வாய் விட்டு அழமுடியாத தேசம்…

1001

தூ.. இந்த துத்தேரி நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி,அமைச்சரவை, நீதி, நிர்வாகம், மாகாணசபை, மண்ணாங்கட்டி. நல்ல புலவனாக இருந்தால் வசைபாடியே இந்த அரசின் சீர்கேட்டைப் பறைசாற்றியிருப்பான். ஆனால் அந்த காலம் எல்லாம் போய் நாம், பேய்களும், பிணந்தின்னி கழுகுகளும் வாழும் இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நல்லவர்கள், வல்வவர்கள், மாவீரர்கள், மகத்தான கனவுகளுடனும், அமைதியான, அழகான தமிழ் ஈழத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற தன்னலமற்ற தியாகங்களோடு மாவீரர் ஆகிவிட்டனர். யாருக்காக அவர்கள் மரணித்தார்களோ, எந்த தமிழ் ஈழக் குழந்தைகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களோ, அந்த குழந்தைகள் இன்று வாய்விட்டு துயரைத் சொல்லி அழமுடியாத தேசத்தில், திட்டமிட்ட இனஅழிப்புக்கு நாளுக்கு நாள் வெவ்வேறு விதத்தில் ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள்.

2009 இல் வேண்டுமென்றே பத்தில் இருந்து இளம் வயது வரை ஆண் பெண் வித்தியாசம் இன்றி இளம் தமிழ் சிறார்களை வாகனங்களில்அழ அழ பெற்றோர், உறவினரிடம் இருந்துபிரித்து அழைந்து சென்றனர்கள்.அவர்களுக்குஎன்ன நடந்தது என்று 5 வருடமாக யாருக்குமே விடை தெரியாமல் இருக்கும் நிலையில், அன்று கூட்டிப்போனவர்களின் நிலைக்கு விடைகேட்டு வீதிமறிப்பு போராட்டத்தில் தாயுடன் ஈடுபட்டதால், இன்று சிறுமி விபூசிகா எம்மத்தியில் நடமாடுவதற்கு இல்லை. 13 வயது சிறுமியின் ஓரே உறவான தாயில் (ஜெயக்குமாரி பாலேந்திரா) இருந்து அவளை, விசாரணை என்ற பெயரில் பிரிந்து அவசரகாலச்சட்டத்தில் கீழ் தாயையும், மகளையும் எங்கு வைத்திருக்கிறார்களோ, யாரிடமும் விடையில்லை.

இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களின் தொகைக்கும், மக்களுக்கும், நாம் நியாயம் கேட்டுப்போராடிக் கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில், சிறீலங்கா அரசு இரு கோடு தத்துவத்தை காட்ட முற்படுவது போல, கடந்ததை விட பெரிய குற்றங்களையும் இன அழிப்பையும் தற்போதுசெய்ய முற்படுகிறது. இது சர்வதேசத்திற்கு விடும் சாவாலா? அல்லது புழுப்போல நிர்கதியாக வாழும் எம்முறவுகள் புயலாக என்றுமே மாறவே மாட்டார்கள் என அசையாத நம்பிக்கையா? அல்லது தமிழ் ஈழத்தைஆக்கிரமித்து கொண்டிருக்கும் இராணுவத்தை,சர்வதேச அழத்தங்களால் வீட்டுக்கு அனுப்பவேண்டி வராமல், பாதுகாக்கும் நோக்குடன்பழைய புலி பல்லவி பாட வெளிக்கிடும் யுத்தியா? எது எப்பிடி இருந்தாலும் இறுதியில் எல்லா வழியிலும் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே.

கைது, தடுப்புகாவல், விசாரணை என ஒருபுறம் எம்முறவுகள் காணாமல் போவது என்றால்இன்னொருபுறம் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை கட்டாயச் சேர்ப்பு என்று வீடு புகுந்து வலிந்து சேர்கிறார்கள். இராணுவத்திற்கு சேர்ந்தபின் அப்பெண்களுக்கு பயிற்சி என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் அதிர்ச்சி ஊட்டும் வீடியோக்களாக இணைத்தளத்தில் வலம் வருகின்றன. தமிழ் பெண்களாக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்வதே நாம் செய்த பெரிய பாவமாக பெண்கள் தினம் தினம் செத்து பிழைக்கிறார்கள்.

பிள்ளைகள் நிலை இன்னொரு வகையில், மறைமுகமான இனவழிப்பால் பாதிக்கப்படுகின்றது. தாராளமான மதுபானங்கள், போதை வஸ்த்து என்பன திட்டமிட்ட வகையில் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. அரசாங்கம் வேண்டும் என்றே இவற்றை செய்கின்றது. வீட்டுக்குவீட்டு வாசல்படி என்றாலும், தம்தம் பிள்ளைகள் சீரழிவதை தமிழ் மக்கள் வெளியில் தெரியவராமல் தமக்குள்ளே இரகசியமாக வைத்திருப்பதுஅரசாங்கத்திற்கு இன்னும் பிரச்சனையில்லாமல் போகிறது.

அது மட்டுமல்லாது பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் ஒளிநாடாக்கள், வீடியோக்களையும் தாராளமான புழக்கத்தில் விடுகிறது.இது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுப்பதோடு பாலியல் தொடர்பாக குற்றச்செயல் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. யாழ்பாணத்தில் வரும் பத்திரிகையை பார்த்தால் எத்தனையோ பாலியல் சம்பந்தமாக குற்றச்செயல்கள் ஒவ்வொரு பதிப்பிலும் நிரல் படுத்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

ஏற்கனவே உள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இனத்தின் முதுகெலும்பாக விளங்கும் பெண்களையும், குழந்தைகளையும் திட்டமிட்ட வகையில் மேலும் மேலும் எழவிடாமல் அழுத்தங்களை எல்லா வழிகளிலும் கொடுத்து வருகின்றார்கள்.

எல்லாவற்றுக்கும் புலம்பெயர் மக்களேபொங்கியெழுகின்றனர், எது எப்பிடியிருந்தாலும் இவற்றுக்கு நேரடியாக முகம் கொடுத்து வாழப்போவது எம்மக்களே. எனவே அம் மக்களுக்கு சுபீட்ச்சமான எதிர்காலத்தை வழங்குவதாக வாக்களித்து தற்போது பதவியில்இருக்கும் எம் அரசியல் வாதிகள் இவ்விடையங்களில் அதிக கவனம் எடுத்து குரல் கொடுக்கமுன்வர வேண்டும். அவர்கள் தங்களின் மனைவி பிள்ளைகளுக்கு இந்நிலை வரும்வரை ஆறஅமர அருகிலே 60 கிலோ குண்டு வெடித்தாலும் அதே மாறாத முகபாவத்துடன் கதிரையே கண்ணாக இருப்பார்களேயானால் அது வெளி உலகிற்கு மாறுபட்ட செய்தியை பறைசாற்றும். அச்செய்தி எமது இனத்தின் விடுதலைக்கு சாவு மணியாகவே இருக்கும்!

சுகி-ஒருபேப்பருக்காக