வதைபடும் மக்களும், போலிகளின் ஊர்வலமும்

453

”ஈழத்தைக் கைவிட்டால், சனாதிபதி முறைமையை  ஒழிக்கத்தயார்”….. இப்படிச் சொல்பவர் யார்?.

அவர் வேறு யாருமல்ல. 18 வது திருத்தச் சட்டத்தினூடாக மூன்றாவது முறையாக சனாதிபதியாக வர விரும்புகின்ற மகிந்த ராஜபக்சவே இதனைக் கூறுகின்றார்.

இலங்கையில் ஈழத்தைப்பற்றி பேசமுடியாதவாறு, 83 இல் கொண்டுவரப்பட்ட 6 வது திருத்தச் சட்டம் விலங்கிட்டு விட்டது.

வடமாகாணசபையானது ஆண்டுவிழா காணும் இந்நேரத்தில், ஈழம் கேட்பதால்தான் நிறைவேற்று சனாதிபதி ஆட்சி முறை இருக்கிறதென்று மகிந்த ராஜபக்ச கூறுவது, நிழலோடு யுத்தம் புரிவது போலுள்ளது.

சனாதிபதி ஆட்சியை அகற்றுவேனென, சனாதிபதி தேர்தலில் குதித்து வென்ற எவருமே அந்த முறைமையை ஒழிக்கவில்லை. ஏனெனில் அந்த அதிகாரத்திற்கு அவ்வளவு மகாசக்தி.

இலங்கையிலுள்ள எந்தத் தமிழ் தேசியக் கட்சிகளும், ஒரு தேசிய இனத்தின் அதியுயர் பிறப்புரிமையான பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையைக் கோரவில்லை.

அதுமட்டுமா… ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவும், சுப்பிரமணிய சுவாமியைத் தூதனுப்பும் இந்தியாவும் இதனைஏற்கவில்லை.

ஆனாலும் இலங்கையில், இரு இறைமையுள்ள தேசங்கள் (NATION) இணைந்த கூட்டாட்சியை, கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை, இந்தியாவிற்குச் சென்று திரும்பியவுடன் 13 வது திருத்தச் சட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள். அரைகுறையாக இருப்பதை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்கிறார்கள்.சிலர் சமஸ்டியே தீர்வென்கிறார்கள். முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமையை ஏற்றுக்கொண்ட சமஸ்டியா? என்று கேட்டால், அதனைபேச்சுவார்த்தை மேடையில் பார்க்கலாம் என்கிறார்கள்.

சென்ற வாரம் இலண்டனில் நடைபெற்ற சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய மாநாட்டில் பேசிய கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள், கூட்டமைப்பின் தீர்வு என்னவென்று தனக்கும் தெரியவில்லை என்றார். அத்தோடு 13 இல் ஒன்றுமில்லையென்று தெளிவாகச் சொன்னார்.

அதேவேளை, தாங்கள் பிரிவினையை கோரவில்லை என்று நீதிமன்றத்திற்கு சத்தியக்கடதாசியும் கொடுத்து விட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

யாழ். மே தினக் கூட்டமொன்றில், சிறி லங்காவின் தேசியக் கொடியையும் உயர்த்திக் காட்டி விட்டார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வினைத் தேடுகிறோமென, தமிழரசுக் கட்சியின் வெளியுறவுத்துறைப் பேச்சாளர் ஆ.யு. சுமந்திரன் அவர்கள் மூச்சிற்கு முன்னூறு தடவைகள் கூறிவிட்டார்.

கூட்டமைப்பின் பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர்கள் சம்பந்தன் முன்னால் பதவிப்பிரமாணம் செய்த போது, நல்லிணக்க – அடிபணிந்த – அபிவிருத்தி அரசியலின்படி, மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்சவின் முன்னால் நின்று, குடும்ப சமேதராக சத்தியப் பிரமாணம் செய்தார் விக்கினேஸ்வரன் அவர்கள்.

இவ்வாறாக, மக்களின் அங்கீகாரம் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, தமிழரசுக் கட்சி ( கூட்டமைப்பு) எப்போதோ கைவிட்டு விட்டது. அவர்களைப் பொறுத்தவரை அது கெட்ட கனவு.

அதேவேளை, 2009 இற்கு முன்னர் `சிங்களம் திருந்தாது’ என்று தத்துவ விளக்கமளித்தவர்கள், இப்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் பக்குவத்தைப் பெற்றுள்ளனர். இந்தியாவும், அமெரிக்காவும் ஈழ மக்களின் இரட்சகர்கள் என்று கூறிப் புதிய அவதாரமெடுத்துள்ளார்கள்.

இவையெல்லாவற்றையும் மறந்த, அல்லதுகருத்தில் கொள்ளாத சனாதிபதி, ஈழத்தை கை விட்டால் சனாதிபதி நாற்காலியை உடைக்கின்றேன் எனக்கூறுவது முழங்காலிற்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவது போலுள்ளதென சாமான்ய மக்களும் கேட்கின்றனர்.

இதில் வேடிக்கையான பகுதி என்னவென்றால், இந்தியா கொடுத்த காசிற்காக `யாழ்தேவியையும் ஆரம்பித்து வைக்க வேண்டும். அதேவேளை தமிழ் மக்களுக்கு தான் ஒன்றும் செய்யவில்லையென்று பௌத்த சிங்களப் பேரினவாதிகளுக்கும் கூற வேண்டும். இந்த அங்குரார்ப்பன வைபவங்களில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததும், மகிந்தருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஆக மொத்தம் இந்தியாவிடமும், சிங்கள மக்களிடமும் நல்ல பெயரைச் சம்பாதித்து விட்டார் மகிந்த ராஜபக்ச.

யாழ் தேவியை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசென்ற சனாதிபதி, பாண் கி மூனிற்கு உறுதியளித்த 13 வது தீர்வுப் பொதியைக் கூட சுமந்து செல்லவில்லை.

இந்திய 13 இலுள்ள காணியுரிமை தன்னிடமே உள்ளதென, கிளிநொச்சியில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்தில், மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் சிலவற்றை மீள அளிக்கும்வைப்பவத்தில் தமிழில் பேச முயற்சித்துள்ளார்.

கூட்டமைப்பினை வைக்கோல்- நாய் கதைக்கு ஒப்பிட்டு, ஒரு பியோனைக்கூட நியமிக்க முடியாமல் அல்லாடும் வடமாகாண சபையின் நிஜத்தோற்றத்தை மூடி மறைத்தார் சனாதிபதி.

மாகாணசபைக்கு , 13 வது திருத்தச் சட்டத்திலுள்ள குறைவான காவல்துறை அதிகாரத்தையாவது தாருங்கள் எனக் கேட்டால், இராணுவத்தில் தமிழ் இளையோரைச் சேர்க்கின்றோம் என திசை திருப்பல் விளையாட்டில் ஈடுபடுகிறது இப்போதைய அரசு.

காவல்துறை உரிமை கோரலுக்கு, மகிந்தர்போட்ட `செக்மேட்’ தான் இராணுவ ஆட்சேர்ப்பு.

13 தான் சர்வ ரோக நிவாரணி என்று தாளம் போடும் சோனியா முதல் மோடிவரையான இந்தியத் தலைவர்களும், ஐ.நா.சபைத் தீர்மானத்தில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தும்படி நாண்டு கொண்டு நின்றவர்களும், குறைந்தபட்சம் இதுபற்றிக்கூட பேசுவதில்லை.

இவற்றுக்கு அப்பால், இன்னொரு சர்வதேசப்படமொன்றும் வடக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அங்கு கூட்டமைப்பினரைச் சந்தித்த அமெரிக்கப்பிரதிநிதிகள், ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு நன்மை உண்டா? என்று கேட்டுள்ளார்.

அமெரிக்க வற்புறுத்திய மாகாணசபையால் எதுவித பிரயோசனமும் இல்லாமல் கடுப்பில் இருக்கும் கூட்டமைப்பினருக்கு, அமெரிக்க கருத்துக் கந்தசாமிகளின் `நோட்டம்’ எரிச்சலைக் கொடுத்திருக்கும்.

அதேவேளை 13+ இற்கும் 13- இற்குமிடையேபூச்சியம் இருப்பதை பலர் மறந்தாலும் ஆட்சி மாற்ற நாயகன் இரணில் மறக்கவில்லை. ஆதலால்தான், வெற்றி பெற்றால் பூச்சியமான 13 ஐ நிறைவேற்றுவேன் என்கிறார்.

தானே சனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்கப்போவதாக பிரகடனம் செய்துள்ள இரணிலை ஆதரிக்கும் மன நிலையில், கூட்டமைப்பினர்உள்ளார்களாவென்று ஒபாமா நிர்வாகம் அறிய ஆவல் கொண்டுள்ளது. அதுதான் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற `யாழ் தேவிபி பயணம்.

தமது புதிய பயணத்திற்காக, சரத் பொன்சேக்காவை ஏன் ஆதரித்தோமென்று இப்போதுவிளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் கிழக்குக் கூட்டமைப்பினர். இனிவரும் தேர்தலில் யாரையோ ஆதரிக்கப் போவதற்கான முன்னுரையாக இது இருக்கும்போல் தோன்றுகிறது.

இந்த சனாதிபதி தேர்தல் மேடையில் இன்னொரு தமிழ் – சிங்கள புரட்சி நாயகன் ஏறப்போவதாக செய்திகள் வருகின்றன. அவருக்கு ஆதரவாக, புலம்பெயர் அமைப்புக்களை கருத்தியல் ரீதியாக ஒன்று திரட்டும் பணியும் ஆரம்பமாகிவிட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இக்களத்தில் குதிக்கப்போகிறார் ஜே.வி.பியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவருமான குமார் குணரெட்னம்.

வழமை போன்று பிரதான தேசிய இன முரண்பாட்டினை இரண்டாம்பட்சமாக்கி, தத்துவார்த்தரீதியாக பேசுவதுபோல் பாவனை காட்டும் பெரும்பாலான இலங்கை இடதுசாரிகளின் வரிசையில் இவரையும் சேர்க்கலாம்.

தமிழ்த் தேசிய இனத்தின் பூரணமான சுயநிர்ணய உரிமையை தமக்கேற்றவாறு வளைத்தும் – நெளித்தும், அதேவேளை தென்னிலங்கை மக்கள் மத்தியிலுள்ள கட்டமைக்கப்பட்ட சிங்கள மேலாதிக்க பேரினவாத சிந்தனைப்போக்கினை மாற்ற இயலாமலும், ஒட்டுமொத்த புரட்சிக்கனவில் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவதை இவர்கள் வேண்டுமென்றே அனுமதிக்கிறார்களா என்று கேட்கத்தோன்றுகிறது.

`17 இல் தோழர் லெனின் தலைமையில் நிறைவேற்றிய சோசலிசப் புரட்சியை,
2014 இல் சீனா அறுவடை செய்கிறது.’
என்று கவிதை எழுத வேண்டும் போலிருக்கிறது.

– இதயச்சந்திரன்