யாழ் குடாவின் நீர் வளம்.

1806

விவசாயமே இக்குடா நாட்டின் பொருளாதாரத் தளம். இங்குள்ள விவசாயக் கட்டமைப்பிலேயே ஒரு உயர்ந்த தன்மை காணப்படுகிறது. அதை விவசாயம் என்று சொல்வதிலும் பார்க்க தோட்டக் கலை என்பதுதான் சாலப் பொருந்தும்..

உலர் வலயத்தில் ஆறுகளோ அருவிகளோ இன்றி மழை நீரை மட்டும் நம்பி உள்ள பிரதேசம் மட்டும் அல்ல, இது நீர்த் தேக்கங்கள் எதுவுமே அமைக்க முடியாத அளவுக்கு சமதரை அமைப்புக் கொண்ட பிரதேசமுமாகும். கடல் மட்டத்திலிருந்து 35 அடி உயரம் வரை உள்ள தெல்லிப்பளைப் பகுதியைவிட உயரமான பகுதி எதுவுமே அங்கு கிடையாது. ஆனால் நிலத்திற்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்கள் கீழ் செல்லும் மழை நீரை தேக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதனால்தான் பல்லாண்டு காலமாக அங்கு உற்பத்தியாகும் மரக்கறி வகைகள்;, உபஉணவுவகைகள புகையிலை, பழவகைகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு தேவையான நீர், கிணறுகள் மூலம் கிடைக்கின்றது. உண்மையிலேயே இது ஒரு நிலத்தடி நீர்த்தேக்கம்.

1950ம் ஆண்டுக்குப் பின் துலாவையும் பட்டையையும் எம் மக்கள் மறந்ததால் நீர் பம்பிகள் ஆண்டுதோறும் நிலத்திற்கு அடியில் செல்லும் நீரைவிட அதிகம் நீர் வெளியே இழுக்கும் நிலை உருவானது. கடல் நீர் உட்புகுந்து அங்குள்ள ஆயிரக்கணக்கான கிணறுகளில் பல உவர்நீர் தன்மை பெற்றன. நாட்டு நிலை காரணமாக தோட்டச் செய்கை பாதிக்கப் பட்டு வெளியே இழுக்கும் நீர் அளவு பெருமளவில் குறைந்தது. இப்போ நிலை சற்று மாறியுள்ளதால் பழையபடியும் அதிகம் நீர் வெளியே இழுக்கும் நிலை உருவாகும்.

நிலத்தடி நீர்த்தேக்கத்தின் வளத்தைப் பாதுகாக்க அங்கிருக்கும் ஆயிரம் வரையான குளம் குட்டைகளை தூர்ந்து போக விடாது பாராமரித்து நிலத்தின் அடிக்குச் செல்லும் நீரின் அளவைக் கூட்டுகிறார்கள்.

1954ல் ஆறுமுகம் என்னும் ஒரு பொறியியலாளர், குடா நாட்டிற்கு வெளியே கிளிநொச்சி மாங்குளம் பகுதிகளில் பொழியும் மழையின் நீர் கடலுள் விரயமாவதை அவதானித்து அந்நீரைப் பயன்படுத்தி குடாநாட்டின் நிலத்தடி நீர்த்தேக்கம் வளம் குன்றுவதைத் தவிர்க்க ஒரு செயற் திட்டம் வகுத்தார். அது ஆறுமுகம் செயற் திட்டம் என்ற பெயரில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபல்யம் பெற்றது.  குடாநாட்டினுள் 40 சதுர மைல் வரையான பகுதி வடமராச்சி, உப்பாறு ஆகிய உவர்நீர் ஏரிகளாக உள்ளது. கடலிலிருந்து அணைகள் மூலம் அவற்றைப் பிரித்து கிளிநொச்சி மாங்குளம் பகுதிகளிலிருந்து கடலுள் விரயமாகும் மழைநீரைப் பயன்படுத்தி நன்நீர் ஏரிகளாக அவற்றை மாற்றுவதுதான் அத்திட்டம். பல காரணங்களினாலும் அணை உடைப்புக்களாலும் அத்திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. இத்திட்டம் முற்றுப்பெற்றால் அங்கு மழையை மட்டும் நம்பி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும் வயல்களில் கணிசமானவை உவர்தன்மை குறைந்து கூடிய விளைச்சலைத் தருபவையாக மாறும். உவர் நீராக மாறிய பல கிணறுகள் தோட்டச் செய்கைக்கு உகந்த கிணறுகளாக மாறும். உவர்த் தன்மை காரணமாக கைவிடப்பட்டுள்ள பல காணிகள் பயன் தருபவையாக மாறும். குறைந்தது 30 சதுரமைல் யாழ்குடாவினுள் நன்நீர் ஏரிகளானால், நினைக்கவே ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. அரசு யாழ் குடிநீர் திட்டத்திற்காக் கோடிக் கணக்கில் செலவிட உள்ளது. அதன் ஒரு பகுதியை செலவு செய்து இத்திட்டத்தை முற்றுப்பெற வைத்தால் மிகுதிப் பணத்தை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே உள்ள தொண்டமானாற்றுக் குறுக்கணையில் உள்ள உக்கிய பலகைகளை மாற்றி  கடல் நீரை உள்வரவிடாத உறுதியானவையாகச் செய்யவேண்டும். அரியாலை குறுக்கணைக்கும் அதே திருத்தம் தேவை. வடமராச்சி உப்பாறு ஏரிகளைப் பிரிக்கும் கட்டுக்களின் உடைப்புக்களை தேவைக்கொப்ப அடைக்க வேண்டும். 1960ல் ஆரம்பித்து இரண்டுமைல் வரை வெட்டப்பட்டுள்ள முள்ளியான் தொடுப்பு வாய்காலின் மிகுதி அரை மைலும் வெட்டப்பட்டு ஆனையிறவு ஏரியில் இருந்து செல்லும் மழைநீர் இவ் ஏரிகளுக்குள் பாயவேண்டும். சுண்டிக்குளம் வானும் படுகைப்பாலமும் மீள் அமைக்கப் படவேண்டும். இதனால் ஆனையிறவு ஏரியின் உவர்த்தன்மை மாறி வடமராச்சி உப்பாறு ஏரிகளுக்கு மழை காலங்களில் நன்நீர் வழங்கும் ஏரியாக அது மாறும். குடா நாட்டு மக்களின் நீண்ட நாள் அவாவும் பூர்த்தியாகும்.