வளரவேண்டிய தமிழர் தேசியம்

781

அலசுவாரம் – 94

“வரை சுமந்த திண்தோளன் மாருதி தன் உடலிணைந்த
விரை சுமக்க வொட்டாது வீழ்வானோ தடுமாறி;”

என்று கவிதை பிறக்கிறது, நடப்பு நிகழ்வுகளை நோக்கும்போது.

கம்பராமாயணத்தில் இலக்குவனுட்பட வானரசேனை களத்தில் வீழ்ந்துவிட்டபோது சாம்பவானின் ஆலோசனைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வருகிறான்.  வானரசேனை உயிபெற்று எழுகிறது. அப்படி மலையையே தூக்கிய அனுமாருக்குத் தன் விதை பெரிய பாரமா? என்பதுதான் அதன் கருத்து.

இலங்கையரசுக்கும் இது பொருந்தும்.  முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடக்கவிட்டுப் பார்த்து ரசித்த உலகம் இன்று அந்த அனியாயங்களையே காட்சிப்படுத்தி இலங்கையரசை மிரட்ட ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.  ஆனாலும் உலகிலேயே மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு தலைசிறந்த தலைமையுடன் முப்பது வருடங்களாகப் போராடிய ஒரு கெரில்லா இயக்கத்தைத் தோற்கடித்த இலங்கையரசுக்கு, தற்போது தோன்றியிருக்கும் இந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பெரிய சவாலாக இருக்காது என்றே தோன்றுகின்றது.

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து சரணடைந்த போராளிகளையும் படுகொலைசெய்த காட்சிகளை சாட்சிகளாக வைத்துக்கொண்டு மனிதவுரிமை அமைப்புகளும் ஐநாவும் மிக வினயமாக இலங்கையரசிடம் அதுபற்றித் தயவுசெய்து விசாரணை செய்யுங்கள் என்று கெஞ்சிக்கேட்பதன் உள்ளர்த்தம் என்ன?

சிறீலங்கா அரசு தொடர்ச்சியாகவும் துணிவாகவும் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துவருகிறது.  இல்லை, அவைகள் உண்மையானவைதான் என்று நிரூபிக்க சனல்4 போன்ற தொலைக்காட்சியமைப்புகள் அந்த மனிதவுரிமை மீறல் காட்சிகளை படம்போட்டுக் காட்டுகின்றன. இலங்கைப் பிரதிநிதி அக்காட்சிகள் பொய்யாகச் சோடிக்கப்பட்டவையென்று துணிவோடு கூறுகிறார். இல்லை, அவை உண்மையான காட்சிகளேயென்று மனிதவுரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். உண்மையென்றோ பொய்யென்றோ நிரூபிக்க யாரும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.  இதற்கு என்ன காரணம்?  அரசியல் தெரிநதவர்கள் அல்லது புரிந்தவர்கள் இந்த விடயத்திலும் சற்று ஆய்வு செய்வது பொருத்தமெனப்படுகிறது.

சனல்4 காட்சிகள் உண்மையென்றால் அக்காட்சிகளை எடுத்தவர்கள் யார்யார்? யாருடைய தூண்டுதலின்பேரில் அக்காட்சிகள் எடுக்கப்பட்டன? என்ற கேள்வியெழுகின்றது.  அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் நாங்கள்தான் அக்காட்சிகளை படம்பிடித்தோமென்று தங்களுக்கெதிராகச் சாட்சியம்கூற வரமாட்;டார்களென்ற துணிவில் இலங்கையரசும் தொடர்ச்சியாகத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. சர்வதேசம் இந்த ராஜதந்திரச் சூட்சுமங்களை நன்கறியும்.   கிட்டத்தட்ட  முப்பது வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நத்தப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களை அறியாமல் இப்போதுதான் அவற்றை அறிந்ததுபோல ஐநாவும் மனிதவுரிமை அமைப்புகளும் நாடகமாடமுடியாது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தங்கள் நலன்ளைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கைபோன்ற நாடுகளுடன் சுமுக உறவைப் பேணவேண்டுமென்னும் கொள்கையின் அடிப்படையில் அங்கு வாழும் மிகச் சிறுபான்மையினராகிய தமிழ்த் தேசிய இனத்தின் நலன்களைப் புறக்கணித்து உலகநாடுகள் அனைத்துமே செயற்பட்டன.  எண்பது வீத சிங்களமக்களின் வெறுப்புணர்வைச் சம்பாதித்துக்கொள்ளாமல் தங்களை அவை பாதுகாத்தன.  இந்தியாவும் தமிழக மக்களின் உணர்வுகளை ஒடுக்கி இந்திய தேசியமென்னும் போர்வையின்கீழ் தனது பிராந்திய நலனைக் கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்களைப் பலிக்கடாக்களாக்கியது.  ஆனால், இலங்கையரசோ எப்பாடுபட்டாவது தமிழர்களை ஒடுக்கிவிடவேண்டுமென்னும் குறிக்கோளோடு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளால் விரும்பப்படாத சீனாவின் ஆதிக்கத்தையும் இலங்கையில் அனுமதித்தது.  இலங்கையின் ராஜதந்திரப் போக்கில் ஏற்பட்டுள்ள இந்தத் தடம்மாறல்தான் இன்று இலங்கையரசை இந்த அளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

இன்னும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.  இலங்கையரசு கொஞ்சம் பக்கச் சார்பாக நடக்காமல் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் செல்லப்பிள்ளையாக நடந்துகொண்டு சீனாவைக் கைகழுவிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும்.  மனிதவுரிமை மீறல் பூச்சாண்டிகாட்டலும் காலப்போக்கில் நின்றுபோய்விடும்.  இதனை இலங்கையரசு நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறது.  அதனால்தான் இலங்கயரசுப் பிரதிநிதிகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்காவென்று ஓடிஓடிப் போக்குக்காட்டுகிறார்கள்.  அரசியலில், ராஜதந்திரத்தில் இதுவெல்லாம் சகஜம்.   இந்த நிலையில் ஈழத்தமிழர் உட்பட மொத்தத் தமிழினமும் உலக அரங்கில் தங்களுக்கெதிராகச் செய்யப்பட்ட அநீதிகளுக்கு எந்த வகையில் பதில்நடவடிக்கையில் ஈடுபடப்போகின்றது என்பதே இன்றுள்ள கேள்வி.

எமக்கென்று ஒருநாடில்லை, ஒரு தேசிய இன அந்தஸ்துதானுமில்லை.  இன்று செல்லாக் காசாகிப்போன திராவிடக் கொள்கை அண்ணாபோன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு கொஞ்ச நஞ்சமிருந்த தமிழினவுணர்வும் திராவிடநாட்டுக் கொள்கையுட் கரைந்தது.  அது மேலும், இந்திய தேசியமென்னும் பெருங்கடலுட் கலந்தது.  ஆக எம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவோ உலக அரங்கில் தமிழரின் தேசிய இன அந்தஸ்தை வளர்த்தெடுத்துக்கொள்ளவோ எந்தவொரு தகுதியுமற்று, தெற்காசியப் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் வளர்ச்சிபெற்றுவரும் ஓர் சமூகமென்பதைத்தவிர வேறு எந்தத்தகுதியுமில்லாமல் தமிழினம் தன் சுயத்தை இழந்து கொண்டே போகிறது.

தமிழர்கள் தாங்கள் ஒரு சமூகத்தினர் என்ற அந்தஸ்திலிருந்து ஒருபடி மேலுயர்ந்து தேசிய இன அந்தஸ்தைப் பெறுவது எப்படி?  இந்த அபிலாசை ஒரு தனிமனிதனுக்கோ அன்றி தமிழ்ச்சமூகத்திற்கோ வேண்டாத ஒன்றா, நகைப்புக்கிடமானதா அன்றி விரும்பத்தகாததா?  இல்லவேயில்லை.  ஜனநாயக, மனிதவுரிமைத் தத்துவங்களினடிப்படையில் உலகம் இதனை நீதியானவோர் அரசியல் அபிலாசையாகவே நோக்குகிறது.  உலகளாவிய ரீதியான தேசிய இன அங்கீகாரத்தைப் பெற்றுவிடவேண்டுமென்று தூரநோக்குள்ள தந்தை செல்வா போன்ற தலைவர்கள் அதற்கான அடித்தளத்தை நிறுவப் பாடுபட்டார்கள், அறவழியில் போராடினார்கள். இறுதியில், அந்தப் போராட்டம் ஆயுதப் போராக வடிவெடுத்துப் படுதோல்வியில் எம்மை விழுத்தியது.  “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…” என்ற தமிழரசுக்கட்சிக்காலப் பாடல் “தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து செல்லடா…” என்ற வரிகளாய் உருமாறிப் போனது.

பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் ஆனது போல, உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல இன்று தேசிய விடுதலைப்போரில் ஈடுபட்டவர்களில் பலபேர் நக்கித் திரியும் ஈனநிலைக்குப் போய்விட்டார்கள்.  ஆயிரக்கணக்கான எமது உறவுகள் கொல்லப்பட்ட நிகழ்வுகளைக்கூட சிங்களவர்களுடன் சேர்ந்து மறுத்துப் பேசுமளவுக்குத் தமிழனின் ஈனத்தனம் உச்சமடைந்திருக்கிறது.  இதற்குக் காரணம் சுயநலம்,  எதையாவது பெற்றுக்கொண்டு இனத்துரோகம் செய்யும் இழிந்த மனம்.
நாம் தெரிவுசெய்து வழிநடந்த வன்முறைப் பாதைதான் இத்தகைய துரோகிகளையும் தூக்கிவிட்டது.

இதோடு நம் போராட்டம் முடிந்துவிட்டதா?  இல்லவேயில்லை.  சர்வ தேசமும் ஏற்றுக்கொண்டு வரவேற்கத்தக்க அறவழி, அறிவுவழிப்போர் இருக்கவேயிருக்கிறது.   அதுதான் தமிழரின் தேசிய இன அந்தஸ்தை சகலரும் அங்கீகரிக்கத்தக்க விதத்தில் நிறுவும் அடுத்தகட்ட விடுதலைப்போர்.

இதுவரைகாலமும் ஆயுதப்போரினால் எமது தேசியத்தை வென்றெடுக்க முடியுமென்று நம்பினோம். இனிவரும் காலங்களில் நாம் ஏன் ஓர் புதிய பாதையில்; கால்பதிக்கக்கூடாது? என்ற கேள்விதான் இன்று தமிழர்களைச் செயற்பட வைத்துக் கொண்டிருக்கிறது.  அதனால்தான் தமிழ்த்தேசியத்தின் ஆன்மா விடுதலையை நோக்கிய புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.  ஜனநாயக பாரம்பரியத்தினூடு நாடுகடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது தொடக்கம் தமிழகத்தில் புதிய ஆடசிமாற்றம் ஏற்பட்டிருப்பதுவரை அனைத்து நிகழ்வுகளுமே தமிழர் தேசியமென்னும் ஆன்மாவின் புதிய சிந்தனைச் செயற்பாடுகளே.

புதிய செயற்திட்டங்களினாலும் ராஜதந்திர நகர்வுகளாலும் தமிழர் உறுதியாகத் தமது தேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதுதான் இன்றுள்ள தேவை.  பலதரப்பட்ட பொருளியல் மேம்பாட்டுத் திட்டங்களிலும், அரசியல் ராஜதந்திர நகர்வுகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழரும் ஒன்றுபட்டுச் செயற்படுவார்களாயின் தெற்காசியப் பிராந்தியத்தின் மிகப்பிரதானமான சமூகமான தமிழினம் தனது தேசியத்தை நிச்சயம் வளர்த்தெடுத்துவிடும்.  புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடமுள்ள பொருளாதார வளத்தை தமிழர் தேசிய நலன்களுக்காகச் சரியான வழிமுறைகளில் பயன்படுத்தக்கூடிய திட்டங்களைத் தமிழக அரசே செயற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டிருக்கிறது.  ஈழத்தில் ஒரு நிலையான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும்வரை இத்தகைய பொருளாதாரச் செயற்பாடுகளைத் தமிழகத்தில் நிலைகொள்ளச் செய்து தமிழ்நாடும் தமிழீழமும் பயன்பெறமுடியும்.

தொடருவம்…