வாக்களிக்காது இருப்பதும் ஜனநாயக உரிமையே!

398

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இல்லாதளவிற்கு ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைக் கொண்டவராக இருப்பார். அத்தகைய ஒரு பதவிக்கு ஒருவரைத் தெரிவுசெய்யும்போது அவர் நாட்டின் தேசியப்பிரச்சனைகளை எவ்வாறு அணுகுவார் என்பதனை கவனத்திற்கொண்டு வாக்காளிக்க வேண்டியது அவசியமானது.

ஜனவரி எட்டாம் திகதி சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் போட்டியும் முன்னணி வேட்பாளர்களும் சரி அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கும் கட்சிகளும் சரி அத்தீவில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனை பற்றி பேசுவதைத் தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் எல்லாப்பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வாக ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இத்தேர்தல் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தேர்தல் எனச் சிலர் வாதிடுகிறார்கள். தமது நாட்டில் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றும் நல்லாட்சி நடைபெறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு தேசியஇனத்தை இனவழிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டு எவ்வாறு நல்லாட்சியை வழங்கமுடியும் என்பதற்கு இவர்களிடம் பதிலிருப்பதாகத் தெரியவில்லை.

ஜனநாயகத்தைப் பேணுவதற்காக தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை பாவிக்கவேண்டும் என்று இன்று கோரிக்கை விடுபவர்கள் கடந்த காலங்களில் தமிழ்மக்கள் பேரவலங்களைச் சந்தித்தபோது ஆட்சியதிகாரங்களுடன் இணைந்து ‘சிறிலங்கா ஜனநாயகம்’ பேசிய அண்மைய வரலாற்றிளை தமிழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

ஆகவே இத்தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைகுரியவர்களாக இல்லாத நிலையில் அவர்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்ட வேண்டியதில்லை. வாக்களிக்காமல் இருப்பதுவும் அவர்களுக்குரிய தார்மீக உரிமை என்பதனை ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில நாடுகளில் நடைமுறையிலிருக்கும் ‘மேற் குறிப்பிடப்பட்டவர்களில் எவரும் இல்லை’ (none of the above –NOTA) என்ற தெரிவு இத்தேர்தலில் இல்லாத நிலையில் தமது புறக்கணிப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதில் தமிழ் வாக்காளார்கள் கவனம் செலுத்த வேண்டும்.