வடக்கிலுள்ள காணிகளை உரிமை கோரும் விண்ணப்பப்படிவமொன்றை, காணி அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இடம்பெயர்ந்த மக்கள், இரண்டு மாத காலத்துள் அப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.இலவசமாக உறுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்கிற வகையில், நில அபகரிப்பிற்கான பொறியொன்றினை விரிக்கிறது சிங்கள தேசம். இறுதிப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலங்கள் உரிமை கோரப்படாமலேயே அரச தரப்பினால் சுவீகரிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அதேவேளை, உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் காணிகள் உட்பட ,தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஏறத்தாள இரண்டு இலட்சம் தமிழ் மக்களின் காணிகளும் அரசால் அபகரிக்கப்படும் நிலை ஏற்படப்போகிறது.
ஏற்கனவெ பத்தாயிரம் ஏக்கர் நிலம், மூதூர் கிழக்குப் பகுதியில் அரசால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. மேலதிகமான திருமலை மாவட்டத்திலுள்ள 1000 ஏக்கர் காணிகளை தனியாருக்கு விற்பனை செய்து, அதிலிருந்து பெறப்படும் நிதியினை , திருமலை துறைமுக அபிவிருத்திக்கு செலவிடப் போவதாக அரசு கூறுகிறது. ஆனால் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்டால், யாராலும் அதனை தடுத்திட முடியாது.
நிதியமைச்சின் 2011 ஆண்டிற்கான அரையாண்டு அறிக்கையில், முதல் 5 மாதங்களில் மடடும் 410.7 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, 231.3 பில்லியன் ரூபாவை , ஏற்கனவே பெற்ற கடனைச் செலுத்த பயன்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்கு சீனாவிடமிருந்து 307 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்று, முதல்கட்ட பணி பூர்த்தியாகி 10 மாதங்கள் கடந்தாலும், கப்பல்கள் இன்னமும் அங்கு வரவில்லை.
துறைமுக வாயிலில் இடைமறித்து நிற்கும் பாரிய கல்லொன்றை உடைக்க, 10.3 மில்லியன் டொலர்களை கடனாகத் தருமாறு சீனாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது சிங்கள தேசம்.
தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியால் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதோடு, மகிந்தரின் இன்னுமொரு வெள்ளை யானையான மிஹின் லங்கா விமான போக்குவரத்து நிறுவனம், 73 கோடி ரூபாவை விழுங்கி விட்டது.
அத்தோட குத்தகைக்கு வாங்கப்பட்ட விமானங்களிற்கான வாடகையை செலுத்த முடியாத கையறு நிலையில் அரசு இருக்கிறது.
இவை தவிர சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கடன்களுக்கான தவணைப் பணத்தை கட்டுவதற்கும், அதிகூடிய வட்டி வீதத்தில் பெறப்பட்ட சீனக் கடன்களை மீளச் செலுத்துவதற்கும், அரசிறை முறிகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது மகிந்த இராஜதானி.
நீண்டகால முறிகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டி வீதமும் அதிகரிக்கிறது. ஆகவே கடன் வாங்கிக் கடன் அடைக்கும் வழிமுறைகள் பற்றி, தனது முழுநேரத்தையும் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் போலுள்ளது.
குடிமகன் ஒருவரின் தலைக்குரிய வருமானத்தை 4000 டொலர்களாக,இந்த வருட இறுதிக்குள் உயர்த்துவேன் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தம்பட்டமடித்த மகிந்த இராஜபக்சவின், காணிகளை விற்றுக் காசாக்கும் சூத்திரத்தை நிதி நிறுவனங்கள் புரிந்து கொள்ளும்.
தமிழர்கள் பூர்வீகமான வாழ்ந்த சம்பூர் பிரதேசத்திலிருந்து, அவர்களை விரட்டியடித்து, அங்கு அனல் மின் நிலையமொன்றினை அமைக்கும் ஒப்பந்தத்தில், இந்தியாவுடன் கடந்த 6ஆம் திகதியன்று கைச்சாத்திட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய அரசிற்குச் சொந்தமான தேசிய அனல் மின் கம்பனி(NTPC) நிறுவனத் தலைவர் அருப் ரோயும், இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலரத்ன அபேவிக்ரமும் இந்த 500 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளனர்.மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி அடத்த வருடம் ஆரம்பமாகி, 2017 ஆண்டளவில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக 250 மெகாவோட் மின் உற்பத்திக்கான நிலையம் நிர்மாணிக்கப்படுகிறது . சமபங்கு என்கிற அடிப்படையில் உருவான உடன்படிக்கையில், ஆரம்ப கட்ட முதலீடு இந்தியாவிலிருந்து பெறப்படும் போல் தெரிகிறது. இரண்டாம் கட்ட 250 மெகாவட் மின் உற்பத்தி நிலையத்திற்கான நிதியை இலங்கை அரசு வழங்காவிட்டால் அதன் முழுமையான பங்கு இந்தியாவிற்கே செல்லும் வாய்ப்புண்டு.
ஆனாலும் 300 மெகாவட் மின் உற்பத்தி செய்யும் நுரைச்சோலை நிலையத்திற்கு, கடனுதவி புரிந்த சீனா, சம்பூரில் உள் நுழையுமாவென்று தெரியவில்லை. இவை தவிர உற்பத்தியாகும் மின்சாரத்தினைப் பயன்படுத்த, தொழிற்சாலைகள் நிறுவப்படவேண்டும்.
ஆகவே வெளிநாட்ட நேரடி முதலீடுகள் இலங்கையை நோக்கி நகராவிட்டால், உள்ளுர் தேவைகளுக்கே இந்த மின்சக்தி பயன்படுத்தப்படும்.எம்மிடம் எல்லாமே இருக்கிறது, வாருங்கள் முதலீடு செய்யவென சிங்கள தேசம் கூவி அழைத்தாலும், மேற்குலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும் கடன் சுமைகளும், இந்தியா-சீனாவில் அதிகரிக்கும் பணவீக்கமும், வளர்ச்சி வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியும், பெரிய முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டு வராது.
வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை பாரிய வாழ்வாதார நெருக்கடிகளை மக்கள் மத்தியில் உருவாக்கும் போது, போர் வெற்றிப் பரப்புரை மற்றும் அனல் மின்நிலைய நிர்மாணிப்புக்கள் போன்றவை குறித்து அக்கறையற்று இருப்பார்கள் பொது மக்கள்.
பல நாடுகள் தமது உணவுப் பண்டங்களின் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவதால், உணவு தானியங்களின் விலை உலக சந்தையில் அதிகரிப்பதாக கவலையடைகின்றார் உலக வங்கியின் தலைவர்.
ஆகவே மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஆட்சியாளர்கள் மீது, மக்கள் விசனமடைவதை தடுக்க முடியாத நிலையொன்று இனி உருவாகும்.