வழுவல் அள்ளிய குரங்காய்விட்ட பெரும்பான்மை

1792

போர் முடிந்துவிட்டது, சமாதானம் பிறந்து விட்டது, நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என்பதை ஆராய்வதுதானாம் அரசாங்கம் அமைத்த தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி நிரல். கொழும்புத் தமிழ் ஊடகமொன்றிற்கு கூட்டணித்தலைமை கொடுத்த செய்தியொன்று இப்படிக் கூறுவதாக இணையச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கொழும்புத் தமிழ் ஊடகம் எதுவென்று அறியமுடியவில்லை.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்துவிட்டுப் போன அரசப் பிரதிநிதியிடம் இனப்பிரச்சனை தொடர்பாக தெரிவுக்குழுவை அமைக்கப் போகிறோமென்று கூறிவிட்டு, வழக்கம் போல இலங்கையரசு செய்த கபட நாடகத்தைப்; பற்றி இவ்வளவு காலங்கடந்து கூட்டணித் தலைமை மக்களிடம் கசிய விட்டது அதைவிட ஏமாற்றத்தை அளிக்கிறது. புது டெல்லிக்கும், சென்னைக்கும் பறந்து பல தலைமைகளைச் சந்தித்து உரையாடல்களையெல்லாம் மேற்கொண்ட எமது பிரதிநிதிகள் அரசாங்கத்தின் இந்த ஏமாற்று வேலையைப் பற்றித் தெரிவித்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் தாயக மக்களின் விடிவுக்காக நாடுவிட்டு நாடு சென்று பொங்கு தமிழ் போராட்டம் நடாத்தித் தங்களாலான பங்களிப்பையெல்லாம் செய்கிறார்கள், ஆனால் தாயகத்திலோ அரசின் கபடநாடகத்தில் எம்மவரைப் பங்குகொள்ள வைக்க முயற்சி நடைபெறுகின்றது. இங்கே வருத்தத்திற்குரிய விடயமென்ன வென்றால் இத்தகைய ஏமாற்று முயற்சிகளை மக்களுக்குப் புட்டுக்காட்டி அவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட நமது தiலைமைகள் முயலாததுதான். இது ஏனென்று தெரியவில்லை. ஏதோ! இப்போதாவது இந்த விடயம் வெளியே கசிந்திருக்கிறது. அதுவரைக்கும் ஆறுதல். அல்லாவிடில், தமிழ்த் தலைமைகள் மீண்டும் தெரிவுக்குழுவென்ற பொறியொன்றிற்குள் சிக்கி அதிலிருந்து நீண்டகாலத்திற்கு வெளியேற முடியாமல் போயிருக்கும்.

நாம் மீண்டும் மீண்டும் உலகிடமும் இலங்கையசிடமும் எதைக் கேட்கிறோம்? எங்கள் பிரதேசங்களில் நாங்கள் சுதந்திரமாய் வாழ வழியமைத்துத் தாருங்கள் என்பதைத்தானே. எமது பிரதேசத்தில் எமது மக்களைக் குடியேற்றி அபிவிருத்தியை முன்னெடுக்கவும், உள்ளுர்ப் பாதுகாப்பை நாங்களே பார்த்துக்கொள்ளவும், எங்கள் பாரம்பரிய பிரதேச எல்லைகளை வரையறுத்து ஓர் ஆட்சியமைப்பை ஏற்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கையை வேண்டுமென்றே சிங்கள அரசுகள் தங்களது பேரினவாதப் பேராசையினால் புறக்கணிக்கின்றன.

தங்களுக்கெனவோர் பாரம்பரியப் பிரதேசத்தை புவியியல் எல்லைகளுடன் கொண்ட எந்தவோர் இனத்தையும் வெறுமனே சிறுபான்மையினர் என்ற வகுப்புக்குள் அடக்கி, “உங்கள் எல்லோருக்கும் சமவுரிமை தருகிறோம் எங்களுடன் ஒற்றுமையாக வாழுங்கள்” என்ற பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றிவிட முடியுமானால் உலகில் இன்று இத்தனை தேசங்கள் சுயமாக உருவாகியிருக்க முடியாது.

தமிழகத்தில் இரண்டேயிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்ட புதுச்;சேரி தனக்கெனத் தனியான பிரதேச எல்லைகளுடன் ஓர் யூனியன் பிரதேசமாகத் தனது உள்ளு+ர் ஆட்சியை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு உள்ளுர்ப் பாதுகாப்புக்கெனத் தனியான பொலீஸ் படையுண்டு. எல்லாவகையான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உரிய திணைக்களங்களுண்டு. இத்தனைக்கும் அது தமிழ்நாடென்னும் மிகப்பெரிய மானிலத்தின் பிரிக்கமுடியாத உறவுகளை அதாவது, தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டவோர் சிறிய பிரதேசமே. உகந்த அரசியல் தீர்வொன்றினால் மிகவும் சமாதானமாக அந்தச் சிறு நிலம் தனித்து இயங்குகின்றது. ஆகக் குறைந்தது இத்தகைய அணுகுமுறையாவது ஏன் இலங்கைக்கும் வரக்கூடாது? அதனை ஏன் சிங்களவர்கள் விரும்புகிறார்களில்லை என்ற கேள்விக்கு மிக நேரான பதில் அவர்களின் அடாவடித் தனம் மிகுந்த பேராண்மை வாதம்தான் என்பதில் தவறே இருக்க முடியாது. துரதிஸ்டவசமாக சிங்களவர்களில் மிகச்சில பேருக்கே இனப்பிரச்சனை தொடர்பில் தாரள மனப்பான்மையுடன்கூடிய நேர்மையான அணுகுமுறை இருக்கின்றது. இது இலங்கையின் சாபக்கோடு.

இலங்கையரசு நினைத்திருந்தால் இந்தியாவில் பாண்டிச்சேரி அரசினைப் போலவோர் அரசமைப்பை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குகிறோமென்று கூறியிருக்கலாம். இதுவரை அத்தகைய எந்தச் சாதகமான பதிலையும் யாரும் கூறவில்லை. பிரச்சனைத் தீர்வுக்கானவோர் மாதிரித் திட்டமொன்றை முன்வைக்காமல் தட்டிக்கழித்தபடியே அடுத்தடுத்துவரும் அரசாங்கங்கள் தங்கள் காலத்தை ஓட்டமுனைகின்றன. இன்று புலம்பெயர்ந்த தேசத்தில் தங்கள் சொந்த நாட்டிற்கெதிராகச் செயற்படவும், ஓர் நிழல் அரசாங்கத்தை அமைக்கவும் வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குள் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் சமாதானத்தை நோக்கி ஓரடியைத்தன்னும் சிங்கள மக்கள் முன்னோக்கி வைப்பார்களாயின் பத்து அடிகளைத் தாமும் முன்னோக்கி வைக்கத் தமிழ் மக்கள் தயாராகவேயிருக்கிறார்கள். ஆனால் எண்பதுவீத பெரும்பான்மைப் பலத்துடன் இலங்கையின் ஒற்றையாட்சியமைப்பின்கீழ் பாராளுமன்ற ஜனநாயகமென்னும் போர்வையில் தமிழர்களை அடக்கியாண்டே பழக்கப்பட்டுப்போன சிங்களத்திற்கு ஒரு சிறு நகர்வைத்தானும் சமாதானத்தை நோக்கி வைக்க முடியவில்லை. நாசமாய்ப் போன சோல்பரி அரசமைப்புத் திட்டத்திற்கு ஒத்து ஊதியதால் வந்தவினையை இன்று யாராலும் மாற்றமுடியவில்லை.

விட்டுக்கொடுக்காத மனப்பான்மைகொண்ட சிங்களத்தின் நிலைமையும் மகிழ்ச்சிக்குரியதா என்றால் அதுவுமில்லை. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழரின் ஒத்துழையாமையாலும், வன்முறைப் போராட்டங்களாலும் நாடு எல்லா வகையிலும் தோல்விகளையே சந்தித்து வந்ததால் பெரும்பான்மை மக்களும் வறுமைப்பிடியினுள் சிக்கிச் சீரழிவதுதான் மிச்சமாகப் போய்விட்டது.

வழுவல் அள்ளிய குரங்கின் நிலையில்த்தான் சிங்களப் பெரும்பான்மையும் தவிக்கிறது. குரங்குகளின் தொல்லை தாங்காமற் போகும்போது எங்கள+ர்களில் அவற்றை அடக்க இளநீரை வெட்டி அதனுள் குரங்கின் கைமட்டும் உள்நுழையக் கூடியதாக அளவாக ஓட்டை போட்டு வைத்து விடுவார்கள். குரங்கு வந்து இளநீரைக்கண்டதும் அதனை அப்படியே குடித்துவிட்டு உள்ளேயுள்ள வழுவல் தேங்காயை எடுத்து உண்பதற்காகக் கையைப் போட்டுத் துழாவும். கைநிறைய வழுக்கலை அள்ளியதும் உண்பதற்காகக் கையை வெளியே எடுக்க முயலும். ஆனால் கைநிறைய வழுவல் இருப்பதால் வெளியே இழுக்க முடியாது. ஆனால் அள்ளிய வழுக்கலை விடவும் மனமில்லை. கையில் தேங்காயைக் கொழுவியபடி ஓடித்திரியும். மரங்களில் பாய்ந்து சுதந்திரமாக ஏறவும் முடியாது. பொறிவைத்தவர்கள் குரங்கைக் கலைத்துக் கலைத்து அடிப்பார்கள்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போகும்போதும் இப்படித்தான் பெரும்பான்மையினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடிய சோல்பரி அரசமைப்பின் கீழான சர்வசனவாக்கெடுப்பு என்னும் இளநீர்க் குரும்பையை விட்டுப்போனான். இன்று ஆட்சியதிகாரமென்னும் இளநீரை மட்டும் குடித்துக்கொண்டு அபிவிருத்தியென்னும் வழுவலையள்ளி ருசிக்கமுடியாத நிலையிலேயே சிங்களப் பெரும்பான்மை பரிதவிக்கிறது.

சிங்களவர்களுக்கு ஆண்டனுபவிக்கும் அதிகாரத்தைக் கொடுத்த வெள்ளையன் தனது பிரித்தாளும் தந்திரத்தைப் பாவித்து தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்னையென்னும் முள்ளையும் பரவிவட்டுப் போனான். அது முன்னேற முடியாது காலில் உறுத்துகிறது. அந்த முள்ளை எடுத்தெறிய முன்வருவோர் யாருமில்லை. குரங்கின் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலைக்குத்தான் கிடைத்த சுதந்திரமும் போயிருக்கிறது. இலங்கை மக்கள் அனைவருக்கும் இதுவே விதிக்கப்பட்ட விதியாய்விட்டது

தமக்கெனத் தனியான புவியியல் எல்லைகளைக் கொண்டிருந்தாலும் சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்களைகச் கொண்டிருக்காத எந்தச் சிறுபான்மையினத்திற்கும் ஈழத்தமிழர்களாகிய நாமும், எமது சகோதரர்களாகிய விட்டுக் கொடுக்காத மனப்பான்மையைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டு இன்று வழுவலள்ளிய குரங்குகளாகத் தவிக்கும் சிங்களப் பெரும்பான்மையும் மிகச் சிறந்த உதாரணங்களாகும். இந்த விட்டுக்கொடுக்காத தன்மைக்குக் காரணம்; தமிழர் தரப்பு மிகச்சிறுபான்மையான பலங்குன்றிய தரப்பாக இருப்பதுதான். தமிழர் இலங்கையில் ஓர் சிறுபான்மையினம் என்னும் கருதுகோள் இல்லாமற் போனாலொழிய எமது பிரச்சனைகளுக்கு முழுமையான ஆதரவை உலகம் எமக்கு வழங்கப் போவதில்லை. எமக்குக் கிடைக்கும் தேசிய இன அந்தஸ்தே எமது இருப்பை உறுதிசெய்யும்.

இனிவரும் காலங்களில் தமிழீழமக்கள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் எமது தாய்த் தமிழகத்துடனான உறவுகள் மேம்படுத்தப்பட்டேயாகவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடுகடந்த தமிழீழஅரசு உட்பட ஈழத்தமிழர்களின் எல்லாவித அரசியல் அமைப்புகளும் தமிழகத்துடனும் அங்குள்ள பாண்டிச்சேரி, தமிழ்நாடு மாநில அரசுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணி அவர்களின் அனுசரணையுடன் உள்ளனர் அரசியலை முன்னெடுப்பதே உகந்த வழியாகப் படுகிறது. இந்த உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது? எமது உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழகத்தையும் எவ்வாறு பங்காளிகளாக்குவது என்னும் விடயங்கள் சிறந்த அரசியல் மதிநுட்பத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். பல்வேறு ஆய்வுகளினூடாக முறைப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய விரிவாக்கத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தி, தமிழக மக்களின் மனங்களிலிருந்து தமிழீழம் தமக்கு அன்னியமான பிரதேசம் என்ற எண்ணம் அகற்றப்பட்டு அது தமது மண்ணின் ஒருபகுதியென்ற கருத்துரு உருவாக்கப்படும்போதுதான் தமிழீழமும் உதயமாக முடியும்..

தொடருவம்…