யாழ் தபால் புகையிரத சேவை

841

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் தபால் புகையிரதம் என்கின்ற மெயில் வண்டி ஓடப் போகின்றது என்பது சென்ற வாரச் செய்திகளில் ஒன்று. வவுனியாவரை, கிளிநொச்சி வரை என்று அண்மையில் கொழும்பிலிருந்து நீட்சி கண்ட இந்தப் புகையிரத சேவை யாழ்ப்பாணம் வரை நீடிக்கப்படுகிறது. காங்கேசன்துறை வரைநீட்சி கண்டால் இது பழைய பயணப் பாதையை முழுமை காணும். அந்த நாட்களில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மெயில் புகையிரதம் வடபகுதி மக்களுடன் ஐக்கியமான முக்கியமான ஒரு பொழுது போக்கு சாதனமாக இருந்தது.

யாழ்.தேவி என்ற அதி விரைவு ரயில் சேவையும் பயணிகளுக்கு பயன்பட்டது. மாலை 6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ்.தபால் மெயில் புகையிரதம் அதிகாலை 6 மணிக்கு கொழும்பை அடையும். இதே போல் 6 மணிக்கு புறப்பட்ட மெயில் வண்டி அடுத்தநாள் காலை காங்கேசன்துறையை அடையும். உள்ளுர் தபால்கள் இந்த மெயில் வண்டி ஊடாகத் தான் ஒவ்வொரு தபால் நிலையத்தையும் வந்தடைந்தன. கிளிநொச்சி விசுவமடுவில் விவசாய வியாபார நிலையங்களைக் கொண்டிருந்த காலத்தில் இதனூடாக பயணிக்கும் வாய்ப்பு இதனூடாக கிட்டியது. எனவே, இதன் சேவையில் இடம்பெற்ற காட்சிகள் பசுமையாக நினைவில் உள்ளது.

கல்வித்தகைமை என்றும் உச்சம் கண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கு குறிப்பாக கடும் உழைப்புடன்கூடிய விவசாய உற்பத்திகள், கடல் வளங்கள், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிலகம், பரந்தன் இரசாயணத் தொழிலகம் கண்ணாடித் தொழிற்சாலை, வெனியன் தொழிற்சாலை, மின்தறி உற்பத்தி நிலையங்கள், சுருட்டுக் கைத் தொழில் என மேம்பட்டிருந்த தொழில்சாலை தேவைகளுக்கும், இந்த மெயில் வண்டிச் சேவைநல்ல பயனைக் கொடுத்திருந்தது. உத்தியோகஸ்த்தர்கள், உயர்கல்வி மாணவர்கள் ஏனைய பிரதேசங்களில் தொழிலுக்குச் செல்லவும், பல்கலைக்கழகங்களுக்கு செல்லவும் இந்தப் பயணச் சேவை வாய்ப்பளித்தது. மரக்கறி, முட்டைகள், கருவாட்டுச் சிற்பம், சுருட்டுப் பெட்டிகள், செத்தல் மிளகாய், உருளைக்கிழங்கு, முந்திரிகைப் பழம் யாழ்.வன்னி உற்பத்திகளை சரக்குப் பெட்டிகளுடாக இந்த மெயில் வண்டி மூலம் அனுப்புகின்ற வாய்ப்பு இருந்தது. சீமெந்து தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களும் இந்த மெயில் வண்டிக்கான தண்டவாளப் பாதையூடாகத் தான் தொழிற்சாலைகளுக்கு வந்துசேர்ந்தது. தபால் வண்டி உறங்கல், இருத்தல் வசதிகளையும் கொண்டதாக இருந்தது. அரச உத்தியோகஸ்தர்களுக்கு அவரவர் தகைமைகளுக்குக்கேற்ப முதலாம், இரண்டாம் வகுப்பு சீட்கள் வருடத்திற்கு மூன்று வழங்கப்பட்டது.

கிளிநொச்சி, வவுனியா வரை வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு மூன்று மாத பருவகால சீட்டும் மிகக்குறைந்த விலையில் கிடைத்தது. மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் தான் மெயில் வண்டியில் அதிகம். இதில் மூலை ஆசனம் பெற்றுக் கொள்ளும் போட்டி நித்தம் நடக்கும்.ரயில் நிற்பதற்கு முன்பாக யன்னல் ஊடாக ஒரு கைக்குட்டையை போட்டு விட்டு உள்ளே போய் உரிமை கோருவதும் இதற்காக நடக்கும் சண்டைகளும் நித்தியகாட்சிகளாக இருக்கும்.

காங்கேசன்துறை வரை பயணித்து இருக்கைகளை கையகப்படுத்திக் கொண்டு வந்து உறவினரிடம் கையளிப்பதும், ஏன் தேவை ஏற்படும் போது கைப்பற்றி வந்த ஆசனங்களை பணத்துக்கு விற்பதும் கூட இந்தச் சேவையின் போது அந்தக் காலத்தில் நடந்தது. இதில் பலர் புகையிரத வண்டி இரவு 9-10க்கு பரந்தனை அடையும் போது வீட்டிலிருந்து கொண்டு வந்த இடியப்பப் பாசலை பிரித்து சாப்பிட்டு விட்டு மூலை இருக்கைகளில் இருந்தபடியே மற்ற இருக்கைகளில் கால் நீட்டி உறங்க ஆரம்பித்து விடுவார்கள். மற்றவர்கள் தயவாக கேட்டும் இரங்காத இவர்கள் மதவாச்சியில் ஏறும் சிங்களவன் சிங்களத்தில் ஏசியபடி தட்டி எழுப்ப காலை சுருட்டிக் கொள்வார்கள். மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களும் இதில் இருந்தது. இதிலும் இவ்வாறான காட்சிகளும் இடம்பெறும் பிச்சைக்காரர்களும் பெட்டி பெட்டியாக தட்டை நீட்டி சில்லறைகளைக் குலுக்கி கை ஏந்துவது வழக்கம்.

பாசலை பிரித்து உண்ணும் பயணிகளின் முன்பாக வந்து கையேந்தும் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு ஓடுவதும் மெயில் வண்டியின் பரிதாபச் சேவைகளில் ஒன்று.ஒவ்வொரு புகை வண்டி நிலையங்களிலும் செவ்விளநீர் துÖக்கியபடி தெமலி, தெமலி என்று இளநீர் விற்பனை நடக்கும். ஐந்து ரூபா, பத்து ரூபா தாள்களை ஐந்து சத செவ்விளநீருக்காக யன்னல் வழியாக நீட்டி விட்டு, சில்லறை மீதிகளை பெற முடியாத தமிழர்கள் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் அதிகம் பேர் இருப்பார்கள்.

தாயத்தை உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் எம்மவர்களை ஈடுபடுத்தி பணம் நகைகளை ஏமாற்றிப் பறிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது மெயில் வண்டி ஓட்டத்தின்போது சிங்களப் பகுதிகளில் நடக்கும். பக்கத்து இருக்கையில் வந்து நைசாகப் பேசி மயக்க மருந்து கலந்த சொக்கலேட், சோடா என்று கொடுத்து பயணப்பையை, நகைகளை கொள்ளையடித்த சம்பவங்களும் அதிகம் நடந்தன. சினிமாப் படங்களில் நாயக, நாயகிகள் நெருக்கமாக செய்யும் காதல் காட்சிகளும் மெயில் வண்டிப் பயணத்தின் போது ஒவ்வொரு இரவுகளிலும் சில சில பெட்டிகளில் காணக்கூடியதாக இருந்தது. இடைநடைபாதையில் செய்தித்தாளை விரித்துப் போட்டுவிட்டு படுத்துறங்கும் பயணிகளைத் தாண்டி, மலசல கூடத்திற்குச் செல்லமுடியாது அவஸ்தைகளை அடக்கிக்கொள்ளும் பயணிகள் அதிகம். குறிப்பாக பெண்களுக்கு மெயில் வண்டிப் பயணம் நரகமாகத் தெரிந்தது அவ்வப்போதும் உண்டு.

இவ்வாறு பல இனிய நினைவுகளையும், அவலச்சுவைகளையும் தாண்டி நீண்ட நெடுங்காலமாக ஓடிய மெயில் வண்டி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் ஓட ஆரம்பித்திருக்கின்றது. புதிய வண்டிப் பயணமும் இவ்வாறான சேவைகளைக் கொண்டிருக்குமோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

ப.வை.ஜெயபாலன் – ஊரின் வாசம்