பிரித்தானியா என்பது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று தேசங்கள் இணைந்த ஒரு நாடாகும். இவற்றுடன் வட அயர்லாந்தையும் இணைத்து ஐக்கிய இராச்சியம் எனப்படும். ஐக்கிய இராச்சியத்தின் சட்ட ரீதியான் பெயர் United Kingdom of Great Britain and Northern Ireland என்பதாகும். ஐக்கிய இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகையில் 84 விழுக்காட்டினர் இங்கிலாந்தில் வாழ்கின்றனர். இதனால் ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த ஆதிக்கத்தை மற்ற தேசங்களான அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் மக்கள் விரும்புவதில்லை. ஸ்கொட்லாந்து மக்களிடையே தாம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து சென்று தனிநாடாக வேண்டும் என்ற கருந்து வலுத்து வந்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் வரலாறு
மனித வரலாறு பதியப்பட்ட காலத்திற்கு 8500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஸ்கொட்லாந்த்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இற்றைக்கு ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அங்கு குடியேறத் தொடங்கிவிட்டார்கள். அப்போது தற்போது இருப்பதிலும் பார்க்க ஸ்கொட்லாந்தின் கால நிலை சிறப்பாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. 1707-ம் ஆண்டு வரை ஸ்கொட்லாந்து தனியான ஒரு நாடாக இருந்தது. பின்னர் இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் ஒரே அரச முடியின் கீழ் கொண்டுவரப்பட்டன. பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத் இறந்த பின்னர் ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் மன்னர் இங்கிலாந்தினதும் ஸ்கொட்லாந்தினதும் மன்னரானார். இதுவரை ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர் எட்டுப்பேர் பிரித்தானியாவின் தலைமை அமைச்சராக இருந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம்
பிரித்தானியக் கைத்தொழில் புரட்சியில் ஸ்கொட்லாந்திற்கும் பெரும் பங்கு உண்டு. 18-ம் நூற்றாம் ஆண்டில் இருந்தே ஸ்கொட்லாந்து தொழிற்துறையில் உலகிலேயே முன்னணியில் திகழ்கின்றது. துணிவகைகள், மதுபானம், தாரைவிமான இயந்திரங்கள், கப்பல் கட்டுமானம், வங்கித்துறை, கணனித்துறை, காப்புறுதித் துறை எனப் பலதரப்பட்ட துறைகளில் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் சிறந்து விளங்குகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக மசகு எண்ணெய் அகழ்வும் அங்கு உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக அளவு எரிபொருள் ஸ்கொட்லாந்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. விவசாயத்திற்கு உகந்த நிலங்கள், கனிம வளங்கள் போன்றவையும் ஸ்கொட்லாந்தில் உண்டு.
கருத்துக் கணிப்பின் வரலாறு
ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப்பரவலாக்கம் என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு 1979-ம் ஆண்டு நடாத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பரவலாக்கத்திற்கு ஆதரவாக வாக்களிந்திருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை. அதிகாரப்பரவலாக்கத்திற்கு மொத்த வாக்காளர்களின் 40விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே அதிகாரம் பரவலாக்கப்படும் என ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்டிந்தது. அந்த அளவிற்கு ஆதரவு வாக்குகள் கிடைத்திருக்கவில்லை. பின்னர் 1997-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சியினர் மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடாத்தினர். அதில் போதிய ஆதரவு கிடைத்ததால் 1998-ம் ஆண்டு ஸ்கொட்லாந்த் சட்டம் பிரித்தானியப் பாராளமன்றத்தில் இயற்றப்பட்டு ஸ்கொட்லாந்திற்கு என ஒரு தனியான பாராளமன்றம் உருவாக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி தனி நாடாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற முன்மொழிவைத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்ற முதலமைச்சர் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கொட்லாந்தைத் தனிநாடாகப் பிரிப்பது பற்றி ஒரு தேசிய கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். இந்தத் தேசிய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் கருத்துக் கணிப்பிற்கான சட்டமூலம் உருவாக்கப்பட்டது. அதில் நான்கு சாத்தியக் காட்சிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
1. எந்த மாற்றமும் இல்லை
2. கல்மன் ஆய்வின்படியான அதிகாரப் பரவலாக்கம்
3. அதிக அதிகாரப் பரவலாக்கம்
4. முழுமையான அதிகாரப் பரவலாக்கம்.
2010-ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் மேலும் ஒரு சட்ட மூலம் உருவாக்கப்பட்டது. அதன் படி ஒன்று முழுமையான அதிகாரப்பரவலாக்கம், இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பரவலாக்கம், மூன்றாவது ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக்குவது. பின்னர் இந்த சட்ட மூலம் எதிர்க் கட்சிக்களின் ஆதரவு கிடைக்காதாதால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 2011-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஸ்கொட்லாந்த் தேசியக் கட்சி பெரும்பான்மைப் வலுவுடன் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இலண்டனில் உள்ள பிரித்தானியப் பராளமன்றம் ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிவது தொடர்பான ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது பற்றி தமது முன்மொழிவை ஸ்கொட்லாந்துப் பாராளமன்றத்திற்கு வழங்கியது. இரு பாராளமன்றங்களும் 2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன. அதன்படி 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் திகதி ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரிவதா இல்லையா என்பது தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும்.
கழுத்தறுக்கும் கருத்துக் கணிப்புக்களும் பந்தயங்களும்
ஸ்கொட்லாந்து பிரிவது தொடர்பான கருத்துக் கணிப்பைப் பற்றிய கருத்துக் கணிப்புக்கள் அடிக்கடி ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் பிரிவினைக்கு ஆதரவு குறைவு என கருத்துக் கணிப்புக்கள் கூறின. பின்னர் ஆதரவு அதிகரித்து வருவதாகச் சொல்லப்பட்டது. பின்னர் சமநிலையில் இருப்பதகச் சொல்லப்பட்டது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் திகதி பிரிவினைக்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது எனச் செய்திகள் வந்தன. பிரிவினை தொடர்ப்பாக பந்தய நிறுவனங்களின் பந்தய விகித ஒற்றைப்படையும் கடுமையாக மாறிக் கொண்டிருதன. ஓகஸ்ட் 31-ம் திகதி பிரிவினை இல்லை என்பதற்கு 5-1 என்ற ஒற்றைப்படையும் பிரிவினை வேண்டும் என்பதற்கான ஒற்றைப்படை 3-1 ஆகவும் இருந்தது. ஓகஸ்ட் 11-ம் திகதி பிரிவினை வேண்டாம் என்பதற்கான ஒற்றைப்படை 1-10 என இருந்தது.
அமெரிக்காவின் கருத்து
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐக்கிய இராச்சியம் பிரியாமல் வல்லமை பொருந்திய நாடாக இருப்பதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஸ்கொட்லாந்தின் தலைமை அமைச்சர். அலெக்ஸ் சமண்ட் ஸ்கொலாந்து பிரிந்தால் அமெரிக்காவிற்கு இரண்டு நண்பர்கள் கிடைப்பார்கள் என்றார். அத்துடன் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா போரின் மூலம் பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து பெற்ற சுதந்திரத்தை ஸ்கொட்லாந்து மக்கள் மக்களாட்சி முறைமைப்படி பெற முனைகின்றார்கள் என்றார். சுதந்திர ஸ்கொட்லாந்து அமெரிக்காவுடன் மட்டுமல்ல இங்கிலாந்துடனும் சிறந்த நட்புறவைப் பேணும் என்கின்றார் அலெக்ஸ் சமண்ட்ஸ்.
தயார் நிலையில் இல்லாத பிரித்தானியா
ஸ்கொட்லாந்து பிரிய வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றால் அரச மற்றும் பொருளாதார முகாமைகளில் பெருமாற்றங்கள் செய்ய வேண்டி வரும். பிரித்தானிய அரசு இதற்கான தயார் நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய மைய வங்கியான இங்கிலாந்து வங்கி சில முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
பொருளாதாரப் பூகம்பம்
ஸ்கொட்லாந்து பிரிய வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றால் அது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ். அயர்லாந்து ஆகிய தேசங்களில் ஒரு பொருளாதாரப் பூகம்பத்தை உருவாக்கும். ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் போதெல்லாம் பிரித்தானியப் பவுண்ட் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது. ஸ்கொட்லாந்தின் வர்த்தகர்களும் பெரும் பணக்காரர்களும் பிரிவினைக்கு எதிரன கருத்துக்களைக் கொண்டுள்ளனர். பல பொருளாதார நிபுணர்கள் பிரிவினைக்கான கருத்து வெற்றி பெற்றால் பிரித்தானியா முழுவதும் ஒரு நாணய நெருக்கடியும் கடன் நெருக்கடியும் தோன்றலாம் என எச்சரிக்கின்றனர். ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரியும் போது ஐக்கிய இராச்சியத்தின் கடன்பளுவான ஒன்றரை ரில்லியன் பவுணின் ஒரு பகுதியை அது ஏற்றுக் கொள்ள வேண்டும் என இலண்டன் அரசு வலியுறுத்துகிறது. அப்பளுவை ஏற்க முடியாது என ஸ்கொட்லாந்து மறுக்கிறது. இதனால் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஸ்கொட்லாந்தை கடனை முறித்த நாடாகக் கருத வாய்ப்பு உண்டு. தனிநாடாகினால் ஸ்கொட்லாந்து மக்கள் தொகை அடிப்படையில் 122 பில்லியன் கடன் பளுவை ஏற்க வேண்டும். ஸ்கொட்லாந்து தனியாகப் பிரியும் வேளையில் அது ஐக்கிய நாடுகள் சபையிலோ பன்னாட்டு நாணய நிதியத்திலோ இணைவதை வல்லரசு நாடாகிய ஐக்கிய இராச்சியம் தடுக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்தால் எரிபொருள் வளம் நிறைந்த Orkney, Shetland and the Western Isles வடகடலில் உள்ள தீவு மக்கள் எப்படிப்பட்ட நிலையை எடுப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்தத் தீவுகள் இலண்டன் அரசின் கீழ் ஆனால் தன்னாட்சியுடன் இருக்க விரும்புகிறார்கள். ஐல் ஒவ் வைற் தீவைப் போல அல்லது தென் அமெரிக்காவில் உள்ள ஃபோக்லனட் தீவைப் போல பிரித்தானிய முடியின் கீழ் தன்னாட்சியுள்ள தீவுகளாக இருக்க அவர்கள் விரும்பலாம் எனக் கருதப்படுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள சொத்துக்களைப் பலர் விற்றுவிட்டு இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்க முற்படலாம். இதுவும் பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஸ்கொட்லாந்து வங்கிகளில் இருந்து வைப்புக்கள் மீளப்பெறப்படலாம்.
யானைப்பால் உண்டு சிங்கக் கொடி பிடித்த சம்பந்தர் ஐயா
1965-ம் ஆண்டு இரத்தக் களரி வேண்டாம் பிரிந்து செல்லுங்கள் என மலேசியத் தலைமை அமைச்சர் துங் அப்துல் ரஹ்மான் சிங்கப்பூரைத் தனிநாடாக்கினார். கனடாவில் இருந்து கியூபெக் மாநிலம் பிரிந்து செல்ல வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு 1980-ம் ஆண்டும் 1995-ம் ஆண்டும் நடாத்தப் பட்டன. ஸ்கொட்லாந்து மக்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்படவில்லை. அங்கு பெண்கள் மான பங்கப்படுத்தப்படவில்லை. அங்கு நில அபகரிப்பு நடக்கவில்லல. அங்கு ஆங்கிலேயர்களைக் குடியேற்றி அவர்களின் இன விகிதாசாரத்தை மாற்றும் முயற்ச்சி ஏதும் நடக்கவில்லை. இங்கிலாத்தில் ஒரு ஸ்கொட்லாந்துக் குடிமகனின் வீடு கூடக் கொழுத்தப்படவில்லை. இருந்தும் ஸ்கொட்லாந்து மக்களின் தனித்துவத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அங்கு பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடக்கின்றது. இலங்கையில் அப்படி ஒரு கருத்துக் கணிப்பு வேண்டுமா எனச் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களிடம் கேட்டபோது அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்கின்றார். இன்னும் எத்தனை கொலைகள் வேண்டும்? மலேசியா சொன்னது போல் இலங்கை ஆட்சியாளர்கள் நீங்கள் பிரிந்து போய் விடுங்கள் எனச் சொன்னாலும் சம்பந்தர் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை எங்களை நீங்கள் அடிமைகளாகத் தொடர்ந்து வைத்திருங்கள் எனச் சொல்வாரா?
கருத்துக் கணிப்பிற்குத் தலைவணங்குவோமாக.
ஒரு கருத்துக் கணிப்பை நடத்துவதும் அதையிட்டு ஆரோக்கியமான விவாதங்களை சூடாக நடாத்துவதும் தலைவணங்கப்பட வேண்டியதே. பிரிந்து செல்லும் உரிமையுள்ள முற்போக்கு நாடுகளின் கூட்டமைப்பு எனச்சொல்லி மற்ற நாடுகளை அடிமையாக வைத்துக் கொண்டும் பிரிந்து சென்ற நாடுகளை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்ச்சித்துக் கொண்டும் இருக்கும் நாடுகள் மத்தியில் பிரித்தானிய வேறுபட்டு நிற்கின்றது.