வலுப்பெறும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை

628

ஸ்கொற்லாந்து வாக்கெடுப்பு முடிவிற்கு வந்து கொண்டிருக்கிற மாலைப்பொழுதில் இக்கட்டுரை எழுதப்படுவதனால், அனைத்துலக அரங்கில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை எவ்வாறு வலுப்பெறுகிறது என்பதனை விளக்குவதற்கு அவசியம் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களாகவே பிரித்தானிய மைய ஊடகங்களும் பன்னாட்டு ஊடகங்களும், ஐக்கிய இராட்சியத்திலிருந்து ஸ்கொற்லாந்து பிரிந்து செல்வதா, இல்லையா என்பது பற்றி பல்வேறு ஆய்வுகளையும், கருத்துகளையும் வெளியிட்டு வந்தன. இவற்றுள் பெரும்பாலான கட்டுரைகள் ஸ்கொற்லாந்து தனிநாடாக பிரிந்து செல்வதால் அப்புதிய நாடு எதிர்நோக்கவிருக்கும் பொருளாதார, மற்றும்பாதுகாப்புப் பிரச்சனைகள், ஐக்கிய இராட்சியத்தின் ஏனைய பகுதிகளிற்கு ஏற்படவிருக்கும் அனுகூலங்கள், பாதிப்புகள் பற்றியதாகவே அமைந்திருந்தமையைக்  காணலாம். கருத்து வழங்கியவர்கள் ஆம், இல்லை என வாக்களிக்க வேண்டும்என்ற விடயத்தில் இரண்டு முகாங்களாகப் பிரிந்திருந்த போதிலும், ஸ்கொற்லாந்து மக்களின் எதிர்காலத்தை அத்தேசத்தின் மக்களே தீரமானிக்க வேண்டும் என்பதில் எல்லாத்தரப்பினரும் உடன்பட்டனர். இன்னொரு வகையில் கூறுவதானால்ஸ்கொற்லாந்து மக்களின் சுயநிரண்ய உரிமை ஐக்கிய இராட்சியத்தினாலும், மற்றைய தரப்புகளினாலும் ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது. இந்த விடயத்திலேயே ஈழத்தமிழ் மக்கள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

ஸ்கொற்லாந்தினை உதாரணமாகக் கொண்டு ஸ்பானிய நாட்டின் கற்றலோனிய இன மக்கள், பெல்ஜியம் நாட்டின் கூட்டாட்சி முறைக்குள் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் பிளெமிஸ் இன மக்கள், டச்சு மொழி பேசும் பிளான்டர்ஸ், இத்தாலியின் வெனிஸ் மற்றும் வெரோனா நகரங்களை உள்ளடக்க்கிய வெனெற்றோ பிரதேச மக்கள் என ஐரோப்பாவில் உள்ள சில தேசிய இனமக்களும் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, இவ்வாறான வாக்கெடுப்பினை நடாத்துமாறு கோருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையை கருத்திற் கொண்டு இது தேசியஇனங்களின் சுய நிர்ண்ய உரிமைக்கான காலம் எனச் சிலர் வர்ணித்தாலும், குறிப்பாக வளர்ச்சியடைந்த மேலை நாடுகளிலேயே  இவ்வாறு நடைபெறுகிறது என்பதனைக் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

நீண்ட நெடுங் காலமாக தமக்கென ஒருநாட்டினை உருவாக்குவதற்காகப் போராடிவரும் நாடற்ற மிகப்பெரிய தேசிய இனமான குர்திஸ் இன மக்கள், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் திபெத்திய இனமக்கள், பாக்கிஸ்தானின் எல்லைக்குள் உள்ள பலூச்சிய இன மக்கள். காஸ்மீரிய மக்கள் போன்றவர்களது விடயத்திலும் ஸ்கொற்லாந்து வாக்கெடுப்பு புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்த இந்த ஐந்தாண்டுகாலத்தில் ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தேய்மானத்தை அடைந்திருக்கிறது அல்லது அக்கோரிக்கை அதன்உள்ளார்ந்த அர்த்த்த்துடன் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதனை இவ்விடயத்தில் ஆர்வமுள்ள தரப்புகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. சுய நிர்ணய உரிமைக்கோரிக்கையை மீள நிலை நிறுத்துவதற்கான வாய்பாக இத்தருணத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

1707ம் ஆண்டில் தாமாகவே இணைந்து கொண்ட ஸ்கொற்லாந்து மக்களுக்குரிய சுயநிர்ணய உரிமையைப் போன்றே வலிந்து ஒற்றையாட்சிமுறைக்குள் இணைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்திற்கும் சுயநிர்ணய உரிமை உரித்தானது. இதனை உள்ளகம், வெளியகம் என்று வரையறை செய்ய முடியாது. இவ்வுரிமையை மறுதலித்து, பிரிந்து செல்லும் கருத்தினை சட்டவிரோதமாக மாற்றியிருக்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. இதனைத் அரசியல் தலைமைகளே ஏற்றுக்கொள்ள மறுக்கும் புறச்சூழலிலேயே, தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது.  இன்னொருபுறத்தில், தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என ஏற்றுக்கொள்ள மறுக்கும் வெளித்தரப்புகளின் நிலைப்பாட்டை மறுதலிக்கமுடியாது ஏற்றுக்கொண்டு அவர்களது ஆதரவுடனேயே தமக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்அரசியல்த்தரப்புகளில் ஒருபகுதியினர் விழைகிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துதாகக் கூறும் அரசியல் அமைப்புகள் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை தெளிவாக முன்வைக் வேண்டும் எனக் கடந்த முறை இப்பத்தி வலியுறுத்தியிருந்தது. சென்னையிலிருந்து வெளியாகும் ‘The Hindu’ பத்திரிகை கடந்த சனியன்று (செப்ரெம்பர் 13) தனது ஆசிரியர் தலையங்கத்தில் இக்கருத்தினை ஒத்ததானதொரு கருத்தினை வெளியிட்டிருந்தது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு `ஆகக்கூடிய அதிகாரப்பரவலாக்கம் (maximum devaluation)’ என்று வரையறை எதுவுமின்றிக் கூறுவது பிரச்சனைக்குரியது என அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கு ‘The Hindu’ இன்நோக்கம் வேறுவிதமானது. `ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கம்’ என்ற கோரிக்கை பதின்மூன்றாம் திருத்தத்தை நிராகரிப்பதாக அமைந்துவிடுமோ என்ற இந்தியக் கண்ணோட்டத்தில் அத்தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதேசமயம், பதின்மூன்றாம் திருத்தப்படிஅமைந்த மாகாணசபைகளின் முழுமையான வடிவத்தையே `ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கம்’ என கூட்டமைப்பினர் கூறுகிறார்களோஎன நாம் ஐயப்படவேண்டியுள்ளது. பதின்மூன்று, பதின்முன்று பிளஸ், சுயாட்சி, சமஸ்டி என இடத்துக்கிடம் ஒன்றைக் கூறாமல் எத்தகைய தீர்வுதேவை என்பதனை வெளிப்படுத்தும் வகையில்ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயம் அறியும்வாக்கெடுப்பு நடாத்த வேண்டியதன் அவசியத்தைஇவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படும்எல்லாத் தமிழ் அமைப்புகளும் தமது முதன்மைக்கோரிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதற்கான ஜனநாயகத் தளத்தினை ஐக்கியஇராட்சியம் ஸ்கொற்லாந்து வாக்கெடுப்பு மூலம் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்கள்

செப்ரெம்பர் 5, 6, 7ம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டின் முடிவில் பதினைந்து தீர்மானங்கள் கொண்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் அரசியல் கொள்கைகளை (இதனை கூட்டமைப்பின் கொள்கைகளாகவும் பார்க்க முடியும்) இத்தீர்மானங்கள் வெளிப்படுத்துவதால், அதற்குரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் ஒன்றுக்கொன்று முரணான வகையில் தெளிவான விளக்கங்கள் அற்ற வகையில் இத்தீர்மானங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் இவ்வகையான குழப்பமான (ambiguous) அறிக்கைகளே கூட்டமைப்பின் தனிச்சிறப்புப் போலிருக்கிறது.

முதலாவது தீர்மானம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு இணைந்த சுயாட்சி அலகு ஓன்று ஏற்படுத்தும் வரை தாம் தமது போராட்டத்தை தொடர இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சுயாட்சி அலகு பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில், பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு உட்பட்டதாக அமையவேண்டும் எனக் கூறுப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டால், தாம் எவ்வாறான தீர்வினை வேண்டி நிற்கிறார்கள் என்பதனையும், அது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இருக்குமா இல்லையா என்பதனையும் தமிழ் மக்களே தீர்மானிக்கும் உரிமையுடையவர்களாக இருப்பார்கள். இதில் வரையறைகளை யாரும் போட முடியாது. வேண்டுமானால் அவ்வாறான தொரு வாக்கெடுப்பில், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை ஐக்கிய இலங்கையை ஆதரித்து பரப்புரை செய்து தமது சிறிலங்கா தேசியப்பற்றினை வெளிப்படுத்த முடியும்.

இரண்டாவது தீர்மானத்தில், முடியுமானவரைஆகக்கூடிய அதிகாரப்பகிர்வினை ஏற்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்படும் புதிய அரசியல்அமைப்பு ஏற்பாடுகளின் மூலமே இனங்களுக்கிடையிலான மோதல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே தீர்மானத்தில் சிறிலங்கா அரசாங்கம் இந்திய – இலங்கை உடன்படிக்கையைமீறவிடாது பார்க்குமாறு இந்தியாவையும், சர்வதேச நாடுகளையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தினை முழுமையாக அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதின் மூன்றாம்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் பற்றி, இன்னமும் சரியாகச் சொன்னால் அதிகாரமின்மை பற்றி நன்கறிந்திருந்தும், இந்தியாவைத்திருப்திப்படுத்துவதற்காக பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக அமுலாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தீர்மானத்தில் சிறிலங்காவினது இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு எல்லா சர்வதேச நாடுகளையும் இந்தியாவையும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இனவழிப்பு நடைபெறுகிறது என்பதனைக் குறிப்பிடும் விடயத்திலும் ஒரு குழறுபடியான நடைமுறையையே கூட்டமைப்பு கடைப்பிடித்து வருகிறது என்பதனை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது.

வெளித்தரப்புகளின் `புத்திமதிகளைக்’ கேட்டுநடக்கும் தமிழர் தலைமை, தமது மக்களின்அபிப்பிராயத்தை அறிய என்ன நடவடிக்கைஎடுக்கப் போகிறது?