புனைவு இலக்கியம் ஒன்றினைத்தவிர எதை எழுதுவதற்கும் எனக்குத் தயக்கம் உண்டு. அவ்வாறு எழுதி வீணே பொழுதை அவமாய்க் கழிக்கிறேன். பொழுதை அவமாய்க் கழிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆயினும், எழுதியே ஆக வேண்டும் எனும் சூழல் இப்பொழுது.
இணையத்தளங்களும் முகநூலும் இயங்கத் தொடங்கியதில் உலகம் மிக மிகச் சிறிதாயிற்று. லண்டனில் இருந்து கொண்டு இலங்கையில் இருப்போரின் கருத்தை அறிவதற்கோ கனடாவிலுள்ளோரின் கருத்தை அறிவதற்கோ ஒரு நிமிடம் தானும் தேவைப்படவில்லை. அதற்கு மேலாக அவரவரின் `உண்மை’ முகங்களையும் தரிசிக்கக் கூடியதாகவுள்ளது.
ஓர் இணையத்தளம் தன் செய்தித் தெரிவினூடாக தனது `அரசியலை’ தெளிவாக வெளிப்படுத்தி விடுகிறது. அவ்வாறே முகநூல் காரர் தாம் இடும் `விருப்பம்’ ஊடாக தம் அரசியலைச் சொல்லி நிற்பர். அதனால் இப்பொழுது என் நண்பர்கள் என்று அறியப்பட்டோரின் `அரசியலை’ சுலபமாகப் புரிந்து கொள்கின்றேன். அவை எனக்கு அதிர்ச்சி வைத்தியத்தைச் செய்து விடுகின்றது. அதேசமயம் சில ‘விருப்பம்’ கள் மகிழ்வையும் தரத் தவறவில்லை. இவை இப்பொழுது எனக்கு வேறோரு `பாடத்தை’ போதிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதையும் காலத்துக்கு ஏற்றவாறு கோலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதையும் நான் இப்பொழுது அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றேன்.
கிண்டல் தொனியில் இதனை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. யாரையும் புண்படுத்தும் விருப்பமும் இல்லை. மிக வேதனை ஒன்று தான் என்னிடம் எஞ்சுகிறது. ஆயினும் எழுதுகிறேன்.
இற்றைக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் பாசலுக்கு அண்மையில் ஓர் ஆற்றங்கரையில் இரவிரவாக நண்பர்களுடன் விவாதித்தபடியிருந்தேன். அவர்களும், தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்றோர் ஆவர். அதில் ஒருவர் தமிழ்த் தேசியத்தின் பெயரில் தான் செய்த படு கொலைகள் பற்றி விஸ்தாரமாகவும், மிக்க சுவாரஷ்யமாகவும் பேசிக் கொண்டிருந்தார். ஒரு படுகொலையை இவ்வளவு ரசித்து, ருசித்துச் சொல்கின்றாரே என்று எனக்கு மகா ஆதங்கம். அது மாத்திரமன்றி அப்படுகொலைகளைக் கண்டித்தும், வெறுத்தும் அவருடன் நான் மிகவும் தர்க்கித்தேன். ஒரு சமயத்தில் கைகலப்புக்குகூட அது போக இருந்தது.
ஆனால், என்ன ஆச்சரியம் முள்ளிவாய்க்கால் ஊழிக்குப் பிறகு அவர் முகம் மாறினார், குணம் மாறியது, கோலம் மாறியது. அவர் இப்போது தமிழ்த் தேசியத்தின் முதலாம் எதிரி. தமிழ்த் தேசியவாதிகளை `தேசியக் குஞ்சுகள்’ என்று `விசிலடிச்சான் குஞ்சுகள்’ கணக்காக அவர் கிண்டலடிக்கவும் தவறுவதில்லை.
இவர் தனி மனிதன். பெரியளவில் இவர்களால் பாதிப்பினைச் செலுத்திவிட முடியாது. ஆனால், தமிழ்த் தேசியத் தின் பெயரில் `பொங்கி எழுந்த’ சில இணையத்தளங்கள் தமிழ்த் தேசியத்தை `புகைக்க’ விடுவது தான் தாங்க முடியாதவை. இவர்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரில் பொங்கி எழுÖதிருந்தால் ஒரு கவலையும் கிடையாது. முதல் பந்தியில் குறிப்பிட்ட ஒருவர் எவ்வாறு தேசிய வாதிகளை `தேசியக் குஞ்சுகள்’ என்று நக்கலடிக்கின்றாரோ அவ்வாறே ‘பொங்குதமிழ்’ இணையத்தளமும், தேசியர்கள் என்று நக்கலடிக்கின்றது. இது சப்பைக்கட்டு கட்ட ஒன்றுமில்லை. முன்னர் `புலிக் காய்ச்சலில்’ உளறுபவர்கள் போல இப்பொழுது `தேசியக் காய்ச்சலில்’ உளறுகிறார்கள். இந்த இடத்தில் இந்த இணையத்தளத்திடமும் வேறு சிலரிடமும் எனக்குக் கேள்வி உண்டு. `ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமா? இல்லையா?’ வேண்டும் என்போரிடம் அடுத்த கேள்வி, `அவர்கள் எந்த மட்டம் வரை ஆதரவு கொடுக்க வேண்டும்?, அதற்கு ஏதும் வரையறை உண்டா? ஆதரவு கொடுக்கும் சக்திகளை நிர்வகிப்போர் அல்லது ஒழுங்குபடுத்துவோர் யார்?’
அவ்வாறு நிர்வகிப்போர் அல்லது ஒழுங்குபடுத்துவோரில் ஒர் இயக்கம் தான் மே 17 இயக்கம். அது ஓர் போர்க்குணம் மிக்க அதே சமயம் உணர்வு பூர்வமான, அறிவுபூர்வமானதுமான ஓர் இயக்கம். அவர்கள் ஈழ மக்களின் துன்ப துயரங்களைக்கண்டு உண்மையில் துடிக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் ஊழிக்குப் பின்னர் அவர்கள் உரு வாகி இருக்கிறார்கள் என்பதில் கேவலப்பட என்ன இருக் கின்றது. அந்த ஓர் ஊழிக்குப் பிறகாவது தோன்றியிருக் கின்றதே என்று நாம் பெருமிதம் அல்லவா கொள்ள வேண்டும்? அதில் சிறுமைப்பட ஒன்றுமில்லையே. ஆனால், ‘பொங்குதமிழ்’ இணையத்தளம் இவ்வாறு புகைந்திருக்கின்றது. “சண்டைக்கு வெளியில் நிண்டவை கனபேர், மே 17க்குப் பின்னர் தீவிரவாதிகளாக மாறிட்டினம், தங்கட தேசியப் பற்றை நிரூபிக்க எல்லாத்திலயும் கருத்துச் சொல்லினம்” எல்லாத்திலையும் கருத்துச் சொல்வதில் என்ன பிழை இருக்கிறது? கத்தியைத் தூக்கவில்லையே? ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்று கத்துகிறவர்கள் இதற்கு ஏன் அஞ்சவேண்டும். கருத்துச் சுதந்திரம் என்பது உங்கள் சார்பான கருத்துகளை சொல்கின்ற சுதந்திரமா?
உண்மையில் ஈழத்துத் தமிழ்த் தேசியத்துக்கு சார்பாக, ஆதரவாக எங்கிருந்து குரல் வந்தாலும் அதற்கு அஞ்சுவது சிங்களப் பெருந்தேசிய இனவாதிகளும், அதற்கு முண்டு கொடுப்போரும் ஆவர். என்னுடன் பணிபுரிகின்ற சிங்கள நண்பர் அடிக்கடி சொல்வார், “உங்களுடைய பிரச்சனைகளை நீங்கள் பேசுங்கள் தமிழ் நாட்டினருக்கு அங்கு என்ன வேலை?” 2008 மாவீரர் நாளுக்கு வைகோ வந் திருந்தார், அந்தச் சிங்கள நண்பருக்கு ஒரு கிழமைக்கு மேலாக முகம் கறுத்திருந்தது. `இவர் ஏன் வருவான்?`
‘பொங்குதமிழ்’ இணையத்தளத்திற்கும் அதே பயம் தானா? எனக்குப் புரியவில்லை. நண்பர்களே! நலிந்து போய்விட்ட இனம் நாம், எமக்குக் கை கொடுக்கவும், கரை சேர்க்கவும் எவரும் இல்லை. எம்மைச்சூழ சிங்களப் பெருந் தேசிய இனவாதமும், இந்திய மேலாதிக்க வாதமும் சீனச் சமூக ஏகாதிபத்தியமும் தான் இருக்கின்றன. அவற்றுக்கு மேலாக அமெரிக்க வல்லூறு.
இவற்றுக்கிடையே எமக்கு, ஆதரவுக் கரம் நீட்டுபவர் களிடம் `அதைச் செய், இதைச் செய்யாதே, இப்படி நில், அப்படி நட, இவ்வளவு உயரம் கையைத் தூக்கு, இவ்வளவு தூரம் காலை நீட்டு’ என்றெல்லாம் நாம் கட்டளை இடமுடியுமா? என்ன? அவர்கள் அருகமர்ந்து சினேக பூர்வமாக உரையாடுவோம், எங்கள் தேவை என்னவென்று உரைப்போம். அவர்கள் தாம் நம்பகமான நட்புச்சக்தி.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இவ்வளவு நாட்களும், நமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்ச் சக்திகள் என எண்ணியோர் சிலர், முகநூல் வழியாக ஒடுக்கப்பட்டோருக்கு உறுதியான குரல் கொடுக்க முன்வந் திருக்கின்றனர். அவர்கள் முன்னரும் அப்படித் தான் இருந் திருக்கிறார்கள். நாம் தான் இனங்காணவில்லை. அவர்களில் ஒருவராக நண்பர் மீரா பாரதி இருக்கிறார். வாழ்த்துகின்றோம் நண்பரே, வரவேற்கின்றோம் தோழரே.