கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து, நாளை (செப்ரெம்பர் 21) நடைபெறவுள்ள பிரிக்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றியீட்டும் என அனுமானிக்க முடிகிறது. இத்தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும், என்பதனைக்காட்டிலும் தமிழ்பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ்மக்கள் மிகுந்த தெளிவாக இருப்பதனால்கூட்டமைப்பின் வெற்றி இலகுவானதாக அமையவுள்ளது எனக் குறிப்பிடமுடியும். தேர்தல் பரப்புரைகளில் சில நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைகூட்டமைப்பின் தலைமைப்பீடம் வழங்கியுள்ள போதிலும், இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் கூட்டமைப்பு பெரிதாக எதனையும் சாதிக்கப்போதில்லை என்பதனை பெரும்பாலான தமிழ்மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும், தேர்தலின் பின்னர், தாம் எதிர்நோக்குகின்ற இராணுவ நெருக்குவாரங்கள் குறையலாம், எதேச்சதிகாரம் கொண்ட இராணுவ அதிகாரியான மாகாண ஆளுனரின் கட்டற்ற அதிகாரங்கள் குறைக்கப்படலாம் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருக்கிறது.
தமிழ்ப்பிரதேசங்களைப் பொறுத்தமட்டில், இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாளிலிருந்து இன்றுவரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களும், அரசியல் உரிமைக்கும் – அரச சலுகைகளுக்கும் இடையிலான போட்டியாகவே அமைந்திருந்தன. தமிழ் மக்களும்உரிமைகளைக்கோரி தேர்தலில் நிற்பவர்களுக்கே ஒரு தேர்தல் தவறாமல் வாக்களித்து வந்துள்ளார்கள். இன்றைய மாகாணசபைத் தேர்தலிலும் இதேநிலையே காணப்படுகிறது.
தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் கண்ட பெரும் பின்னடைவுகளும், மக்களுக்கு ஏற்பட்ட பேரவலங்களும் அவர்களின் இலட்சிய உறுதியில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை.
தேர்தல் முடிவுகளை இவ்வாறு இருக்குமெனஎதிர்பார்த்தாலும், இங்கு வெளிப்படும் செய்திவெளித்தரப்பினரால் எவ்வாறு உள்வாங்கப்படப்போகிறது என்பதையிட்டு நாம் அதிக கவனம்செலுத்தவேண்டியுள்ளது. கூட்டமைப்பு கூறுவதுபோல், அவர்களது வெற்றி சர்வதேச ஆதரவைப்பெற்றுத்தருமா அல்லது அதிகாரமற்ற மாகாணசபை முறைமைக்குள் தமிழரசியலை முடக்குமாஎன்பதுதான் இன்று எம்முன் உள்ள விவாதமாகஇருக்க வேண்டும். இது சிறிலங்கா அரசாங்கம்,மனிதவுரிமை, சனநாயகம், நல்லாட்சி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற உள்நாட்டு விவகாரங்களிலும், சர்வதேச உறவுகள்விடயத்திலும் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதிலேயே பெருமளவு தங்கியிருக்கிறது.
சிறிலங்காவின் சனாதிபதி, உட்பட மந்திரிப்பிரதானிகளின் வடக்கு நோக்கிய படையெடுப்புகளும், சலுகைகள் பற்றிய அறிவிப்புகளும், விரைந்து மேற்கொள்ளப்படும் உள்ளக கட்டுமான சீரமைப்புகளும் தமிழ் மக்களின் மனங்களைவெல்லப் போவதில்லை என்பதனை மீளவும் ஒரு தடவை உறுதிப்படுத்துவதாக தேர்தல் முடிவுகள்அமையும் என எதிர்பார்க்கலாம். இது சிறிலங்காஅரசதரப்புக்கு மட்டுமல்ல, தாராண்மைவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் கொழும்பு மேட்டுக்குடியினருக்கும் உவப்பான ஒரு விடயமல்ல.ஆனால் இதனை முன்கூட்டியே அனுமானித்திருந்தமையால், ஏனைய எட்டு மாகாணசபைகளிலும் ஆட்சியை கைப்பற்றியிருந்த ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமது கூட்டணிக் கட்சிகளினால் வடமாகாணசபையினை கைப்பற்ற முடியாதுஎன்ற முடிவுக்கு வந்திருந்தது. அதனால் தம்மால் முடிந்தவரை தேர்தலைப் பிற்போட்டு வந்தது. ஈற்றில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து தேர்தலை நடாத்த முன்வந்தது.
2012 மார்ச் மாதம் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த சிறிலங்கா தொடர்பானதீர்மானத்தில் வடமாகாண சபைக்கான தேர்தலைநடாத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை கோரப்பட்டிருந்தது. இவ்வருடம் மார்சில் கொண்டுவரப்பட்டதீர்மானத்தில், செப்ரெம்பரில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடாதப்படவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தமையை வரவேற்றிருந்தது. தவிரவும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தலை நடாத்த வேண்டும் என இந்தியாவும் வலியுறுத்தி வந்தது. வெளிநாட்டு அழுத்தங்களினால் இத்தேர்தல் நடாத்தப்படுகிறது என்பதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளிச் சக்திகளுக்கு பணிந்து போவதனை அவதானிக்கலாம்.
உள்நாட்டுப் போர் நடைபெற்ற நாடுகளில், ஜனநாயகப்படுத்தலின் ஒரு அங்கமாக தேர்தல்கள் நடாத்தப்படுபடுவதன் அவசியத்தை மேற்குலகம் அண்மைக் காலமாக வலியுறுத்தி வருகிறது. அத்தேர்தல்கள் முறையாக நடைபெறுவதற்காக பெருந்தொகையான பணத்தை மேற்கு நாட்டு வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனங்கள் (International Development Agencies) செலவிட்டு வருவதனையும் காண முடிகிறது. ஆகவே மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்ற மேற்குலகத்தின் கோரிக்கையானது, குறித்த பிரதேச மக்களின் ஜனநாயக உரிமைகள் பேணப்படுதல் என்ற தலைப்புக்குள் அடங்குமே அல்லாமல் இதனை தமிழர்களின் அரசியல் உரிமைகளுடன் தொடர்புபட்டது என எடுத்துக் கொள்ள முடியாது.இருப்பினும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்நடவடிக்கை துணை புரியுமானால், இது தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும்.
தேர்தல் புறக்கணிப்பு
மாகாண சபைகளை அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவாவது ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதமிழ் தேசியவாதிகளின் கருத்தாக அமைந்திருந்தது. இத்தேர்தல் தொடர்பாக தமது கருத்தினைவெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இவ்விடயத்தில் மிக உறுதியாக இருந்து வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாதது மட்டுமல்லாமல் தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது அது ஒதுங்கியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாது, புத்திஜீவிகள் அடங்கிய ஒரு சுயேட்சை குழுவினை நிறுத்த வேண்டும் என தமிழ் குடிசார்சமூகப் பிரதிநிதிகள் ஆலோசனை வழங்கியிருந்தபோதிலும், கூட்டமைப்பு அதனைஏற்றுக்கொள்ளவில்லை.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பிரதேசத்தில், தேர்தல் புறக்கணிப்பு எதிர்பார்த்த பலனைத்தரப்போவதில்லை என்பதனை தமிழ்த் தேசியவாதிகள் உணர்ந்து கொண்டமையினால் புறக்கணிப்புகோரிக்கை முன்வைக்கப்படவில்லை. யாழ் மாநகரசபையின் அதிகாரம் சிறிலங்கா அரசதரப்பிடம் உள்ளமையினால் ஏற்படும் எதிர்மறையானநிலையை கருத்திற் கொண்டால், தமிழ்ப்பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு அதிகார அலகினையும் தமிழ்த் தேசிய சக்திகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் அவற்றை நிர்வகிக்கவும், இவ்வாறு பெறப்படும் மனிதவலுவை விடுதலைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் அவை தவறி வருகின்றன என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
நல்லிணக்க முயற்சிகள்
தேர்தல், ஜனநாயக முறையை நடைமுறைப்படுத்துதல், நல்லாட்சி என்பவற்றிற்கு அப்பால், நீண்ட நோக்கில், இலங்கைத் தீவில் உள்ள இனங்களுக்குகிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற விடயத்தில் மேற்கத்தைய அதிகாரங்கள் அதிக சிரத்தை எடுத்துச் செயற்படுகின்றன. தனித்துவமான இன அடையாளங்களைக் கடந்து பொதுவான `சிறிலங்கன்’ அடையாளத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களில் மேற்குலக அமைப்புகள் வெளிப்படையாக ஈடுபட்டுவருகின்றன. வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி-மூன்இத்தேர்தல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய சந்தர்ப்பம்எனக் குறிப்பிட்டுள்ளமை மேற்கின் நோக்கத்தினைவெளிப்படுத்துகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தை ஏற்படுத்துவதனைபற்றி குறிப்பிட்டிருக்கிறது. இம்முயற்சியில், தேசியவாத செயற்பாடுகளை முடக்குவதும் அடங்குகின்றது என்பதனால், கூட்டமைப்பினர் சமயம் கிடைக்கும்போதெல்லாம், தேசியவாத சக்திகளான தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகளையும், புலம்பெயர் அமைப்புகளையும் தமது உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் எனக் கூறிவருகின்றனர். வெளியாரின் ஆலோசனையில் கூட்டமைப்பின் தலைவர்கள் இவற்றைக் கூறிவந்தாலும், மக்களும் அவர்கள் மத்தியில் பணிபுரியும்பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கருத்துகளையிட்டு சினம் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறத்தில், கூட்டமைப்பிற்கு தமது ஆதரவினை தெரிவித்து வந்த (சிங்கள) தாராண்மைவாதிகள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையிட்டும், தேர்தல் மேடைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்து வரும் தேசியவாதக் கருத்துகளையிட்டும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கைத் தீவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.