விடுதலைக்கானதே விதைப்பு…

117

வந்து போகும் ஒவ்வொரு மாரியும்
எம்மண்ணுக்குத் தந்து போகும் வசீகரம் தாராளம்.
மூன்று மாதங்கள் மட்டுமே மேகம் கசியும்
நிறையா வரம் பெற்ற நிலமிது.
கோடை வறுத்தெடுக்கும் காலத்தில்
ஆடையவிழக் கிடப்பாள் அன்னை.
வாரியடித்துலுப்பும் காற்றின் வன்மம்
புழுதியிறைத்துவிட்டுப் போகும்.
வீட்டின் தலைவாசல் மூக்கின் நுளைவாசல்
வீதிமருங்குள மரங்கள்
யாவிலும் புழுதிசொருகிவிடும் கோடை.
ஐப்பசியானதும் மேலே மேகம் கறுக்கம்.
தீபாவளியுடன் துமிவிழத் தொடங்கினால்
வரண்ட மேனி வனப்புறும்.
கார்த்திகை மாதம் வேர்தறிக் காலம்.
வானக்கூரை பிரித்து வர்ஷித்து
தைவரை பெய்யும் மழை.

கார்த்திகை இருப்பத்தேழாம் நாளன்றிற்தான்
மழையோடு எம்மிலிறங்கியது முதலிடி.
உயர்விலை கொடுத்தே விடுதலையெனும்
உண்மையுரைத்து
விதைப்புத் தொடங்கியது இந்நாளே.
நெடுங்காலம் அடிமைச்சுகம் தின்று
துயிலிற்கிடந்த தேசத்துக்கு
முதல் விதைப்புக்கான உழவில்
மூச்சுத் திணறியது.
தருவதைத்தா வாய் நிறைத்துக் கொள்வோமென
எச்சிற்பருக்கை தின்ற பிச்சைக்காரருக்கு
சொந்தச் சோறுசமைக்கும் நளபாகத்தை
சங்கரென்றொருவன் பொங்கிக் காட்டினான்.
அன்றிலிருந்து இன்றுவரை
பொங்கலும் பந்தியுமாகப் போகிறது காலம்.
குருத்தோலை வீழாத மரங்களாகவே
இருந்தோம் ஒரு காலம்.

பூக்கள் சொரியாமல்
பிஞ்சுகள் கருகாமல்
சாவுவிழாத் தேசமாகவே இருந்தது எம்நிலம்.
பழுத்த சருகுகளே சொரியும் இடைக்கிடை
அதற்கே நெஞ்சிடித்து நெக்குருகும் உறவு.
வேலிப் பூவரசே போதுமென
பிணமெரிக்க விறகுவாங்காத காலம்.
பிரேதம் வளர்த்தும் பெருங்கட்டில்
ஊரில் ஓரிரண்டுதான் இருக்கும்.
அருந்தலாய் வருடத்துக்கொன்று
அதற்கு வாய்க்கும்.
அடிமைக்கு ஏது இறப்பு
முதுமைவரை மூச்சுவிடும்.
விடுதலைக்கானதே விதைப்பு
விலங்கறுபடும் வரை போரிடும்.
முன்னரெம் தேசம் சாவுக்காக வாழ்ந்தது.
இன்றுதான் வாழ்வதற்காக சாகின்றது.
எனவேதான் கடலைகள் துயிலுமில்லங்காயின.
சவக்காலைகள் தவச்சாலைகளாயின.
தாயகம் வேண்டி தபசியற்றும் பிள்ளைகள்
முக்தி பெற்றதும் மாவீரர் ஆகின்றனர்.
இளவயது மரணம் கொடியதுதான்.
பூவாய் விரியாமல் புலரியில் உதிர்வது
பெரிய துன்பம் தான்.
வாழ்வின் வசந்தத்தில் சாவில் வீழ்வது
ஆழாத் துயர்தான்.
விடுதலைக்கு வேற்று வழி உண்டெனில்
விதைப்பை நிறுத்தி விடலாம்.

விடுதலை உயிர்கொடுத்தே விளையுமெனில்
சாவுக்கு சாவென்று நாமமில்லை
அது வாழ்வு எனப்படும்.
கார்த்திகை இருபத்தேழாம் நாளன்று
துயிலுமில்ல வாசலில் நிற்கத் துணிவு வேண்டும்.
தாங்கும் தைரியம் வேண்டும்.
ஒரு தாயின் ஒப்பாரிக்கு முன்னே,
ஒரு தந்தையின் பிலாக்கணத்துக்கு முன்னே,
உடன்பிறந்தவரின் கண்ணீர் மாலைக்கு முன்னே,
தோழரின் நெருப்பு மௌனத்தின் முன்னே,
தோழியரின் எரிமலை விகர்சிப்பின் முன்னே,
உறவுகளின் ஆயிரம்
நினைவுச் சுழிகளின் முன்னே,
அந்தப் பாடல் சுமந்துவந்து எரிக்கும்
அர்த்தத்தின் முன்னே,
நிற்பதற்கு நெஞ்சுரம் வேண்டும்.
நின்று பார்த்தால் தெரியும் நெருப்பின் சூடு.
பேரமைதி பூத்திருக்கும் பொழுதில்
வந்து அள்ளித் தீ சொருகி
உள்ளெரிக்கும் அந்தப் பாடலும்,
கேட்கும் மணியலியும்,
நெய் விளக்குச் சுடரும்
கல்லறை விழுந்தரற்றும் உறவுகளும்
எத்தனை உணர்வுச் சுழிப்பினில் ஆழ்த்தும்.
இதயத்துடிப்பே நின்று விடும் போல
மூச்சுத் திணறும்.

இத்தனை பேரையும் இழந்து போனோமே என
கத்த வேண்டும்போல
கல்லறையைத் தழுவ வேண்டும் போல
செத்துவிட வேண்டும்போல
சித்தப் பிரமை பிடித்துச் சிரிக்க வேண்டும் போல
உள்ளுக்கும் ஏதோ செய்து உருக்கும்.
நட்ட கல்லாகி நிற்போம் நாம்.
அப்போது தான் அந்த அசரீரி கேட்கும்.
உறவுகளே!
எமக்கானது இந்த மணியோசை அல்ல
எமக்கானது இந்த நெய்விளக்கு அல்ல
இந்தப் பாடல் அல்ல
உங்கள் கண்ணீரும், கதறுலுமல்ல
எமக்கானது விடுதலை.
எமக்கானது தாயகம்.
விட்டு விடுதலையாகிய சிறகுவிரிப்பு.
நாங்கள் நடுகல்லாகிக் கிடப்பது
தருவதை வாங்கிச் சமரசம் செய்யவல்ல.
வந்து குவியும் வல்லரசுகளுக்கு ஏவலியற்ற
அல்ல
எந்த நுகத்தடியும் பூட்டாத நிமிர்வுக்காக
தருவீர்களா?

நெஞ்சிற் குத்தும் கேள்வியை எறிந்துவிட்டு
பதிலை எதிர்பாராமலே
குழிகள் மூடிக் கொள்ளும்.
அழுதபடி நாங்கள் வெளியே வர
வெள்ளை வாகனங்கள் சத்தமிட்டபடி
சுழலும் விளக்குகளுடன் விரையும்.
ஆற்றின் அணையுடைந்து போனால்
வெளிவெள்ளம் உள்ளே வரும்.
நாகதாளிப் பூக்கள் கூட அழகானவை தான்
யாரேனும் தலையிற் சூடுவார்களா?
ஆபத்தறியாமல் அழகுபார்க்கக் கூடாது.
வெளியே தெரியாத வேர்களாக
அதிகம் அறியப்படாத பேர்களாக
காலம் ஆகியோர் கல்லறைக்குள்ளே.
நாங்கள்?

பிள்ளைகளின்
பெருந்தாகம் உணர்ந்து
நாக்குக்காகவேனும்
நீர்வார்க்க வேண்டாமா?
பயணவழியின் மீதி தொலைய
நடக்கத் தொடங்குவதே நன்று
விடுதலைக்கானதே விதைப்பு.

வியாசன் -உலைக்களம்