விடுதலை புலிகளுக்கு உதவிய இந்தியாவின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்

128

இந்தியாவின் கடைசி மன்னராக மூன்று வயதிலேயே முடிசூட்டப்பட்ட சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 89.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனையில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பிறந்தவரான முருகதாஸ் தீர்த்தபதி, தனது 3வது வயதிலேயே தந்தையை இழந்தார். அதனால் அவர் ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது நினைவுகளை முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில்,“ கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்தபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.

இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம்தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்திரம் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும்.

நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது” என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆத்ம அஞ்சலிகள்…