வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், என்கிறது கண்ணதாசனின் பாடல்கள். மூளைக் கோளாறு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சுக்குறைபாடுகள், நடக்கமுடியாத கால்வலு குறைவு, மூக்கு, விரைவாக கிரகிக்க முடியாத மூளைத்திறன் குறைபாடு எல்லாமே வலுக்குறைந்தோருக்குள் அடக்கப்படுகின்றனர். அங்கக் குறைபாடுகள் உள்ளவர்கள் வாழ நினைத்தாலும், எமது தாயகபூமியில் வாழ முடியுமா? ஆனால், குறித்த இந்த குறைபாடுகள் உள்ளவர்கள், வீதிகளில் விசரர்களாக, பிச்சைக்காரர்களாக அலைவதை நாம் காணமுடியும். இங்கிலாந்து உட்பட மேலைநாடுகளில் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான பள்ளிகள், தனிக்கவனிப்பு, தனிமையான ஒலிம்பிக் போட்டி கூட ஏற்பாடு செய்யப்பட்டதைப் பார்த்தோம். எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பை தருபவர்களாக கூட இவர்களை மேலைநாடுகளில் அவதானிக்க முடிகிறது. 600,700 ஆண்டுகளாக தாயக தேசத்தை ஆக்கிரமித்திருந்த மேலைநாடுகள் மூல வளங்களை ஏற்றுமதிக்காக இயற்கை உற்பத்தி வாய்ப்புகளை அரிதாகக் கொண்டிருந்த இந்த மேலைநாடுகள் இப்பொழுது, வலு இழந்தோருக்கான வாழ்வைத் தருகின்றன. ஆனால், வலுவிழந்த நாடுகளாகத் தான் இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகள் இன்னமும் இருக்கின்றன.அங்கே, இதே வலுவிழந்தோர் குருடர்கள், செவிடர்கள், சொத்திகள், விசரர்கள், பழசு, கிழடு என்று கேலிகளோடு கைவிடப்பட்டவர்களாக தான் வீதிகளில் திரிகின்றார்கள், ஒரு பழைய நினைவு……
மல்லாகம், தெல்லிப்பளைப் பகுதிகளில் அந்த நாட்களில் வீதிகளில் திரிந்தவள் நாய்க்குட்டி விசரி, படித்த பட்டதாரிப் பெண்மணி என்று கூறுவார்கள். மாப்பிள்ளை பேசி வந்தபோது இவனைக் கட்டுவதை விட நாயைக் கட்டலாம் என்று சொன்னதால் நாய்க்குட்டி மேல் செய்வினை சூனியம் செய்ததாக சிறுவர்களாக இருந்த எமக்கு சொல்லப்பட்ட கதை, எந்த நேரமும் தலையில் ஒரு பெட்டி. அதில் பாதுகாப்பாக மூன்று, நான்கு நாய்க்குட்டிகள், வளர்ந்த ஓடியாடித் திரியும் நாய்க்குட்டிகளை இவரோடு என்றுமே காணமுடியாது. வீடுகளில் நாய்க்குட்டிக்கு என்று உணவை கையேந்தி வாங்கி, தானும் உண்டு செல்லும் பெண்மணி இவர். அழகான பருமனான ஆனால், விசரால் அலங்கோலமான பெண்மணியாகத் தான் வீதிகளில் காணமுடிந்தது. கண் தெரியலையோய் என்று கத்தியபடி இரு கைத்தடிகளை இரு கைகளில் ஏந்தியவாறு, மிக மெலிந்த தோற்றத்தோடு பிச்சை கேட்டுக் கொண்டு திரியும் இன்னொரு தாடிக்காரன். பஸ் தரிப்புகளில் பிரதான பஸ் நிலையங்களில் பிச்சை ஏந்தி திரிகின்ற அலங்கோல கோலம் கொண்ட விசரர்கள், விசரிகள் என்று எத்தனை வலுவிழந்தோரை பார்த்திருக்கின்றோம்.
கிளிநொச்சி தொடர்பான இன்னுமொரு பழைய நிகழ்வு. அந்த இளைஞனுக்கு 25 வயதிருக்கும், கிழிந்த சார சண்டிக்கட்டோடும் அதேபோன்ற சேட்டோடும் கறுத்த தாடி மீசையோடு காட்சியளிக்கும் ஒருவர். விசரன், பைத்தியகாரன் என்ற அடைமொழியோடு அடங்கக்கூடியவராகத் தான் திரிந்தார். பீடி, சிகரட் துண்டுகளையும் பொறுக்கிப் புகைப்பார். கரடிப்போக்கு மகேஸ்வரி விலாஸ் முன்பாக இருந்த பலகை இருக்கை தான் இவரது இராப்படுக்கை இடம். ஒரு நாள் ஒரு நிகழ்வு. இரவுப் படக்காட்சி முடிய செல்லும் பராசக்தி தியேட்டர் படக்காரரை ஏற்றிச் செல்ல கரடிப்போக்குச்சந்தியில் வழமையாக பஸ் காத்து நிற்கும். சாரதி, நடத்துநர் இருவரும் சாப்பாட்டுக் கடைக்குள் இருந்த ஒரு நாள், இந்த இளைஞன் எப்படியோ திறப்பை எடுத்து பாதுகாப்பாக பஸ்ஸை தானே இயக்கி ஓட்டி, பாதுகாப்பாக கொண்டு சென்று உரியபடி நிறுத்திவிட்டு திரும்பி வந்தான், ஒரு நல்ல சாரதி என்று அங்கு அடையாளப்படுத்தினான், வழக்கம் போல், உடுப்பு, உணவு வழங்கும் நண்பர் வட்டம் அங்கிருந்தது. அம்பிவாட்டர் தம்பி, உசா தையல் மெசின் ராஐன், ஐந்தாம் வாய்க்கால் விஜயராஜன், சிங்களவாத்தி என்ற நண்பர் வட்டம் அது. அன்று முதல் அவனை வித்தியாசமான பார்வையோடு அவனை அவனது நண்பர் வட்டம் அணுகியது. முதலில் மகேஸ்வரி விலாசில் விறகு பறிப்பவனாக அவனை அந்த வட்டம் மாற்றியது. பின்னர் ஒரு லொறிக்கு கிளீனராக்கப்பட்டான். சில நாட்களில் அவனே லொறிக்கு சாரதியாகிவிட்டான். என்றும் கண்டி வீதியால் கிளிநொச்சியை கடக்கின்ற வேளையில் அவன் அவர்களுக்கு ரம்புட்டான் என்று கொழும்புப் பொருட்களைக் கொண்டு வந்து தர தவறுவதில்லை. ஆக, மனித பார்வையாலேயே மாற்றப்படக்கூடிய உடல் குறைபாடுகளோடு சமூகத்தால் விசராக்கப்பட்ட எத்தனையாயிரம் பேர் இன்றும் எங்கள் தாயகபூமியில் தவிக்கின்றார்கள்.
இங்கிலாந்தில் இவர்களுக்கான தனிப்பள்ளியில் பிரத்தியேகக்கல்வியில் தானே தம் அன்றாடக் கடமைகளை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது. அந்தப்பள்ளியில் அவர்களை கொண்டு சென்று விட தனியான மோட்டார் வண்டி. அவர்களை பாதுகாப்பாக சாரதியோடு கொண்டு செல்ல ஒரு உதவியாளர். அந்தப் பள்ளியில் ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ற ஒரு தனி பயிற்சியாசிரியர் இதனை விட வீட்டில் அவனை பராமரிக்க என்று தனியான பண உதவி. வீட்டில் பார்க்க முடியாதவர்களுக்கு, பொது கவனிப்பு நிலையத்தில் பராமரிக்க அரசு ஒழுங்கைச் செய்து தருகின்றது. அவர்களுக்கான தனியான விளையாட்டுச் சாதனங்கள் கார் தரிப்பு இடங்கள் என வலு குறைந்தோருக்கான வாழ்வு வளங்கள், இங்கே அதிகம் அளிக்கப்படுகின்றன. பிறக்கும் ஒவ்வொரு உயிர்;களும் வாழ ஆசைப்படுகின்றது. ஆறு அறிவு படைத்த மனிதன் வலுவிழப்பால், மனமும் மெலிர்ந்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்படுகின்ற வசதிகள் இவை. அவனை வாழ்விக்கின்ற மேலைநாடுகளை வாழ்த்துவோம். இதேபோன்ற வசதி வாய்ப்புகள் எமது தாய கபூமியில் வலுக்குறைந்தோருக்கும் கிடைக்க வேண்டுமென பிராத்திப்போம்.
- Photo courtesy : flicker.com