள். அத்திட்டத்தின் கீழ் பரந்தனிலிருந்து இரணைமடு நீர்த் தேக்கத்தின் நீரை யாழ் நோக்கி கொண்டு செல்ல 25 மைல்களுக்கு கூடிய நீளத்திற்கு குழாய்கள் போடப்பட உள்ளன. அந்தக்காசே நன்நீர் ஏரித் திட்டத்தை முடிக்கப் போதுமானது. இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்துவதால் கிளிநொச்சி மக்களின் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படும் என்ற ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் தள்ளிப் போடப்பட்டு, இரணைமடுவின் அணையை இரண்டு அடியால் உயர்த்துவதற்கு ஒரு திட்டமும், மகாவலி கங்கையின் ஒரு பிரிவான மொறஹாகந்தைத் திட்டத்தை துரிதப்படுத்தி மகாவலி கங்கை நீரின்ஒரு பகுதியை 2020 ம் ஆண்டளவில் இரணைமடுவிற்கு கொடுக்கவும் திட்மிட்டுள்ளார்கள்.

இரணைமடு நீர்த் தேக்கத்திற்கு வடமத்திய மாகாணத்திலிருந்து நீர் கொண்டு வரும் செயலானது, ஒரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் போவது. ஓரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் அனுப்புவதானால் அந்நீரின் கட்டுப்பாடு நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறும். இதனால் அந்த நீர்விநியோக நடவடிக்கை அனைத்தும் மாகாண சபையின் கையிலிருந்து மத்திய அரசின் கைக்கு மாறிவிடும்.

1200 கோடி ரூபா செலவில் நடக்கவிருக்கும் யாழ் குடிநீர் திட்டத்தை நாம் எளிதில் புறக்கணிக்கவும்முடியாது. அதன் கீழ் பாரிய நீர் கொள் கலன்கள்நீர் சுத்திகரிப்பு வேலைகள் என்று பல நல்லஅம்சங்கள் அடங்கி உள்ளன. 100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக்கூடிய யாழ்பாணத்திற்கு ஒர் ஆறு என்ற பெயரில் நடைபெறும் நன்நீர் ஏரித் திட்டத்தைதுரிதப்படுத்த குரல் கொடுக்க வேண்டிய கடமைதமிழ் மக்களுக்கு உள்ளது.

ஒருபேப்பருக்காக  – மாசிலாமணி