விடுவிக்கப்பட்ட போராளிகளை நோக்கி நீளும் அரச பயங்கரவாதிகள்

397

மனேதத்துவ ரீதியில் மிகவும் ஆழமாகவும் அமைதியாகவும் கையாளப்பட வேண்டிய ஓர் உணர்வின் வெளிப்பாட்டை, வழமையான அடக்குமுறையுடன் கூடிய அடாவடித்தனமானவன்முறைப் போக்கினால், சிறீலங்கா அரசு, மீண்டும் ஓர் வரலாற்று தவறை செய்கிறது. விடுதலை வீரர்களை அழித்து விடலாம் ஆனால்விடுதலை உணர்வையும் அழித்துவிடமுடியாது. தமிழ் மக்களை நிரந்தரமான இராணுவ ஆட்சிக்குள் வைத்துக் கொண்டு, ஆள் கடத்தல்,இரகசிய கொலைகள், பாலியல் வன்புணர்வுஎன்று தமிழர்கள் இனத்தை அழிப்பதோடு, தாராளமான மது, போதை பாவனைகளைஉண்டு பண்ணி கலாச்சார சீரழிவுக்கும், காணும் இடங்களில் எல்லாம் புத்தசிலையை நிறுவி சமய ரீதியிலும், தமிழர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்து புவியியல் ரீதியிலும் எனப் பல வழிகளில் தமிழரை தலை நிமிர்ந்து பார்க்க விடாமல்அழுத்தி இராணுவ பிடிக்குள் வைத்துள்ளது.

பாரிய இனப்படுகொலையை செய்து முடித்து விட்டு, ஒரே நாட்டுக்குள் ஓர் இனம், அப்படுகொலையின் தாக்கத்தின் வீரியத்தினால் விக்கித்து, மனோநிலை பாதிக்கப்பட்டு, இருக்க இடமும், மாற்ற மாற்று துணியும் கூட இல்லாமல், தனது உடன் பிறப்புகளுக்கும், பெற்ற பிள்ளைகளுக்கும், கட்டிய கணவன் மனைவிக்கு என்ன நடந்தது என்று தெரியாத ஏதலிகளாக ஏங்கி தவித்த வேளை, சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடி, அம் மக்களை வருடக்கணக்காக முள்கம்பிகளுக்குள் அடைத்துவைத்து, விசாரணையின்றி சிறைக்குள் அடைத்து வைத்து, கொன்று, இது இரு நாடு,இரண்டு இனம் வாழும் பூமி என்பதை அவர்களின் மிதவாத போக்கினால் மிகத் தெளிவாகவரலாற்றில் பதிவு செய்து வைத்தார்கள். வெற்றியின் இறுமாப்பில் மற்றவனுக்கு இழைத்த கொடுமைகளை அவர்கள் மறந்து விடலாம். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும் அக்கொடுமை மறந்து மன்னிக்க கூடியதா? அல்லது பரம்பரைக்கும் மாறாத வடுவா? என்பது.

பாரிய இனஅழிப்பின் பின் இன்னமும் தமிழ் இனம் அதனை நினைந்து வாய்விட்டுஅழதுபுரண்டு அவர்களின் மன உளைச்சலையும் கவலையும், கொட்டித்தீர்ந்து ஊர் கூட்டி ஒப்பாரி வைத்து ஒன்றுமே செய்யவில்லை, செய்ய இராணுவகட்டுபாடு அவர்ளை விடவும் இல்லை. மனதுக்குள் அவர்கள் வைத்து புளுங்கும், வாய்விட்டு சொல்லமுடியாத செய்திகள்பல. இந்நிலையில் மக்கள் வாழும் போது, எரிமலையின் நீற்றை சோதித்து பார்ப்பது போலஅடுக்கடுக்காக எத்தனை சோதனைகள்.சங்கிலி மன்னன் சிலையை உடைத்து கட்டியதில் இருந்து, மாவீரர் துயிலும் இல்லங்களை அடித்து துவைத்ததோடு அவர்கள் புதைகுழிகளையும் தோண்டி உளுது, கிட்டு பூங்காவை உடைத்தெறிந்தது, வளமான தமிழ் மக்களின் காணிகளை பறித்து, அவர்களை விவசாயம் செய்யமுடியாத வெறும் கட்டாந்தரைக்குள் பலவந்தமாக குடியேற்றியது, என்று இவர்களின் அடக்குமுறையை அட்டவணை போட்டாலும் அடங்காது. அழுத்தி அழுத்தி அடங்கி வைத்தால் என்றாவது ஒருநாள், சாவது ஒரு நாள் தான்இப்படி ஒவ்வொரு நாளும் புழுப்போல செத்து பிழைந்து வாழ முடியாது என்று அந்த அடக்குமுறையையும் மீறி அங்குள்ள மக்கள் வெடிக்கத்தான் போகிறார்கள்.

அப்போ வரலாறு மீண்டும் எழுதப்படும். இனி எழுதப்படும் வரலாறு முன்னதை போல யுத்ததர்மங்களுக்கு உட்பட்டதாகவும், இறந்த இராணுவ வீரர்களை இராணுவ உடைகளுடன் மூன்றாவது சமாதான குழு முன்னிலையில் ஒப்படைப்பதாகவும் இருக்கும் என்பது சந்தேகமே, இறந்த பெண் போராளிகளை உடம்பில் சூடு தணியமுதல் வன்புணர்வுக்கு உட்படுத்தியும், இறந்த தமிழ்பெண்களினதும், போராளிகளினதும் ஆடைகளை அகற்றியும், சரணடைந்த போராளிகளையும், சிறார்களையும் ஈவு இரக்கமின்றி கொன்றதும் மறந்து மன்னிக்க கூடிய நிகழ்வுகள் அல்ல. அவரவர் குடும்ப அங்கத்தவர்களுக்கு அது நிகழ்ந்திருந்தால் தான் அதன் வலி புரியும் என்றுஇல்லை. மனித நேயம் உள்ள எவருக்கும் அதன் வலி புரியும். இப்படிப்பட்ட ஆறாத வடுக்களோடு வாழும் தமிழ் சமுதாயத்தின் குறைந்த பட்ச அபிலாசைகளான மண்மீட்பு போரில் விதையாகிபோன தம்முறவுககளை நினைந்து அஞ்சலிசெலுத்தும் மாவீரர் நாளை அமைதியான முறையில் நினைந்து வழிபடுவதற்கு கூட விடாது அதை பயங்கரவாத முத்திரை குத்தி பல்கலைக் கழக மாணவர்களை மிகக்கடுமையாக தாக்கி பிடித்துச் சென்றுள்ளார்கள். அப்பிடியிருந்தும் அந்த அடக்குமுறைக்குள்ளும் மக்கள் அதை அங்காங்கே செய்துவந்துள்ளார்கள்.

அவர்கள் மாவீரர் நாள் கொண்டாடவில்லை. கார்த்தியை விளக்கீட்டைத்தான் கொண்டாடினார்கள் என்று சொன்ன தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் போல முழுப்பூசணியை சோற்றில் புதைத்ததுபோல சிலர் பாசாங்கு பண்ணிக் கொண்டிருக்க,இன்னொரு பக்கத்தில் சிறைச்சித்திரவதையை அநுபவித்து, புனர்வாழ்வு என்ற கண்துடைப்பு எல்லாம் கடந்து பொது வாழ்வை அமைதியாக வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளும் இப்போ ஆட்கடத்தல் என்று போர்வையில் திட்டமிட்ட வகையில் தனித்தனியாக கொல்லப்படுகிறார்கள்.

இவ்வளவு நாளும் வெளிநாட்டில் ஏதும் செய்யாதீர்கள், நீங்கள் வெளிநாட்டில் சுகமாக வாழ்ந்து கொண்டு, ஒருநாள் நடத்தும் போராட்டத்தினால் அங்கிருக்கும் மக்களுக்குத்தான் தொல்லை என்று சொன்னவர்கள், இன்று அவ்வளவு அடக்குமுறைக்குள்ளாலும் உயிரைத்துச்சமாக மதித்து அவர்கள் நடத்தும் போராட்டத்தை பார்த்து என்ன விளக்கம் சொல்லப்போகிறார்கள்.

ஆயுதங்களை எவருமே விரும்பி எடுத்துக் கொள்வதில்லை ஆனால் எம்மேல் திணிக்கப்படும் தொடர் அடக்குமுறையினால் அதுவே எமது கடைசி ஆயுதமாகிறது. இது வரலாறு.எம் வரலாறே எமக்கு சிறந்த வழிகாட்டியுமாகிறது. சிலவற்றை தவிர்க்கவும், பலவற்றை எடுத்துக் கொள்ளவும் எமக்கு அதுவே உறுதுணையாகிறது.

சுகி – ஒருபேப்பருக்காக