ச.ச.முத்து
83ம்ஆண்டு, பெப்ரவரி மாதத்தின் இறுதிவாரம், சிங்களத்தின் வெலிக்கட சிறையில் இருந்த தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரையை தமிழர்விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம் சந்திக்கின்றார். கைது செய்யப்பட்டு இவ்வளவு காலமும் ஏனென்று திரும்பி பார்க்காமல் எதிர்க்கட்சிதலைவர் என்ற தேர் ஓட்டத்தில் இருந்தவர் இப்படி சந்தித்தது ஒரு வாக்குமூலத்தை பெறுவதற்காகவே “தமிழீழவிடுதலைப்புலிகள் செய்துவரும் ஆயுதப் போராட்டத்தை விமர்சித்து,கண்டித்து ஒரு வாக்குமூலம்” இதுவே நோக்கம்.
அதற்கு சில நாட்களுக்கு(22.02.83) முன்னர் யாழ் பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்டமை உறுதியாக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் எச்சரிக்கைக்காக சுட்டு காயப்படுத்தப்பட்ட ஆலாலசுந்தரத்துக்கு ஆதரவாக என்று சொல்லப்பட்டாலும் இதன் பின்னேஇருப்பதோ விடுதலையின் வீரியத்தை குறைத்து அழிப்பதற்கான சிங்களப் பேரினவாத சதியே.
இது காலகாலமாக நடந்துகொண்டிருப்பதுதான். விடுதலைப்போராட்டத்தை,புரட்சியை ஒடுக்குவதற்காக, கருவறுப்பதற்காக செய்யப்படும் வேலைகளில் மிகமுக்கியமானது. காந்தியுடன் இருந்தவர்களே எழுதும் ‘இன்சைட் ஸ்டோரி’ தொடக்கம் சேகுவேராவின் தோழனாகஇ ருந்தவன் சொல்லும் சுயவாக்குமூலம் வரைக்கும் இதுவே சொல்லும் சேதி.
ஜோசப் ஸ்டாலினின் மகள் எழுதிய Twenty letters to a Friend என்ற தனது தந்தையின் மறுபக்கமும் இத்தகையதே. இவை வெறும் இலக்கியங்கள்,அல்லது வரலாற்று வாக்குமூலங்கள் என்பதற்கும் அப்பால் அவர்கள் கட்டிவளர்த்த புரட்சிகர கருத்துக்களை கூர்மழுங்க செய்பவை ஆகவும், அவர்களுடைய கருத்துகளுக்கு பின்னால் அணிதிரளும் மக்கள்கூட்டத்தை குழப்புவதுமே நோக்கமாக கொண்டவை.
எமது தமிழீழவிடுதலைப்போராட்டத்திலும் இத்தகைய வாக்குமூலங்களுக்கு குறைச்சல்இல்லை. “விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே ராஜீவ்காந்தியை கொல்ல உத்தரவிட்டார்” என்று ஒருநாள் கே.பியின் வாக்குமூலம் வெளிவரும்… இன்னொரு நாள் திடீரென “நோர்வேயில் வைத்து பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப்புலிகள் தரப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வை வன்னியில் வைத்து தலைவர் என் கண்முன்னாலேயே கிழித்தெறிந்தார்” என கருணா கூறியதாக சேதி வெளிவரும். சரி, இவர்கள்தான் அறியப்பட்ட சிங்களகையாட்கள் என்றால், 2009 மே மாதத்துக்கு பின்னர் இத்தகைய வாக்குமூலங்கள் பல திசைகளில் இருந்தும் பாயத்தொடங்கின. கடைசியாக வட்டுவாகல் வரை நின்றவர்கள் என்ற அடைமொழியுடன் வெளியிடப்படும் இத்தகைய வாக்கு மூலங்கள் எல்லாமே மீண்டும் ஒருமுறை தேசியவிடுதலைப் போராட்டம் எழுந்துவிடக்கூடாது, அப்படி எங்காவது சின்னதாக முளைவிட்டாலும்கூடஅது மக்களின் ஆதரவை பெற்றுவிடக்கூடாது என்பதே நோக்கமாக கொண்டவை.
இரண்டாவதாக, இந்த வாக்குமூலங்களை வழங்குபவர்கள் அல்லது வாக்குமூலங்களை வாங்கி பகிரங்கப்படுத்துபவர்கள் சிங்களபேரினவாதம் இப்போதும் தொடரும் இனப்படுகொலைகளின் தொடர்ச்சியை, ராணுவமுற்றுகைக்குள்ளான தமிழர்களின் அன்றாட வாழ்வை, பெண்கள் மீது சிங்களம் நடாத்தும் தொடர்ச்சியான பாலியல்படுபாதங்களை வெளிப்படுத்துவதை விரும்புவதே இல்லை என்பதை கவனித்து இருப்பீர்கள்.அதனை மிகமிக கவனமாக தவிர்க்கிறார்கள். அத்துடன் இத்தகைய வாக்குமூலங்களை பரபரப்பாக வழங்குவோர் அதன் அடுத்தகட்டமாக இந்த தேசியவிடுதலைக்கு வேறு என்ன மார்க்கம் அல்லது ஈழத்தமிழினம் தனது சுயநிர்ணய ஊரிமையை வென்றெடுக்க என்ன செய்யலாம் என்பதை கூறுவதே இல்லை.
வெறுமனே வன்மம், காழ்ப்பு என்ற வரையறைக்குள்ளேயே இந்த வாக்குமூலங்களை வைத்தாக வேண்டும்.வேறு என்ன இருக்கிறது அதில். தமிழீழவிடுதலைப் போராட்டம் தனதுநீண்ட பல பத்துஆண்டுகளில் இத்தகைய பலவாக்குமூலங்களை அறிக்கைகள் வடிவிலும், சுயசாட்சி வடிவிலும் கண்டுவருவதை ஒருமுறை சுருக்கமாகத்தன்னும் பார்த்தால்தான் இதன் பரிணாமம் (எவலூசன்) தெரியும்.
1981ல் மாவட்டசபைதேர்தலுடன் நடந்த மிலேச்சத்தகமான யாழ்நூலக எரிப்பு மற்றும் சிங்களபேரினவாதத்தின் பேயாட்டம் என்பனவற்றுடன் அதற்கு எதிரான எதிர்வினைகள் ஆயுதரீதியாக வேகமெடுத்த போது ‘ஆயுதங்களினால் ஒருபோதும் உரிமைகளை வென்றுவிடமுடியாது’ என்ற கருத்தில் ஒரு அறிக்கையை சிங்களதேசத்தின் பிரதமரானரணசிங்க பிரேமதாசாவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் முருகேசு சிவசிதம்பரமும் விடுத்திருந்தார்கள்.அப்போது மேற்குநாடுகளில் சுற்றுபிரயாணம் செய்துகொண்டிருந்த கூட்டணி செயலதிபரும் சிங்கள பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் யோசனையின்பேரிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக பின்னர் சொல்லப்பட்டது.
அதிகரித்துக்கொண்டே சென்றுவிட்ட சிங்களபேரினவாத வெறிச்செயல்களால் மக்கள் ஆயுதப்போராட்டஅமைப்புகளுக்கு ஆதரவு தந்துவிடுவார்கள் என்ற அச்சமே இந்த அறிக்கை வடிவிலான வாக்குமூலத்தின் நோக்கம். மிக மேலோட்டமாக பார்த்தால் ஒரு பகிரங்கமாக விடப்படும் ஒரு அரசியல்கருத்து போன்று தோற்றமளிப்பதாக இருந்தாலும் சிங்கள பேரினவாதத்தின் சூழ்ச்சியின் ஒரு வடிவமே இது.
தமிழ்மக்களின் மேலான அரசியல் மேலாண்மை தங்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு பரந்துபட்ட மக்களிடம் விடுதலைப்புலிகளால் கொண்டு செல்லப்படுகின்றது..இதனால் அரசியல் அனாதைகளாக மேடைப் பேச்சு அரசியல் ஆகிவிடும் என்ற காழ்ப்பு கொண்டிருந்த கூட்டணிதலைமையை கொம்பு சீவி விடுதலைக்கு எதிராக கருத்தியல் யுத்தம் செய்ய சிங்களம் இறக்கி விட்டதன் உச்சமே சிங்களதேச பிரதமருடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்விடுதலைக்கூட்டணி விடுத்த அறிக்கை…
இதனையே `விடுதலைப்புலிகளின் உறுதியான போராட்டமும் தமிழ்மக்கள்மத்தியில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த பேராதரவும்,அபிமானமும் பிற்போக்குவாத தமிழ் பாராளுமன்ற வாதிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்மக்களின் அரசியல்கிளர்ச்சியானது ஆயுதப்போராட்ட பரிணாமத்தை அடைந்து விட்டது என்பதனையும் தமது கட்சி அரசியல் ரீதியாக செல்லாக்காசாக மாறிவிட்டது என்பதனையும் உணர்ந்த கூடடணித்தலைப்பீடம் எமது ஆயுதப்போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை தீவிரமாக ஆரம்பித்துள்ளது’ என தமிழீழவிடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வரலாற்று ஆவணமான `விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு 1975-1984′ என்பதில் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தனித்தமிழீழமே ஒரேதீர்வு என பிரகடனப்படுத்தி அதை தேர்தலிலும் முன்வைத்து வென்ற அரசியல்வாதிகளை வைத்தேஇந்த தமிழீழம் என்ற இலட்சியத்தை பலவீனப்படுத்தும் வேலையையே சிங்களம் செய்தது.
சிங்கள சனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதாக தமிழர்விடுதலைக்கூட்டணி வெறுமனே அறிக்கை மட்டும் விட்டுவிட்டு மக்கள்மத்தியில் தேர்தலை பகிஸ்கரிக்கும்படி பெரிதாக வேலைஏதும் செய்யாமல் ஓரளவுக்கு ஜேஆருக்கு ஆதரவு நிலை எடுத்தபோதே 1982 செப்டம்பர் 29ம்திகதி ஜே.ஆர் பிரச்சாரத்துக்கு யாழ் வந்தபோது சீலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அணி ஒன்று பொன்னாலையில் கடற்படை தொடர்வாகன அணிமீது பாரிய தாக்குதல்ஒன்றை நடாத்தியது.
உடனேயே கூடடணித் தலைப்பீடம் வரிந்து கட்டிக்கொண்டு `இது ஒரு பயங்கரவாத செயல்’ என அறிக்கைவிட்டு ஜேஆரை தேற்றியது முதல் 1983 யூலையின் பின் கூட்டணி நாட்டைவிட்டு வெளியேறும்வரைக்கும் இத்தகைய குழிபறிப்பு வாக்குமூலங்களை விட்டபடியே இருந்தது.
இவர்கள் இந்தியா சென்ற பின்னர் அங்கும் இந்தியவல்லாதிக்க நலன்பேணும் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து தமிழகமக்கள் தமிழீழ விடுதலைப்போராட்டம் மீது ஒருங்குதிரண்ட கரிசனையை, ஆதரவை தந்துவிடுவதை தடுக்கும் வாக்குமூலங்களை வழங்கியபடியே இருந்தனர்.
தமிழ்மண் எங்கும் விமானக்குண்டுவீச்சுகள் நிகழ்ந்த காலத்தில, கடற்படைகலங்களில் இருந்து தமிழ்மண்மீது செறிவான எறிகளைகண் வீசப்பட்ட பொழுதில் அதைகண்டு தமிழகம் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக அந்நேரம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் சென்னைஅரசினர் விடுதியில் இருந்தபடியே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “இங்கேநாங்கள் நுளம்புகளுடன் வாழப்பழகிக் கொண்டதைப்போலவே அங்கு எம் மக்களும் ராணுவத்துடன் வாழ பழகி கொண்டுள்ளனர்” என்ற மிகமோசமான கருத்தை கூறினார்.
இதில் மோசமான இன்னொரு பக்கம் என்னவென்றால் இலக்கியம் என்ற பெயரிலும் இத்தகைய வாக்குமூலங்கள் தமிழீழ இலட்சியத்தை, அதனை முன்னெடுக்க உறுதியுடன் போராடிய அமைப்பை குறிவைத்து வெளியிடப்படுவதுதான்.
சென்ற வருடத்தில்கூட இங்கிருந்து சோனியாவின் வளர்ப்பு சு.நாச்சியப்பன் கூட்டிய கூடடத்துக்கு சென்ற முக்கியமான தூண் ஒன்று தமிழ்நாட்டில் பெரும் மாணவர்எழுச்சியை நிகழ்த்திய மாணவர் தலைவர்களுடன் நடாத்திய சந்திப்பில் “இதெல்லாம் சரிப்படாது” என்றவாக்குமூலத்தை வழங்கி அவர்களிடம் மூக்குடைபட்டதும் இத்தகைய வாக்குமூலங்கள் வெளிப்படையாக மட்டும் இன்றி மூடிய கதவுகளின் பின்பாகவும் விதைக்கப்படுகின்றன என்பதையே காட்டுகின்றது.
இப்படியே நிறைய எழுதலாம்.ஆனால் இன்றைக்கு 2009 மே மாதத்துக்கு பின்னர் எழுதி வெளியிடப்படும் வரலாறு என்ற பெயரிலான விசக்கருத்துகளும், ரத்தசாட்சியம் என்று எடுக்கப்பட்ட வாந்திகளும், போராட்டத்தில் தமது பதிவுகள் என்ற பெயருக்குள் விதைக்கப்பட்ட கோழைத்தனமான குத்தல்களும் ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. அல்லது எதிரியின் நோக்கத்தை ஈடுகட்ட உதவுகின்றன.