ரணிலின் கிராம ராஜ்யத்தில் கோழி மேய்க்கப்போகிறதா கூட்டமைப்பு

81

தேர்தல் சந்தடியில் இரண்டு சில்லு ஒரு சைக்கிளா? ஒரே வீடு தனித்தனி அறையா?என தமிழர்கள் அதிகாரப் பகிர்வு குறித்த கனவில் தேர்தல் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருக்க, அனைத்தையும் தவிடுபொடியாக்கும் தனது நரித்திட்டத்தை திருவாய் மலர்ந்தருளியிருந்தார் பிரதமர் ரணில் அவர்கள்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த சமஷ்டி தீர்வு, சுயநிர்ணய உரிமை என்பன கடைசியில் அவரது வாயை திறந்து விட்டிருந்தது. விழுந்தாலும் தன் மீசையில் இன்னமும் மண் பிரளவில்லை என்கின்ற மகிந்த மீண்டும் இனவாதத்தை கையிலெடுத்துதான் கொடுக்காததை ரணில் தமிழர்களுக்கு கொடுத்து விடப் போகிறார் என்றும் அதனால் நாடு பிளவுபடப் போகிறது என்றும் சிங்கள மக்கள் முன் முதலைக் கண்ணீர் வடித்துத் தீர்த்தார்.

அதற்கு சற்றும் சளைக்காத ரணிலோ தான் ஒன்றும் இனவாதத்தில் குறைந்துவிடவில்லை என்பதுபோல `தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வை வழங்கப் போவதில்லை’ என்றும் தமிழர் சக்திகளின் ஆதரவு இன்றியே தாம் வெல்லும் வாய்ப்பு இருப்பதால் தான் ஏன் அவர்கள் சொல்வதை கேட்கவேண்டும் என்றும் கிராமியமட்டத்திலேயே அதிகாரங்கள் பகிரப்படுமெனவும் சூசகமாக தனது `நரித்திட்டத்தை’ வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் இந்து பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ரணிலின் `கிராம ராஜ்யம்’ ஒன்றும் புதிதாக வெளியில் வந்த பூனைக்குட்டியல்ல. ஏற்கனவே மகிந்தவின் ஆட்சியில் `பஞ்சாயத்து ராஜ்’என்ற பெயரில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட புளித்துப் போன பழைய கள்ளு.

தமிழ் மக்கள் அறுபதாண்டுகள் பார்த்து சலித்த அதே தேர்தல் நாடகமே மீண்டும் மீண்டும் இலங்கையில் மேடையேறுகிறது. நடிகர்கள் மட்டும் மாறியுள்ளார்கள்.

தமிழர்களுக்கு எந்தக் கட்சி கூடுதல் கெடுதல்செய்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற போக்கோ இப்போ தமிழர்களுக்கு எந்தக் கட்சி குறைவாக குடுத்தால் அல்லது குடுக்காமல் விட்டால் ஆட்சியை பிடிக்கலாம் என்று சற்று மாறியிருக்கிறது. அதுவும் சர்வதேச போர்க்குற்றத்திலிருந்து தப்பும் ஒரு உபாயமாகவே சிங்களத்தால் கையாளப்படுகிறது.

ராஜபக்ச என்ற ராவணனை வீழ்த்தினால் ராமராஜ்ஜியம் தான் என்ற எதிர்பார்ப்பிலிருந்த கூட்டமைப்புக்கு அது ராமராஜ்ஜியம் அல்ல கிராம ராஜ்ஜியம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ரணில். தான் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பிலுள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதிகாரங்களை தரப்போவதாக லண்டனிலும், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம்ஆக்கிரமித்த காணிகளில் முழுமையாகி மீள்குடியேற்றுவோம் என்று தெல்லிப்பளையிலும் தமிழர்களிடம் ஆதரவு பிச்சை எடுத்தவர் இப்போ ஏழுமாத கால `நல்லாட்சியில்’ ஏன் எதையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை?

மாறாக தன்னை பலப்படுத்தி அரசாங்கத்தைகைப்பற்றி சிறிலங்காவை `சர்வதேச போர்க்குற்றத்திலிருந்து’ காப்பாற்றவும் தமிழர்களின் அகிம்சை போராட்ட காலத்திலிருந்து ஆயுத போராட்ட காலம் வரை மாவட்ட சபை, மாகாணசபை என வலுவடைந்த குறைந்தபட்ச அதிகார அமைப்பை கூட `கிராம ராஜ்ஜியம்பீ என்ற பெயரில்கிராம மட்டத்திற்கு சுக்குநுÖறாகி உடைப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் ரணில்.

அதன் வெளிப்பாடே தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முந்திய இந்த அறிவிப்பு. இனி மாகாணசபைக்கும் அப்பால் 2016இல் `பிராந்திய அரசாங்கம்’ என்றும் `சமஷ்டி தீர்வு` என்றும்உறுதி மொழிகளை வழங்கிய கூட்டமைப்பு ரணிலின் கிராம ராஜ்ஜியத்தில் கோழி மேய்க்கப்போகிறதா என்ன?

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தமக்கு நெருடலாகி இருக்கும் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் நீக்கிவிட்டு `புதிய அரசியலமைப்பில்’ பெரும்பான்மையின ஒற்றையாட்சியையே வேறுவடிவத்தில் சிங்களம் வலியுறுத்தும் அதை தடுக்கக் கூடிய நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் கூட தமிழ்த் தேசியகூட்டமைப்புக்கு கிடையாது. இந்தி `உட்குத்தை’ அறிந்தும் அறியாமல் ஐ.நா.வும் தென்னாபிரிக்காவை ஏத்த மன்னித்துவிடும் நல்லிணக்க தீர்வை சிறிலங்காவில் வலியுறுத்தினால்காலங்காலமாகி தமிழர்கள் ஏமாற்றப்படுவதைப்போல சர்வதேச ரீதியாக தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.

தமிழர்களிடம் இருக்கும் ஒரேயொரு அஸ்திரமான `சர்வதேச குற்றவியல் விசாரணையையும்’ கைவிட்டால் சிங்கள இனவாதம் மிக இலகுவாக தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் பலத்தை இல்லாமல் செய்துவிடும். அது வருங்கால தமிழ் சந்ததிகளுக்கு பாதுகாப்பற்ற எதிர்காலத்தையும், முடிவெடுக்கக்கூடிய அரசியல் உரிமையையும் சுனியமாக்கிவிடும்.

மீண்டும் பேரழிவுகளை சந்திக்க திரணியற்றதமிழ் இனம் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக குடாநாட்டுக்குள்ளேயே முடக்கப்படுமா? யாழ்ப்பாண மக்களை மட்டும் திருப்தியாக வைத்திருந்தால் நாட்டின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற ரணிலின் கருத்தின் எதிர்மறை அர்த்தம் அதனைத்தான் கூறுகிறது. போதாதற்குவடகிழக்கு இணைப்புக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் பிரதான முஸ்லிம் கட்சி ஒன்றினுÖடாக ஓதப்பட்டிருக்கிறது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் மூலமே இதை தடுக்க முடியும். நிலத்திலும் புலத்திலும் அதை செய்யக்கூடியவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அரசியல் யாப்பே மீண்டும் தமிழர்களுக்கு ஆப்பாக மாற அனுமதிக்கக்கூடாது.

டொனமூர் அரசியல் யாப்பில் சேர்.பொன்.இராமநாதனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோது ‘donough more proposals Tamil no more’ தமிழர்களுக்கு ஒன்றுமேயில்லை என்று அவர் மனமுடைந்து விரைவில் இறந்து போனார்.

சோல்பெரி அரசியல் யாப்பில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கும் அதுவே நடந்தது. ஒற்றைக் கண்ணன் சோல்பெரி பிரபுவின் துரதிஷ்யற்ற அரசியல் பார்வையாலேயே குட்டிமணியின் இரண்டு கண்களும் தோண்டப்பட்டது என பின்னர் கவலைப்பட்டார்கள் தமிழர்கள். அதை நிறைவேற்றிய சோல்பெரி பிரபுவும் கூட.

அதன்பின் வந்த சிங்கள அரசியல் கட்சிகளின் புதிய அரசியல் யாப்புகளிலும் பெயரளவிலாவது இருந்த சோல்பெரியின் சிறுபான்மை இனத்திற்கான 29ஆவது சரத்தும் நீக்கப்பட்டு பௌத்த மதமும், சிங்கள மொழியுமே முன்னிறுத்திப்பட்டன. இதனால் தான் என்னவோதந்தை செல்வா கூட `தமிழர்களை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும்` என வேதனைப்பட்டார். அரசியல் தீர்வும் `மாயமான்’ போலாகிவிட்டது.

மீண்டும் ஒரு `அரசியல் யாப்பு’ வகுக்கப்படும்போது தமிழர்கள் ஒட்டுமொத்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். முதலில் `சர்வதேச சட்டத்தின்படி’ தமிழினம் நீதியை பெற்றுக் கொள்வதே சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கும்.

– சாணக்கியன்.