தமிழ் மக்களுக்கு எதிரான போரினை, தமது இனவழிப்பு நடவடிக்கைகளை “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” ஆக பரப்புரை செய்து, உலக நாடுகளின் ஆதரவினைப் பெற்று வந்த சிறிலங்கா அரசாங்கம் போரின் முடிவின் பின்னர் அதன் தந்திரோபாய நகர்வாக பூகோளத்தின் வடக்கு – தெற்கு பாதிகளில் உள்ள நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை பயன்படுத்திக் கொள்ளுகிறது. இங்கு வடக்கு நாடுகளாக ஐரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளும், தெற்கு நாடுகளாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளும் வகைப்படுத்தப் படுகின்றமையை குறிப்பிடவேண்டும. தெற்கில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து. யப்பான் போன்றவை நீங்கலாக மற்றயவை அபிவிருத்தயடைந்து வரும் நாடுகள். இதற்கு மாறாக வடக்கில் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் காணப்படுகின்றன. இது இருதுருவ அரசியல் எனக் குறிப்பிட முடியாவிட்டாலும், இவ்விரு தொகுதி நாடுகளுக்கும் இடையில் சமூக-பொருளாதார, அரசியல் வேறுபாடுகள் காணப்படுவதானால் இவ்வாறான வகைப்படுத்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
விடுதலைப்புலிகளுடான போரிற்கு வடக்கு – தெற்கு என எவ்வித பேதமுமின்றி பல்வேறு நாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவிபுரிந்தன. வரலாற்றில் இது ஒரு மாறுபட்ட நிலையாகவே கருதப்பட்டது. எனினும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது நாடுகளின் கொள்கை நிலைக்கு அப்பால் சர்வதேச ஆதரவினைப் பெற்றமை இதிலிருந்து தெளிவாகிறது. போரின் பின்னரான நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது. மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வடக்கு நாடுகளால் சிறிலங்காவின் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களை, மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் தெற்கு நாடுகளில் பலவும் உள்நாட்டில் மனிதவுரிமை மீறல்களைச் செய்வதனால் மற்றய நாடுகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவதையிட்டு இவை அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையும் இந்நாடுகளில் சாதாராணமாக நடந்தேறுகிறது.
2009ம் ஆண்டு போர்முடிந்த பின்னர் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் தமக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் வெற்றி கண்டது முதற்கொண்டு கடைசியாக நடந்து முடிந்த 18வது கூட்டத்தொடர் வரை, சிறிலங்கா தன்மீதான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதில், இந்த வேறுபாடுகளை மையமாக கொண்டு தனது இராச தந்திர நகர்வுகளை மேற்கொண்டது. இதில் குறிப்பிட்டளவு வெற்றியினைப் பெற்றிருந்தபோதிலும். தொடர்ந்து இந்த உத்தி வெற்றியீட்டுமா என்பதையிட்டு, தற்போது சிறிலங்காவுக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சில மட்டங்களில் இருந்தது. இருப்பினும் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள 19வது கூட்டத் தொடரிலேயே இது விவாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக 18வது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே பரவலாகப் பேசப்பட்டது. சர்வதேச இராசதந்திரிகள் மட்டத்தில் தொடர்புகளை கொண்டிருக்கிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இவ்வாறான கருத்தினைக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்க தரப்பும் இவ்விதமான உள்ளக தகல்களை பெற்றிருந்தாலும் தமது பரப்புரைகளை மேற்கொள்ளுவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அது நன்கு பயன் படுத்திக் கொண்டது. இதற்கென யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஜெனிவாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்களுக்கு சிறிலஙகாவினால் வழங்கப்பட்ட பரப்புரை ஆவணங்கள் ஐந்து கிலோ எடையில் இருந்ததாக அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பத்தொன்பதாவது கூட்டத் தொடரில் பங்கேற்க இருக்கும் 46 (லிபியாவின் அங்கத்துவம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது) அஙகத்துவ நாடுகளில் 13; நாடுகள்மட்டுமே வடக்கைச் சேர்ந்தவை, மீதம் 33 நாடுகள் தெற்கைச்சேர்ந்தவை. தமக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பரப்புரை செய்வதன் மூலம், இந்த 33 நாடுகளில் பெரும்பகுதி தமக்கு ஆதரவளிக்கும் என சிறிலங்கா எதிர்பார்க்கிறது. இதில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஆதரவினை எதுவித சிரமுமில்லாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சிறிலங்காவிடம் உள்ளது. இந்நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் கியூபா வெனிசூலா போன்ற நாடுகள் ஏற்கனவே நடந்து கொண்டுள்ளன.
இந்நாடுகளின் ஆதரவினை அதாவது ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளின் ஆதரவினை தமிழர் தரப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களின் மத்தியில் உள்ளது ஆனால் இதன் சாத்தியத்தன்மை கேள்விக்குரியது. நாடற்ற தேசிய இனம் ஒன்று இவ்வாறான ஆதரவினைப் பெறுவதற்கு அதன் ஆதரவு நாடுகளின் உதவி தேவைப்படுகிறது.
அண்மையில் “Havana Times” இணைய சஞ்சிகைக்கு பேட்டி வழங்கிய திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தாம் ALBA (Bolivian Alliance of Peoples of Latin America) அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது குழுவினரை அனுப்பி தமது நிலைப்பாட்டை விளக்கி அவர்களுடன் தொடர்பாடலைப் பேணவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். திரு. உருத்திரகுமாரனின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறையை அவர் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர் நேர்காணல் வழங்கிய “Havana Times ” பிடல் காஸ்ரோ இன் எதிர்பாளர்களால் கியுபாவுக்கு வெளியிலிருந்து நடாத்தப்படும் அமெரிக்க ஆதரவு இணையதளம் என்பதனை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் அமெரிக்க ஆதரவு கியுப இணையத்தளத்திற்கு தான் காஸ்ட்ரோவுடன் உறவுகளைப் பேணவிருப்பதாக குறிப்பிடுவது வேடிக்கையாகத் தெரிகிறது.
ஆபிரிக்க – இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தொடர்பாடல்களை பேணக் கூடிய அமைப்புகள் எம்மத்தியில் இல்லை என்றே கூறவேண்டும். தீவிர இடதுசாரிக் குழுக்கள் இத்தகைய தொடர்பாடல்களை ஏற்படுத்த முடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மகிந்த இராஜபக்சவுடன் கரங்கோத்துள்ளன. அல்லது அவர்களது தத்துவ விவாதங்களில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் சுpறிலங்கா மீதான மேற்கு நாடுகளின் அழுத்தத்தை வடக்கு – தெற்கு வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று. வடக்கு நாடுகளின் சிறிலங்கா தொடர்பான நகர்வுகளுக்கு ஆதரவு வழங்க பலம்பொருந்திய தெற்கு நாடு ஒன்றின் ஆதவு தேவைப்படுகிறது. அதற்கு மிகவும் பொருத்தமான நாடாக இந்தியாவை தவிர வேறெந்த நாட்டையும் கருத முடியாது.
இந்திய ஆதரவினைப் பெறுவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் சாத்திய தன்மை அதிகம். சிறிலங்கா – இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் முன்னரைப்போல் வலுவானதான இல்லை என்பதனையும் அனுகூலமாகக் கொள்ளலாம். அதேசமயம் தன்னுடன் உடன்பட மறுக்கும் சிறிலங்காவை தண்டிக்க வேண்டிய நிலை ஒருபுறத்திலும் அதற்காக மேற்கின் ஆதிக்கத்தை தனது பிராந்தியத்தில் விடமுடியாதநிலை மறுபுறத்திலுமாக இருதலைக் கொள்ளி நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது. இருப்பினும் இந்தியா தமக்கு ஆதரவு வழங்கும் என்பதனை உறுதியாக நம்பும் சிறிலங்கா. அந்த நம்பிக்கையை தகர்க்கக்கூடிய காரணிகளாக இனங்கண்டிருப்பவையை தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் குறித்துக் கொள்ளவது உபயோகமானதாகக இருக்கும். தமிழ் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தினையும், சிவில் அமைப்புக்கள் மற்றும் கல்வியாளரகளால் ஏற்படுத்தப்படும் கருத்துரவாக்கத்தையும் தமக்கு எதிராக இந்தியாவை திரும்ப வைத்துவிடும் என சிறிலங்கா தரப்பினர் அச்சபபடுகிறார்கள். இந்திய அதிகார மையம், ஆளும் சோனியா காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைக் கடந்து இங்கு இனங்காணப்பட்ட தரப்புகளுடன் நல்லுறவை வளர்ப்பது இன்றியமையாதது.
ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விடயத்திலும், பொதுவாக மேற்கு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் விடயத்திலும் சிறிலங்காவின் தற்போதைய இராசதந்திர அணுகுமுறை அனுமானிக்கக் கூடியதாக உள்ளது. இன்னொறுபுறத்தில் சிறிலங்காவின் முன்னால் அதிக தெரிவுகள் இல்லை என்பதனையும் நாம் அறுதியிட்டு கூற முடியும். தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகள் இந்த நடைமுறை யதார்த்தத்தின் ஒட்டியதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.