விரலுக்கு ஏற்ற வீக்கம்

இப்படித் தலைப்பிட்டால் அடிக்கத் தான் வருவார்கள். சொல்ல வேண்டியதை சொல்லித் தான் ஆகவேண்டும். நேற்று தம்பி சயந்தனுடன் (ஆறாவடு) உரையாடியபோது ஈழத்துத் தமிழ் நாவல்களின் போதமை பற்றிய என் ஆதங்கத்தை நான் தெரிவித்தேன். “அஞ்சத் தேவையில்லை, தரமானவை வரும்” என்கின்ற மாதிரிச் சொன்னார், தன்னை நம்பிச் சொன்னாரோ அல்லது தன் போன்ற ஏனைய படைப்பாளிகளை நம்பிச் சொன்னாரோ தெரியவில்லை. “வந்ததால் வலு வலு சந்தோஷம்” என்று மாத்திரம் சொல்லி விடை பெற்றேன்.

ஆனால், ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதுவதல்ல இப்பத்தியின் நோக்கம். ஈழத்தமிழர்களின் திரைப்படம் குறித்தே இப்பத்தி பேச விரும்புகிறது. இப்பத்திகுறுகிய நோக்கம் கொண்டோ, காழ் புணர்வினாலோ எழுதப்படவில்லை என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். யாரையும் நோகப்படுத்துவதும் என் நோக்கம் அல்ல.

ஈழத்துத்தமிழர்களால் முழுநீளத் திரைப்படம் ஒன்றினை இயக்கி வெளியிட முடியுமா? முடியும் என்றாலும் அதுவர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுவிடுமா? கனடாவிலிருந்து வெளியான `கன் அன்ட் த ரிங்’ (A Gun & a Ring) என்ற திரைப்படத்தைப் பற்றி பலர் சிலாகித்துச் சொன்னதை கேள்விப் பட்டிருக்கின்றேன். மகிழ்வும் எனக்குண்டு. ஆனால், வர்த்தக ரீதியான வெற்றி பற்றியே பேச விழைகிறேன்.

எழுபதுகளின் பிற்பகுதியில் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் பல தயாரிக்கப்பட்டிருந்தன. அத்திரைப்படங்களில் சில சிங்கள மொழியில் எடுக்கப்பட்டு, தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டவை. எனினும், அவற்றில் ‘நான் உங்கள் தோழன்’, ‘கோமாளிகள்’, ‘புதியகாற்று’ போன்ற ஒரு சில திரைப்படங்களே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றிருந்தன. அவ்வெற்றியும் கூட தொடர்ந்து திரைப்படம் தயாரிக்கும் துணிவை யாருக்கும் கொடுக்கவில்லை. அவ்வாறு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் பெருமளவு திரைப்படங்களைப் பார்த்திருந்தேன். அத்திரைப்படங்களில் ஈழத்துத்தமிழ் அடையாளத்தை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தியதிரைப்படம் `வாடைக்காற்று` ஒன்றேயாகும்.

சிங்களச் சினிமாவும் தன் அடையாளம் தேடி, 1958 வரை அலைந்தே திரிந்தது. அதுவரை சென்னை திரைப்பட கலையகங்களில் தான் சிங்களத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஒரு திரைப்படத்தை ஐந்து மொழிகளில் தயாரித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற மொழிகளுடன் சிங்களத்திலும் பேசின அத்திரைப்படங்கள். அதனால் வயது முதிர்ந்த சிங்கள மக்கள் இப்பொழுதும் ஏ.எம்.ராஜாவையும், ரி.ஏ.மோதியையும், ஜிக்கியையும், கண்டலாலவையும், பி.லீலாவையும் மறக்காதிருக்கின்றார்கள்.

‘சிங்கள தேசியம்’ பேசி ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவின் வரவின் பின்னரே சிங்களத் திரை உலகில்ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அப்பொழுது தான் உருவாகினார் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற மகத்தான ஒரு திரைக் கலைஞர். அவரது ‘கம்பெரலியா’, ‘மடோல் தூவ’ முதலான திரைப்படங்கள் உலக திரைப்பட வரிசையில்வைத்து எண்ணப்படப்பட்டன. அப்போது சத்யஜித்ரைக்கு இணையாக லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் பேசப்பட்டார். உலக திரைப்பட விழாக்களில் அவரது திரைப்படங்களுக்கு பெரும் மரியாதை இருந்தது.

தென்னாசியாவிலேயே சிங்கள திரைப்படங்கள் முக்கியம் பெறத் தொடங்கின. ஆளுமை மிக்க சிங்கள திரைக்கலைஞர்கள் உருவாகினர். சுமித்ரா பீரிஸ், வசந்த ஒபய சேகரா, தர்ம சேன பத்திராஜா, தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியல்லே ஆகிய நெறியாளர்கள் சிங்களத்திரைப்பட எல்லையை விரித்தார்கள். வேறு வேறு கோணங்களிலும் வேறு வேறு வீச்சுக்களிலும் சிங்களத்திரைப்படங்கள் வெளிவந்தன. பின் சிங்கள திரைப்படங்களில் நடிப்பாளுமை மிக மிக வேறுபட்டிருந்தது. இயல்பானதும், உன்னதுமான நடிப்பு அது. காவியப் பாங்கான நடிப்ப கூட அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. நாடகீகமான நடிப்பினை அவர்களிடம் காணவில்லை. ‘பலங்கெற்றியோ’, ‘சிறி மதுர’, ‘கடபதகசாயா’ என்று மிக முக்கிய திரைப்படங்கள் அவர்களிடமிருந்து உருவாகின.

சிங்கள திரை உலகிற்கு இப்பொழுது என்ன நிகழ்கின்றது? இப்பொழுது சிங்கள திரையரங்குகள் இழுத்து மூடப்படுகின்றன. வருடத்திற்கு ஐந்து திரைப்படங்களாவது தயாரிக்கப்படுகின்றனவா? அற்புதமான சிங்கள திரைக்கலைஞர்கள் இப்பொழுது என்னவானார்கள்? என்னுடன் பணிபுரியும் சிங்கள நண்பர் வேதனைப்பட்டுச்சொன்னார், “இனிச் சிங்களத் திரைப்படங்கள் இல்லை,எமது சிங்கள மக்கள் எவரும் சிங்களத் திரைப்படங்களைப்பார்ப்பது முட்டாள்த்தனம் என நினைக்கிறார்கள். நல்ல சிங்களத் திரைப்படங்களை இனிமேல் நூதனசாலையில் தான் தேடிப் பார்க்க வேண்டும்” அப்படி அவர் சொல்லிக் கொண்டு போகின்றபோது அவரது கைகள் அவரது தலையை மெல்லத் தட்டுகின்றன.

இது தான் யதார்த்தம். சிங்கள மக்களிடம் ஓர் அரசாங்கம்இருக்கின்றது. தங்கள் கலையை நசிந்து போக அவர்கள்விட மாட்டார்கள். அது அவர்களது நாடு. கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கின்ற அந்த நாட்டில், சந்தை வாய்ப்பும் கடினமல்ல. அப்படியிருந்தும் சிங்கள திரைப்படக் கலை சீரழிகின்றதென்றால், அதன் காரணம் என்ன? இது தேனீர் குடிப்பது போன்றோ, தேயிலை வளர்ப்பது போன்றோசின்ன சமாச்சாரம் அல்ல. கோடிக்கணக்கான ரூபாய்களில் முதல் புழங்குகின்ற ஒரு சமாச்சாரம், இலங்கையில் மாத்திரம் தேனீர் குடிப்பதற்கென்று வெள்ளைக்காரன் தேயிலை பயிரிடவில்லை. உலகச் சந்தையை அவர்கள் எண்ணினார்கள்.

சிங்களத் திரைக்கலையே எங்கள் முன் அதிசிறந்த உதாரணமாக இருக்கையில், வேறு உதாரணம் எமக்கெதற்கு, இதனைத் தான் இப்பத்தி சொல்கிறது `விரலுக்கேற்ற வீக்கம்’ என்று விரல் எந்த அளவோ, அதற்குத்தக்க மாதிரித் தானே வீக்கம் அமையவேண்டும். இல்லையெனில், அதன் பொருத்தம் கேள்விக்குரியது.

ஈழத்தமிழர் எதிலும் சோடை போனவர்களல்லர். நின்று, நிதானித்து போர் புரிந்ததில் உலகை வியக்க வைத்தவர்கள். அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். கவிதை என்றுவந்தால் ஈழத்தமிழரின் சாதனை மிகக்குறிப்பிட வேண்டியதொன்று `பாரதிக்குப் பிந்தியதோர் பெரிய கவியாற்றல்’ என்று மகாகவியை அ.யேசுராசா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்?. நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், வில்வரத்தினம், ஜெயபாலன், சேரன் என்று கவிதை ஆளுமைகள்ஈழத்தைச் சார்ந்தனர்களே, அவ்வாறு தான் அரங்க உணர்வுடன் கூடிய நாடகங்கள், நாடகப் பிரதிகள் ஆகியன ஈழத்தமிழர்களிடமிருந்து பிறந்தன. அ.தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம், சி.மௌனகுரு, க.பாலேந்திரா, குழந்தை.ம.சண்முகலிங்கம், க.சிதம்பரநாதன் என்ற அரங்க ஆளுமைகள் ஈழத்து மண்ணில் விளைந்தவை.

தமிழியலிலும் அதன் ஆய்விலும் தமிழ்நாட்டினர் எப்பொழுதும் ஈழத்தவரையே ஏறிட்டு நோக்கினர். ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி என்று இப்பட்டியல் இன்னும் நீளும்.

தமிழர்களுக்கு ஒரு வானொலி என்றால் அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே. அதில் பணியாற்றிய மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரிசண்முகம், பி.எச்.அப்துல்கமீத் முதலானவர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உட்பட ரசிகர்கள் பல தமிழ் நாட்டில் இருந்திருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி வருகின்றதென்றால், நாம்தாழ்வு சிக்கல்களுக்கு உட்பட வேண்டிய தேவை ஒன்றுமில்லைஎன்பதனை குறிக்கவே. அவற்றினை கவனத்தில் கொள்வோம். திரைப்படக்கலை என்பதனை நம் விரலுக்கு ஏற்ற வீக்கமாக பயன்படுத்திக் கொள்வோம் நண்பர்களே.