விழா இன்றிப் பெற்ற பட்டம்

100

பல்கலைக் கழகத்தில் என் மகனுக்குப் பட்டமளிப்பு விழா நடக்கப் போகின்றது என்ற செய்தி அறிந்த எனது 10 வயதுப் பேரன் தானும் கெட்டிக்காரன், தனக்கும் பட்டம் வேண்டும் என்றான். புத்திகூர்மை உள்ளவன் என்ற மாயையால் எனக்கு விழா இன்றிக் கிடைத்த ‘கிறுக்கன்’ பட்டம்தான் என் ஞாபகத்திற்கு வந்தது. அதே பட்டம் எனது பேரனுக்கும் கிடைத்தால் அது பரம்பரைப் பட்டமாகிவிடும் என்ற மகிழ்ச்சி உள்ளுர இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பினேன். எனது இந்தப் பட்ட மோ(சோ)க வரலாற்றை ஒருமுறை பார்ப்போம்.

வகுப்பு அறையில் ஒரு நாள் கந்தக அமிலத்தின் நீர்த் தன்மையை இழுக்கும் ஆற்றல்பற்றிக் கூறிய இரசாயன ஆசிரியர் பேப்பரின் மேல் கந்தக அமிலம் பட்டால் கடதாசியின் நீர்த்தன்மை முற்றாக இழுபட கரி மட்டும்தான் மிஞ்சும் என்றார். உடனே நான் அப்ப சீனீக்கை விட்டாலும் அப்படித்தான் நடக்கமோ என்று கேட்டேன். நான் கேட்டது உண்மையான சீனியைத்தான். வகுப்பே அதிரும் அளவுக்கு சிரிப்பு ஓசை. ஆசிரியர் ஒருமுறை என்னைப் பார்த்தார். என் முகத்தில் குற்ற உணர்வு இல்லை என்பதைப் புரிந்து கொண்டோ என்னவோ தெரியவில்லை, கிறுக்குப் பயல் என்று கூறிவிட்டு அவரும் சிரித்தார். என் பட்டம் மொட்டுவிடத் தொடங்கி விட்டது.

தாவரவியல் வகுப்பில் ஒரு முறை பூமத்தம் பூபற்றிப் படிப்பித்தார்கள். அந்தக் காய் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படுமோ என்று கேட்டேன். அது உனக்கு ஒன்றுமே செய்யாது என்றார் ஆசிரியர். ஏன் என்று கேட்டதற்கு கிறுக்கன்களுக்கு அது எதுவுமே செய்யாது என்றார். என் பட்டம் மேலும் விரிந்து பிஞ்சாகியது.

திரிகோணம் (trignometry) என்னும் பாடத்திற்கு எனது புத்திக் கூர்மையால் இரு பூஜ்ஜங்கள் எடுத்து சாதனை படைத்தேன். அந்தப் பாடத்து ஆசிரியரான பாடசாலை அதிபர் அதை ஒரு வகுப்பிற்கு ஆலோசனை வழங்கும் நிகழ்வாக மாற்றி விட்டார். புள்ளியிடப்பட்ட விடைத்தாளை எங்களிடம் தந்த அதிபர் என்னையும் அதிக புள்ளிகளான 80 எடுத்த ரகுபதி என்பவரையும்தான் கவனித்தார். ரகுபதி, கவனயீனப் பிழை காரணமாக 20 புள்ளிகள் குறைந்ததற்காக அழுதுகொண்டிருந்தார். நான் பேப்பரைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன். அவர் இருவரையும் பார்த்துச் சிரித்து விட்டு, ஒருவர் பொறுப்பில்லாதவர், மற்றையவர் வாழ்கையில் ஏற்படும் சிறு இழப்புக்களைக்கூட தாங்கமாட்டாதவர். இருவருமே திருந்த வேண்டியவர்கள் என்றார். அவர் கல்லூரி அதிபர் ஆச்சே. பெரும் தன்மையுடன் கிறுக்கன் என்று கூறவில்லை.

சிறு வயதிலும் எனது புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி சில வேலைகள் செய்திருக்கின்றேன். ஒரு கார்த்திகை மாதம் எங்கள் வீட்டுக் கிணறு முட்டி வளிந்தது. குளிக்கச் சென்ற நான் துலாக்கொடி முழுவதையும் துலா நுணியில் சுற்றிவிட்டு கயிற்றின் சிறு துண்டை மட்டும் மிச்சம் வைத்துக்கொண்டு குளித்தேன். சவர்க்காரம் போடுவதற்காக வாழிக் கையை விட்டதுதான் தாமதம் வாழி கொண்டல் துலாவுடன் மேலே போய்விட்டதுடன் பின் துலா பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து வீட்டிலிருந்த எல்லோரையும் கிணத்தடிக்கு வரச் செய்து விட்டது. என் செயலுக்காக எவரும் ஏசவில்லை. நான் பாதுகாப்புடன் வெளியில் நின்றதே அவர்களுக்கு மகிழ்ச்சி.

இன்னொருமுறை பக்கத்து வீட்டுக்காரர் முத்திரைக்கு காசு தந்து கடிதமொன்றைப் போடத் சொன்னார். நான் முத்திரையுடன் ஒரு வெள்ளை என்வலப்பையும் வாங்கி முத்திரை ஒட்டி அதில் விலாசத்தையும் எழுதித் தபாலில் போட்டுவிட்டு எனது கெட்டித்தனத்தை பறை சாற்றுவதற்காக கையில் அவர் போடத் தந்த ஊத்தை என்வலப்புடன் வீடு சென்று பெருமையுடன் விபரம் சொன்னேன். அந்த ஊத்தை என்வலப்பை பார்த்தவுடன் போடத் தந்தவர் பறித்த வேகமும், தபால் எடுக்குமுன் அதைச் தபாலில் சேர்ப்பதற்காக சைக்கிளில் ஒடிய ஓட்டமும் இன்றும் என் நினைவில் உள்ளது.

ஒரு பாடகர் பாட வந்திருந்தார். அவர் கச்சேரி முடிந்ததும் அவரிடம் சென்ற நான், நீங்கள் பாடும்போது வாயு வந்தால் அதை அடக்கிக் கொண்டு பாடுவதால் உங்கள் குரல் இனிமை கூடுமோ அல்லது வெளியே விட்டுவிட்டுப் பாடுவதால் குரல் இனிமை கூடுமோ என்று கேட்டேன். அவர் பலத்த குரலில் இந்தக்க் கிறுக்கனை யார் உள்ளே விட்டது என்று கத்தினார். அவர் செய்த அட்டகாசம்தான் என் பட்டத்தை எனக்கு நிரந்தரமாக்கி விட்டது.

கிறுக்கன்